Last Updated : 25 Dec, 2015 10:29 AM

 

Published : 25 Dec 2015 10:29 AM
Last Updated : 25 Dec 2015 10:29 AM

ஏன் உங்கள் கண்களுக்கு நல்லகண்ணு தெரியவில்லை?

எப்போதெல்லாம் நேர்மைக்கும் எளிமைக்கும் உதாரணமாக காமராஜரைக் குறிப்பிட்டு எழுதுகிறேனோ அப்போதெல்லாம் இடதுசாரி வாசகர்களிடமிருந்து காட்டமாக அழைப்புகள் வரும்: “நேர்மையான, எளிய அரசியலுக்கான உதாரணங்களைக் குறிப்பிடும்போதெல்லாம் எழுத்தாளர்கள் ஏன் கடந்த காலத்துக்குள் போய்ப் புகுந்துகொள்கிறீர்கள்? இன்றைக்கும் அப்படி வாழ்ந்துகொண்டிருக்கும் இடதுசாரித் தலைவர்கள் ஏன் உங்கள் கண்களுக்குத் தெரிவதில்லை?”

நேற்றும் அழைப்புகளுக்குக் குறைவில்லை. “தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும்; நேர்மையான, எளிமையான, தன்னலமற்ற, தொலைநோக்குள்ள அரசியல் தலைமை வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அதற்கு ஏன் சகாயம் என்ற ஒரு அரசு அதிகாரியை அரசியலுக்குக் கூப்பிட வேண்டும்? முக்கால் நூற்றாண்டாக அரசியலில் போராடிக்கொண்டிருக்கும் நல்லகண்ணுவின் நேர்மையும் எளிமையும் உங்களுக்குத் தெரியவில்லையா?”

தோழர்கள் எழுத்தாளர்களையோ, ஊடகவியலாளர் களையோ நோக்கி இக்கேள்வியைக் கேட்பதில் நியாயம் இல்லை. கோபாலபுரத்தையும் தோட்டத்தையும் மாறி மாறி தூக்கிச் சுமந்துவிட்டு, அடுத்து கோயம்பேட்டைத் தூக்கிச் சுமக்கத் தயாராகிக்கொண்டிருக்கும் தங்கள் தலைவர்களிடம் இக்கேள்வியைக் கேட்பதே நியாயமாக இருக்கும்.

ஏன், ஏன், ஏன்?

அப்பட்டமாகத் தெரிகிறது தமிழகத்தில் உருவாகி யிருக்கும் அரசியல் வெற்றிடம். இது அரை நூற்றாண்டில் உருவாகியிராத சூழல். அது இல்லாவிட்டால் இது என்று மாற்றி மாற்றி இதுவரை ஆட்சியில் அமர்த்திவந்த திமுக, அதிமுக இரு கட்சிகளையும் தூக்கி வீசும் மனநிலையில் இருக்கிறார்கள் பெரும்பான்மை மக்கள். அவர்களுக்குத் தேவை இப்போது நேர்மையான ஒரு தலைவர். மாற்றம் தரும் ஒரு இயக்கம். தமிழகத்தை இந்த ஊழல் அரசியல் கலாச்சாரத்திலிருந்து மீட்டெடுக்க ஒருவர் கிடைக்க மாட்டாரா எனும் ஏக்கத்தையும் பரிதவிப்பையும் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் பார்க்க முடிகிறது.

இப்படிப்பட்ட சூழலில்கூடத் தன் முழு வாழ்வையும் போராட்டங்களுக்கு அர்ப்பணித்த நல்லகண்ணு போன்ற ஒரு தலைவர் மக்கள் கண்களுக்கு ஏன் தெரியவில்லை? இதற்கான அடிப்படைக் காரணம் என்ன? இடதுசாரிகளுக்கே அவர்களுடைய மகத்துவம் தெரியவில்லை; இடதுசாரிகள் கண்களுக்கே நல்லகண்ணு முதல்வர் வேட்பாளராகத் தெரியவில்லை.

இந்த வெள்ளத்தில் நல்லகண்ணுவின் வீடும் மூழ்கியது. வெள்ளத்தில் சிக்கியவரை மீட்பதற்குச் சென்றபோது, “இப்பகுதியில் உள்ள ஜனங்கள் முழுமையும் மீட்கப்படும் வரை நான் படகில் ஏற மாட்டேன்” என்று சொல்லியிருக்கிறார். நல்லகண்ணு வீட்டில் மட்டும் அல்ல; சங்கரய்யா வீட்டிலும் இதே கதி. அவரும் மக்களோடு நின்றிருக்கிறார். இருவருமே 90 வயதைக் கடந்தவர்கள். கட்சியில் மாநிலப் பொறுப்புகளை வகித்தவர்கள். இருவரும் தமக்கென ஒரு வீட்டைக்கூடக் கட்டிக்கொண்டவர்கள் அல்ல; இன்னும் ஆட்டோக்களில் செல்பவர்கள்.

நினைத்துப்பார்க்கிறேன், நல்லகண்ணுவோ சங்கரய்யாவோ முதல்வரானால் எப்படி இருக்கும் என்று! நாட்டு நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிடும் என்று சொல்வதற்கில்லை. எனினும், இவ்வளவு மோசமான சூழல் இருக்காது. முக்கியமாக, மக்களால் அவர்களை அணுக முடியும். இன்றைக்கு திரிபுராவில் எப்படி மாணிக் சர்க்காரை ஒரு ஆட்டோக்காரராலும் எளிதாக வீட்டுக்குச் சென்று பார்க்க முடிகிறதோ அப்படிப் பார்க்க முடியும். தங்கள் பிரச்சினைகளைச் சொல்ல முடியும். கேள்வி கேட்க முடியும்.

நல்லகண்ணு, சங்கரய்யா மட்டும்தான் என்றில்லை. இடதுசாரித் தலைவர்கள் பலரைக் களத்தில் நேரில் பார்க்கும்போது வியந்திருக்கிறேன்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இன்றைய தமிழ் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். கட்சி அலுவலகத்தில் டீ, காபி பரிமாறும் சேவகராகக் கட்சிப் பணியைத் தொடங்கியவர். கடந்த கால் நூற்றாண்டில் தமிழக விவசாயி கள் எதிர்கொண்ட பெரும்பான்மைப் போராட்டங்களில் முன்வரிசையில் ஒலித்த குரல் அவருடையது. சி.மகேந்திரனும் அப்படித்தான். கூப்பிட்டால் ஓடிவருபவர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் கடலூரில் வேகமாக வளர்ந்துகொண்டிருந்த வழக்கறிஞர். வழக்காடும் தொழிலை விட்டுவிட்டுத்தான் கட்சி வேலைக்கு வந்தார். தோழி ஒருவரின் திருமணம் சமீபத்தில் நடந்தது. இடதுசாரி அரசியலைப் பின்னணியாகக் கொண்டது அவர்கள் குடும்பம். கல்யாண மண்டபத்தில் பந்தி பரிமாறும் இடத்தில் பரபரவென நின்றுகொண்டிருந்தார் ராமகிருஷ்ணன், வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு ஒரு தாய்மாமனைப் போல.

இதுவரை தனக்கு மேல் உள்ள அரசியல் தலைவர்களைப் பற்றியும் வழிகாட்டிகளைப் பற்றியும் அரசியல்வாதிகள் எழுதிய புத்தகங்களைப் பார்த்திருக்கிறேன். ராமகிருஷ்ணன் எழுதிய ‘களப்பணியில் கம்யூனிஸ்ட்டுகள்’ புத்தகம் அரிதான உதாரணம். கட்சியில் தனக்குக் கீழே, அதுவும் அடிமட்டத்தில் உள்ள வயதான தொண்டர்கள் 54 பேருடைய வரலாற்றை இந்தப் புத்தகத்தில் எழுதியிருந்தார் ராமகிருஷ்ணன்.

கடலூர் வெள்ளத்தின்போது பாலகிருஷ்ணனின் பணியை அறிந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர். இந்த வெள்ளக் காலத்தில் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கும் மேல் ராத்தூக்கம் இல்லாமல் மக்கள் மத்தியில் வேலை செய்துகொண்டிருந்தார் பாலகிருஷ்ணன். ஆதிவாசி மக்கள் வசிக்கும் உள்ளடர்ந்த கிராமங்களுக்கு அரசின் உதவி வாகனங்கள் செல்லாதபோது, கத்திக் கத்திப் பார்த்து, கடைசியில் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு உள்ளே போய், “இங்கிருந்து கிராமங்களுக்கு உதவி போய்ச் சேரும் வரை வெளியேற மாட்டேன்” என்று உள்ளிருப்புப் போராட்டத்தில் உட்கார்ந்துகொண்டவர்.

வெள்ள மரணங்களைக் குறைத்துக் காட்ட இருட்டடிப்பு வேலை நடந்தபோது, செத்தவர்களின் குடும்ப அட்டை முதல் இறப்புச் சான்றிதழ் வரை எல்லா ஆதாரங்களையும் கையில் வைத்துக்கொண்டு, கடலூர் ஆட்சியருடன் மல்லுக்கு நின்றவர். திண்டுக்கல் சட்டப்பேரவை உறுப்பினர் பாலபாரதி தனக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை ஒன்றே கூடாது என்று பொதுவாழ்க்கைக்காகத் திருமணத்தையும் மறுத்தவர். அரூர் சட்டப்பேரவை உறுப்பினர் டில்லிபாபுவைத் தங்களுடைய போராட்டக் கருவியாகவே வாச்சாத்தி மக்கள் பேசுவதை நேரடியாகக் கேட்டிருக்கிறேன்.

சுவரொட்டி ஒட்டும் இடத்திலும் உடன் நிற்கும் நன்மாறன், ஆசிரியர் பணியை உதறிவிட்டு பொது வாழ்க்கையை முழுநேரப் பணியாக வரித்துக்கொண்ட சுகந்தி, வியாசர்பாடி சேரிகளில் தம் பிள்ளைகளுக்கு வீரபாண்டியன் என்று பெற்றோர் பெயர் சூட்டும் அளவுக்கு அபிமானம் பெற்ற வீரபாண்டியன் எல்லோருமே ஆச்சரியங்கள்தான். ஒரு சாதாரண தொண்டரும்கூட தேசிய அளவிலான பல பிரச்சினைகளில் அரசியல் கூர்மையுடன் விவாதிக்கும் திறனையும் விழிப்புணர்வையும் பெற்றிருப்பதை இடதுசாரிகளிடம் சகஜமாகப் பார்க்க முடியும். ஆயிரம் இருந்தென்ன பிரயோஜனம்! இன்னும் மக்கள் விரும்பும் மாற்றத்துக்கு அவர்களே தயாராகவில்லையே?

இப்போது இல்லை என்றால், எப்போது?

இனி கருணாநிதியும் வேண்டாம்; ஜெயலலிதாவும் வேண்டாம் என்று இடதுசாரிகள் முடிவெடுத்தது நல்ல முடிவு. ஆனால், யார் அந்த இடத்தில் உட்கார முடியும்; விஜயகாந்தும் வைகோவுமா? திமுக, அதிமுகவைவிட எந்த வகையில் மேம்பட்டவை தேமுதிகவும் மதிமுகவும்? தமிழக மக்கள் அந்தளவுக்கு ஏமாளிகள் இல்லை என்றாலும் - கடைசியில் தமிழக அரசியலை இவர்களிடம் கையளிப்பதற்காகவா இடதுசாரிகள் இத்தனை மெனக்கெட வேண்டும்?

தமிழகத்தில் ஏன் அரை நூற்றாண்டாக இரண்டு கட்சிகளைத் தவிர, வேறு ஒரு கட்சி ஆட்சிக்கு வர முடியவில்லை? வரலாற்றில் பதில் இருக்கிறது. அந்த இரு கட்சிகளைத் தவிர களத்தில் இருந்த எந்தக் கட்சிக்கும் தாம் ஜெயிப்போம் என்ற நம்பிக்கை அவர்களுக்கே இருந்ததில்லை. மக்கள் விரும்பும் முழு மாற்றங்களோடு அந்தக் கட்சிகள் திடமாகத் தம்மை முன்னிறுத்தியதில்லை.

தேர்தல் அரசியலின் அரிச்சுவடியையே அறியாதவர் களைக் கொண்டு ஒரு கட்சியைக் கட்டியெழுப்பி, டெல்லியில் ஒரு வருஷத்துக்குள் ஆட்சியையும் பிடிப்பது ஒரு அர்விந்த் கெஜ்ரிவாலால் முடியும் என்றால், 90 வருஷ அரசியல் பாரம்பரியம் கொண்ட இடதுசாரிகளால் முடியாதா? முடியும். தன்னம்பிக்கை வந்தால் முடியும். மக்கள் விரும்பும் முழு மாற்றத்தோடு வந்தால் முடியும். மக்களிடம் பணியாற்றும் கடைமட்டத் தொண்டனின் உணர்வுகளைத் தலைமையின் முடிவுகள் அப்படியே பிரதிபலித்தால் முடியும்!

முன்பு ஒருநாள் நல்லகண்ணுவிடம் பேசிக் கொண்டிருந்தபோது சொன்னார், “இந்தியாவுல பொதுவுடைமை இயக்கத்தோட எழுச்சி இடதுசாரி இயக்கங்கள் ஒண்ணு சேர்றதுல ஆரம்பிக்கணும். இந்த மாற்றம் இயக்கத்தோட தேவை மட்டும் இல்ல; இந்தியாவோட தேவை!”

எந்த மாற்றத்திலும் தாம் தொடக்கப்புள்ளியாக இருப்பதில் பெருமிதம் கொள்பவர்கள் தமிழர்கள்!

சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x