Last Updated : 01 Feb, 2017 10:36 AM

 

Published : 01 Feb 2017 10:36 AM
Last Updated : 01 Feb 2017 10:36 AM

ஒரு சிறுமி சிலையும் ஜப்பான் - கொரியா இரு நாடு பூசலும்!

வட கிழக்கு ஆசியா எப்போதும் ராணுவரீதியாகக் கொதிநிலைக்கு உள்ளாகும் பகுதி. சர்ச்சைக்குரிய தீவுகளுக்கும் கடல் பகுதிகளுக்கும் சீனா சொந்தம் கொண்டாடிவருகிறது. எப்படிச் செயல்படும் என்று எதிர்பார்க்கவே முடியாத வட கொரியா, ஏவுகணைகளை வைத்துக்கொண்டு அச்சுறுத்துகிறது. இவற்றின் மத்தியில்தான் ஒரு பதின்ம வயதுச் சிறுமிக்கு எழுப்பப்பட்ட வெண்கலச் சிலை ஜப்பான் - தென் கொரியா இடையில் பூசலை உண்டாக்கியிருக்கிறது.

தென் கொரியாவின் பூசன் நகரில், ஜப்பானியத் தூதரகத்துக்கு எதிரில் கடந்த டிசம்பர் மாதம் திறந்துவைக்கப்பட்டது சர்ச்சைக்குரிய அந்தச் சிலை. இரண்டாவது உலகப் போர் காலத்தில் ஜப்பானியப் போர் வீரர்களுக்காகப் பாலியல் அடிமைகளாகக் கட்டாயப்படுத்தப்பட்டுச் சீரழிக்கப்பட்ட தென் கொரிய இளம் பெண்களின் நினைவாக வைக்கப்பட்ட சிலை அது என்பதுதான் பூசலுக்கான காரணம்.

கொரியாவிலிருந்து மட்டுமல்லாமல், சீனத்திலிருந்தும் இதர தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்தும்கூட இளம் மகளிர் இப்படிக் கட்டாயப்படுத்தப்பட்டு அக்காலத்தில் துன்புறுத்தப்பட்டிருக்கின்றனர். ஜப்பான் தன்னுடைய போர்க்கால அக்கிரமங்களுக்கு உரிய வகையில் மன்னிப்பு கோரவில்லை, ஏற்படுத்திய சேதங்களுக்குப் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை என்பது சிலை வைத்தவர்களின் முக்கியக் குற்றச்சாட்டு.

பூசன் நகரில் இச்சிலை திறக்கப்படுவதற்குச் சரியாக ஓராண்டுக்கு முன் - 2015 டிசம்பரில்தான் ஜப்பானும் தென் கொரியாவும் ‘இறுதியானதும் - இனி திருத்தப்பட முடியாததுமான’ ஒப்பந்தத்தைச் செய்துகொண்டன. ஜப்பான் மன்னிப்பு கேட்டுக்கொண்டதுடன், இன்னமும் உயிர் வாழும் அத்தகைய பெண்களின் நலவாழ்வு நிதிக்கு 80 லட்சம் அமெரிக்க டாலர்களைத் தர முன்வந்தது. இதை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உடன்படிக்கை என்று வரவேற்றவர்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் புதிய அத்தியாயம் மலர்ந்துள்ளது என்று அப்போது பாராட்டினார்கள்.

இந்நிலையில், பூசன் நகரில் பதின்ம வயதுப் பாலியல் தொழிலாளியின் சிலையை - அதுவும் ஜப்பானியத் தூதரகத்தின் எதிரிலேயே - திறந்திருப்பதை ஒப்பந்தத்தை மீறிய செயலாக ஜப்பான் கருதுகிறது. “சிலை திறக்கப்பட்ட இடம் துரதிர்ஷ்டவசமானது. ஆனால், சிலையை வைத்தது தென் கொரிய மக்கள் அமைப்பு. அதன் மீது அரசுக்குக் கட்டுப்பாடுகள் கிடையாது” என்று ஜப்பானுக்குப் பதில் அளித்தது தென் கொரியா.

தென் கொரியா சொல்வதில் பாதிதான் உண்மை. சிலை வைப்பதாக இருந்தால் அரசின் அனுமதி இல்லாமல் வைக்க முடியாது. ஆனால், மக்களுடைய விடாப்பிடியான வற்புறுத்தலுக்குப் பிறகே, வேறு வழியின்றி அதே இடத்தில் சிலை நிறுவப்பட்டது.

டோக்கியோவில் உள்ள போர் தேவதையின் கோயிலுக்கு (யசுகுனி ஆலயம்) பாதுகாப்பு அமைச்சர் தோமோமி இனாடா சென்றதால், இந்தச் சிலையை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை தென் கொரியாவில் வலுப்பெற்றது. போரிடச் செல்லும் முன் ஜப்பானியர்கள் இந்தக் கோயி லுக்குச் சென்று ஆசி பெறுவார்கள். அப்படித் தான் இரண்டாவது உலகப் போருக்கு முன்ன தாகவும் நடந்தது. இப்படிச் செல்வதை சீனமும் கொரியாவும் சகஜமாக எடுத்துக்கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. “போரில் ஈடுபட்ட அத்தனை ஜப்பானியப் போர்க் குற்றவாளிகளையும் கதாநாயகர்களாகக் கருதி, அஞ்சலி செலுத்தப்படும் இடம் அது” என்பது சீனர்கள் - கொரியர்களின் குற்றச்சாட்டு.

2015-ல் தென் கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் சுமுகமான உடன்பாடு ஏற்பட்டிருந்தாலும், இரு நாடுகளுமே தங்களுடைய வரலாற்றுப் பகைமையைப் புதைத்துவிடவில்லை. தென் கொரிய நாடாளுமன்றத்துக்கு விரைவில் புதிய தேர்தல் நடைபெறவிருக்கிறது. “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜப்பானுடனான ஒப்பந்தத்தைத் தூக்கி எறிவோம்” என்று அறிவித்திருக்கிறது பிரதான எதிர்க்கட்சி. 1992-ல் ஜப்பானியப் பிரதமராக இருந்த கிச்சி மியாசாவா, ‘உள்ளத்தின் ஆழத்திலிருந்து மன்னிப்பு கேட்கிறேன்’என்று கொரியர்களிடம் கோரியிருந்தார். பின்னாளில், மற்றொரு பிரதமரான மொரிஹிரோ ஹோசகாவாவும், ‘ஜப்பானிய காலனி ஆட்சியில் மக்கள் பட்ட பெருந்துயரங்களுக்கும் இன்னல்களுக்கும் ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறேன்’என்று மன்னிப்பு கோரினார்.

ஆனால், ஏட்டிக்குப் போட்டியாக இந்த விவகாரத்தில் ஏதாவது தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருப்பதால், ஜப்பானுக்கும் அதனால் முன்னர் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கும் இடையே சமரசம் ஏற்படாமலேயே தள்ளிப்போகிறது.

2015 ஒப்பந்தத்தைப் பேசி முடித்த தென் கொரிய அதிபர் பாக் குன் ஹி, ஊழல் குற்றச்சாட்டுக்காக நாடாளுமன்றத்தில் பதவி நீக்கத் தீர்மான நடவடிக்கைக்கு உட்பட்டிருக்கிறார். விரைவில் தென் கொரிய நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜப்பானுடனான ஒப்பந்தத்தைத் தூக்கி எறிவோம்” என்று தென் கொரியாவின் பிரதான எதிர்க்கட்சி அறிவித்திருக்கிறது. “இந்த விவகாரத்தில் ஜப்பான் நேர்மையாக மன்னிப்பு கேட்பதில்லை” என்று தென் கொரியாவிலும் சீனத்திலும் அடிக்கடி அரசியல் உள்நோக்கத்துடன்தான் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன என்பதே உண்மை. தங்கள் நாட்டில் பிரச்சினைகள் தலைதூக்கும்போது, நாட்டுமக்களின் கவனத்தைத் திசை திருப்ப இப்படி ஜப்பான் மீது குற்றஞ்சாட்டி திசை திருப்புவதே இவற்றின் வாடிக்கையாக இருக்கிறது.

ஜப்பானுக்கும் தென் கொரியாவுக்கும் புவி அரசியல்ரீதியாக ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களைக் கவனிக்கும்போது இப்படி சில்லறைத்தனமாக சண்டையிட்டுக் கொள்ளாமல், தங்களுக்குள் உளவுத் தகவல்களைப் பரிமாறிக் கொள்வது மற்றும் ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்திக்கொள்வது போன்றவற்றில் இரண்டும் அக்கறை செலுத்துவதுதான் நன்மை பயப்பதாக இருக்கும் என்று வலியுறுத்தத் தோன்றுகிறது. ஆனால், உணர்ச்சிபூர்வமான அரசியலும், தேசிய உணர்வுகள் அவமதிக்கப்படும்போது ஏற்படும் கோபமும்தான் அரசியலில் எடுபடுகிறது. இதனால்தான் தொடர்ந்து பழைய புண்கள் கிளறப்பட்டு, ஆறாமல் பார்த்துக்கொள்ளப்படுகிறது!

- பல்லவி ஐயர், உலகப் பொருளாதார அரங்கைச் சேர்ந்தவர்; சீனா, ஐரோப்பா, இந்தோனேசியா, ஜப்பான் நாடுகளிலிருந்து கட்டுரைகளை எழுதியிருக்கிறார்

சுருக்கமாகத் தமிழில்: சாரி,
© ‘தி இந்து’ ஆங்கிலம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x