Last Updated : 03 Nov, 2015 08:14 AM

 

Published : 03 Nov 2015 08:14 AM
Last Updated : 03 Nov 2015 08:14 AM

கர்னாடக இசை கற்றுக்கொள்ள வேண்டும் என யார் அழுகிறார்கள்?- சஞ்சய் சுப்பிரமணியன் பேட்டி

எதைப் பற்றிப் பேசினாலும் இயல்பாக அதில் தன்னைக் கரைத்துக்கொள்ளும் லாவகம், எந்தக் கேள்வியைக் கேட்டாலும் அலட்டிக்கொள்ளாமல் சிரித்த முகத்துடன் பதில் சொல்லும் தன்னம்பிக்கை, பாடும்போது வந்து விழும் சங்கதிகளைப் போலப் பேச்சிலும் கொட்டும் அளப்பரிய தகவல்கள், கருத்துக்களில் அசாத்தியமான கூர்மை...சஞ்சயுடன் பேசுவது அலாதியானதொரு அனுபவம். 47 வயதில் தற்போது சங்கீத கலாநிதி விருது பெறும் இந்தக் கலைஞருடன் நடந்த உரையாடலிலிருந்து சில பகுதிகள்…

நம்முடைய வாழ்க்கையில் இசையின் இடம் எது?

கலைக்கு நாம் எந்த அளவுக்கு நம்மைக் கொடுக்கிறோமோ அந்தளவுக்குக் கலை நம்வசப்படும். சராசரி வாழ்க்கையைச் செழுமைப்படுத்தும் இசை. ஆனால், அடிப்படைத் தேவையில் சங்கீதம் சேர்த்தி இல்லை, அனாவசியத்தில் சேர்த்தி என்பார் செம்மங்குடி. அடிப்படைத் தேவைகளுக்குப் போகத்தான் எந்தக் கலைக்கும் இடம் உண்டு. ஜீவிப்பதற்கே வழியில்லாத இடத்தில் கலையைப் பற்றிப் பேச முடியாது.

உங்களுக்குள் இசையை நீங்கள் உணர்ந்த தருணம் எது?

அப்பா டிராமா ஆர்டிஸ்ட். அம்மா சொல்லுவாள், எனக்கு ஒன்றரை வயசு இருக்கும்போதே கச்சேரிக்குப் போனா சும்மாயிருப்பேனாம். டிராமாவுக்குப் போனா அழுவேனாம். பாட்டி வீணை வாசிப்பார். மாமா புல்லாங்குழல் வாசிப்பார். வீட்டில் ரேடியோ எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும். வளர்ந்ததும், படிக்கும்போதும், கல்யாணம் ஆனபிறகும் கூட எனக்குக் கச்சேரி கேட்கப் பிடிக்கும். கிரிக்கெட், ஸ்டாம்ப் கலெக்‌ஷன் என்று பல விஷயங்கள் வந்து போனாலும் ஸ்திரமாக எப்போதும் எனக்குள் இருந்தது இசைதான்.

சி.ஏ. படித்த உங்களைத் தொழில்முறை இசைக் கலைஞனாக மாற்றிய ஒரு தருணம் இருக்குமே…

சி.ஏ. பாஸ் செய்தேன். அப்பாவின் ஆசை; படிக்காமல் பெண் கொடுக்க மாட்டார்களே…! கல்யாணம் செய்து குழந்தை பிறந்த பிறகும் சி.ஏ.தான் பிராக்டிஸ் செய்துகொண்டிருந்தேன். ஆனால் மனம் லயிக்கவில்லை. அடுத்த கச்சேரிக்கு என்ன பாடலைப் பயிற்சி செய்வது, கச்சேரி பார்ப்பது இதில்தான் மனம் ஒன்றியதே தவிர,டாக்ஸ் லாவைத் தெரிந்துகொள்வோம் என்றெல்லாம் மனம் போகவில்லை. செய்யாத வேலைக்குச் சம்பளம் வாங்குகிறோமே என்ற குற்ற உணர்வு 2000-ல் ஏற்பட்டது. வெளிநாட்டு டூர் ஒன்றுக்குப் போய்விட்டு வந்தவுடன் நான் என் மனைவியோடு பேசிக்கொண்டிருந்தபோது, “இதை விட்டுடுங்களேன்”என்றாள். அப்போதுதான், என்னுடைய 32-வது வயதில், சி.ஏ.வை விட்டேன். இசை மட்டும்தான் என்னுடைய அடையாளம் என்னும் முடிவுக்கு வந்தேன்.

ராகம் பாடும் நேரம் நபருக்கு நபர் வேறுபடுகிறதே. இதில் உங்கள் அணுகுமுறை என்ன?

ஒரே கச்சேரியில் ஒரு ராகத்தை 5 நிமிடம் பாடுவேன். ஒரு ராகத்தை 10 நிமிடம் பாடுவேன். ஒரு ராகத்தை 20 நிமிடங்களுக்குப் பாடுவேன். இது, எடுத்துக்கொள்ளும் ராகம், அன்றைக்கு சாரீரம் இருக்கும் நிலை, பாடுவதற்கான சூழல் இப்படி எல்லாவற்றையும் பொறுத்து முடிவு செய்யும் விஷயம். இதெல்லாம் ஃபிக்சட் கிடையாது. அரியக்குடி 3 நிமிடம் பாடினார் என்றால் அது அவருடைய சவுகரியம். அவருக்கு அது ஒர்க் அவுட் ஆயிற்று. ஜி.என்.பி. 55 நிமிடம் ராகம் பாடியிருக்கிறார். ஒரே பீரியடில் பத்து விதமாக ராகம் பாடியவர்கள் இருந்திருக்கிறார்கள். மேலேயே பாடிவிட்டுப் போனவர்கள் இருந்திருக்கிறார்கள். கீழேயே பாடிவிட்டுப் போனவர்களும் இருந்திருக்கிறார்கள். மணி அய்யர், ‘கீழே பாடினா பண்டிதர்களுக்குப் பிடிக்கும். மேலே பாடினா பாமரர்களுக்குப் பிடிக்கும்’ என்பார்.

பொதுவாக உச்ச ஸ்தாயியில் நன்றாகப் பாடுவது அதிகம் பாராட்டப்படுகிறதே?

1920-30-களில் இந்த நிலைமை இருந்தது. அன்றைக்கு ‘மைக்’ இல்லாத காலத்தில் உரத்த குரலில் பாட முடியவில்லை என்றால், ‘நீ பாடுவதற்கு லாயக்கில்லை. வாத்தியப் பயிற்சி எடுத்துக்கோ...’ என்று சொல்லிவிடுவார்கள். ‘மைக்’கின் வரவுக்குப்பின் இந்த நிலைமை மாறியது. பாலமுரளி கிருஷ்ணா போன்றவர்கள் 1960-களிலேயே, தேவைக்கு மீறிக் கத்திப் பாடும் கலாச்சாரத்தை உடைத்துவிட்டார்கள்.

அதில் உங்களின் பார்வை என்ன?

இசையில் நம்முடைய வித்வத்தை வெளிப்படுத்துவதற்குத் தடையாக சாரீரம் இருக்கக் கூடாது. மாறாக, நம்முடைய வித்வத்தைச் சுகமாகக் கொண்டு செல்லும் வாகனமாக சாரீரம் இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம். இந்த அணுகுமுறையின் மூலம் நமக்கு வெற்றி கிடைக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்.

வெற்றி என்பது என்ன?

இந்த மாதம் இ.எம்.ஐ. கட்ட முடியவில்லை என்றால், அது வெற்றி இல்லைதானே…

லௌகீகமாக வேண்டுமானால் இந்த அளவு கோலைச் சொல்லலாம். இசையில்..?

லௌகீகத்தில் எதிரொலிப்பதுதானே எல்லாமே. வெளிப் பார்வைக்குப் பணம், ஆடியன்ஸ் குறைவது இரண்டுமே தோல்விதான். சுரத்தில்லாமல் ரெண்டு கச்சேரி கேட்பார்கள். அடுத்த கச்சேரிக்கு வர மாட்டார்கள். ஆடியன்ஸ் திருப்தி யாகப் போகவேண்டும் என்பதில் நான் குறியாக இருப்பேன்.

உங்கள் ஆத்ம திருப்தி முக்கியமில்லையா?

ரசிகனைத் திருப்திப்படுத்துவதே எனக்கு முக்கியம். அதே நேரத்தில் ஆறு மாதத்துக்கு ஒருமுறை, சீசனுக்கு ஒருமுறை திரும்பிப் பார்த்து என்னுடைய திட்டமிடலை ஏற்படுத்திக்கொள்வேன்.

நீங்கள் பாடும் உயர்ந்த சங்கீதம் ரசிகர்களுக்கு எட்டவில்லை என்றால் எப்படி எடுத்துக்கொள்வீர்கள்?

‘ரீச்’ ஆகாவிட்டால் அது உயர்ந்த சங்கீதமே கிடையாது. நான் பாடுவது உயர்ந்த சங்கீதம்; அது மக்களுக்குப் போய் சேரவில்லை என்று நான் நினைத்தால் நிச்சயமாக நான் ஒரு முட்டாள்.

பக்திபூர்வமான கீர்த்தனை பாடும்போது மெய்மறந்துவிடுவீர்களா?

மெய்மறந்து என்பது ஆடம்பரமான வார்த்தை. ஆனால் கான்ஸன்ட்ரேஷன் இருக்கும். ராகுல் திராவிட் சொல்வார் ‘கம்ஃபர்டபிள் ஸோன்’ என்று. அதுபோல ஒரு ‘ஸோன்’இசையிலும் உண்டு. சாரீரம் பேசும். நாம் செய்ய விரும்பும் சங்கதிகள் மிகச் சரியாகவரும். இதைச் சரியாகக் கேட்பவர்களும் உள்வாங்கி மகிழ்ச்சியடைவார்கள். இந்த கனெக்ட் கிடைப்பதில்தான் கச்சேரியின் வெற்றி அடங்கியிருக்கிறது. இது கிடைத்துவிட்டால், அன்றைய கச்சேரியில் நாம் எதிர்பார்த்த எல்லாமும் நடக்கும். அதுதான் கச்சேரிக்கான தேடலும்.

உங்களுக்கும் இசைக்குமான ஆத்மார்த்தமான தொடர்பு?

அப்படியொரு ஈர்ப்பு இருப்பதாகப் பொய் சொல்ல விரும்பவில்லை. நான் விளாடிமிர் நபாகோவின் புத்தகம் படிக்கிறேன் என்றால் அது என் தனிப்பட்ட ரசனை. இதில் வேறு யாருக்கும் பங்கில்லை. இசையில் என்னுடைய தனிப் பட்ட விருப்பம் என்றால் நாகசுரம் கேட்பேன். இளையராஜா இசையமைத்த பாடல்களைக் கேட்பேன். மக்களுக்காக மக்கள் குழுமியிருக்கும் அரங்குகளில் மேடையில் பாடும் ஒருதொழில்முறைப் பாடகனாக அப்படியொரு தனிப்பட்ட ஈர்ப்பு அல்லது விருப்பம் எனக்கு இல்லை.

உங்களுக்கான சவால் என்ன?

தினம் தினம் ஒரு அனுபவம். இன்னிக்கு மேட்சுல ரன் எடுப்பது மாதிரி. தினம் தினம் சவால்தானே. ஒரு மேடையில் ஏறி ரசிகர்களைத் திருப்திப்படுத்துவது சவால்தானே.

இசையில் சவால்கள்?

அது இருந்துகொண்டே இருக்கும். ஒரே மாதிரியான ராகங்கள் பாடாமல் வெவ்வேறு ராகங்களைப் பாடிப் பார்ப்பது, சாதகம் செய்வது, ராக ஆலாபனையில் சிறப்பாகக் கவனம் செலுத்துவது, புதிய தாளக் கணக்குகளைப் பரிசோதித்துப் பார்ப்பது இப்படி நிறைய சவால்கள் இருக்கின்றன.

ரசிகர்களை எல்லா நேரத்திலும் உத்தரவாதமாகத் திருப்திப்படுத்திவிட முடியுமா?

ஒரு சோப் ஐந்து ரூபாய் என்றால், அந்த ஐந்து ரூபாய்க்கு இந்தெந்தப் பலன்கள் கிடைக்கும் என்று சோப்பை விற்பவரால் உறுதியாகக் கூற முடியும். கலையில் அப்படிச் சொல்ல முடியாது. என்னுடைய கச்சேரியில் உங்களுக்கு முழுத் திருப்தி கிடைக்கும் என்று என்னால் சத்தியம் பண்ண முடியாது. ரசிகர்களை நம்பித்தான் கலைஞன் இருக்கிறான். என்னால் முடிந்த அளவுக்கு என்னுடைய இசையால் ரசிகர்களை மகிழ்விப்பேன். அதற்கான முயற்சிகளைத் தினம் தினம் உண்மையாகச் செய்துகொண்டிருக்கிறேன். கலைஞனுக்கும் ரசிகனுக்கு மான இந்த கனெக்டிவிடி ஒருநாள், இரண்டு நாள் கச்சேரிகளில் கிடைக்காவிட்டால் பரவாயில்லை. இதே நிலை தொடர்ந்தால், தொழில் வேலை செய்யவில்லை என்று அர்த்தம்.

தமிழ் இசையைப் பல மேடைகளில் ஒலித்துவருகிறீர்கள். அதைப் பற்றிச்சொல்லுங்கள்.

தமிழ்நாட்டில் இசை கேட்கும் பெரும்பாலோர் தமிழர்கள். அதனால் மேடையில் தமிழ் மொழியில் பாடப்பட வேண்டும் என்னும் கருத்தை பாரதி, கல்கி போன்றோர் முன்னெடுத்தனர். எதிர்பாராதவிதமாக இந்த முன்னெடுப்பைத் திராவிட இயக்கங்கள் கையிலெடுத்தன. ஏன் அபகரித்துக்கொண்டன என்றுகூடச் சொல்லலாம். அதனால் கலைஞர்கள் மத்தியில் ஒரு நெருடல் ஏற்பட்டது.

எனக்குத் தமிழ்ப் பாடல்கள் இயல்பாகவே நன்றாக வரும். அதற்குக் காரணம் என்னுடைய குருமார்களின் அர்ப்பணிப்பு. சம்ஸ்கிருத ஸ்லோகங்களை விருத்தமாகப் பாடுவதைவிட, தமிழ் வரிகளை விருத்தமாகப் பாடுவதை மிகவும் நெருக்கமாக உணர்ந்தேன். ரசிகர்களிடமும் பெரியவர்களிடமும் நான் பாடும் தமிழ்ப் பாடல்களுக்குப் பெரிய வரவேற்பு இருந்தது. மேடையில் தமிழில் பாடுவதைக் குறையாக நினைப்பதற்குச் சவாலாகவே நான் நிறைய தமிழ்ப் பாடல்களை மேடையில் பாட ஆரம்பித்தேன். ஆனால் இதைத் தன்னியல்பில் நான் செய்தேனே தவிர, தமிழிசையின் பிரதிநிதியாக என்னை ஸ்தாபித்துக்கொள்ள நான் விரும்பவில்லை.

இசையில் எதற்குப் பிரதான இடம்? பக்திக்கா, அழகியலுக்கா?

பக்தி என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். ஒரு பாடகர் பக்தியைப் பிரதானப்படுத்தலாம். அல்லது அடிப்படையான இசையைப் பிரதானமாக வெளிப்படுத்தலாம்.

மேற்கத்திய இசையில் ராக், காஸ்பல் இரண்டு பாணிகளே உள்ளன. ஆனால், இசையில் எந்த சமரசமும் இருக்காது. அதேபோல் கர்னாடக இசையிலும் இரு வேறு நோக்கங்கள் உள்ளன. பாடலைத் தொடங்கும்போதே சிவபெருமான் காட்சிகொடுத்துவிட்டார் என்பார் ஒருவர். ஒருவருக்கு கேதார ராகம் மட்டும்தான் பிரதானமாகத் தெரியும். இது நபருக்கு நபர் வேறுபடும். என்னைப் பொறுத்தவரையில் இசைக்குத்தான் பிரதான இடம். பக்தி, மொழி எல்லாமே அதற்கு அடுத்துதான்.

இசை எதை அடிப்படையாகக் கொண்டது?

அடிப்படையாக எதுவுமே கிடையாது. நாம் கொடுக்கும் விதத்தில்தான் இருக்கிறது. முகாரி ராகம், சோகம் என்பது பொதுவான நியதி. ராமனின் ராஜ்ஜியத்தைக் கொண்டாடும் பாடலை தியாகராஜர் முகாரியில் அமைத்திருக்கிறார். சிலர் சந்தோஷமாகப் பாடும் பாட்டையே முகாரி போல பாடுவதும் உண்டு!

அப்படியென்றால் பக்தியிலிருந்து இசையை வெளியே எடுத்து உங்களால் கச்சேரி செய்ய முடியுமா?

செய்திருக்கிறேனே… திருக்குறளை வைத்துப் பல்லவி பாடியிருக்கிறேன். ரொமான்டிக் லிரிக்கை எடுத்துக்கொண்டு ஒரு மணிநேரம் ராகம், தானம், பல்லவி பாடியிருக்கிறேன். ராக ஆலாபனையில் முழுக்க முழுக்க கற்பனைதானே. பழந்தமிழ் இலக்கிய வடிவங்களை எடுத்துக்கொண்டு கச்சேரி செய்திருக்கிறேன். என்னைப் பொருத்தவரை இசைக் கூறுகளை அமைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா, பாடும் முறைக்கேற்ப ஒரு பாடல் அமைகிறதா என்பதுதான் அளவுகோல்.

சினிமா இசை பற்றி உங்களின் பார்வை, தேர்வு என்ன?

நான் 20 ஆண்டுகளுக்கு முன்னாலேயே சினிமா இசையிலிருந்து ரிடையர் ஆகிவிட்டேன். ராஜா ரொம்பவும் பிடிக்கும். 80-களில் நான் வளரும் பிராயத்தில் கேட்ட இசை. எம்.எஸ்.வி., இளையராஜா, ரஹ்மானின் தொடக்க கால இசை. அவ்வளவுதான். அதன் பின் பெரிதாக சினிமா இசையின் மீது ஈடுபாடு ஏற்படவில்லை. ஒரு இசை நம் மனதை இழுக்கிறது என்றால் அதற்கு மெலடியும் ரிதமும் பேலன்ஸாக இருக்கவேண்டும். இது பொதுவான அளவுகோல். ஜி.ராமநாதனில் தொடங்கி ஒவ்வொருவரும் சிறப்பான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். இளையராஜாவின் இசை நான் சிறு வயதிலிருந்து கேட்டு அனுபவித்த இசை. அதனால் அது கூடுதல் சிறப்பாக எனக்கு இருக்கிறது.

கர்னாடக இசையைப் பாடுபவர்கள் கேட்பவர்கள் இருவருமே பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சாதியில் இருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பான்புரோக்கர் என்னும் தொழில் பிரிவினர் ஒரு சாதியோடு சம்பந்தப்பட்டிருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்? இந்தியாவில் தொழில் சாதியோடு சம்பந்தப்பட்டிருந்தது. சில தொழில்களிலிருந்து சாதி காலப்போக்கில் பிரிந்தது. இன்னும் சில சாதிகள் அந்தத்தொழிலோடு பிரிக்க முடியாத படி பிணைந்திருக்கின்றன. இதேபோல்தான், இசைவேளா ளர்கள் என்னும் பிரிவினரிடையே செல்வாக்குடன் இருந்த கலை, அந்தப் பிரிவினரிடையே ஏற்பட்ட பொருளாதாரச் சரிவைத் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டது.

ஒரு சாராரின் பிடியில் ஒரு கலை வடிவம் இருப்பது ஆரோக்கியமான விஷயமா?

பிராமணர்களிடையே கர்னாடக இசை வளர்ச்சி, இயற்கையாக இயல்பாக நடந்திருக்கிறது. இது ஒரு திறந்த வெளி. இதில் யார் வேண்டுமானாலும் வரலாம். எனக்கு வாசிக்கும் பிரதான மிருதங்க வித்வான் வேறு சாதியைச் சேர்ந்தவர்தான். மதுரை சோமு, ஜேசுதாஸ் எல்லாம் வந்துகொண்டுதானே இருக்கிறார்கள்.

சபாக்களில் வாய்ப்பு கிடைப்பதில் ஏற்றத்தாழ்வு இருக்கிறதே?

பாணிகளில்கூட (இவருடைய சீடரா, அவருடைய சீடரா என்பதில்) ஏற்றத்தாழ்வு இருக்கத்தான் செய்கிறது. மாண்டலின் சீனிவாஸ் பிறவி மேதை. அவர் பிராமணர் இல்லை. எத்தனை பேர் அதுபோல் வந்தார்கள்? நந்தனார் கோயிலுக்குள் வர முடியவில்லையே என்று அழுதார். கர்னாடக இசையைக் கற்றுக்கொள்ள வேண்டும் என யார் அழுகிறார்கள்? வேண்டும் என்பவர்களுக்குக் கிடைப்பதில் எந்தத் தடையும் இல்லையே?

அப்படி விருப்பத்துடன் வருபவர்களுக்கு முன்னேறுவதற்கான சூழல் இருக்கிறதா, நீங்கள் யாருக்கேனும் கற்றுக் கொடுக்கிறீர்களா?

வந்தால் முன்னேறுவதற்கான சூழல் இருக்கிறது. வந்து ஜெயித்தவர்கள் இருக்கிறார்கள். நான் ஒரு ஓதுவார் பையனுக்குக் கற்றுக் கொடுக்கிறேன். திராவிட இயக்கத்தினர் கர்னாடக இசை பிராமணர்களுக்கானது என்று முத்திரை குத்திவிட்டனர். கர்னாடக இசைத் துறை என்பது ஆர்கனைஸ்டு செக்டார் கிடையாது.ஏதோ சில சபாக்கள் சேர்ந்து சில காரியங்களைச் செய்துவருகின்றன. அவ்வளவுதான். இதற்குப் போய் உள்ளே வரலாமா, வரக் கூடாதா, கோர்ட்டில் கேஸ் போடலாமா என்றெல்லாம் யோசிக்க வேண்டியதில்லை.

தனிப்பட்ட சஞ்சய் சுப்ரமணியன் யார்?

சராசரி மனிதன். அவ்வளவுதான். குழந்தைகளைப் பள்ளியில் கொண்டுபோய் விடும் சாதாரணத் தந்தை. எனக்கு எல்லாக் கலைகளின் மீதும் ஈடுபாடு உண்டு. சமூகத்தைக் கலை என்னும் கண்ணாடியின் வழியாகப் பார்ப்பவன் நான். நாஞ்சில் நாடனின் ஒரு கதையைப் படிக்கும் போதுதான் மெட்ராஸைத் தவிர, ஒரு நாகர்கோவில் எனக்குத் தெரிகிறது. சக மனிதர்களின் மீது மரியாதை செலுத்துவதற்கும் அன்பு பாராட்டுவதற்கும் கலை நமக்கு சொல்லித் தருகிறது.

தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

(தி இந்து தீபாவளி மலரில் (2015) வெளியாகியிருக்கும் நேர்காணலின் சுருக்கமான வடிவம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x