Last Updated : 03 Sep, 2015 10:02 AM

 

Published : 03 Sep 2015 10:02 AM
Last Updated : 03 Sep 2015 10:02 AM

ஐரோப்பாவுக்குப் படையெடுக்கும் ஆப்பிரிக்கா!

இந்தக் கோடைக்காலத்தில், பிரான்ஸின் கலாய்ஸ் நகரின் புறநகர்ப் பகுதியில் ஐரோப்பிய நிலத்தை பிரிட்டனுடன் இணைக்கும் சுரங்கப் பாதையின் முகப்பில் ஒரு சோக நாடகம் தன்னைத்தானே நிகழ்த்திக்காட்டியது. ஆப்பிரிக்கா மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான அகதிகள் அந்தச் சுரங்கப்பாதை வழியாகச் செல்லும் ரயில்கள் மற்றும் டிரக்குகளில் தொற்றிக்கொள்ள முயற்சிசெய்துகொண்டிருந்தனர். கம்பி வேலிகளை வெட்டியெடுத்த அவர்கள், போலீஸுக்குத் தப்பி உள்ளே ஓடிக்கொண்டிருந்தனர். இவர்களில் 10 பேர் உயிரிழந்தனர். ஆனால், கணிசமானோர் பல முயற்சிகளுக்குப் பின்னர் அதில் வெற்றியடைந்தனர். இருநாடுகளின் தலைவர்களும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக்கொண்டிருந்தனர்.

அமெரிக்கா ஐரோப்பா: ஓர் ஒப்பீடு

இந்தப் பிரச்சினை, கடந்த ஆண்டு கோடைக்காலத்தில் அமெரிக்க எல்லையில் இளம் அகதிகளின் அலை ஒன்று எல்லைக் காவல் படையின் கட்டுப்பாட்டையும் மீறி உள்ளே நுழைந்த சம்பவத்தை நினைவுபடுத்து கிறது. எனினும் குடியேற்றப் பிரச்சினையைப் பொறுத்தவரை அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையில் இருக்கும் இரண்டு முக்கிய வேறுபாடுகளை கலாய்ஸ் சம்பவம் முன்னிறுத்துகிறது. ஆப்பிரிக்காவி லிருந்து ஐரோப்பாவுக்குள் அகதிகளின் பிரவேசம் ஐரோப்பா கண்டத்துக்குள் பிரிவை ஏற்படுத்துவதுடன், அக்கண்டத்தை மாற்றியமைக்கவும் கூடியது. அமெரிக்கா சந்திக்கவிருக்கும் பிரச்சினைகளையெல்லாம்விட பெரிய பிரச்சினை இது.

முதல் வேறுபாடு இதுதான். ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழைவது மட்டுமே அகதிகளின் விருப்பம் அல்ல. அவர்களது முக்கியத் தேர்வு பிரிட்டன்தான். ஏனெனில், பிரிட்டன் பொருளாதாரரீதியாக வலிமையான நாடு. ஏனெனில், அகதிகள் ஆங்கிலம் பேசுபவர்கள். ஏனெனில், பிரிட்டனில் தேசிய அடையாள அட்டை கிடையாது. அல்லது வேறு சில காரணங்களும் இருக்கலாம்.

குடியேறி ஒருவர் மேலும் மேலும் உள்ளே செல்ல விரும்புவது இயல்பான ஒன்றுதான். (மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்கு வரும் அகதிகள் எல்லோரும் எல் பஸோவிலோ அல்லது டஸ்கனிலோ நிரந்தரமாகத் தங்கிவிடுவதில்லை.) ஆனால், ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான உள் எல்லைக்குள் எளிதாகச் சென்றுவர அனுமதிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இவ்விஷயம் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது. குடியேற்றக் கொள்கைகளைவிடவும் தங்கள் இறையாண்மையை முக்கியமாகக் கருதும் நாடுகளைக் கொண்டது ஐரோப்பா.

அமெரிக்காவைப் பொறுத்தவரை இந்தப் பதற்றம் சற்றுக் குறைவுதான். அமெரிக்காவில் ‘அடைக்கலம் தரும் நகரங்கள்’ தொடர்பான விவாதங்களை அல்லது குடியேற்ற அமலாக்கம் தொடர்பாக மாகாண அரசுகளுக்கும் பெடரல் அரசுக்கும் இடையிலான மோதல்களைப் பாருங்கள். எனினும், குடியேற்றக் கொள்கை என்பது தேசிய அளவில் ஒரே மாதிரியானதுதான். குடியேறிகளின் அடையாள அட்டைகளைச் சோதனை செய்வதற்காக என்று மிச்சிகன் மாகாணம் தன்னுடைய எல்லைகளை மூடிவிடப்போவதில்லை. குடியேற்றப் பிரச்சினையைத் தீர்மானிக்கும் விஷயத்தில் மேய்ன் மாகாணம் உடைந்து விடப்போவதில்லை.

கூடுதல் பிரச்சினை

ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிப்பதா வேண்டாமா எனும் கருத்து வாக்கெடுப்புக்கு (‘பிரெக்ஸிட்’) வாய்ப்பிருக்கும் பிரிட்டனிடம் ஏற்கெனவே குடியேற்ற இறையாண்மை குறித்த ஆவல் இருக்கிறது. எல்லைக் கட்டுப்பாட்டை மீண்டும் அமல்படுத்தும் பரிசோதனையில் இறங்கியிருக்கும் டென்மார்க்குக்கும் இந்த விருப்பம் இருக்கிறது. பிரான்ஸில் தேசிய முன்னணிக் கட்சியின் எழுச்சிக்குப் பின்னால் இந்த நோக்கம் இருக்கிறது. ஐரோப்பாவின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிக்கு இடையே உள்ள முக்கியமான வேறுபாட்டுடன் இப்பிரச்சினையும் கூடுதலாகச் சேர்ந்திருக்கிறது.

ஏழ்மையான தென் ஐரோப்பிய நாடுகளுக்குள் ஏராளமான அகதிகள் குடியேறி வரும் நிலையில், புதிதாக வரும் அகதிகள் தங்கள் நாட்டுக்குள் நுழைந்துவிடாமல் இத்தாலி அல்லது ஸ்பெயினில் நிறுத்திவைக்கவே வட ஐரோப்பாவின் பணக்கார நாடுகள் விரும்புகின்றன.

அத்துடன் குடியேற்றப் பிரச்சினையில் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையில் இருக்கும் மற்றொரு வேறுபாட்டைப் பார்க்கும் போது, இந்தப் பிரச்சினையின் அழுத்தம் ஐரோப்பாவைப் பொறுத்தவரை மேலும் அதிகரிக்கும் என்றே தெரிகிறது. எடுத்துக்காட்டாக, அடுத்த 50 ஆண்டுகளில் ஐரோப்பாவில் ஏற்படப்போகும் குடியேற்றங்களின் அளவை எடுத்துக்கொள்ளலாம்.

அபரிமிதமாக அதிகரிக்கவிருக்கும் ஆப்பிரிக்க மக்கள்தொகையையும், ஐரோப்பாவின் மக்கள்தொகையில் ஏற்படப்போகும் சரிவையும் பொறுத்து இந்த அளவு அமையும். தென்அமெரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குள் நிகழ்ந்த குடியேற்றங்கள் அமெரிக்க அரசியலில் எந்த அளவுக்குப் பாதித்திருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். 300 மில்லியனுக்கும் சற்றே அதிகமான மக்கள் அமெரிக்காவில் வசிக்கும் நிலையில், தென் அமெரிக்க நாடுகளில் 600 மில்லியன் மக்கள் வசிக்கிறார்கள். வரப்போகும் சில தலைமுறைகளில் இந்த விகிதத்தில் பெரிய மாற்றங்கள் இருக்கப்போவதில்லை.

ஆனால், இதைப் பாருங்கள்: இன்று சுமார் 738 மில்லியன் ஐரோப்பியர்கள் இருக்கிறார்கள் (அவர்களில் 500 மில்லியன் பேர் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள்). ஆப்பிரிக்காவிலோ சுமார் 1.2 பில்லியன் பேர் இருக்கிறார்கள். ஐ.நா-வின் தற்போதைய மதிப்பீட்டின்படி 2050-ல் ஐரோப்பாவின் மக்கள்தொகை 707 மில்லியனாகக் குறைந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தச் சமயத்தில், ஆப்பிரிக்காவின் மக்கள்தொகை 2.4 பில்லியனாக இருக்கும். 2100-ல் 4.4 பில்லியன் ஆப்பிரிக்கர்கள் இருப்பார்கள். அதாவது, உலக அளவில் ஒவ்வொரு ஐந்து பேரில் இருவர் ஆப்பிரிக்கர்களாக இருப்பார்கள். அந்தச் சமயத்தில் ஐரோப்பாவின் மக்கள்தொகை வெறும் 646 மில்லியனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகரிக்கும் ஊடுருவல்

சமீபத்தில் ‘பொலிட்டிகோ’ இதழில் நோவா மில்மேன் குறிப்பிட்டிருப்பதைப் போல், இக்காலகட்டத்தில் ஆப்பிரிக்க நாடுகள் வளம் பெற்றாலும் வீழ்ச்சியடைந் தாலும் ஐரோப்பாவை நோக்கிய ஆப்பிரிக்க மக்களின் படையெடுப்பு அதிகரிக்கும் என்றே தெரிகிறது. அம்மக்களின் பரிதவிப்பு அதைத் தூண்டிவிடலாம். ஆனால், ஐரோப்பிய நாடுகளின் வளர்ச்சி மற்றும் உலக மயமாக்கல் தொடர்பாக உருவான தவறான பார்வைக்கும் இதில் தொடர்புண்டு. (ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து துணிச்சலாக மத்தியத் தரைக்கடல் வழியாக வருபவர்களில் பலர் அகதிகள் மட்டும் அல்ல என்று தோன்றுகிறது. வளரும் நாடுகளைச் சேர்ந்த நன்கு படித்த, லட்சியம் கொண்ட குடிமக்களும் இவர்களில் அடக்கம்.)

1970-ல் இருந்து மெக்சிக்கர்கள் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்ததைப் போன்ற அதே விகிதத்தில் ஆப்பிரிக்கர்கள் ஐரோப்பாவில் குடிபெயர்வார்கள் எனில், 2050-ம் ஆண்டு வாக்கில் ஐரோப்பாவின் மக்கள்தொகையில் கால் பங்கினர் ஆப்பிரிக்காவில் பிறந்தவர்களாகவே இருப்பார்கள் என்று மில்மேன் குறிப்பிடுகிறார். ஆனால், அப்படி நடக்க வாய்ப்பில்லை. பிறப்பு விகிதம் தொடர்பான கணிப்புகள் மாறலாம். குடியேற்றத்தின் வழிமுறைகள் மாற்றமடையலாம். குடியேறிகளைக் கட்டுப்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகளை ஐரோப்பிய நாடுகள் கொண்டுவரலாம்.

எனினும், குறிப்பிடத்தக்க ஏதோ ஒரு விஷயம் நடக்கப்போகிறது. ஏதோ ஒரு வகையில் ‘யூராப்ரிக்கன்’ எதிர்காலம் வந்துகொண்டிருக்கிறது. கலாய்ஸில் சில ஆயிரம் அகதிகள் குவிந்த விஷயத்தில் ஐரோப்பாவின் குழப்பமான எதிர்வினையை வைத்துப் பார்க்கும்போது, இவ்விஷயத்தை எதிர்கொள்ள அந்த கண்டம் முற்றிலும் தயார் நிலையில் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

‘தி நியூயார்க் டைம்ஸ்’

தமிழில் சுருக்கமாக: வெ. சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x