Last Updated : 25 Jan, 2014 12:00 AM

 

Published : 25 Jan 2014 12:00 AM
Last Updated : 25 Jan 2014 12:00 AM

உடனே உடனே எழுதினால் செய்திப் பத்திரிகை போல ஆகிவிடும்- அசோகமித்திரன் நேர்காணல்

ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் எழுதிவரும் அசோகமித்திரன் தமிழின் முன்னோடி எழுத்தாளர். எளிய உரையாடல்களால் ஆன அவரது படைப்புகள் வாழ்வை மிக நுட்பாகச் சித்தரிப்பவை. அவரது கதை மாந்தர்கள் மிகையுணர்ச்சி அற்றவர்கள். அப்பாவின் சிநேகிதர் தொகுப்புக்காக 1996இல் சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார். ஆங்கிலத்திலும் தொடர்ந்து எழுதிவருகிறார். அசோகமித்திரனின் இலக்கியப் பங்களிப்பிற்காக அவருக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இந்த ஆண்டின் திரு.வி.க. விருதை வழங்கவுள்ளது.

இப்போது தமிழ் வளர்ச்சித் துறையின் திருவிக விருது கிடைத்துள்ளது. மிக நீண்ட பயணத்திற்குப் பிறகுதான் தொடர்ந்து விருதுகளால் அங்கீகரிக்கப்பட்டுவருகிறீர்கள்...

விருது கொடுக்கிறார்கள். சந்தோஷம். விருதுகொடுப்பதில் நிறைய பேருக்கு மகிழ்ச்சி. அவ்வளவுதான். தொண்டு கிழம் ஆன பிறகு விருதுகொடுக்கிறார்கள். பலபேர் விருது இல்லாமலே இறந்துவிடுகிறார்கள். எனக்கு 82 வயதாகிவிட்டது. சாரல் விருது விக்கிரமாதித்யனுக்குக் கொடுக்கிறார்கள். ஆனால் எனக்குக் கவிதை குறித்தே பொதுவாக நிறைய சந்தேகம் இருக்கிறது. எப்போதும் எனக்குக் கவிதை குறித்துச் சந்தேகம் உண்டு. கவிதையைப் புனித வாக்கு என்கிறார்கள். கொஞ்சம் முயற்சி எடுத்தால் யார் வேண்டுமானாலும் அந்தப் புனித வாக்கை எழுதிவிட முடியும்.

இது பொதுவாகக் கவிதை குறித்த உங்கள் அபிப்ராயமா?

ஆம். ஆரம்பத்தில் கவிதை ஏன் அப்படி எழுதப்பட்டது என்றால் எழுதிய அந்தச் சாதனம் வெகுநாள் இருக்காது. ஓலைச் சுவடிகள் 150 வருஷத்திற்குள் உதிர்ந்துபோய்விடும். அதனால் மனப்பாடமாக வைத்துக்கொள்வதற்காக எதுகை, மோனை, அலங்காரங்கள் வைத்து எழுதினார்கள். மகத்தான படைப்புகள் எல்லாம் இருக்கின்றன. நான் இல்லை என்று சொல்லவில்லை.

கவிதை குறித்த சந்தேகம் தமிழ்க் கவிதைக்கு மட்டுமானதா?

எனக்குத் தெரிந்த மொழியில் இருக்கும் கவிதைகள் எல்லாம் சந்தேகமானவைதாம். நான் கவிதை எழுதியதில்லை. ஆனால் எனக்கு நெருங்கிய நண்பர்கள் கவிஞர்களாக இருக்கிறார்கள். நண்பர் வைத்தீஸ்வரன், ஞானக்கூத்தன் போன்றோர்.

ரொமண்டிஸிஸம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் நீங்கள் எழுத வந்தீர்கள். ஆனால் உங்கள் கதைகளின் மாந்தர்கள் அதைக் களைந்த இயல்பான மனிதர்களாக இருந்தார்கள். இது எப்படிச் சாத்தியமாகியது?

அது என்னுடைய இயல்பு. நான் என் கதைகளுக்குள் இது இதையெலாம் தவிர்க்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை. சிலர் ரொமண்டிக் தன்மையுடன் எழுதுகிறார்கள் என்றால் அவர்களுடைய் இயல்பில் எங்காவது ரொமண்டிஸிஸம் இருக்கும். காண்டேகர் என்று ஒரு எழுத்தாளர். எல்லா இந்திப் படங்களும் அவர் கதைகள் மாதிரியே இருக்கும்; 2 ஆண்கள், 2 பெண்கள். காண்டேகரின் படைப்புகளை மு.வ. மிகவும் வியப்பார். ஆனால் மு.வ.வின் எழுத்தில் அவ்வளவு ரொமண்டிஸம் இல்லை. நன்னெறி கூறுவது போல இருக்கும். கல்கி எழுத்து நன்றாகத்தான் இருக்கும். ஆனால் கதை முடிவில் ஒரு ரொமண்டிஸிஸத்தைக் கொண்டுவந்துவிவார்.

18ஆவது அட்சக்கோடு, கதைச் சம்பவம் நடந்து பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு எழுதிய நாவல். இந்தக் கால இடைவெளி எதனால்?

பொறுமையாகத்தான் எழுத வேண்டும். அப்போதுதான் அந்தக் காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளைச் சரியானபடி எடுத்துக் கூற முடியும். அதாவது படைப்புக்கு நியாயம் செய்யும்படி. உடனே உடனே எழுதினால் செய்திப் பத்திரிகை மாதிரி ஆகிவிடும். நேற்று சசி தரூர் மீது எல்லோரும் அனுதாபம் காட்டிக்கொண்டிருந்தார்கள். இன்று கொலைசெய்துவிட்டார் என்கிறார்கள். அதனால் ஒரு இடைவெளி விட்டுச் செய்வது நல்லது. ஆனால் இதை எல்லோருக்குமான வழியாகச் சொல்லவில்லை.

கால இடைவெளிக்குப் பிறகு எழுதும்போதுதான் உங்களால் துல்லியமாக எழுத முடிகிறதா?

ஒரு வரலாற்றுப் பின்னணியில் எழுதும்போது இம்மாதிரியான இடைவெளி தேவை. சில அந்தரங்கமான கதைகளுக்கு இடைவெளி தேவையில்லை. ஐந்து மாதம் முன்பு பக்கத்துவீட்டில் நடந்த ஒரு சம்பவத்தைக் கதையாக எழுதியுள்ளேன்.

தலித்தியம், பெண்ணியம் போன்ற கோட்பாடுகளை ஒரு எழுத்தாளராக எப்படிப் பார்க்கிறீர்கள்?

இந்தக் கதை இந்தக் கோட்பாட்டுக்குள் வரும் எனப் பிரிப்பதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் ஒரு நிஜக் கதை அனைத்துக் கோட்பாடுகளையும் கொண்டதாகத்தான் இருக்கும். கோட்பாடுகள் மக்களுக்கு நலம் தருவதாக, நம்பிக்கை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். ஆனால் ஒரு தலித் தான் தலித்தைப் பற்றி எழுத வேண்டும் என்றில்லை. பிரேம் சந்த் தலித் இல்லை. அவர் எழுதிய சத்கதி ரொம்ப விஷேசமானது. ஒரு தலித்கூட அந்த மாதிரி எழுதியிருக்க முடியாது.

தமிழ் படைப்பு மொழியின் தொனி இன்றைக்கு வெகுவாக மாறியிருக்கிறது. அது பற்றி...

இது இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொடங்கியது. சில ஐரோப்பியப் படைப்புகள் விவரிப்புகள் மிகுந்ததாக இருந்தன. அந்தப் பாதிப்பில்தான் எழுதினார்கள். ஆனால் அதைத் திட்டமிட்டுச் செய்தார்கள் எனச் சொல்ல முடியாது. அவர்களே அறியாதபடி அந்தப் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். சிறந்த எழுத்தாளன் உரையாடல்கள் மிகுந்தும் எழுதுவான். விவரிப்புகள் மிகுந்தும் சிறப்பாக எழுதுவான்.

நாவல் என்ற ஒரு வடிவத்திற்குப் போன பிறகும் தொடர்ந்து சிறுகதைகள் எழுதிவருகிறீர்கள்...

நான் எழுதுகிறேன். பல பேரைச் சென்றடைகிறது. அது அவர்களுக்குப் புதிய விஷயமாக இருக்கிறது. சமீபத்தில் தி இந்து பொங்கல் மலரில் வைரம் என்று ஒரு சிறுகதை எழுதியிருந்தேன். பல பேருக்கு ஆச்சரியம், 500 ரூபாய்க்கு வைரத் தோடு கிடைக்குமா என்று. இதெல்லாம் இந்தக் கதை மூலம் அவர்களுக்குத் தெரியவருகிறது. மனித உறவுகள் எப்படியெப்படி எல்லாம் இருந்தது, எப்படியெல்லாம் மாறியிருக்கிறது எனச் சொல்கிறது அந்தக் கதை. நாங்கள் ஊரை விட்டு வந்துவிட்டோம். பேசாமல் அங்கேயே இருந்திருக்கலாம்.

ஊரின் நினைவுகள்தாம் உங்களை எழுத வைக்கிறதா?

இருக்கலாம். எந்த இடத்தில் உங்களுக்கு வேர்கள் இருக்கிறதோ அந்த இடத்தில் இருப்பது நல்லது. அந்த வேர் அறுந்து போய்விட்டது. இப்போது புதிதாக வேர்கள் கண்டுபிடிக்க வேண்டியது இருக்கிறது. சில சமயம் வேர் பிடித்துக்கொள்கிறது. சில சமயம் பிடிக்கிறதில்லை.

இன்றைக்குள்ள சிறுகதைகள் குறித்த உங்கள் அபிப்ராயம் என்ன?

நல்ல தேர்ச்சி இருக்கிறது. ஆனால் சிறுகதைகளின் தேவை குறைவு. அதனால் ஒன்றோடு ஒன்றை ஒப்பிடுவது சிரமம்.

இன்றைக்கு உத்வேகம் எடுத்துள்ள இணைய எழுத்துகளைப் பற்றி உங்கள் கருத்து?

அதில் அவ்வளவு நம்பிக்கை இல்லை. படைப்புக்கு எடிட்டர் ரொம்ப அவசியம். எடிட்டர்கள் ரொம்பச் சிறிய மாற்றத்தில் அந்தக் கதையைச் சிறப்பாக்கிவிடுவார்கள். கணையாழியில் இருந்தவரை ஒரு கதையை இரண்டு முறை படிக்காமல் வெளியிட்டதில்லை. உடனே உடனே எப்படி எழுதுகிறார்கள் என ப்ளாக்கில் எழுதுபவர்களைப் பார்த்தால் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

உங்களுடைய அன்றாட வாழ்க்கை குறித்து...

மூணு நாலு வருஷத்திற்கு முன்பு இறந்துவிடுவேன் என நினைத்தேன். நினைவே இல்லாமல் இருந்தேன். எல்லோரும் அழுதார்கள். எனக்கு ஒரு நாளில் வாழ்வதே கஷ்டமாக இருக்கிறது. இந்த விருதுக்கான நிகழ்ச்சி சென்னை மியூசியம் தியெட்டரில் நடப்பதாகச் சொன்னார்கள். அங்கே 20 படிகள் இருக்கும். கைப்பிடி இருக்காது. உள்ளே போனால் அது உடனே கீழிறங்கும். உள்ளே ஒரு படி மாதிரி இன்னொரு படி இருக்காது. அத்துடன் எனக்கு என்ன கவலை என்னவென்றால் விருதைப் படியேறி வாங்க வேண்டும். நான் அங்கு ஒரு நாடகத்தின்போது கால் தவறிக் கிழே விழுந்திருக்கிறேன். அந்தக் காயம் ஆற ஆறு மாதம் ஆனது.

இன்றைக்கு மானுடவியல், சமூகவியல் சார்ந்த நாவல்களே அதிகம் கவனம் பெறுகின்றன. இவை இலக்கியத் தரமானவையா?

பெரிய நாவலாக இருந்தாலே அதன் இலக்கியத் தரம் குறைந்து போய்விடும். நாவல் வடிவத்திற்கே குறைபாடு உள்ளது. உடனே டால்ஸ்டாய் எழுதவில்லையா? என்பார்கள். War and Peace நாவலில் நிறைய பிழைகள் உண்டு. அந்தப் பிழைகளைச் சரிசெய்வதற்காக ஒரு பின்னுரை, பிறகு ஒரு பின்னுரை, அதற்குப் பிறகு இன்னொரு பின்னுரை என அந்நாவலில் நான்கு பின்னுரைகள் இருக்கும். நாவல் எழுதிவிட்டு ஒருத்தன் பின்னுரை எழுதுகிறான் என்றால் அந்த நாவலில் அவனுக்குத் திருப்தி இல்லை என்றுதானே அர்த்தம்? ஆனால் அதே மனுஷன் ரொம்ப சின்ன நாவல்களும் எழுதியிருக்கிறார். முன்பு இந்த மாதிரியான நாவல்களுக்கு வாசகர்கள் இருந்திருக்க மாட்டார்கள். பதிப்பாளர்களும் வெளியிட மாட்டார்கள்.

இந்த மாதிரியான நாவல்களுக்கு இன்று தேவை இருக்கிறதா?

தேவை, தேவையில்லை என்று இல்லை. எழுதியிருக்கிறார்கள் வெளியிடுகிறார்கள். அதற்கு ஒரு பரிசு கிடைத்துவிட்டால் படிக்கிறார்கள். படிக்க வேண்டும்.

நீங்கள் ஆங்கிலத்திலும் கவனம் பெற்ற எழுத்தாளர்...

ஆங்கிலத்தில்தான் முதலில் எழுதினேன். டெக்கான் ஹெரால்டில், இல்லஸ்ரேட் வீக்லியில் எழுதி இருக்கிறேன். தொடர்ந்து ஆங்கிலத்திலே எழுதியிருக்க வேண்டும். ஆனால் தொடர்ந்து எழுதவில்லை. தமிழில் நிறைய செய்வதற்கு இருக்கிறது என நினைத்தேன். அதுவும் ஒரு மாதிரி ரொமண்டிஸிஸம்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x