Published : 17 Jun 2015 09:14 AM
Last Updated : 17 Jun 2015 09:14 AM

ஒரு நதியின் வாக்குமூலம்: கழிவுகளால் கண்ணீர் விடும் பவானி!

வனங்களில் கழிவுகள் கலக்காமல்- இயற்கையுடன் இயைந்து- தெளிந்த தண்ணீருடன் ஓடும் பவானி, மனிதவாடைப் பட்டவுடனேயே களங்கப்பட்டு கண்ணீர் விடுகிறாள். பவானியின் கண்ணீருக்கு மனிதச் சமூகத்தையன்றி வேறு எதையும் கை நீட்டி காரணமாக்க முடியாது.

பவானி ஆறு, மேட்டுப்பாளையத்தை ஒட்டிய தேக்கம்பட்டி கிராமத்தில்தான் மனித நாகரிக சமூகத்துக்குள் நுழைகிறது. வந்தாரை வரவேற்று வாழவைப்பதுதான் நமது சமூகப் பண் பாடு. ஆனால், ஆறுகள் விஷயத்தில் அந்த மாண்பை நாம் மறந்துவிட்டோம்.

பவானி ஊருக்குள் நுழைந்த உடனேயே அதில் கலக்கின்றன தொழிற் சாலை ரசாயனக் கழிவுகள். அழகான ஆற்றங்கரை கிராமமான தேக்கம் பட்டியில், சூழலுக்கு சற்றும் சம்பந்த மில்லாத பன்னாட்டு நிறுவனங்களின் கன்டெய்னர் வாகனங்கள் சாரை சாரையாக வரிசைகட்டி நிற்கின்றன.

எங்கே போனது மக்களின் உணர்வு?

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய மேட்டுப்பாளையம் ‘பவானி நதி நீர் மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்புக் குழு’வின் தலைவர் டி.டி.அரங்கசாமி மற்றும் ‘மேட்டுப்பாளையம் மக்கள் நலப் பேரவை’ நிர்வாகி டி.எல்.எஸ். ராஜேந்திரன் ஆகியோர், “20 ஆண்டு கள் போராடி விஸ்கோஸ் ஆலையை மூடிவிட்டோம் என்று மகிழ்ச்சி அடைய முடியவில்லை. சில ஆண்டுகளிலேயே அதைவிட பெரிய தொழிற்சாலைகள் இங்கே வந்துவிட்டன. ஆற்றைக் காப் பாற்ற வேண்டும் என்று மக்க ளிடம் அன்று இருந்த உணர்வு இன்று இல்லை.

இப்படியாக தேக்கம்பட்டி, ஜடையம்பாளையம், சிக்கதாசம் பாளையம் ஊராட்சிகள் மற்றும் மேட்டுப் பாளையம் நகராட்சிப் பகுதிகளில் சுமார் 15 பெரும் தொழிற்சாலைகள் ஆற்றங்கரையை ஒட்டி அமைந் துள்ளன. இவை அனைத்தும் ‘5 கிலோ மீட்டருக்குள் தொழிற்சாலை அமைக்கக் கூடாது’ என்று தமிழக அரசின் அரசாணை வெளியாவதற்கு முன்பே வந்தவை. அந்த ஒரு காரணத் தையே சாதகமாகக் கொண்டு அந்த தொழிற்சாலைகள் ஆற்றைச் சீரழித்து வருகின்றன. அந்த தொழிற்சாலைகள் நாள் ஒன்றுக்கு சுமார் 46,145.58 மெட்ரிக் கியூபிக் தண்ணீரை ஆற்றி லிருந்து எடுக்கின்றன. இதில், சுமார் 70 சதவீத தண்ணீர் கழிவுநீராக வெளி யேற்றப்படுகிறது.

தொழிற்சாலை நிர்வாகங்கள் சுத்தி கரிப்பு நிலையங்கள் வைத்துள்ளதாகக் கூறுகின்றன. ஆனால், அவை பெயர ளவில் மட்டுமே இருக்கின்றன. மழை பெய்யும்போதும், இரவு நேரங்களிலும் கழிவுகளை நேரடியாக ஆற்றில் கலந்து விடுகிறார்கள். பலமுறை இந்தத் தவறுகளை ஆதாரத்துடன் பிடித்துக் கொடுத்துள்ளோம். மாசுக் கட்டுப்பாடு வாரியம் தற்காலிகமாக தொழிற் சாலைக்கு சீல் வைக்கும். அபராதம் விதிக்கும். சில நாட்களில் மீண்டும் அந்தத் தொழிற்சாலை திறக்கப் பட்டுவிடும்.

நிலத்தடியில் செலுத்தப்படும் ரசாயனக் கழிவு

மேட்டுப்பாளையத்தில் நதிக்கரை ஓரமாகவே மிகப் பெரிய பன்னாட்டு காகித உற்பத்தி நிறுவனம் ஒன்று சுமார் 250 ஏக்கர் நிலங்களை வாங்கியுள்ளது. விவசாயம் என்ற பெயரில் அங்கே யூகலிப்டஸ் மரங்களை வளர்க்கிறார்கள். காகிதத் தொழிற்சாலையின் ரசாயன திடக் கழிவுகளை அந்த நிலங்களில் கொட்டி வைத்துள்ளனர். மேலும், தொழிற்சாலையின் கழிவுநீரை அந்த நிலங்களில் பாய்ச்சுகிறார்கள். அது நிலத்தடி நீர் வழியாக அருகிலுள்ள ஆறுகளில் கசிகிறது. மழை பெய்யும் போது ரசாயன திடக் கழிவுகள் கரைந்து ஆற்றில் கலக்கின்றன.

சில நிறுவனங்கள் ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் குழாய்களின் வழியாகவே ரசாயனக் கழிவுகளை ஆற்றுக்குள் செலுத்துகின்றன. சில நிறுவனங்கள் நிலங்களில் ஆழ்துளைக் குழாய்களின் மூலம் நிலத்தடியில் கழிவுநீரைச் செலுத்துகின்றன. இதனால், சுற்று வட்டாரங்களில் நிலத்தடி நீரும், கிணறுகளும் கெட்டுவிட்டன” என்றனர் அவர்கள்.



இடது - அரங்கசாமி | வலது - ராஜேந்திரன் : படங்கள்: ஜெ.மனோகரன்

தனியார் பன்னாட்டு நிறுவனங்கள் அரசாங்கத்தின் விதிகளை மீறி ரசாயனக் கழிவுகளை ஆற்றில் கலக் கின்றன. ஆனால், ஆற்றைக் காக்க வேண்டிய அரசோ நகரின் அத்தனை சாக்கடை கழிவுகளையும் நேரடியாக பவானியில் விடுகிறது. இதை யாரிடம் சென்று முறையிடுவது?

தனியார் பன்னாட்டு நிறுவனங்கள் அரசாங்கத்தின் விதிகளை மீறி ரசாயனக் கழிவுகளை ஆற்றில் கலக்கின்றன. ஆனால், ஆற்றைக் காக்க வேண்டிய அரசோ நகரின் அத்தனை சாக்கடை கழிவுகளையும் நேரடியாக பவானியில் விடுகிறது. இதை யாரிடம் சென்று முறையிடுவது?

உற்பத்தியும், வெளியேறும் கழிவுநீரும்

பவானி ஆற்றங்கரையில் பெரும்பாலும் பின்னலாடை, காகிதம் மற்றும் சர்க்கரை தொழிற்சாலைகள்தான் இருக்கின்றன. ஒரு கிலோ பின்னலாடையை உற்பத்தி செய்ய 2 கிலோ பெட்ரோலியம் எண்ணெய், தலா 4 கிலோ காஸ்டிக் சோடா, சோடியம் பெராக்ஸைட், தலா 8 கிலோ ஹைட்ரோ குளோரிக் அமிலம், சோடா ஆஷ், 750 கிராம் வைரபோஸ், 3 கிலோ அசிட்டிக் அமிலம், 10 கிலோ உப்பு - இவற்றுடன் 40,000 லிட்டர் தண்ணீர் தேவை. உற்பத்தி முடிந்தவுடன் இதில் 90 சதவீதம் கழிவாக வெளியேற்றப்படுகிறது. இதேபோல், 2 மெட்ரிக் கியூபிக் டன் சர்க்கரை உற்பத்திக்காக 0.4 மெட்ரிக் கியூபிக் டன் கழிவுநீர் உற்பத்தியாகிறது. 250 மெட்ரிக் கியூபிக் டன் காகிதம் உற்பத்திக்காக 175 மெட்ரிக் கியூபிக் டன் கழிவுநீர் உற்பத்தியாகிறது.

உயிர்ச் சூழலுக்கான குறைந்தபட்ச நீரோட்டம்

ஒவ்வொரு நதிக்கும் ‘உயிர்ச் சூழலுக்கான குறைந்தபட்ச நீரோட்டம்’ (minimum ecological flow) இருக்க வேண்டும் என்கிறது தண்ணீர் தர மதிப்பீட்டு ஆணையம். அது இருந்தால்தான் ஒரு ஆறு தன்னைத் தானே சுத்திகரித்துக் கொள்ள முடியும். தனது நீரோட்டப் பாதையை காப்பாற்றிக் கொள்ள இயலும். தனது உயிரினங்களை தக்க வைத்துக் கொள்ள முடியும். நிலத்தடி நீர் வற்றாமல் பார்த்துக் கொள்ள முடியும். நிலத்தடியில் உப்புத் தன்மை ஊடுருவாமல் பாதுகாக்க இயலும்.

கடந்த 1999-ம் ஆண்டு யமுனை நதி மாசு அடைவது தொடர்பான வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம், ‘புதுடெல்லியை நோக்கிப் பாயும் யமுனை நதியில் உயிர்ச் சூழலுக்கான குறைந்தபட்ச நீரோட்டமாக வினாடிக்கு 10 கியூபிக் மீட்டர் தண்ணீர் பாய்வதை அரசு உறுதி செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டது. 81,000 சதுர கிலோ மீட்டர் மழைப் பிடிப்பு பரப்பளவைக் கொண்ட காவிரி ஆற்றின் உயிர்ச் சூழலுக்கான வருடாந்திர சராசரி நீரோட்டம் 21.4 பில்லியன் கியூபிக் மீட்டர். இந்த அளவை விட்டு கீழே இறங்கும்போதுதான் நதியின் மரணம் தொடங்குகிறது!

(பாய்வாள் பவானி)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x