Last Updated : 30 May, 2016 09:32 AM

 

Published : 30 May 2016 09:32 AM
Last Updated : 30 May 2016 09:32 AM

காஷ்மீர் பிரச்சினையின் வேர்கள்!

2014 மக்களவைப் பொதுத் தேர்தலின்போதும் அதற்குப் பின்னரும் வாக்காளர்களைச் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, “காங்கிரஸ் கட்சிக்கு (நாட்டை ஆள) 60 ஆண்டுகளைக் கொடுத்தீர்கள், எனக்கு 60 மாதங்களைக் கொடுங்கள்” என்றார். சமூக வலைதளங்களில் அவருடைய ஆதரவாளர்கள் அதையே இன்னமும் பலமாக, வேறு வகையில் வலியுறுத்தினார்கள். “இந்தியாவின் பிரச்சினைகள் அனைத்துக்குமே காரணம் காங்கிரஸ் ஆட்சிதான்” என்று சாடினார்கள். “அப்படியென்றால், இந்த நாட்டில் எதெல்லாம் சரியாக இருக்கிறதோ அதற்கு நாங்கள்தானே பொறுப்பு?” என்று காங்கிரஸார் எதிர்க்கேள்வி கேட்டார்கள்.

நாடு சுதந்திரமடைந்த 1947 முதலே இந்தியாவுக்குப் பெருத்த பின்னடைவு ஏற்பட்டது காஷ்மீர் பள்ளத்தாக்கில்தான். அது தொடர்ந்து போராட்டக் களமாகத் திகழ்கிறது. அதன் மக்களில் கணிசமானவர்கள் இந்தியக் குடியரசின் ஆட்சியில் இருப்பதை எதிர்த்துக்கொண்டே இருக்கிறார்கள். இப்போது அங்கே அதிருப்தியும் கோபமும் கொப்பளிக்கிறது. 2014-ல் ஏற்பட்ட பெரு வெள்ளத்துக்கு மிகக் குறைந்த அளவே நிவாரணம் அளித்திருக்கிறார்கள் என்ற அதிருப்தி அவர்களுக்கு. மாட்டுக் கறிக்குத் தடை விதிக்க முயன்றதற்கும் பலத்த எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் (பி.டி.பி.) கூட்டரசு அமைத்தபோது அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை பாஜக நிறைவேற்றவில்லை. அதனால்தான் முஃப்தியின் மறைவுக்குப் பிறகு, புதிய அரசு பதவியேற்க அங்கே நீண்ட காலம் பிடித்தது.

கல்வி நிலையமா.. ஆயுத சாலைகளா?

இப்போது புதிய சர்ச்சை தோன்றியிருக்கிறது. ஸ்ரீநகரில் உள்ள தேசியத் தொழில்நுட்பக் கழகத்தில் காஷ்மீர மாணவர்களுக்கும் பிற மாநில மாணவர்களுக்கும் இடையில், கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோற்றதைக் கொண்டாடியது தொடர்பாகக் கைகலப்பு ஏற்பட்டது. அது அப்படியே வேறு வடிவங்களில் தொடர்கிறது. பிற மாநில மாணவர்களை காஷ்மீர போலீஸார் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முற்பட்டதைப் போலத் தெரிகிறது. எதிர் விளைவாக ஆயிரக்கணக்கில் துணை நிலை ராணுவப் படை வீரர்கள் அக்கல்லூரியின் வளாகத்தில் மத்திய அரசின் ஆணையின் பேரில் நிறுத்தப்பட்டனர். காஷ்மீரக் கல்வி நிலையங்கள் ஆயுதசாலைகளாக மாறிவிட்டன என்றே கொண்டாலும், ஆயிரக்கணக்கில் துருப்புகளை நிறுத்துவதால் அமைதி திரும்பிவிடுமா?

கடந்த இரண்டு ஆண்டுகால ஆட்சியில் காஷ்மீர் பிரச்சினையை மோடி அரசு புத்திசாலித்தனமாகவோ, கருணையுடனோ அணுகவேயில்லை. இந்தியாவுடன் காஷ்மீர் பள்ளத்தாக்கு உணர்வுபூர்வமாக ஒன்றியிருக்கச் செய்யத் தவறிவிட்டது, மத்தியில் நீண்ட காலம் ஆட்சி செய்த காங்கிரஸ். காஷ்மீர் மாநிலத்தின் மாபெரும் அரசியல் ஆளுமை ஷேக் அப்துல்லாவை பிரதமர் ஜவாஹர்லால் நேரு பத்தாண்டுகளுக்கும் மேல் சிறையில் அடைத்து வைத்தார். பிறகு, 1964-ல் அவரை விடுதலை செய்தார். ஆனால், அடுத்துப் பிரதமரான லால்பகதூர் சாஸ்திரி அவரை மீண்டும் சிறையில் அடைத்தார். 1967 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திரா காந்தியிடம் வேண்டுகோள் வைத்தார் ஜெயப்பிரகாஷ் நாராயண். அதை மறுத்துவிட்டார் இந்திரா. சில ஆண்டுகளுக்குப் பிறகு முதுமை, நோய் காரணமாக மிகவும் தளர்ச்சியுற்ற நேரத்தில், டெல்லி அரசுக்கு அணுக்கமாக நடந்துகொள்ள முன்வந்ததால் ஷேக் அப்துல்லா விடுதலை செய்யப்பட்டார்.

1982-ல் ஷேக் அப்துல்லா இறந்தார். அவருடைய இடத்துக்கு ஃபாரூக் அப்துல்லா வந்தார். காங்கிரஸ் கட்சியல்லாத பிற கட்சிகளின் முதலமைச்சர்களுடன் பேசினார் ஃபாரூக் அப்துல்லா என்ற கோபத்தில், அவருடைய தேசிய மாநாட்டுக் கட்சியை ஃபாரூக்கின் சகோதரி கணவர் குலாம் முகம்மது ஷாவைக் கொண்டே இந்திரா காந்தி உடைத்தார். ஷாவை முதல்வர் பதவியிலும் அமர்த்தினார். இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதால், அவருடைய மகன் ராஜீவ் காந்தி அடுத்து பிரதமரானார். 1987-ல் நடந்த ஜம்மு-காஷ்மீர் மாநிலத் தேர்தலில் கள்ள ஓட்டு உட்பட எல்லா தில்லுமுல்லுகளும் நடந்தன. அதனால் மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து தீவிரவாதிகளின் ஊடுருவல் அதிகரித்தது. இவ்வாறு அமைதியின்மை தொடர்கதையானது.

தியாகங்களைக் கவுரவிப்போம்

“நேரு, இந்திரா, ராஜீவ் ஆகியோர் நாட்டுக்காகச் செய்த தியாகங்களைக் கவுரவிக்கத்தான் அரசியலுக்கு வந்தேன்” என்று சோனியா ஒரு முறை கூறினார். காஷ்மீர் பிரச்சினையில் அவர், அவர்களுடைய வழியையே பின்பற்றினார். இந்தியாவின் பிற பகுதி மக்களிடமிருந்து காஷ்மீரிகள் தங்களை அந்நியப்படுத்திக்கொள்ளும் வகையில் சில சம்பவங்கள், சோனியாவின் வழிகாட்டுதலில் இந்நாடு நிர்வகிக்கப்பட்டபோது நடந்தது.

அவற்றில் நான்கை மட்டும் சுட்டிக்காட்டுகிறேன்.

1. அடல் பிஹாரி வாஜ்பாய் 2003 ஏப்ரலில் ஸ்ரீநகருக்குச் சென்றார். பத்தாண்டுக் கால இடைவெளிக்குப் பிறகு, காஷ்மீர் சென்ற ஒரே பிரதமர் அவர்தான். 25 ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடந்த சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலுக்குப் பிறகு, மக்கள் ஜனநாயகக் கட்சி - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடித்து அப்போது பதவியில் இருந்தது. அப்போது நடந்த அரசு நிகழ்ச்சியில் பிரதமர் வாஜ்பாயின் பேச்சை, தலைமையின் கட்டளைப்படி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த காஷ்மீர் அமைச்சர்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்தனர். மனிதாபிமானத்துடன் காஷ்மீரிகளின் மனப்புண்களை ஆற்ற வழி இருக்கிறதா என்று அறிவதற்காக வாஜ்பாய் அப்போது சென்றிருந்தார். அப்போது காஷ்மீரில் தீவிரவாதத்தின் தீவிரம் குறைந்திருந்தது. சுற்றுலாத் துறை செழித்தது. பிரதமரை ஆதரித்திருக்க வேண்டிய அந்நேரத்தில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் அவரைப் புறக்கணித்தது.

2. பி.டி.பி. கட்சியின் சார்பில் முதல்வர் பதவியை ஏற்ற முஃப்தி முகம்மது சய்யீத் நல்ல நிர்வாகியாக இருந்தார். அநேக ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீர் மாநிலத்தில் சுமுக நிலை காணப்பட்டது. காஷ்மீர் இனி வளர்ச்சி பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. சோனியா காந்திக்கு நல்ல அரசியல் தெளிவும், தொலைநோக்குப் பார்வையும் சுயமாக இருந்திருந்தால் அல்லது அவருடைய அரசியல் ஆலோசகர்களாவது நல்ல அறிவுரையைக் கூறியிருந்தால் அந்த 6 ஆண்டுகளும் முஃப்தியே முதலமைச்சராகத் தொடரட்டும் என்று அனுமதித்திருப்பார். கட்சிக் கண்ணோட்டத்திலேயே எதிலும் செயல்படும் காங்கிரஸ்காரர்கள் ஒப்பந்தப்படி அடுத்து காங்கிரஸ்காரர்தான் முதல்வராக இருக்க வேண்டும் என்று முரண்டுபிடித்தார்கள். சோனியா குடும்ப விசுவாசியான குலாம் நபி ஆசாத் முதல்வரானார். தேச நலனைவிடக் கட்சி நலனே பெரிது என்று எடுத்த முடிவால், நல்ல வாய்ப்பு வீணானது.

3. 2004-ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்தது. அப் போதும் காஷ்மீர் பிரச்சினை தீர தீவிர முயற்சி மேற்கொள்ளப் படவில்லை. 2009-லும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியே தொடர்ந்தது. அடுத்த ஆண்டே காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண மக்களிடம் பேச ஒருவரை நியமிக்க முடிவுசெய்தது. (அதற்கு முன்னதாக 2008-ல் காஷ்மீர் போராட்டங்கள் வலுத்தன. சிறு பையன்கள் கல்வீச்சுப் போராட்டங்களை நடத்தினர்.) தென்னாப்பிரிக்காவிலும் இலங்கையிலும் இந்திய ஹை கமிஷனராகப் பணியாற்றி அனுபவம் பெற்ற கோபால கிருஷ்ண காந்தியை மட்டும் பேசுவதற்கு நியமிக்கலாம் என்ற யோசனை பிரதமரிடமும் உள்துறை அமைச்சரிடமும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அது ஏற்கப்படவில்லை. பூசல்கள் நிறைந்த நாடுகளில் பணியாற்றிய அனுபவத்துடன் உருது மொழியில் நல்ல தேர்ச்சியும் பெற்றவர் கோபால கிருஷ்ண காந்தி. நவீன இந்திய வரலாறும் அவருக்கு அத்துப்படி. காந்தி - ராஜாஜி ஆகியோரின் பேரன். அவரை நியமித்திருந்தால் ஹுரியத் தலைவர்கள்கூடப் பேச்சில் பங்கேற்றிருப்பார்கள் என்று உள்துறைச் செயலராக இருந்து ஓய்வுபெற்ற ஒருவர் என்னிடம் கூறினார்.

ஆனால், திலீப் பட்கோங்கர், எம்.எம். அன்சாரி, ராதா குமார் என்ற மூன்று பேர் அடங்கிய குழுவை மத்திய அரசு நியமித்தது. எதிர்பார்த்ததைப் போலவே ஹுரியத் தலைவர்கள் அவர்களுடன் பேச மறுத்துவிட்டனர். சோனியாவின் மகன் ராகுல் காந்தி அப்போதுதான் அரசியலில் நடை பழகிக்கொண்டிருந்தார். மகாத்மாவின் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், ‘இன்னொரு காந்தி’ இடையில் புகுந்து பெயர் சம்பாதிப்பதை சோனியா விரும்பவில்லை என்றே கருத வேண்டியிருக்கிறது. காரணம் எதுவாக இருந்தாலும், காஷ்மீர் மாநிலத்தில் சமாதானம் ஏற்படுத்தத் தவறிய பொறுப்பு மத்திய அரசையே சாரும்.

4. 2012, 2013-ல் ஜம்மு - காஷ்மீர் மாநில முதலமைச்சர் ஓமர் அப்துல்லா மத்திய அரசிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். “ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைப் படிப்படியாக விலக்கிக்கொள்வதைப் பரிசீலியுங்கள். அச்சட்டம் ராணுவத்தினருக்கு அளவற்ற அதிகாரத்தைக் கொடுப்பதால், காஷ்மீரிகள் அதை விரும்பவில்லை” என்று மன்றாடினார். (அச்சட்டம் காஷ்மீரில் மட்டுமல்ல, மணிப்பூர், நாகாலாந்து ஆகிய மாநிலங்களிலும்கூட ஆயுதப் படைகளுக்கு வரம்பற்ற அதிகாரத்தைத் தருகிறது என்பதுதான் பலருடைய குற்றச்சாட்டு.) எல்லைக்கு அப்பாலிருக்கும் மாவட்டங்களிலாவது சட்டப்படியான அதிகாரத்தை விலக்கலாம் என்று ஓமர் ஆலோசனை கூறினார். ஆனால், அப்படிச் செய்ய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு நம்பிக்கையோ, துணிச்சலோ இல்லை. எனவே, மக்களுக்கு நம்பிக்கையூட்டும் அத்தகைய நடவடிக்கையை எடுக்காமல் இருந்தது. காஷ்மீர் பள்ளத்தாக்கைப் பொறுத்தவரை அரசியல் கட்சித் தலைவர்கள் கூறும் யோசனைகளை அல்ல - ராணுவத் தளபதிகள் சொல்லும் யோசனைகளை மட்டுமே மத்திய அரசு எப்போதும் கேட்கிறது என்று அனைவருமே கூறுகின்றனர்.

மூல வேர் எது?

காஷ்மீர் பிரச்சினை ஏன் இன்னும் தீராமல் நீடிக்கிறது என்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. பாகிஸ்தானிய அரசின் - ராணுவத்தின் தீங்கரம் ஒன்று. காஷ்மீர இஸ்லாத்துக்கு வஹாபியிசத்தின் பங்களிப்பு இரண்டாவது. பண்டிட்டுகளை மாநிலத்திலிருந்து வெளியேறச் செய்தது மூன்றாவது. பிற மாநில இந்தியர்களுக்குக் காஷ்மீர் விவகாரத்தில் ஆர்வம் இல்லாதது நான்காவது. இந்திய ராணுவமும் துணை நிலை ராணுவப் படைகளும் மனித உரிமைகளை மீறுவதாகக் கூறப்படும் நிகழ்வுகள் ஐந்தாவது. காங்கிரஸ் கட்சியின் தவறுகளும் குற்றங்களும் ஆறாவது.

காஷ்மீரிகளின் அதிருப்திக்கு மூல வேர் எது என்று ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கோ, மோடிக்கோ தெரியாதது வியப்பே அல்ல; மத, கலாச்சார, அறிவார்ந்த பன்மைத்துவம் என்பதற்கு நேர் முரணானது இந்துத்துவா. ஜனநாயகம், சுதந்திரம், சகிப்புத்தன்மை, பன்மைத்துவம் போன்ற குணங்கள் ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் குணங்களாகத் திகழ்ந்தன. மகாத்மா காந்தி உள்ளிட்ட பெரும் தலைவர்கள் அதை வளர்த்தனர். அவை அப்படியே அரசியல் சட்டத்திலும் இடம்பெற்றன. துரதிர்ஷ்டவசமாக காஷ்மீர் விவகாரத்தில் அவற்றைத் தவறாகவே பயன்படுத்தி வந்துள்ளனர் நேரு, இந்திரா, ராஜீவ் மற்றும் கடைசியாக சோனியா போன்ற தலைவர்கள்.

தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x