Last Updated : 03 Dec, 2015 10:34 AM

 

Published : 03 Dec 2015 10:34 AM
Last Updated : 03 Dec 2015 10:34 AM

எங்கே இன்னொரு பூமி?- சூரியன் மாதிரியில் ஒரு நட்சத்திரம்

‘சூரியன்’கள் மிகவும் தொலைவில் இருப்பதால் நட்சத்திரங்களாகத் தெரிகின்றன

நமது சூரிய மண்டலத்தில் பூமியைத் தவிர, வேறு (செவ்வாய் உட்பட) எந்தக் கிரகத்திலும் மனிதர்கள் அல்லது மனிதர்கள் மாதிரியில் யாரும் கிடையாது. இது தெளிவு. எனினும், சூரிய மண்டலத்துக்கு அப்பால் எங்கோ இருக்கின்ற சூரியன் போன்ற ஒரு நட்சத்திரத்தைச் சுற்றுகின்ற கிரகத்தில் மனிதர் மாதிரியானவர்கள் அதாவது வேற்றுலகவாசிகள் இருக்கலாம். அதாவது, அந்த நட்சத்திரம் சூரியன் மாதிரியில் இருந்தாக வேண்டும். ஆகவே, நாம் அந்த மாதிரி நட்சத்திரத்தைத் தேடியாக வேண்டும்.

நிலவற்ற நாளில் நீங்கள் இரவு வானைக் கவனித்தால் எண்ணற்ற நட்சத்திரங்கள் தெரியும். சென்னை, கோவை, திருச்சி போன்ற நகரங்களில் இருந்துகொண்டு வானை நோக்கில் அவ்வளவாக நட்சத்திரங்கள் தெரியாது. நகரில் உள்ள தெரு விளக்குகள், கார்களின் விளக்குகள் மற்றும் விளம்பரப் பலகைகள் ஆகியவற்றின் வெளிச்சத்தில் ஒரு பகுதி வானை நோக்கியும் செல்கிறது. அந்த வெளிச் சமானது நகரங்களுக்கு மேலே காற்றில் உள்ள தூசியால் சிதறடிக்கப்படுகிறது. எனவே, வானத்து நட்சத்திரங்கள் தெளிவாகத் தெரியாதபடி அது மறைக்கிறது.

அற்புதக் காட்சி

வான் காட்சியைக் காண முதலில் அமாவாசை நாளில் ஒரு கிராமத்துக்குச் செல்ல வேண்டும். பின்னர், அக்கிராமத்திலிருந்து தள்ளி வெளியே போய் சிறிதுகூட வெளிச்சம் இல்லாத இடத்தை அடைந்து இருட்டுக்குக் கண்கள் பழகிக்கொண்ட பின்னர் வானை நோக்க வேண்டும். பெரிய கருப்பு நிற வெல்வெட் துணியில் ஏராளமான வைரக் கற்களைப் பரப்பியது போன்று வானில் எண்ணற்ற நட்சத்திரங்கள் தெரியும். இது அற்புதக் காட்சியாக இருக்கும்.

இந்த நட்சத்திரங்கள் அனைத்தும் ‘சூரியன்’களே. இவை மிகவும் தொலைவில் இருப்பதால் நட்சத்திரங்க ளாகத் தெரிகின்றன. சூரியன் என்கிற நட்சத்திரம் நமக்கு

‘அருகில்’ (சுமார் 15 கோடி கி.மீ. தொலைவில்) இருப்பதால் நமக்கு சூரியனாகத் தெரிகிறது.

இரவு வானில் தெரிகின்ற நட்சத்திரங்கள் அனைத்தும் ஒரே மாதிரியானவை அல்ல. வெறும் கண்ணால் பார்த் தாலே வித்தியாசம் தெரியும். சில நட்சத்திரங்கள் பளீரெனச் சற்றே நீல நிறத்தில் தெரிகின்றன. சில நட்சத்திரங்கள் வெண்மையான ஒளியுடன் காட்சியளிக்கின்றன. சிவப்பு கலந்த ஆரஞ்சு நிற நட்சத்திரங்கள் உண்டு. சில நட்சத்திரங்கள் சிவப்பாகத் தெரியும். நட்சத்திரங்களின் வெளிப்புற வெப்பத்தைப் பொறுத்து அவற்றின் நிறம் மாறுபடுகிறது.

அல்பாயுசு நட்சத்திரங்கள்

பருமனைப் பொறுத்தும் நட்சத்திரங்கள் வித்தியாசப்படுகின்றன. சில நட்சத்திரங்கள் பூதாகாரமானவை. அவை நமது சூரியனைப் போலப் பல மடங்கு பெரியவை. நட்சத்திரங்கள் அனைத்தும் ஒரே வயது கொண்டவையும் அல்ல. சில நட்சத்திரங்கள் மிக நீண்ட ஆயுளைக் கொண்டவை. நமது சூரியன் மிக நீண்ட ஆயுளைக் கொண்டது. சூரியனுடன் ஒப்பிட்டால் பல நட்சத்திரங்கள் ’அல்பாயுசு’ கொண்டவையே.

ஒரு நட்சத்திரத்தின் பருமனுக்கும் அதன் ஆயுளுக்கும் தொடர்பு உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். வானில் உள்ள திருவாதிரை நட்சத்திரம் வடிவில் மிகப் பெரியது. ஆனால், அது குறைந்த ஆயுளைக் கொண்டது. கேட்டை நட்சத்திரமும் அப்படிப்பட்டதே. திருவாதிரையும் கேட்டையும் ஜோசியத்தில் வருகின்ற நட்சத்திரங்களாயிற்றே என்று கேட்கலாம். உண்மையில், அந்தப் பெயர்களைக் கொண்ட நட்சத்திரங்கள் வானில் இருக்கின்றன. திருவாதிரையும் கேட்டையும் வடிவில் பெரிதாகவும் சிவந்த நிறத்துடனும் காணப்படுவதால் இந்த இரண்டு நட்சத்திரங்களுக்கும் ‘செம்பூதம்’ என்ற பட்டப் பெயர் உண்டு.

சூரியன் நீண்ட ஆயுளைக் கொண்டது என்று கூறினோம். சூரியன் தோன்றி சுமார் 454 கோடி ஆண்டுகள் ஆகின்றன. பூமியும் மற்ற கிரகங்களும் சூரியன் தோன்றிய போதே உண்டானவை. ஆகவே, பூமியின் வயதும் அதேதான். சூரியன் இன்னும் 500 கோடி ஆண்டுகளுக்கு இருக்கும்.

செம்பூத திருவாதிரை

திருவாதிரை நட்சத்திரம் சூரியனைப் போல 20 முதல் 30 மடங்கு பெரியது. சூரியனைப் போல ஒரு லட்சம் மடங்கு பிரகாசமானது. மிகத் தொலைவில் இருப்பதால் வானில் அது சற்றே சிவந்த புள்ளியாகத் தெரிகிறது. திருவாதிரை நட்சத்திரத்தின் வயது சுமார் ஒரு கோடி ஆண்டுகளே. சில லட்சம் ஆண்டுகளில் அதன் ஆயுள் முடிந்துவிடும். கேட்டை நட்சத்திரத்தின் கதையும் அதேதான். சூரியனைப் போல சுமார் 18 மடங்கு பெரியதான அந்த நட்சத்திரத்தின் வயது சுமார் ஒரு கோடியே 20 லட்சம் ஆண்டுகள். அதுவும் சில லட்சம் ஆண்டுகளில் அழியக்கூடியதே.

செலவாளிக் கேட்டை

திருவாதிரை, கேட்டை நட்சத்திரங்களுக்கு ஏன் ஆயுள் குறைவு? நமது சூரியனில் ஹைட்ரஜன்தான் எரிபொருள். சூரியனின் மையத்தில் நிலவும் பயங்கரமான வெப்பத்தில் ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து ஹீலியம் அணுக்களாக மாறுகின்றன. இதுவே அணுச் சேர்க்கை எனப்படுகிறது. இந்த அணுச் சேர்க்கையின் பலனாகப் பெரும் ஆற்றலும் ஒளியும் வெளிப்படுகின்றன.

திருவாதிரை, கேட்டை போன்ற பிரம்மாண்டமான நட்சத்திரங்களில் எரிபொருள் மிக வேகமாக எரிந்து தீர்ந்துபோகிறது. அவை ‘பெரிய செலவாளிகள்’. எனவே, ஆடம்பரமாக வாழ்ந்து கெட்டவன் கதைதான். பூமியின் கதைக்கு வருவோம். பூமியில் உள்ள உகந்த சூழ்நிலைகள் காரணமாக உயிரினம் தோன்றியது. பூமி தோன்றி சில நூறு கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் மனிதன் தோன்றினான். உயிரின வரலாற்றுப்படி மனிதன் ‘நேற்று’ தோன்றியவன். மனிதன் நாகரிக மனிதனாக மாறிச் சில ஆயிரம் ஆண்டுகளே ஆகியுள்ளன.

அப்படிப் பார்க்கும்போது, சூரியன் போன்று நீண்ட ஆயுளைக்கொண்ட நட்சத்திரத்தைச் சுற்றுகின்ற கிரகத்தில்தான் உயிரினம் தோன்ற முடியும் என்று சொல்லலாம். ஏதோ ஒரு நட்சத்திரத்தின் அருகே பூமி போன்று பல உகந்த சூழ்நிலைகளையும் கொண்ட கிரகம் இருந்தாலும், அதில் நம்மைப் போன்ற புத்திசாலி மனிதர்கள் தோன்றுவதற்கு முன்னர் அந்த நட்சத்திரமே அழிந்து போய்விடும் என்றால் எப்படி?

சிவப்புக் குள்ளனும் வெள்ளைக் குள்ளனும்

இந்த விஷயத்தில் இரவு வானில் ‘வயது பத்தாது’ என்று ஒதுக்கி வைக்கத் தக்க நட்சத்திரங்கள் பலவும் உள்ளன. அந்த வகையில் பார்க்கும்போது சூரியன் சைஸில் உள்ள நட்சத்திரங்களே பூமி மாதிரி கிரகத்தைப் பெற்றிருக்க மிகவும் பொருத்தமானவை என்று சொல் லலாம். சிவப்புக் குள்ளன் என்ற பட்டப் பெயர் கொண்ட நட்சத்திரங்கள் மிக நிறையவே உள்ளன. இவை சூரியனைவிடச் சிறியவை. அதே சமயம், சூரியனைவிட அதிக ஆயுளைக் கொண்டவை. இவையும் கிரகங்களைப் பெற்றுள்ளதை நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால், சிவப்புக் குள்ளன் நட்சத்திர மண்டலத்தில் பூமி போன்ற கிரகம் இருக்குமானால், அந்த கிரகம் சில விசேஷப் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக இருக்கும்.

வெள்ளைக் குள்ளன் எனப்படுகிற நட்சத்திரங்களும் சூரியனைவிடச் சிறியவையே. ஆனால், அவற்றில் பூமி போன்ற கிரகங்கள் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். எனினும் கூட்டிக் கழித்துப் பார்த்தால், பூமி போன்ற கிரகங்களைப் பெற்றுள்ள நட்சத்திரங்கள் மிக நிறையவே உள்ளன . நிபுணர்கள் இது விஷயத்தில் விரிவாகவே கணக்குப்போட்டு வைத்துள்ளனர்.

- என். ராமதுரை, மூத்த பத்திரிகையாளர், தொடர்புக்கு: nramadurai@gmail.com

(வியாழன்தோறும் தொடர்வோம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x