Published : 29 Dec 2014 10:56 AM
Last Updated : 29 Dec 2014 10:56 AM

கருத்துரிமையின் கொடுங்காலம்

புத்தகங்கள் தடைசெய்யப்பட்ட எதிர்காலத்தில் நடப்பதாக ‘ஃபாரென்ஹீட் 451’ நாவலை எழுதியிருப் பார் பிரபல அறிவியல் புனைகதை எழுத்தாளர் ரே பிராட்பரி. அந்த நாவலில் கதாநாயகன் ஒரு தீயணைப்பு வீரன். ஆனால், அவனுடைய பணி தீ மூட்டுவது. ஆம், யாரெல்லாம் புத்தகங்களைப் பதுக்கி வைத்திருக்கிறார்களோ அவர்களைத் தேடிப் பிடித்து அந்தப் புத்தகங்களைத் தீக்கிரையாக்கும் பணி. 1953-ல் வெளியான இந்த நாவலில் கற்பனை செய்யப்பட்டிருந்த எதிர்காலம் என்பது தற்போதைய காலகட்டம்தானோ என்று ஐயமாக உள்ளது. சில தசாப்தங்களுக்கு முன்னால் சல்மான் ருஷ்டியின் ‘சாத்தானின் கவிதைகள்’ நாவல் தடைசெய்யப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் ‘டாவின்சி கோட்’ திரைப்படம் தடை செய்யப்பட்டது. இந்த ஆண்டு வெண்டி டோனிகரின் ‘தி ஹிந்துஸ்: அன் ஆல்டர்னேட்டிவ் ஹிஸ்டரி’ புத்தகம். இன்னும் ஏராளமான உதாரணங்களைச் சொல்லலாம். இந்த உதாரணங்களுடன், எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ நாவலும் சேர்ந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. இந்த நாவல், திருச்செங்கோடு பற்றியும் அங்குள்ள கோயிலைப் பற்றியும் இந்துப் பெண்களைப் பற்றியும் தவறாகச் சித்தரிக்கிறது என்று சொல்லி, சில இந்து அமைப்புகள் புத்தகத்தின் பிரதிகளைச் சமீபத்தில் எரித்துப் போராட்டம் நடத்தின. எழுத்தாளர் பெருமாள்முருகனைக் கைதுசெய்ய வேண்டும் என்றும் அந்த அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான அந்த அமைப்புகளின் செயலைக் கண்டித்துத் தமிழகமெங்கும் கண்டனக் குரல்கள் எழுந்திருக்கின்றன. ஃபேஸ்புக்கிலும் பொது வெளியிலும் எழுப்பப்பட்டிருக்கும் கண்டனக் குரல் களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றை இங்கே கொடுத்திருக்கிறோம்.

ராஜன் குறை, அரசியல்-சமூக விமர்சகர்

தலையற்ற ராட்சச மிருகம் தனது வேலையைத் தமிழ்நாட்டில் தொடங்கி விட்டது. அதன் கையில் பெருமாள் முருகனின் புகழ்பெற்ற நாவல் தற் செயலாகக் கிடைத்திருப்பதன் மூலம் அந்த அற்புதமான நாவல் மீது மக்களின் கவனத்தை அது திருப்பியிருக்கிறது. இந்த நாவல் அனிருத்தன் வாசுதேவனின் மொழிபெயர்ப்பில் பெங்குயின் பதிப்பத்தால் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டிருக்கிறது. நாட்டின் பிற பகுதிகளில் இருக்கும் தலையற்ற ராட்சச மிருகத்தின் சகாக்களுக்கு இந்த ஆங்கில மொழி பெயர்ப்பையும் பரிந்துரைக்கிறேன், அதற்கும் நல்ல விளம்பரம் கிடைக்க வழிசெய்யுங்கள்.

தலையற்ற ராட்சச மிருகத்தனம் புற்றுநோய்போல் பரவி, அரசு இயந்திரத்திலும் ஊடுருவிவிடாமல் இருக்க, எங்கெல்லாம் எப்போதெல்லாம் சாத்தியப்படுகிறதோ அங்கெல்லாம் அப்போதெல்லாம் நாம் ஒன்றுசேர்ந்து நமது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். அதற்கான நேரம் வந்துவிட்டது.

(ஆங்கிலத்தில் இடப்பட்ட பதிவின் தமிழ் வடிவம்)

ஹெச்.ஜி. ரசூல், எழுத்தாளர்

அடிப்படைவாதிகளின் பல முகங்களில் இதுவும் ஒன்று. ‘மாதொருபாகன்’ என தனது பண்பாட்டியல் நோக்கிலான படைப்பிலக்கியத்தை பெருமாள்முருகன் எழுதியிருக்கிறார். இதோடு இந்துத்துவவாதிகள் உடன்படவில்லையென்றால், அவர்களுக் கான நாவலை அவர்கள் எழுதட்டும், வெளியிடட்டும், கொண்டாடட்டும். அதை விட்டுவிட்டுப் படைப்பாளியை அச்சுறுத்துவதும், நாவலை எரியூட்டுவதும் சரியான அணுகுமுறையல்ல. ஏனொரு வன்முறைத் தீயை எரிய விட வேண்டும்?

ஆக்ராவில் மறுமதமாற்றம், தாஜ்மஹால் இந்துக் கோயில், பகவத் கீதையைத் தேசிய நூலாக்க வேண்டும், சம்ஸ்கிருத வாரம், காந்தியைக் கொன்ற கோட்சேவுக்குச் சிலை என்பதான அண்மைக் கால இந்துத்துவ அடிப்படைவாதக் குரல்களின் தொடர்ச்சியாகவே பெருமாள்முருகனின் படைப்புக்கெதிரான வன்முறையைக் கருத வேண்டும்.

எழுத்துரிமைக்கும் படைப்பாளிக்கும் அவரது மனைவி குழந்தைகளுக்கும் பாதுகாப்பின்மை அதிகரித்துவரும் இச்சூழலில், சட்டரீதியாகவும் சமூகரீதியாகவும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர வேண்டும்.

முருகானந்தம் ராமசாமி, காங்கிரஸ்

இலக்கியப் பிரதி ஒன்றின் ஒரு பக்கத்தைக்கூடப் படித்து உள்வாங்கும் அறிவில்லாததுகள் இப்படித்தான் பேசும். அந்த அளவுகோல்படி பார்த்தால், நீங்கள் மகாபாரதத்திலிருந்து எரிக்கத் துவங்க வேண்டுமே. நாவல் வெளியாகி 3 ஆண்டுகளாகி, அது ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்ட பிறகு, இப்போதுதான் கண்டுபிடித்தார்கள் போலும். படைப் பாளிகள், கலைஞர்கள், அறிவுஜீவிகள் என எல்லோருடைய வாயையும் அடைத்து, கைளையும் ஒடித்துவிட்டால் இவர்கள் விடும் புருடாக்கள்தான் இலக்கியம் என அறிவித்துவிடலாம்.

தொல். திருமாவளவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்

அடிப்படைவாத அமைப்புகள் தமிழ்நாட்டைக் கலவர பூமியாக மாற்று வதற்குக் குறிவைத்துச் செயல்பட்டு வருகின்றனர். அதன் ஒரு வெளிப்பாடாக, நாடறிந்த எழுத்தாளர் பெருமாள்முருகன் நான்கு ஆண்டுகளுக்கு முன் எழுதிய நூலைத் தடை செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பெருமாள்முருகன் பல நூல்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர். அவரது நாவல்கள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுப் பாராட்டுப் பெற்றவை. அவர் 2010-ம் ஆண்டில் எழுதிய ‘மாதொருபாகன்’ என்ற நாவல் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப் பட்டுள்ளது. அது கொங்கு மண்டலத்தில் மிகவும் அன்போடு இல்லற வாழ்வை நடத்தும் ஒரு குடும்பத்தைப் பற்றியது. அந்த நாவலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பண்பாட்டு வழக்கம் ஒன்றைக் காரணமாகக் காட்டி, 4 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது அதைத் தடைசெய்ய வேண்டும் என்று இந்துத்துவ அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளன. அந்த நாவலின் படிகளைத் தீயிட்டுக் கொளுத்தியும் அதை எழுதியவரையும் பதிப்பித்தவரையும் கைதுசெய்ய வேண்டுமென வலி யுறுத்தியும் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளும், வேறு சில மதவாத அமைப்புகளும் திருச்செங்கோடு பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்திவருகின்றன. எழுத்தாளர் பெருமாள்முருகனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. ஜனநாயகத்தின்பால் அக்கறை கொண்டோர் இதை அனுமதிக்க முடியாது.

ஜோதிமணி, செய்தித் தொடர்பாளர், காங்கிரஸ்

பெருமாள்முருகனின் ‘மாதொரு பாகன்’ நாவல் வெளியாகி நான்கு வருடங்களாகி, அது ஆங்கிலத்தில் இரண்டு பதிப்புகள் கண்டு நன்கு விற்பனையாகிவரும் நிலையில், பாஜக,

ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அந்த நாவலைக் கொளுத்தியதோடு, பெருமாள்முருகனையும் தொலைபேசியில் விரும்பத் தகாத வகையில் பேசிவருகின்றனர். முதலில் ‘இதை எழுத வேண்டும், வேண்டாம்’ என்று சொல்கிற உரிமையை இவர்களுக்கு யாரும் கொடுத்திருக்கவில்லை. இந்திய அரசியல் சாசனம் ஒவ்வொரு குடிமகனுக்கும்/குடிமகளுக்கும் அந்த உரிமையைக் கொடுத்திருக்கிறது. இந்த நாவல் பிரச்சினை என்று நினைத்தால், மகத்தான புகழ்பெற்ற மகாபாரதத்தை இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்? உண்மையிலேயே இவர்கள் பெண்களின் காவலர்கள் என்றால் இவர்கள் கொளுத்த வேண்டியது சட்டசபையில் ஆபாசப்படம் பார்த்த பாஜக எம்எல்ஏக்களின் மலிந்த, ஆபாசமான மனநிலையைத்தான். இன்று பெருமாள்முருகன். நாளை நாம்... இந்தப் பாசிசச் சூழ்நிலையை எதிர்த்துத் தமிழர்களாகிய நாம் போராட வேண்டும்.

வா. மணிகண்டன், வலைப்பதிவர்

தமிழிசை சவுந்திரராஜனுக்கும் வானதி சீனிவாசனுக்கும் வணக்கம். எழுத்தாளர் பெருமாள்முருகனின் ‘மாதொருபாகன்’ நூலை எரித்து பாஜகவினர் திருச்செங் கோட்டில் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். ஒரு புத்தகத்தை எரிப்பதையும் எழுத்தாளரின் நிழற்படத்தைச் செருப்பால் அடிப்பதையும் பாஜக ஏற்றுக்கொள்கிறதா? வெளிவந்து சில ஆண்டுகளாகிவிட்ட ஒரு நூலில், எதிர்ப்பதற்கான கருத்து இருந்தால், அதைச் சாத்வீகமான முறையில் தெரிவிக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன. இப்படி அராஜகமான போக்கில் பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்ஸும் ஈடுபடுவதை எந்த விதத்திலும் அனுமதிக்கக் கூடாது. அறிவுசார் உலகின் மீதான வன்முறையில் ஈடுபடுவோரின் அராஜகப் போக்கைக் கண்டிப்பதோடு, அதைத் தடுத்து நிறுத்துவதும் உங்கள் கடமை. புரிதலுக்கு நன்றி.

சசி தரூர், காங்கிரஸ் தலைவர்

புத்தகங்களைத் தடைசெய்வதை எந்த வித நிபந்தனைகளும் இன்றி முற்றிலுமாக எதிர்க்கிறேன். உங்களுக்கு ஒரு புத்தகம் பிடிக்கவில்லை என்றால் அதை வாங்காதீர்கள்; படிக்காதீர்கள். ஆனால், அதைத் தடைசெய்ய வேண்டாம். எரிக்கவும் வேண்டாம். (புத்தகங்களைத் தடை செய்வதுகுறித்த கேள்விக்கு அளித்த பதிலில்...)

- தொகுப்பு: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x