Last Updated : 16 Nov, 2016 09:15 AM

 

Published : 16 Nov 2016 09:15 AM
Last Updated : 16 Nov 2016 09:15 AM

எம்ஜிஆரை ஆர்எஸ்எஸ் கொண்டாடுவதில் என்ன வியப்பு இருக்கிறது?

எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை அவர் தொடங்கிய கட்சியே கண்டுகொள்ளாத நிலையில், திராவிடர் கழகம் சார்பில் கொண்டாடியிருக்கிறார் கி.வீரமணி. ‘புரட்சித் தலைவர்’ எம்ஜிஆர் நூற்றாண்டு விழா என்று கொண்டாடாமல், ‘வள்ளல்’ எம்ஜிஆர் நூற்றாண்டு விழா என்று நடத்திய அவரது நுட்பத்தையும், மதவாத சக்திகளின் எழுச்சியை மட்டுப்படுத்த இவ்விழாவைக் கருவியாகப் பயன்படுத்திக்கொள்ளும் அவரது திட்டத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது.

தமிழகத்தில் திமுகவுக்கு மாற்று காங்கிரஸ் அல்ல, இன்னொரு திராவிடக் கட்சியான அதிமுகதான் என்ற நிலையை உருவாக்கியது, திராவிடக் கொள்கைகளில் அதிக நாட்டம் இல்லாவிட்டாலும் முன்பு திமுக கொண்டுவந்த சட்டங்களையும், திட்டங்களையும் ரத்து செய்யாதிருந்தது, பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்றுக்கொண்டது, 31% ஆக இருந்த பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 50% ஆக்கியது என்று எம்ஜிஆர் செய்த திராவிடர் இயக்கம் சார்ந்த பணிகளுக்காக எடுத்த விழா இதுவென்று சொல்லியிருந்தால், வீரமணியை முழு மனதுடன் வாழ்த்தியிருக்கலாம். ஆனால், “திராவிடர் கழகம் என்ற வேரில் இருந்து கிளர்ந்தெழுந்து ஆலமரமாக வளர்ந்தவர் எம்ஜிஆர். திராவிட இயக்கத்தைச் சேர்ந்த அவரை அபகரிக்க ஆர்எஸ்எஸ் திட்டமிட்டதால், நாங்கள் முந்திக்கொண்டோம்” என்று நூற்றாண்டு விழாவில் அவர் பேசியிருக்கிறார். திராவிட இயக்கத்தின் ஏகபோக சொத்து எம்ஜிஆர் என்று சொல்வதை நம்ப, பகுத்தறிவாளர்கள் ஒன்றும் கி.வீரமணியின் பக்தர்கள் அல்லவே?

ஜெயலலிதாவின் முன்னோடி

முதலில் எம்ஜிஆர் நாத்திகவாதியா? கண்டிப் பாக இல்லை. திராவிடர் கழக வேரிலிருந்து கிளர்ந்தெழுந்தவரா? அதுவும் கிடையாது. சிறுவயதிலேயே காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். ஆரம்பத்தில் என்.எஸ்.கிருஷ்ணனுடனும், நாயகனாக உயர்ந்த பின்பு அண்ணா, கருணாநிதி போன்றவர்களுடனும் ஏற்பட்ட நட்பு காரணமாக திமுகவில் சேர்ந்தவர். பொதுக்கூட்ட மேடைகளை மட்டுமின்றி நாடகம், திரைப்படம் எல்லாவற்றையும் தன்னுடைய பிரச்சாரக் கருவிகளாகப் பயன்படுத்திக்கொண்ட திமுக, எம்ஜிஆரையும் பயன்படுத்திக்கொண்டது. படித்தவர்களிடம் சுயமரியாதையைப் போதித்த திமுக, பாமரர்களைக் கவர்வதற்காக எம்ஜிஆர் எனும் நாயக பிம்பத்தை ஊதிப் பெரிதாக்கியது. திமுகவோடு எம்ஜிஆரும் வளர்ந்தார்.

ஆனால் ‘கொள்கை’யில் எம்ஜிஆர் எம்ஜிஆரா கவே இருந்தார். இந்துக் கடவுள் பெயரைக் கொண்டிருந்த கழக முன்னோடிகள் தங்கள் பெயரை அன்பழகன், நெடுஞ்செழியன், தமிழ்க் குடிமகன் என்று மாற்றிக்கொண்டதைப் போல, எம்.ஜி.ராமச்சந்திரன் மாற்றிக்கொள்ளவில்லை. கோயில்களுக்குப் போனார், காணிக்கை கொடுத் தார். இந்துக்களையோ, அவர்களின் மத நம்பிக்கைகளையோ சீண்டுகிற மாதிரியான வசனங்களைக்கூடக் கூடுமான வரையில் தவிர்த்தார்.

அரசியல்வாதியாக மேடையேறிய பிறகும்கூட, அவர் பெரியார், கருணாநிதியைப் போல கடவுள் களைச் சீண்டியதில்லை. இலங்கையில் பிறந்திருந் தாலும் மற்றவர்களைப் போல, ‘நான் ராவணன் வழி வந்தவன்’ என்றெல்லாம் சொல்லிக்கொள்ள வில்லை. இடத்துக்கேற்றபடி இந்துவாகவும், மும்மதத்துக்கும் பொதுவானவராகவும் அவதாரம் எடுத்தார். தனது கொள்கை ‘திராவிடம்’ என்று சொன்னதில்லை, ‘அண்ணாயிஸம்’ என்று புதிதாக ஒன்றைச் சொன்னார். சொந்த முடிவுகளுக்கு மட்டு மின்றி, அரசியல் முடிவுகளுக்கும் ஜோதிடர்களின் ஆலோசனைகளைக் கேட்பது, முக்கியமான தருணங்களில் கோயில்களுக்குச் செல்வது, உடல் நலம் குன்றினால் தொண்டர்களைப் பால்குடம் எடுக்க வைப்பது என்று ஜெயலலிதாவின் இன்றைய நடவடிக்கைகளுக்கு முன்னோடி அவர். அமைச் சர்கள், தொண்டர்களின் கையில் தன் உருவத்தைப் பச்சை குத்தச் சொன்னதும், தனக்குக் கோயில் கட்டவும், தேர் இழுக்கவும் அனுமதித்ததையும் பகுத்தறிவுப் பட்டியலில் எப்படிச் சேர்க்க முடியும்?

எதிரிக்கு எதிரி

பொதுவாக, பொருளாளரிடம்தான் எல்லோரும் கணக்குக் கேட்பார்கள். ஆனால், பொருளாளரே கணக்குக் கேட்ட விந்தை திமுகவில் நடந்தது. இப்போது எப்படி கொள்கைகளை எல்லாம் மறந்து, அனைவரும் மத்திய பாஜகவுக்கு எதிராக அணி திரள வேண்டும் என்ற சிந்தனை எழுந்திருக் கிறதோ, அதைப் போல திமுகவை வீழ்த்த கொள்கைகளை மறந்து பலர் ஒன்று சேர்ந்த காலம் அது. இடஒதுக்கீடு, சாதி, தாலி மறுப்புத் திருமணம், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் போன்ற சட்டங்களால் பாதிக்கப்பட்டோரும் அதில் உண்டு.

திமுக உருவாக்கிய அதே நாயக பிம்பத்தை, அவர்கள் இன்னும் உயரமாகத் தூக்கிப்பிடித் தார்கள். எம்ஜிஆர் வென்றார்; மன்னாதி மன்னனானார். “1972-க்கு முன் எம்ஜிஆரின் வாழ்க்கைக்கும், சினிமாவுக்குமான தொடர்பைத் திட்டமிட்டு உருவாக்கி, அதைத் தன் அரசியல் முன்னேற்றத்துக்குப் பயன்படுத்திக்கொண்ட திமுக, எம்ஜிஆரின் நிழலையும் நிஜத்தையும் பிரிக்க முயன்றபோது காலம் கடந்துவிட்டிருந்தது” என்ற எம்ஜிஆர் பற்றி ஆராய்ந்த எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் கூற்று இங்கே நினைவுகூரத்தக்கது. சூரிய வெக்கையால் பாதிக்கப்பட்டவர்களை எல்லாம், இரட்டை இலை குடைபோலப் பாதுகாத்தது. ஆகவே, மாநில சுயாட்சி பற்றிப் பேசிய திமுகவை ‘தேச விரோத சக்தி’ என்று தூற்றியவர்கள், எம்ஜிஆரை ‘தேசியவாதி’ என்று போற்றினார்கள். திமுக ஆட்சியை ‘சூத்திரர் ஆட்சி’ என்று தூற்றியவர்கள், எம்ஜிஆரை அப்படிச் சொல்லத் துணியவில்லை. அப்போது எம்ஜிஆரை மறைமுகமாகப் பாராட்டியவர்கள், இப்போது வெளிப்படையாகப் பாராட்டுகிறார்கள், அவ்வளவுதான் விஷயம்!

யாருக்குச் சொந்தம்?

எம்ஜிஆரைத் திடீரெனக் கொண்டாட, ஆர்எஸ்எஸ் இதழான ‘விஜயபாரத’த்தில் வெளியான கட்டுரையே காரணம் என்று கி.வீரமணி சொல்லியிருக்கிறார். அந்தக் கட்டுரையை நானும் தேடி வாசித்தேன். “எம்ஜிஆர் போல ஹிந்துத்துவ ஆதரவு முதல்வர் நேற்றும் இல்லை, நாளையும் இல்லை!” என்பதே கட்டுரையின் தலைப்பு. “மாநில அரசில் ‘கிரகங்கள்’ கால்வைத்த பின் ஹிந்துக்களை ஒடுக்குவதே ஆட்சி பீடத்தார் தொழிலாகிவிட்டது. அந்த கஞ்சாத் தோட்டத்தில் ‘ரோஜா மல’ராக வந்தார் எம்ஜிஆர்” என்று அதிரடியாகத் தொடங்குகிறது அக்கட்டுரை.

மண்டைக்காடு கலவரத்துக்குப் பிறகு, தன்னைச் சந்திக்க வந்த தாணுலிங்க நாடார், ராமகோபாலன் போன்றோரிடம் இந்துக்கள் ஒன்றுபட வேண்டிய அவசியத்தை எடுத்துச் சொல்லி, தமிழகத்தில் இந்துத்துவா இயக்கங்களின் வளர்ச்சிக்கு உதவியது, கர்நாடகாவில் உள்ள மூகாம்பிகை கோயிலுக்கு தங்க வாள் காணிக்கையாகக் கொடுத்தது என்று எம்ஜிஆரின் பல்வேறு சாதனைகளையும் போற்றிப் புகழ்பாடுகிறது அந்தக் கட்டுரை. அதில், இடஒதுக்கீட்டுக்கு எம்ஜிஆர் போட்ட கிரிமிலேயரையும் சேர்த்திருக்கலாம். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு பெறுவதற்கு அவர்களின் பெற்றோருக்கு ஆண்டு வருமானம் ரூ.9,000 (மாதம் ரூ.750)க்குக் குறைவாக இருக்க வேண்டும் என்று 1979-ல் எம்ஜிஆர் ஆணை பிறப்பித்தாரே? மத்தியில் பாஜக ஆளும் இந்த நேரத்தில்கூட இதுபோன்ற நடவடிக்கையை யாரும் எடுக்கத் துணிவார்களா?

அந்தக் கட்டுரைக்கு எதிர்வினையாக ‘எம்ஜிஆர் திராவிடப் பிள்ளை’ என்று நிறுவ முயன்று, ‘தந்தை பெரியாரும் எம்ஜிஆரும்’ என்ற பெயரில் தனிப் புத்தகத்தையே வெளியிட்டிருக்கிறார் கி.வீரமணி. அதில், பெரியாரைப் பற்றி எம்ஜிஆர் பேசியதும், திராவிடக் கொள்கைகளைப் பற்றி அபூர்வமாக அவர் பேசியவையும் தொகுக்கப்பட்டுள்ளன. திராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதற்காக உருவாக்கப்பட்ட ஒருவரை, திராவிட இயக்கத்தின் தூண்களில் ஒன்றாகப் புரிந்துகொள்வதற்கு உதவும் நூல் இது. முதலில், பயம் காரணமாக எம்ஜிஆர் ஆட்சியை விமர்சிக்கத் தயங்கினார்கள். பின்பு, அவர் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அடக்கி வாசித்தார்கள். இறந்த பிறகு, இனி விமர்சிப்பது நாகரிகமல்ல என்று புனித பிம்பம் ஆக்கிவிட்டார்கள்! இன்றைய தேதியில் ‘ஆர்எஸ்எஸ்ஸும் எம்ஜிஆரும்’ என்று திக புத்தகம் போட்டிருக்கலாம். அதுதான் காலத்தின் தேவை. திக செய்திருப்பதோ வேறு வேலை!

- கே.கே.மகேஷ்,

தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x