Last Updated : 15 Jan, 2014 11:37 AM

 

Published : 15 Jan 2014 11:37 AM
Last Updated : 15 Jan 2014 11:37 AM

காணவில்லை!

வருடந்தோறும் குழந்தைகள் காணாமல் போகிறார்கள், பெற்றவர்களைத் தவிரத் துடிப்பவர் யாருமில்லை இங்கே.

நம்முடைய உறவு ஒன்று இறந்து விட்டால், சிறிது காலத் துயரத்திற்குப் பின் மனம் ஒரு வகையில் அந்த இழப்பில் இருந்து மீண்டுவிடும். ஆனால், நம்மைச் சேர்ந்தவர் ஒருவர் காணாமல் போய்விட்டால், அதுவும் நம் குழந்தைக் காணாமல் போய்விட்டால், அந்தத் துடிப்பு, அந்தச் சோகம் வாழ்நாள் முழுமைக்கும் ஆறாது, வாழ்நாள் என்று பெற்றோருக்கு மிச்சம் இருந்தால்...

சிறு வயதில் படித்திருக்கிறேன், 'சோகத்தில் பெரிய சோகம் புத்திர சோகம், துரோகத்தில் பெரிய துரோகம் நம்பிக்கைத் துரோகம்' என்று. அந்தப் புத்திர சோகத்தை, இருபத்தைந்து வயதில் மனநிலைத் தவறிக் காணாமல் போய்விட்டத் தன் மகனை எண்ணி இன்று வரை கண்ணீர் விடும் ஒரு தாயிடம் கண்டிருக்கிறேன்.

ஓர் ஐந்து வயது குழந்தையோ ஐம்பது வயது குழந்தையோ, மறைந்து விட்டாலோ, காணாமல் போய்விட்டாலோ, பெற்றவர் படும் வேதனை மற்றவருக்குப் புரியாது, என் குழந்தை இந்த மடியில்தான் உறங்கியது, இங்கேதான் விளையாடியது, இப்படித்தான் என்னிடம் கொஞ்சியது, உணவுக் கிடைத்ததோ, இல்லையோ, அதன் உறுப்புக்கள் நன்றாய் இருக்கிறதோ, இல்லையோ, பால் குடித்ததோ, பசியால் அழுகிறதோ, விபச்சாரத் தொழிலில் விட்டனரோ, இல்லை கொன்றுப் புதைத்தனரோ என்று ஒரு பெற்றவளின், தந்தையின் மனம் படும் பாடு திருடுபவனுக்கும், தேடும் கடமையில் இருக்கும் சிலருக்கும் புரிவதேயில்லை.

இந்தச் சோகத்தைக் கண்டும் காணாமல், புகார் பதியாமல், அல்லது இதுபோல் எத்தனையோ? இதில், இது வேறா என்று சில அதிகாரிகள் காட்டும் அலட்சியம், மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் வாங்கிக் கொண்டு, மக்கள் வேதனையைப் புரிந்துகொள்ளாமல் பிச்சைகாரர்களைப் போல் துரத்தியடிக்கும் சிலரின் அலட்சியம் இவைகள்தான் வெந்தப்புண்ணில் வேல் பாய்ச்சுவது என்பது.

1,17,480 குழந்தைகள், 352 மாவட்டங்களில் இருந்து, கடந்த ஜனவரி 2008 முதல், ஜனவரி 2010 வரை, காணாமல் போய் இருக்கிறார்கள். அவர்களில் 41,546 குழந்தைகள் இன்று வரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என்று பச்பன் பச்சாவ் அந்தோலன் என்ற சமூகத் தொண்டு நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது, அது நீதிக் கேட்டுப் போராட்டம் தொடங்கியபிறகும், தமிழ்நாடு, குஜராத், மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலத் தலைமைச் செயலர்கள் இன்னும் வழக்குக்காக நேரில் செல்லவில்லை என்பதுதான் வேதனையான செய்தி. அட இங்குதான் ஒரு பசுவின் கன்றைக் கொன்றக் குற்றத்திற்கு, தன் மகனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்ற மனுநீதிச் சோழனும் வாழ்ந்திருக்கிறான்.

நாட்டில் முக்கியமான அறிக்கை விடும் செயல்கள் பல இருக்க, குழந்தைகள் கண்டுபிடிக்கப்படுவது அந்தக் குழந்தைக்கும் தாய்க்கும் அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே நடக்கும். முக்கியஸ்தர்கள் வீட்டில் இதுபோல் நிகழ்வுகள் நடப்பதில்லை, காரணம் திருடுபவனுக்கு ஒரு பயம் இருக்கலாம், செய்தால், கண்டுபிடித்துக் கழுத்தைத் திருகிவிடுவார்கள் என்ற அச்சம் இருக்கலாம். யாரைக் கொலை செய்தாலும், எந்தக் குழந்தையைத் திருடினாலும் நாட்டில் நீதி எல்லோருக்கும் பொது என்ற நிலை இருந்தால், இங்கே குற்றங்களும் குறைந்து விடுமே.

இருக்கும் நீதியை நிலைநாட்டுவதில், நினைவுப்படுத்துவதில் உள்ள போராட்டம், குழந்தையைத் தேடி அலையும் அலைச்சலை விட மிகக் கொடுமையானது.

நம் நாட்டில் இருக்கும் சட்டத்தைத் தட்டி எழுப்ப, குழந்தைகளுக்காகக் குரல் கொடுக்க நீதிமன்றத்தை நாடி இருக்கும் ஒரு போராட்டம், வேறொரு நாட்டில், அநீதியான ஒரு சட்டத் தீர்ப்புக் கண்டு ஆரம்பித்திருக்கிறது.

ஐந்து வயதான பெண் குழந்தை 'லாமியா காம்தி'யைக் கற்பழித்துக் கொலை செய்த 'ஃபையான் காம்தி' என்ற சவூதியரேபிய மத குரு. இவன் பெற்ற தண்டனை, "குருதிப் பணம்" என்று சொல்லப்படுகிற வெறும் அபராதம் மட்டுமே, அதுவும் அந்தக் குழந்தையைப் பெற்ற தாய்க்கு.

அந்தக் குழந்தைப் பெரும் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறது, பாலூட்டும்போது இறந்த குழந்தைக்காக ஒரு சிறுமியைக் கொன்ற சட்டம், பெற்ற பெண் குழந்தையை வன்புணர்ச்சி செய்து கொன்று விட்டு, தாய்க்குப் பணம் கொடுத்தால் போதும் என்கிறது! திரைப்படத்தில் காட்டும் நிழலுக்காய் பொங்கியவர்கள், இந்த உண்மை சுடுகிறது என்று ஒளிந்து கொண்டனரோ?

நீதி கேட்டுப் போகும் இடத்திலும், பெண்ணைப் புணர்ந்து வதை செய்கின்றன சில காவல் நிலையங்கள். ஆந்திராவில், சித்தூரில், விசாரணை என்ற பெயரில் ஒரு சிறுமியை வன்புணர்ச்சி செய்திருக்கிறான் ஒரு வெறிப் பிடித்த காவலன். இன்னும் எத்தனை எத்தனையோ வேதனை தரும் நிகழ்வுகள் உண்டு. பெண்ணென்றால் புணர்ச்சி, ஆண் குழந்தை என்றால் பணம், குழந்தையைக் கடத்தி வதைக்கும், பெண்களை நாசமாக்கும் ஒருவனுக்கு, அவனின் தாயோ அவன் வீட்டுப் பெண்களோ நினைவிற்கே வரமாட்டார்களா? சில நிமிடங்களில் அடங்கிப் போகும் உணர்விற்கு இத்தனை மிருகத்தனமா?

குழந்தைகளிடம் வன்முறையைக் காட்டுபவர்கள் யாரும் வாழத் தகுதி இல்லாத, முதுகெலும்பில்லாத கோழைகளே.

இப்படிப்பட்ட மிருகங்கள் வாழும் நாட்டில், தாய்மை உணர்வு மதிக்கப்படாத நாட்டில், ஒரு குழந்தைக் காணாமல் போனால், அந்தத் தாய்ப் படும் பாடு, எந்தப் பண, உடல் வெறிபிடித்த எந்த அயோக்கியர்களுக்கும் தெரியாது.

எந்த மதமோ, எந்த இனமோ, எந்த மொழியோ, எந்த நாடோ, குழந்தைகள் எல்லோரும் பறிக்கும் பூக்கள் இல்லை, முகர்வதற்கும், பின் வாடவிட்டுக் கொல்வதற்கும்! எத்தனையோ பந்தங்களை உடையாமல் காத்து, ஒரு புதிய உலகை படைக்கவிருக்கும் அழகான சிற்பிகள் அவர்கள்!

ஒருவரிடம் இருந்து அவர் சொத்தைக் களவாடினால், அவரின் சோகம் இழந்தப் பொருளின் மீது சிறிது காலத்திற்கே, மீண்டும் உழைத்துச் செல்வத்தைச் சேர்த்திடுவார். ஆனால் ஒருவரின் குழந்தையைக் களவாடினால், அவர் உயிரையே களவாடுவது போலத்தான், அந்தக் குழந்தைக் கிடைக்கும்வரை அங்கே உயிரே இருக்காது.

நிச்சயமாய் நாம் மனு நீதிச் சோழனைக் கேட்கவில்லை, மனசாட்சி கொண்ட மனிதர்களைத்தான் வேண்டுகிறோம். குழந்தையைத் தின்னும் நாகரிக மிருகங்கள் நாசமாய்ப் போகட்டும், இனியேனும் இங்கே தாய்மையும் மனிதமும் மலரட்டும்!

உணர்வே இல்லாதவர்களிடம் நீதிக் கிடைக்காது, தன் வீட்டில் நெருப்பெரியும் வரை தீயின் கருகும் வாசம் அவர்களைச் சேராது. ஆள்பவர்களும், சட்ட அமைப்புகளும் நீதியை எல்லோருக்கும் சமமாய் வழங்கினால், பணத்தை விட உயிர் பெரிது என்று நினைத்தால், இழந்தவர் நிலையில் தன்னை நிறுத்திப் பார்த்தால், இங்கே குற்றம் குறையும், கண்ணீர் குறையும், இல்லையென்றால் இது போன்ற சட்டப் போராட்டங்களே நம் வாழ்க்கையாய் மாறிப்போகும், போராடுவோம், நாளை சந்ததியேனும் நிம்மதியாய் வாழட்டும்!

மு. அமுதாவின் வலைப்பதிவுத் தளம் >http://amudhamanna.blogspot.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x