Last Updated : 05 Dec, 2015 09:54 AM

 

Published : 05 Dec 2015 09:54 AM
Last Updated : 05 Dec 2015 09:54 AM

உங்கள் தேசியத்தில் சென்னை இல்லையா?

மழை எவ்வளவோ அசிங்கங்களை வெளிக்கொண்டு வருவதுபோல ஊடகங்களில் அரசியலையும் வெளிக்கொண்டு வந்திருக்கிறது. தமிழகத்தை, குறிப்பாகச் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையும், அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட வெள்ளமும் சேதங்களும்வட இந்திய ஊடகங்களின் கவனத்துக்குச் சென்றதாகவே தெரியவில்லை.

வட இந்திய மாநிலங்களில் நிகழும் எந்தச் செய்தியானாலும் பரபரப்பாக வெளியிடும் ஆங்கிலம் மற்றும் இந்தி சேனல்கள், செய்தித் தாள்கள் சென்னை வெள்ளத்தைக் கண்டுகொள்ளவே இல்லை. ஷீனா போரா கொலை வழக்கு, சகிப்பின்மை தொடர்பாக ஆமிர் கான் பேசிய விவகாரம் போன்ற விஷயங்கள் மட்டும்தான் உங்கள் கண்ணுக்குத் தெரிகிறதா? சென்னை வெள்ளத்தையும் கொஞ்சம் பாருங்கள் என்று வட இந்திய ஊடகங்களை நடிகர் சித்தார்த் விமர்சித்திருந்தார். இத்தனைக்கும் வட இந்திய ரசிகர்களுக்கு அறிமுகமானவர்தான் அவர். எனினும், வட இந்திய ஊடகங்களிடம் எந்தச் சலனமும் இல்லை. இன்று சென்னையே மூழ்கிவிடுமோ என்று அனைவரும் நடுங்கிக்கொண்டிருக்கும் சமயத்திலும் அவை அசைந்துகொடுக்கவில்லை.

இந்நிலையில், ‘இந்தியா டுடே’ குழுமத்தின் ஆலோசக ஆசிரியரும், ஊடகத் துறையில் அனுபவம் மிக்கவருமான ராஜ்தீப் சர்தேசாய் வட இந்திய ஊடகங்களின் பாராமுகம் குறித்து பாவ மன்னிப்பு கோரியிருக்கிறார். “பொதுவாகவே, வடகிழக்கு மாநிலங்கள், சத்தீஸ்கர் அல்லது ஜார்க்கண்ட் பகுதிகளில் நடக்கும் விஷயங்களுக்கு வட இந்திய ஊடகங்கள் பெரிய முக்கியத்துவம் தருவதில்லை. மும்பையிலோ டெல்லியிலோ சாலைகளில் நீர் தேங்கினால் உடனே தேசிய ஊடகங்களில் பிரதிபலிக்கிறது. சகிப்பின்மை தொடர்பான செய்திகள், சர்ச்சைகள் வட இந்திய ஊடகங்களில் பிரதனமாக இடம்பிடிக்கின்றன. ஆனால், இந்தியாவின் முக்கிய நகரமான சென்னையில் கடந்த ஒரு மாதமாக எதிர்பாராத அளவில் மழை பெய்துவருகிறது. ஆனால், இந்தச் செய்தி எந்த அளவுக்கு ஊடகங்களில் பிரதிபலித்திருக்கிறது? உண்மையில், இந்தச் செய்தி மிகக் குறைவாகவே தேசிய ஊடகங்களில் பிரதிபலித்திருக்கிறது.

தமிழகத்தில் 180 பேர் உயிரிழந்த பின்னர்தான் நாம் (வட இந்திய ஊடகங்கள்) விழித்துக்கொண்டிருக்கிறோம். அதுவும்கூட சென்னை விமான நிலையம் மூடப்பட்ட பிறகுதான் நமக்கு விழிப்பு வந்திருக்கிறது. தென்னிந்தியாவில் நிகழும் சம்பவங்களைவிட மிக அதிகமாக வட இந்தியாவில் நிகழும் சம்பவங்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.

இதில் முரண்நகை என்னவென்றால், ஆங்கில நாளிதழ்கள் மற்றும் ஆங்கில ஊடகங்களுக்கு அதிக வாசகர்களும் பார்வையாளர்களும் இருப்பது தென்னிந்தியாவில்தான். ஆனால், நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்?” என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

தங்களுக்குத் தாங்களே சுயவிமர்சனம் செய்துகொள்ளும் நிலையை வட இந்திய ஊடகங்கள் அடைந்திருக்கின்றன. இதற்கு அவற்றின் பாரபட்சமான செயல்பாடுகள் குறித்து சமூக ஊடகங்களில் எழுந்த விமர்சனமும் முக்கியமான காரணம். ஆங்கில நாளிதழ்களில் முதல் பக்கத்தில் பிரதான இடங்களில் வட இந்திய மாநிலங்களிலும் டெல்லியிலும் நடந்த விஷயங்கள் தொடர்பான செய்திகளே இடம்பெற்றிருப்பதையும், சென்னை மழை தொடர்பான செய்திகள் கொஞ்சம்கூடக் கண்டுகொள்ளப்படாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டிப் பலரும் சமூக வலைதளங்களில் எழுதியிருந்தார்கள். இந்நிலையில்தான், ராஜ்தீப் சர்தேசாய் இவ்வாறு பேசியிருக்கிறார். இனியாவது வட இந்திய ஊடகங்கள் தென்னிந்தியாவில் நிகழும் சம்பவங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். பார்ப்போம், நடக்கிறதா என்று!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x