Published : 06 Dec 2016 10:56 AM
Last Updated : 06 Dec 2016 10:56 AM

எனக்கு மாற்று யாரும் இல்லை!

வெவ்வேறு காலகட்டங்களில் சிமி கரவேல், கரன் தாப்பர், பிரபு சாவ்லாவுக்கு அளித்த பேட்டிகளில் ஜெயலலிதா கூறியவை:



ம்ஜிஆரின் மறைவுக்குப் பின்னரே அரசியலில் எனக்கு எதிரான பெரும் போராட்டங்கள் உண்மையில் தொடங்கின. அவர் இருந்தவரை, அவரே கட்சித் தலைவர். அவருடைய வார்த்தைகளைப் பின்பற்றுவதே என் வேலை. ஆனால், அவருடைய மறைவுக்குப் பின், நான் தனித்து விடப்பட்டேன். அவருடைய வாரிசாக வருவதற்கான எந்தப் பாதையையும் எம்ஜிஆர் எனக்கு உருவாக்கித் தரவில்லை. அரசியலுக்கு அவர்தான் என்னை அழைத்து வந்தார் என்றாலும், அந்தப் பாதையை அவர் எனக்கு எளிதாக்கித் தரவில்லை… தெற்கு ஆசியாவை எடுத்துக் கொண்டால், நாட்டின் தலைமைப் பதவிக்கு வந்த பெண்கள் அனைவருமே, யாரோ ஒரு தலைவரின் மகளாகவோ அல்லது மனைவியாகவோதான் இருந்திருக்கிறார்கள்.

அவர்களுக்கு அந்த வாய்ப்பு தங்கத் தட்டில் வைத்து வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், எனக்கு அப்படி இல்லை. மறைந்த தலைவரின் மனைவியாக இருந்தால், உங்கள் மீது இயல்பாகவே மரியாதை வந்துவிடும். மக்கள் உங்களை மரியாதையோடு விளிப்பார்கள். அணுகுவார்கள். ஆனால் எனக்கு அப்படி இல்லை. எம்ஜிஆர்தான் அரசியலுக்கு என்னை அழைத்து வந்தார் என்றாலும், அந்தப் பாதையை அவர் எனக்கு எளிதாக்கித் தரவில்லை. என்னுடைய ஒவ்வொரு அடியையும் மிகுந்த போராட்டங்களினூடாகவே நான் எடுத்துவைத்தேன்!

நான் பொறுப்பற்றவள் இல்லவே இல்லை. அது உண்மையில் இருந்து முழுக்க முழுக்க விலக்கப்பட்டது. ஆமாம், என்னைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். இந்த மொத்த உலகமுமே ஒரு நாடக மேடை. அதில் எல்லோரும் எல்லா நேரங்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறார்கள். விதிவிலக்காக நான் நேரடியாகப் பேச விரும்புகிறேன். பாசாங்கு என்பது என் திறமை அல்ல. அப்படிச் சொல்லப்போனால், நான் அரசியலுக்கு லாயக்கற்றவள். இந்த ஆட்டத்தின் விதிகளில் ஓரளவுக்கு நடிப்பும் தேவைப்படுகிறது. நான் படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், நிஜ வாழ்வில் நடிக்கும் திறனற்றவள்.

ணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி; உச்சபட்சப் பதவியில் இருப்பவர்களுக்கு வாழ்க்கை கடினமாகவே இருக்கிறது. நமது சமூகத்தில் ஒரு பெண் தலைவர் சரியாகப் பணியாற்ற முடியாது என்ற மாயையை நான் தகர்த்திருப்பதாகவே நினைக்கிறேன்… நான் அரசியல் கூட்டணிக் கணக்குகளை வைத்து அதைக் கணிப்பதில்லை; மக்களின் நாடித்துடிப்பை வைத்தே கணிக்கிறேன். ஏனென்றால், மக்கள் என் பக்கம் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். தமிழகத்தில் எனக்கு மாற்றாக யாருமே இல்லை!

வாழ்க்கை முழுவதும் ஏற்றங்களும் இறக்கங்களும் இருக்கின்றன. எந்தத் தலைவரின் அரசியல் வாழ்வின் வளர்ச்சியாக இருந்தாலும், அதில் வெற்றி - தோல்விகள் நிறைந்திருக்கும். யாருமே தொடர்ச்சியா வென்றவரும் இல்லை, யாருமே தொடர்ச்சியாகத் தோற்றவரும் இல்லை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x