Last Updated : 12 Sep, 2013 04:07 PM

 

Published : 12 Sep 2013 04:07 PM
Last Updated : 12 Sep 2013 04:07 PM

எங்கெங்கு காணினும் குப்பையடா!

பொள்ளாச்சியிலிருந்து கோவைக்கு பஸ்ஸில் போய்க்கொண்டிருந்தேன். ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டே பயணித்தேன். அந்த முக்கால் மணி நேரத்தில் அதிகமாக எனது கண்ணில்பட்டது, சாலையோரத்தில் குவிந்திருந்த பிளாஸ்டிக் குப்பைகள்தான். அதைத்தொடர்ந்து, கோவையிலிருந்து திருச்சிக்கு ரயிலில் பயணமானேன். கோவை ரயில் நிலையத்திலிருந்து திருச்சி வரை வழிநெடுக ரயில் தடத்தின் ஓரமாக, குறிப்பாக வழியில் இருந்த எல்லா ரயில் நிலையங்கள் வருவதற்கு முன்னும், அந்த இடத்தைக் கடந்த பின்னும் குவிந்திருந்த பிளாஸ்டிக் குப்பைகளை காணத் தவறவில்லை.

அவற்றைப் பார்க்கப் பார்க்க எரிச்சலாகவும், கோபமாகவும் இருந்தது. யார் மீது கோபப்படுவது என்று புரியவில்லை. பிளாஸ்டிக் பைகளை, பாட்டில்களை, குவளைகளை கொடுக்க்கும் கடைக்காரர்கள்மீதா? அதை வாங்குபவர்கள்மீதா? வாங்கி கண்ட இடத்தில் தூக்கி வீசுபவர்கள்மீதா? அப்படித் தூக்கி எறியப்பட்டதை சுத்தப்படுத்தாத நகராட்சியினரின்மீதா? சும்மா பேருக்கு பிளாஸ்டிக் பைகளை தூக்கிப்போடுவதை தடை செய்யும் அரசின்மீதா? இல்லை, இந்தப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள்மீதா? யாரைக் குற்றம் சொல்லவதென்று புரியவில்லை.

பிளாஸ்டிக் குப்பை இல்லாத இடமே இல்லை. நம் வாழ்விலும் சுற்றுப்புறச் சூழலிலும் இரண்டரக் கலந்துவிட்ட ஒன்றாகிவிட்டது. நம் வீட்டின் உள்ளேயும், வீட்டைச் சுற்றிலும், ஆற்றில், குளத்தில், சாக்கடையில், கால்நடையின் கழிவுகளில், வயலுக்குப் போடும் தொழு உரத்தில், மான்களின் குடலில், யானையின் லத்தியில், பறவைகளின் கூட்டில், கடல் அலையில், தேங்கிக் கிடக்கும் நீரில், வற்றிய ஆற்று மணலில், பச்சைப் பசேலன பரந்து விரிந்திருக்கும் வயல்வெளியில், தனியே நின்றுகொண்டிருக்கும் கருவேல மரத்தின் முள்ளில் மாட்டி காற்றில் படபடத்துக்கொண்டு, முள்வேலிக் கம்பியில் சிக்கி சலசலத்துக்கொண்டு, எங்கெங்கு காணினும் பிளாஸ்டிக் குப்பை.

கல்யாணமா? காதுகுத்தா? கருமாதியா? அரசியல் பொதுக்கூட்டமா? கோயில் திருவிழாவா? கோடைவாசஸ்தலமா? பிக்னிக் ஸ்பாட்டா? எந்த இடமானாலும், விஷேசமானாலும் அது நடந்து முடிந்ததற்கான, மனிதன் இருக்கிறான் என்பதற்கான அறிகுறி அந்த இடத்தைச் சுற்றிலும் சிதறிக்கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகள்தான். நாம் குப்பைகளுக்கு மத்தியில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இந்தக் குப்பைகள் நிச்சயமாக சுற்றுப்புறத்தை அழகுபடுத்தவில்லை. இதெல்லாம் என் கண்ணில் மட்டும்தான்படுகிறதா? இல்லை, அனைவரும் இந்தக் காட்சியைப் பார்த்து என்னைப் போலவே கோபப்படுகிறார்களா? எத்தனை பேருக்கு இந்த மக்காத குப்பைகளைப் பார்க்கும்போது எரிச்சல் வருகிறது? இப்படி இருக்கிறதே என்று கவலைப்படுவது எத்தனைபேர்? அப்படி ஆதாங்கப்படுவர்களில் எத்தனைபேர் பிளாஸ்டிக் பைகளையோ, குவளையையோ உபயோகிக்காமல் இருக்கிறோம்? அவற்றை நமக்குக் கொடுக்கப்படும்போது வேண்டாம் என்கிறோம்?

“சுத்தம் சோறுபோடும்”, “சொர்க்கம் என்பது நமக்கு... சுத்தம் உள்ள வீடுதான், சுத்தம் என்பதை மறந்தால்... நாடும் குப்பை மேடுதான்...” என்பதெல்லாம் நமக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும் நாம் செய்யவேண்டியதை, செய்யக்கூடியதை செய்வதில்லை. பிளாஸ்டிக் குப்பைகள் நம் முன்னோர்கள் காலத்திலிருந்து இருந்து வருபவை அல்ல. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன், சிறுவனாக இருந்தபோது கடைக்குச் செல்ல ஒரு துணிப்பையை எடுத்துச் செல்லும் பழக்கம் அனைவரிடமும் இருந்தது. கல்யாண வீடுகளில் தரும் தாம்பூலப் பையும் துணியால் ஆனதே. தைலா சில்க், வளநாடு, சாரதாஸ் என எந்தத் துணிக்கடைக்குச் சென்றாலும் அவர்கள் தந்ததும் துணிப் பையையே. இந்த மஞ்சள் பை அதன் மவுசை இப்போது இழந்துவிட்டது. அதை ஏந்திச் செல்வோரையும் இந்த உலகம் கேலி செய்கிறது. விசித்திரமாக பார்க்கிறது.

அந்தக் காலத்தில் மளிகைக் கடைகளில் செய்தித்தாள்களினால் ஆன உறையில் அரிசியையும், பருப்பையும், புளியையும், பலசரக்குகளையும் கட்டித்தந்தார்கள். வாங்கும் அளவிற்குத் தகுந்தவாறு பேப்பரைக் கிழித்து, லாவகமாக மடித்து பொட்டலம் போட்டு, மேலே தொங்கும் கண்டிலிருந்து சனலை இழுத்துக் கட்டி, சனலை இரு விரலாலும் திருகி, பிய்த்து முடிச்சு போட்டு கொடுப்பார்கள். கதம்பத்தை, முல்லை, அரும்பை முழம்போட்டு நீர்தெளித்து வைத்த தாமரை இலையில் கட்டிக்கொடுத்தார்கள். ஹோட்டலில் வாழை இலையில், சன்னமான ஈர்குச்சியால் ஒன்று சேர்த்து தைக்கப்பட்ட மந்தாரை இலையிலும் சாப்பாடு போட்டார்கள். (இப்போது சில இடங்களில் வாழை இலை போன்ற வடிவிலமைந்த மேலே மெல்லிய பிளாஸ்டிக் உறைகொண்ட பேப்பரால் ஆன இலை!) கோயிலில் உண்டகட்டி, பிரசாதம் எல்லாம் தொண்ணையில் கொடுத்தார்கள். தள்ளு வண்டியில், தலையில் கூடையை சுமந்து தெருவில் காய்கறி விற்பவர்கள் பிளாஸ்டிக் பை கொடுக்கவில்லை. மாறாக, வாங்க வந்தவர்கள் பிண்ணப்பட்ட ஒயர் கூடைகளை எடுத்துச் சென்றனர். எடுக்க மறந்த பெண்கள் தங்கள் முந்தானையில் வாங்கி வயிற்றோடு சேர்த்துக் கட்டி எடுத்துச் சென்றனர். கறியும், மீனும் வாங்க மூடி போட்ட பாத்திரத்தையோ, மஞ்சள் பையையோ எடுத்துச் சென்றனர்.

எங்கள் வீட்டில் மீன் வாங்க என தனியாக ஒரு மஞ்சள் பை இருக்கும். பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது பாட்டிலில் தண்ணீர் எடுத்துச் செல்லவில்லை நாங்கள். வசதியான சிலர் வாட்டர் பேக் வைத்திருப்பார்கள் (அதன்பின் வந்தது பெட் பாட்டில்கள்). மற்றவர்கள் எல்லாம் பள்ளியில் உள்ள குழாய்களில் தான் தாகத்தைத் தனித்துக்கொண்டோம். மதியம் சாப்பிட்டபின், குழாயைத் திறந்து விட்டு, வட்ட வடிவ டிபன் பாக்ஸின் மூடியை அதன் கீழே வைத்து, விளிம்பில் வாய் வைத்து தண்ணீர் குடித்தது இன்னும் நினைவில் இருக்கிறது. கிளாசிலும், டவரா செட்டிலும், கடைகளில் டீயும், காபியும் தந்தார்கள். ஐஸ்கிரீம் எடுத்துச் சாப்பிட மரக்கட்டையால் ஆன சிறிய கரண்டியைக் கொடுத்தார்கள். மாரி, கிராக்-ஜாக் பிஸ்கட்டுகள் மெழுகு தடவிய தாளில் மடிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இப்போது எல்லாம் பிளாஸ்டிக் மயம்.

நமக்கு சாப்பிட, குடிக்க, வசிக்க எல்லாமே சுத்தமானதாகவும், சுகாதாரமானதாகவும் இருக்கவேண்டும். ஆனால் இந்த உலகைப் பற்றி, சுற்றுப்புறச்சூழலைப் பற்றி நாம் கவலைபடுவது இல்லை. அதை அசுத்தப்படுத்த கொஞ்சம்கூட தயங்குவதில்லை. நமக்கு நோய் ஏதும் வரக்கூடாது, ஆனால் நாம் வாழும் இந்த உலகு எக்கேடு கெட்டு போனாலும் நமக்குக் கவலை இல்லை. சாலையோரத்தில் கிடக்கும் இந்தக் குப்பைகள் என் கண்களை மட்டும்தான் உறுத்துகிறதா? எனக்கு மட்டும்தான் அவை அசிங்கமாகக் காட்சியளிக்கின்றதா? இப்படித்தான் காலாகாலத்திற்கும் இருக்குமா? இதையெல்லாம் சகித்துக்கொள்ளத்தான் வேண்டுமா? பார்க்கப் பார்க்கப் பழகிவிடுமா? பிடித்துப்போய்விடுமா? அல்லது இதை யாருமே ஒரு பிரச்சினையாக நினைக்கவில்லையா? நான்தான் பிதற்றுகிறேனா? எனக்கு புரியவில்லை. யாராவது வழி சொல்லுங்களேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x