Last Updated : 13 Feb, 2017 09:23 AM

 

Published : 13 Feb 2017 09:23 AM
Last Updated : 13 Feb 2017 09:23 AM

எல்லைச் சுவர்: என்ன செய்யும் மெக்ஸிகோ?

கடந்த ஒரு நூற்றாண்டாக, மெக்ஸிகோவின் ஊழல்கள், மனித உரிமை மீறல்கள், சர்வாதிகார ஆட்சி ஆகியவற்றில் அமெரிக்காவின் பங்கு அதிகம். ஆனால், மெக்ஸிகோவுக்குப் பொருளாதாரரீதியான ஆதரவளித்ததுடன், ஆட்சி மாற்றம் குறித்து அழுத்தம் தராமல் விலகியும் நின்றிருக்கிறது. அமெரிக்கா - மெக்ஸிகோ இடையிலான உறவு, இரு தரப்புக்கும் பலனளிக்கக்கூடியதாகவே இருந்தது. அந்த உறவின் சீர்குலைவு இரு தரப்புக்கும் மோசமாகவே அமையும்!

அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற சில நாட்களிலேயே, ராஜதந்திரரீதியிலான பிரச்சினைகளைக் கையில் எடுத்திருக்கிறார் ட்ரம்ப். முதலில், அமெரிக்காவுக்கும் மெக்ஸிகோவுக்கும் இடையில் சுவர் எழுப்பும் தனது திட்டத்துக்கான செலவை மெக்ஸிகோவே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னார். அதுவும், வெள்ளை மாளிகை அதிகாரிகளை மெக்ஸிகோ அதிகாரிகள் சந்திக்கவிருந்த அதே நாளில் அந்த அறிவிப்பை வெளியிட்டார். அதை ஏற்க மெக்ஸிகோ அதிபர் என்ரிக் பீனா நீட்டோ மறுத்ததை அடுத்து, அவரது அமெரிக்கப் பயணத்தை ரத்துசெய்வது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ட்வீட் செய்தார் ட்ரம்ப். என்ரிக் பீனா அதைத்தான் செய்தார்.

மெக்ஸிகோவைப் பொறுத்தவரை, அதிபரின் அமெரிக்கப் பயணம் ரத்து செய்யப்பட்டதும், அமெரிக்காவுடனான பதற்றங்களும், கவலையளிக்கிற பெரும் பிரச்சினைகள். இரு தரப்பு உறவில் பின்னடைவு ஏற்பட வேண்டும் என்று மெக்ஸிகோவில் யாருமே விரும்பவில்லை.

எல்லாமே கேள்விக்குறி

அமெரிக்காவுடனான உறவில் மெக்ஸி கோவின் முந்தைய ஐந்து அதிபர்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் ஆக்கபூர்வமாகச் செயல்பட்டனர். வட அமெரிக்காவின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், 1990-களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது அமெரிக்கா தந்த ஆதரவு, குடியேற்றம் தொடர்பாக 2001-ல் நடந்த பேச்சுவார்த்தைகள், போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்புக் கூட்டு நடவடிக்கைகள், தொல்லை தருபவர்களாக அல்லாமல் ஆக்கபூர்வமான அண்டை நாட்டுக்காரர்கள்தான் மெக்ஸிகர்கள் எனும் மனப்பான்மை வளர்த்தெடுக்கப்பட்டது - இவை எல்லாமே கேள்விக்குரியவையாக ஆகிவிட்டன.

அமெரிக்காவுடன் தன்னைப் பிணைத்துக் கொண்டிருப்பதால், வட அமெரிக்க உறவு, தடையற்ற வர்த்தகம், ஜனநாயகம், மனித உரிமைகளுக்கான மரியாதை என்று பல விஷயங்களில் அமெரிக்காவையே சார்ந்திருக்கிறது மெக்ஸிகோ. ட்ரம்பின் உத்தரவுகளையும், இந்த அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பான அவரது பார்வை யையும் பார்க்கும்போது, இவ்விஷயத்தில் மெக்ஸிகோவின் முடிவு தவறு என்றே எண்ணத் தோன்றுகிறது. அதனால்தான் இன்றைக்கு மெக்ஸிகோ இரண்டு கடினமான விஷயங்களில் ஒன்றைத் தேர்வுசெய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது. ஒன்று, ட்ரம்பைச் சகித்துக்கொண்டு சாத்தியமான, அத்தனை மோசமில்லாத விஷயங்களையும் அமெரிக்காவிடமிருந்து பெற்றுக்கொள்வது. இரண்டாவது, தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்களில் அமெரிக்கா ஏற்படுத்தும் அழுத்தங்களுக்கு எதிராக, வலுவான எதிர்ப்புக் கொள்கையைக் கைக்கொள்வது. ட்ரம்பின் பதவிக்காலம் முடிவதற்கு மெக்ஸிகோ காத்திருக்க வேண்டியிருக்கலாம். அவரது நடவடிக்கைகள் காரணமாக அமெரிக்காவுக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்பதும், விரைவில் இந்த ஏற்றத்தாழ்வு சீர்செய்வதில் அமெரிக்காவிலும் வெளியிலும் இருக்கும் மெக்ஸிகோ ஆதரவாளர்கள் ஈடுபடுவார்கள் என்றும் நம்பலாம்.

ஒப்பந்தத்தை மாற்றம் செய்வது தொடர்பாக ட்ரம்ப் வலியுறுத்துவார் என்று சில காலத்துக்கு முன்பே பீனா நீட்டோவுக்குத் தெரிந்திருந்தது. ‘நாஃப்டா’வில் (வட அமெரிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்) உறுப்பினர்களாக உள்ள அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ என்று மூன்று நாடுகளுக்கும் நல்ல பலன் கிடைக்கும் என்று அவர் அறிந்திருந்தார். ஆனால், மூன்று நாடுகளின் நாடாளுமன்றத்திலும் இதற்கான திட்டமிடல் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டால், அது மெக்ஸிகோவுக்குப் பெரும் பின்னடைவைத் தரும்.

மெக்ஸிகோ பின்பற்ற வேண்டியவை

வர்த்தகத்தில் ஒரு எச்சரிக்கைக் கோட்டை மெக்ஸிகோ பின்பற்ற வேண்டும். மூன்று நாடுகளின் நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமலேயே அனைத்தையும் செய்ய முடியும் என்பது நல்ல விஷயம்தான். எனினும், அதனால் மட்டும் பலன் இருக்கப்போவதில்லை. ஒரு நாடு விலகுவதாக இருந்தால், ஆறு மாத ‘நோட்டீஸ்’ கொடுத்துவிட்டு விலகிவிடலாம் என்று சொல்லும் நாஃப்டா பிரிவு 2205-ஐ அமெரிக்காவைப் பயன்படுத்தச் செய்வது நல்லது.

அமெரிக்கா - மெக்ஸிகோ எல்லையில் சுவர் எழுப்பும் விவகாரத்திலும் இதேபோன்ற ஒரு கட்டுப்பாட்டை மெக்ஸிகோ கடைப்பிடித்தாக வேண்டும். இதிலும்கூட இந்தச் சுவர் கட்டுவதற்கான செலவை ஏற்க முடியாது என்று பீனா பேசுகிறாரே தவிர, அந்தச் சுவரே வேண்டாம் என்று பேசவில்லை. சுவர் கட்ட யார் செலவு செய்வது என்பதல்ல விஷயம்; ஒரு நட்பு நாட்டின் மீது நிகழ்த்தப்படும் விரோத நடவடிக்கை இது. லத்தீன் - அமெரிக்கா முழுமைக்கும் மோசமான சமிக்ஞையை அனுப்பும் விஷயமும்கூட. சுவர் எழுப்புவது என்பது எல்லைப் பகுதியில் சமூகப் பிரச்சினைகள், கலாச்சார, சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளை எழுப்பக்கூடியது. சட்டவிரோதமாக எல்லை தாண்டுவதை, அதில் இருக்கும் அபாயத்தை அதிகரிக்கச் செய்யக் கூடியது. முன்பைவிட அதிகமான குற்றச் சம்பவங்களுக்கும் வழிவகுக்கக் கூடியது. மெக்ஸிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20% வரி விதித்து அந்த நிதியை, சுவர் எழுப்பும் செலவுக்குப் பயன்படுத்துவது என்று வெள்ளை மாளிகை பரிசீலிப்பதும் பழிவாங்கும் எண்ணத்தைத் தூண்டாத விஷயம் அல்ல.

இரு தரப்புக்கும் மோசம்

அமெரிக்காவிலிருந்து மக்கள் அனுப்பப் படும் விஷயத்தில் தனது உறுதியான நிலைப்பாட்டை மெக்ஸிகோ தெரிவிக்க வேண்டும். குடியேற்ற அமலாக்க விஷயத்தில் அதிகமான முகவர்களையும் பணத்தையும் எதிர்பார்ப்பது, அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நகரங்களுக்குத் தண்டனை அளிப்பது, குற்றவாளிகள் என்று சொல்லிப் பலரை மெக்ஸிகோவுக்கு அனுப்ப முயற்சிப்பது ஆகியவை நட்பார்ந்த நடவடிக்கைகள் அல்ல. 1990-களில் எல் சால்வடார் நாட்டின் மீது இதுபோன்ற நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்ததை அடுத்து, உலகின் மிக வன்முறையான நாடாக அது மாறியது.

துரதிர்ஷ்டவசமான, தேவையற்ற பிரச்சினை நிலவும் இந்தச் சூழலில், மெக்ஸிகோவின் உறுதியான நிலைப்பாடு அமெரிக்காவின் தெற்குப் பிராந்தியத்தில் அது நடந்துகொள்ளும் விதத்தைப் பொறுத்து அமையும். கடந்த ஒரு நூற்றாண்டாக, மெக்ஸிகோவின் ஊழல்கள், மனித உரிமை மீறல்கள், சர்வாதிகார ஆட்சி ஆகியவற்றில் அமெரிக்காவின் பங்கு அதிகம். ஆனால், மெக்ஸிகோவுக்குப் பொருளாதார ரீதியான ஆதரவளித்ததுடன், ஆட்சி மாற்றம் குறித்து அழுத்தம் தராமல் விலகியும் நின்றிருக்கிறது அமெரிக்கா. அத்துடன், மெக்ஸிகோவிலிருந்து பெருமளவில் நிகழ்ந்த குடியேற்றத்தைப் பொறுத்துக்கொண்டதுடன், மெக்ஸிகோவை மரியாதையுடனேயே நடத்தியிருக்கிறது. அமெரிக்கா - மெக்ஸிகோ இடையிலான உறவு, இரு தரப்புக்கும் பலனளிக்கக்கூடியதாகவே இருந்தது. அந்த உறவின் சீர்குலைவு இரு தரப்புக்கும் மோசமாகவே அமையும்!

- ஜார்ஜ் ஜி. காஸ்டெனெடா, மெக்ஸிகோ வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சர், நியூயார்க் பல்கலைக்கழகப் பேராசிரியர்.

© ‘தி நியூயார்க் டைம்ஸ்’, தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x