Published : 10 Jun 2015 09:01 AM
Last Updated : 10 Jun 2015 09:01 AM

காதறாக் கள்ளன் ஜம்புலிங்கம்

புகழ்பெற்ற வழிப்பறிக் கொள்ளையன் ஜம்புலிங்கம் உலவிய பிரதேசத்தில் ஓர் உலா!

களக்காடு வேங்கை சரணாலயத்தில் செங்கால்தேரி வனவிடுதியில் இரவு தங்கிவிட்டு, காலையில் காட்டினூடே நடந்தபோது, எங்கள் துணைக்கு வந்திருந்த வனக் காவலர், பள்ளத்தாக்கொன்றுக்கு அப்புறம், அடுத்த மலையிலிருந்த ஒரு குகை வாயைச் சுட்டிக் காட்டினார். நூறாண்டுகளுக்கு முன் ஜம்புலிங்கம் என்ற கொள்ளையன் ஒளிந்து வாழ்ந்திருந்த இடம் அது என்றார். ஆயிரம் மீட்டர் உயரமான இடத்தில் அமைந்துள்ள அந்தக் குகைக்கு அடுத்து புடைத்துக்கொண்டிருக்கும் ஒரு பெரிய பாறை ‘ஜம்புலிங்கம் பாறை’ என்று குறிப்பிடப்படுகிறது. அந்த இடத்திலிருந்து இரவில் தூத்துக்குடி கலங்கரை விளக்கத்தின் ஒளிவீச்சைப் பார்க்க முடியும். அப்பாறையின் மேல் அமர்ந்து கிழக்கே பரந்திருக்கும் சமவெளியை அவன் கண்காணித்துக்கொண்டிருப்பானாம்.

வழிப்பறிக் கொள்ளை மிகுந்திருந்த 1920-களில், களக்காடுப் பகுதியில் ஜம்புலிங்கத்தின் நடவடிக்கைகள் பிரபலமானவை. பனகுடியில் கருப்பட்டி வியாபாரியாக இருந்தபோது தன் மேல் சுமத்தப்பட்ட ஒரு வழக்கிலிருந்து தப்புவதற்காக அடைக்கலம் தேடிக் காட்டுக்குள் ஓடி, பின் திருடனாக உருவெடுத்தான். இலங்கை, மலேயா போன்ற நாடுகளில் சுற்றிவிட்டு சொந்த ஊரின் ஈர்ப்பால் மறுபடியும் நாங்குனேரிக்கு அருகிலுள்ள காட்டுக்கு வந்துசேர்ந்தான். ஒரு முறை போலீஸாரிடம் சிக்கி ஐந்தாண்டு சிறைத் தண்டனையை அனுபவித்துக்கொண்டிருந்தபோது, ஒரு இரவு தப்பிவிட்டான்.

‘செம்புலி’ ஜம்புலிங்கம்

அவனது வழிப்பறிக் கொள்ளை வாழ்க்கை தொடர்ந்தது. அவனும் சில கூட்டாளிகளும் சேர்ந்து இரு முறை திருவாங்கூர் போலீஸ்காரர்போல் மாறுவேடமிட்டு, காவல் நிலையத்திலிருந்து துப்பாக்கிகளை அபகரித்துச் சென்றனர். ஓடையினூடே நடந்து சென்றால் கால் தடயம் இருக்காது என்பதால், களக்காடு காட்டினுள் ஓடைகளுக்கு அருகே உள்ள சிறு குகைகளில் ஒளிந்து வாழ்ந்தான். மறைந்திருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பது கடினம். ஒரு முறை வேட்டை நாய்களின் உதவியுடன் போலீஸ் இவன் இருக்கும் இடத்தை அறிந்துகொள்ள முயற்சி மேற்கொண்டும் முடியவில்லை. பயணம் செய்யும் செல்வந்தர்களிடம் கொள்ளையடித்து, ஏழைகளுக்கு உதவி, மக்களின் நல்லெண்ணத்தைப் பெற்று ‘செம்புலி’ என்று ஜம்புலிங்கம் அழைக்கப்பட்டான். அவனது சாகசங்களைப் பற்றிக் கதைப் பாடல்களாகப் பாடி மகிழ்ந்தனர் மக்கள். சில ஆங்கிலப் பத்திரிகைகள் இங்கிலாந்தில் வாழ்ந்ததாகக் கூறப்படும் ராபின் ஹூட்டுடன் ஜம்புலிங்கத்தை ஒப்பிட்டு எழுதின.

காதில் கைவைக்க மாட்டான்

வழிப்பறிக் கொள்ளையர்கள் பொதுவாக நகை களைத்தான் திருடினார்கள். தென் தமிழகத்தில், அந்தக் காலத்தில் பெண்கள் காதில் பெரிதாகத் துளையிட்டு - புத்தர் காதுபோல - அதில் பாம்படம் எனும் தங்க ஆபரணம் அணிந்திருந்தனர். வேலை சீக்கிரமாக முடிந்துவிடும் என்பதால், தொங்கிக்கொண்டிருக்கும் இந்த நகையைக் குறிவைத்து, பெண்களின் காதைத் திருடர்கள் அறுத்து விடுவது வழக்கம். ஆனால், ஜம்புலிங்கம் கொள்ளை யடிக்கும்போது பெண்களின் காதில் கைவைக்க மாட்டான். தன்னுடன் களவாடியவர்களுக்கும் அதைக் கட்டளையாக இட்டிருந்தான். அதனால், ‘காதறாக் கள்ளன்’ என்ற பெயரை ஜம்புலிங்கம் பெற்றான். கல்கி எழுதிய ‘காதறாக் கள்ளன்’என்ற ஒரு சிறுகதை வேறொரு கொள்ளையன் பற்றியது. ஆனால், அவரது புகழ் பெற்ற ‘கள்வனின் காதலி’நாவல் ஜம்புலிங்கத்தின் கதையாக இருக்கலாம் என்று சில விமர்சகர்கள் கூறியுள்ளனர். ஆனால், நிஜவாழ்வில் ஜம்புலிங்கம் கள்வனாக மாறியது திருமணமாகி, மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான பின்னர்தான். கல்கியின் இந்தக் கதை சிவாஜி - பானுமதி நடித்த திரைப்படமாக 1951-ல் வெளிவந்து பெரும் வரவேற்பு பெற்றது. நல்ல திருடன் கதையல்லவா? (1945-ல் ஜம்புலிங்கம் என்று ஒரு படம் வந்ததாக ஒரு குறிப்பு படித்தேன். ஆனால், இதைப் பற்றிய வேறு எந்த விவரமும் கிடைக்கவில்லை.)

நாங்குனேரிக்கு அருகில், மலையடிவாரத்தில் ஆதரவற்றோர் ஆசிரமம் ஒன்றை நிறுவி நடத்திக் கொண்டிருந்த ஏமி கார்மைக்கல் என்ற ஒரு ஆங்கிலேயப் பெண்மணி, மறைபணியாளர், தற்செயலாக ஜம்புலிங்கத்தை செங்கால்தேரிக் காட்டில் சந்திக்க நேர்ந்தபோது, அவனது மூன்று குழந்தைகளைத் தன் பள்ளியில் சேர்த்துக்கொள்ள முன்வந்தார். அதன் பின்னர், அவ்வப்போது ரகசியமாகக் குழந்தைகளையும் ஏமியையும் பார்க்க வருவதை அவன் பழக்கமாகக் கொண்டிருந்ததுபற்றித் துப்பறிந்த போலீஸார், 1923-ல் ஒரு முறை ஏமியைப் பார்க்க வந்து திரும்பும்போது ஜம்புலிங்கத்தைத் துரத்திச்சென்று சுட்டுக் கொன்றுவிட்டனர்.

ஜம்புலிங்கத்தின் கதை

கள்வனின் மனதை மாற்றி போலீஸில் சரணடைய வைத்துவிட வேண்டும் என்று எண்ணியிருந்த ஏமி மனமுடைந்துபோனார். ஜம்புலிங்கத்தின் கதையை ‘ராஜ், தி பிரிகண்டு சீஃப்’(Raj, The Brigand Chief) என்ற நூலில் பதிவுசெய்தார். 1927-ல் லண்டனில் வெளியிடப்பட்ட இந்த 312 பக்கப் புத்தகம் சில அரிய படங்களுடன், அந்நாளின் சமூக வாழ்க்கையைத் துல்லியமாகப் பதிவுசெய்திருந்தது. களக்காடு காடுகளில் வேங்கை, யானை, செந்நாய் போன்ற காட்டுயிர் மிகுந்திருந்ததைப் பற்றி எழுதியிருக்கிறார். கிராமத்து மக்களால் அம்மா என்று வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட இவர், 1951-ல் அங்கேயே காலமானார். அவர் நிறுவிய பள்ளிக்கூடமும் ஆதரவற்றோர் ஆசிரமும் வள்ளியூர் அருகே உள்ள டோனாவூர் என்ற கிராமத்தில் இன்றும் இயங்கிவருகின்றன. சென்ற ஆண்டு இவரது வாழ்க்கை வரலாற்றை பிபிசி ஒரு ஆவணப் படமாகத் தயாரித்துள்ளது. அந்த ஆவணப் படத்தில் மார்க் டூலி தோன்றி, கதை சொல்கிறார்.

ஜம்புலிங்கம் பயன்படுத்திய கைத்துப்பாக்கி வேலூர் போலீஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்த அருங்காட்சியகம் சென்னைக்கு மாற்றப்பட்ட பின், அந்தத் துப்பாக்கி எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. களக்காடு இன்று புலிகள் சரணாலயமாக இயங்கிவருகிறது. சோலைமந்தி, இருவாச்சி போன்ற அரிய மழைக்காட்டு உயிரினங்களுக்கும் வாழிடமாக விளங்கிவருகிறது.

- சு. தியடோர் பாஸ்கரன், கானுயிர் ஆர்வலர், ‘சோலை எனும் வாழிடம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x