Last Updated : 17 Dec, 2015 10:18 AM

 

Published : 17 Dec 2015 10:18 AM
Last Updated : 17 Dec 2015 10:18 AM

எங்கே இன்னொரு பூமி? - விஞ்ஞானிகளின் ‘பெரிய காதுகள்’

வேற்றுலகவாசிகள் இருக்க வேண்டும் என்று விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் நம்புகிறார்

செல்போன் வைத்திருக்கின்ற அனைவருக்கும் எப்போதாவது சிக்னல் பிரச்சினை ஏற்படுவது உண்டு. சிக்னல் கிடைக்கவில்லை என்றால், மறுமுனையில் இருப்பவர் பேசுவது கேட்காது. மனிதனைப் போன்ற புத்திசாலிகள் வாழ்கின்ற கிரகங்களை அண்டவெளியில் தேடிவரும் விஞ்ஞானிகளுக்கும் ஒரு வித சிக்னல் பிரச்சினை உள்ளது. அவர்களின் பிரச்சினை வித்தியாசமானது. அவர்களுக்கு ஏராளமான சிக்னல்கள் கிடைக்கின்றன. ஆனால், விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்ற சிக்னல்கள்தான் கிடைக்கவில்லை.

எதிர்பார்ப்பது யாரை?

எதற்கு சிக்னலைத் தேட வேண்டும்? பூமியை நோக்கி யார் சிக்னல் அனுப்பப்போகிறார்கள் என்று கேட்கலாம். அண்டவெளியில் பூமி போன்று கோடானுகோடி கிரகங்கள் உள்ளன. அதில் ஐயமில்லை. அவற்றில் நம்மைப் போன்ற புத்திசாலிகள் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அப்படியான கிரகங்களில் இருப்பவர்கள் தங்களைப் போலவே எங்கேனும் யாரேனும் இருக்கலாம் என்று கருத இடமிருக்கிறது. அந்த எண்ணத்தில் அவர்கள் ரேடியோ சிக்னல் வடிவில் ஏதேனும் செய்தி அனுப்பலாம்.

அல்லது ஒரு கிரகத்தில் உள்ளவர்கள் இன்னொரு கிரகத்தில் உள்ளவர்களுக்கு சிக்னல் அனுப்பலாம். அவர்கள் அப்படி சிக்னல்கள் அனுப்பினால் நிச்சயம் அவை பூமிக்கும் கிடைக்கும். எனவேதான் அண்டவெளியிலிருந்து வித்தியாசமான சிக்னல்கள் ஏதேனும் வருகின்றனவா என்று விஞ்ஞானிகள் தேடிவருகிறார்கள்.

இந்தத் தேடலை ஆரம்பித்து வைத்தவர்களில் பிராங்க் டிரேக் முதன்மையானவர். 1930-ல் பிறந்த அவருக்கு இப்போது 85 வயது. இந்த வயதிலும் அவர் உற்சாகமாக வேற்றுலகவாசிகளைத் தேடும் விஷயத்தில் ஆர்வம் குன்றாதவராக விளங்குகிறார்.

அஸ்ட்ரானமி எனப்படும் வானவியல் படிப்பு படித்த அவர், பின்னர் ரேடியோ டெலஸ்கோப் மூலம் வானை ஆராயும் துறையிலும் பட்டம் பெற்றார். அண்டவெளியில் இருக்கின்ற பூமி போன்ற கிரகங்களில் வேற்றுலகவாசிகள் நிச்சயம் இருக்க வேண்டும் என்று இளம் வயதிலேயே அவருக்கு ஆழ்ந்த நம்பிக்கை ஏற்பட்டது. டிரேக்கின் சமகாலத்து விஞ்ஞானியான கார்ல் சாகன் உட்பட மற்ற விஞ்ஞானிகளும் அதே போலக் கருதினர். இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், வேற்றுலகவாசிகள் இருக்க வேண்டும் என்று உறுதியாக நம்புகிறார். சமீபத்தில்கூட அவர் இது பற்றிப் பேசியிருக்கிறார்.

ரேடியோ டெலஸ்கோப்புகள்

சிக்னல்கள் வருகின்றனவா என்று தேடுவதற்கு இவர்களுக்கு ரேடியோ டெலஸ்கோப்புகள் உதவு கின்றன. இந்த டெலஸ்கோப்புகளை விஞ்ஞானிகளின் ‘காதுகள்’ என்றும் வருணிக்கலாம். இவைதான் அண்டவெளியிலிருந்து வித்தியாசமான சிக்னல் வருகிறதா என்று ‘காது கொடுத்து’க் கேட்டுவருகின்றன. இவை நாம் அறிந்த சாதாரண டெலஸ்கோப்புகளிலிருந்து வேறுபட்டவை.

சாதாரண டெலஸ்கோப்புகளிலேயே இரண்டு வகை உண்டு. ஒன்றில் கண்ணாடி லென்ஸ்கள் இருக்கும். இந்த டெலஸ்கோப்புக்கு அடியில் இருந்தபடி வானை ஆராயலாம். இன்னொரு வகை டெலஸ்கோப்பில் லென்ஸுக்குப் பதில் வெள்ளி அல்லது அலுமினியம் பூசப்பட்ட பெரிய உலோகத் தகடு இருக்கும். மிக பளபளப்பான அந்த உலோகத் தகட்டின் உட்புறம் குழிவாக இருக்கும். நாம் பயன்படுத்தும் முகம் பார்க்கும் கண்ணாடி எதிரே உள்ளதைப் பிரதிபலிப்பது போன்று இந்த டெலஸ்கோப்பின் உலோகத் தகடும் வானில் உள்ளதைப் பிரதிபலிக்கும். அதே நேரத்தில், வானத்தில் உள்ள நட்சத்திரங்களையும் அண்டவெளியில் உள்ள கிரகங்களையும் பெரிதாக்கிக் காட்டும். இந்த இரண்டையுமே தமிழில் தொலைநோக்கி என்றும் கூறலாம்.

ரேடியோ டெலஸ்கோப்புகள் முற்றிலும் வேறு பட்டவை. இவற்றை அலை திரட்டிகள் என்று வேண்டுமானால் கூறலாம். நட்சத்திரங்களிலிருந்து ஒளி மட்டுமன்றி எக்ஸ் கதிர், புற ஊதாக் கதிர், ரேடியோ அலைகள் எனப்படும் கதிர்கள் ஆகியவையும் வெளிப்படுகின்றன. இவை அனைத்தும் சேர்ந்து மின்காந்த அலைகள் என்று குறிப்பிடப்படுகின்றன. ஏற்கெனவே குறிப்பிட்டபடி எக்ஸ் கதிர், புற ஊதாக் கதிர்களில் ஒரு பகுதி ஆகியவற்றைக் காற்று மண்டலம் தடுத்துவிடுகிறது.

ஆனால், ரேடியோ அலைகள் தடுக்கப்படுவதில்லை. இந்த அலைகளைப் பெறுவதுதான் ரேடியோ டெலஸ்கோப்புகளின் வேலை. இவை பெறுகின்ற சிக்னல்களைத் தகுந்த கருவிகளைக் கொண்டு ஒலி அலைகளாகவும் மாற்றலாம். அந்த அளவில் கேட்பான் கருவிகளைக் காதில் மாட்டிக்கொண்டு சிக்னல்களைக் காதால் கேட்கலாம். எனவேதான், அமெரிக்காவில் ஓகையோ மாகாணத்தில் இருந்த ஒரு ரேடியோ டெலஸ்கோப் ‘பெரிய காது’ என்று வருணிக்கப்பட்டது.

காத்திருக்கும் காதுகள்

ரேடியோ டெலஸ்கோப்புகள் அனைத்திலும் பெரிய டிஷ் ஆண்டெனாக்கள் உண்டு. டிவி நிகழ்ச்சிகளைப் பெற சில வீடுகளின் மொட்டை மாடிகளில் டிஷ் ஆண்டெனாக்கள் இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். இவை தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் அனுப்புகின்ற சிக்னல்களைப் பெறுபவை. ரேடியோ டெலஸ்கோப்புகளும் இதே மாதிரியில் வேறு வித அலைகளைப் பெறுகின்றன.

நட்சத்திரங்கள் பல ஒளியாண்டு தொலைவில் இருப்பவை. அவற்றிலிருந்து வரும் சிக்னல்கள் மிகப் பலவீனமானவை. அந்த சிக்னல்கள் அதிக அலைநீளம் கொண்டவை. எனவேதான் ரேடியோ டெலஸ்கோப்புகளின் டிஷ் ஆண்டெனாக்கள் வடிவில் பெரியவையாக உள்ளன. இந்த டிஷ் ஆண்டெனாக்களின் குறுக்களவு 30 மீட்டர் 40 மீட்டர் என்ற அளவிலும் இருக்கலாம். 300 மீட்டர் ரேடியோ டெலஸ்கோப்பும் உண்டு. சில வகை ரேடியோ டெலஸ்கோப்புகளில் டிஷ் ஆண்டெனாவுக்குப் பதில் குறுக்கும் நெடுக்குமான கம்பிகள் இருக்கும்.

ரேடியோ டெலஸ்கோப்புகளுக்கும் சாதாரண டெலஸ்கோப்புகளுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. சாதாரண டெலஸ்கோப்புகளை இரவில் தான் பயன்படுத்த இயலும். ஆனால், ரேடியோ டெலஸ்கோப்புகளை இரவு பகல் 24 மணி நேரமும் பயன்படுத்த முடியும்.

கோடானுகோடி கிலோ மீட்டர்களுக்கு அப்பாலிருந்து நட்சத்திரங்கள், அண்டங்கள், நட்சத்திரங்கள் தோன்றும் பகுதிகள் முதலியவற்றிலிருந்து இயற்கையாக ரேடியோ சிக்னல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இவ்விதம் ரேடியோ சிக்னல்கள் வருகின்றன என்பது 1933 வாக்கில்தான் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நட்சத்திரங்கள் பற்றி மேலும் விவரமாக அறிந்துகொள்ள அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ரேடியோ டெலஸ்கோப்புகள் நிறுவப்படலாயின.

நம்மைப் போல் ஒருவன்

இயற்கையான ரேடியோ அலைகள் பற்றி அறிந்து கொண்ட மனிதன் ரேடியோ அலைகளைச் செயற்கையாக உண்டாக்கவும் கற்றுக்கொண்டான். ஏற்கெனவே, வேறு அத்தியாயத்தில் கூறியபடி நட்சத்திரங்களிலிருந்து இயற்கையாக வரும் ரேடியோ அலைகளுக்கும் மனிதன் உண்டாக்கி அனுப்பும் ரேடியோ அலைகளுக்கும் இடையே எளிதில் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியும்.

எங்கோ அண்டவெளியில் இருக்கின்ற பூமி போன்ற கிரகங்களில் இருக்கக்கூடியவர்கள், ரேடியோ அலைகள் வடிவில் சிக்னல்களை அனுப்புகிறார்களா என்று தேடுவதில் பல விஞ்ஞானிகளும் ஈடுபட்டுள்ளனர். அப்படியான சிக்னல்கள் கிடைத்தால் எங்கோ பூமி போன்ற கிரகத்தில் அல்லது கிரகங்களில் நம்மைப் போன்ற புத்திசாலி மக்கள் இருக்கின்றனர் என்பது உறுதியாகிவிடும்.

அந்த நோக்கில் டிரேக் 1960-ல் ‘ஆஸ்மா’ என்னும் திட்டத்தின் கீழ் ரேடியோ டெலஸ்கோப்புகளைப் பயன் படுத்தி தீவிரத் தேடலில் ஈடுபட்டார். பின்னர் பல ரேடியோ டெலஸ்கோப்புகள் இதில் ஈடுபட்டன. இவ்விதத் தேடல் சுருக்கமாக ‘சேட்டி’ என்று அழைக்கப்படுகிறது. இது ஆங்கிலப் பெயரின் சுருக்கம். பின்னர் இதே பெயரில் ஒரு தனி அமைப்பே ஏற்படுத்தப்பட்டது.

(வியாழன்தோறும் தொடர்வோம்... )

- என். ராமதுரை,
மூத்த எழுத்தாளர்,
தொடர்புக்கு: nramadurai@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x