Published : 23 Jun 2016 09:40 AM
Last Updated : 23 Jun 2016 09:40 AM

இஸ்ரோவின் இன்னொரு சாதனை!

ரஷ்யா, அமெரிக்காவுக்குப் பிறகு இந்தியா இந்தச் சாதனையைச் செய்கிறது



ஒரே சமயத்தில் 20 செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் பாய்ச்சியுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோவின் சாதனைகளுக்கு மேலும் ஒரு மகுடம்! 320 டன் எடையுள்ள நமது ராக்கெட் 1,228 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள்களைச் செலுத்துதியது. அவற்றில் இந்தோனேஷியா, ஜெர்மனி, கனடா, அமெரிக்கா நாடுகளை சேர்ந்த 17 செயற்கைக் கோள்களும், சென்னை சத்தியபாமா பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித்த சத்யபாமா சாட், புணே கல்லூரி மாணவர்கள் தயாரித்த ஸ்லயம் உள்ளிட்ட செயற்கைக்கோள்களும் உள்ளன.

இந்த 20-ல் முக்கியமானது இந்தியாவின் ‘கார்டோசாட் 2சி’. இது பூமியிலிருந்து 505 கி.மீ. உயரத்தில் சுற்றி பூமியைக் கண்காணிக்கும். இது பூமியைச் சுற்றிவரும்போது அதன் பின்புறத்தில் சூரியன் இருக்கும். சூரியஒளி படுகிற பூமிப் பகுதியின் மேலேதான் இந்த செயற்கைக்கோள் செல்லும். இதன் காரணமாக பூமியை நிழல் விழாமல் எளிதாகப் புகைப்படம் எடுக்கும். நாட்டின் எல்லைகளைக் கண்காணிக்கும். பேரிடர் காலங்களில் நிவாரணப் பணிகளுக்கும் உதவும்.

சீனா 2014-ல் ஒரு செயற்கைக்கோளை 0.65 மீட்டர் பிரிதிறன் (Resolution) கொண்ட கேமராவோடு ஏவியது. அதற்குச் சமமானது இப்போது நாம் அனுப்பியுள்ள செயற்கைக்கோள். அதனால், நாட்டின் எல்லைகளில் வேற்றுநாட்டுப் படைகளின் நடமாட்டத்தைத் தரமான புகைப்படங்களாகவும் வீடியோக்களாகவும் நம்மால் பார்க்க முடியும். இது மட்டுமல்லாமல், இஸ்ரோ சத்தமில்லாமல் ஒரு ‘சதம்’ அடித்துவிட்டது. இதோடு இஸ்ரோ அனுப்பிய செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டி 113 ஆக உயர்ந்துவிட்டது!

மூன்றாம் உலக சாதனை

அமெரிக்கா 29 செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தி 2013-ல் உலக சாதனை படைத்தது. அந்த 29-ல் ஒன்றைத் தவிர, மற்றவை ‘கியூப்சாட்’ எனப்படும் மிகச் சிறிய செயற்கைக்கோள்கள். ரஷ்யா 2014-ல் ஒரே சமயத்தில் 33 செயற்கைக்கோள்களை ஏவி நாசாவின் அந்தச் சாதனையை முறியடித்தது. இப்போது 20 செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் ஏவியதன் மூலம் வானியல் வரலாற்றில் இந்தியாவின் சாதனை மூன்றாம் இடத்தைப் பிடிக்கிறது. இதற்கு முன் இந்தியா 2008-ல் ஒரே ராக்கெட்டில் 10 செயற்கைக்கோள்களை ஏவியதே முந்தைய சாதனை.

பள்ளியில் மணி அடித்ததும் எல்லா பிள்ளைகளும் ஒரே சமயத்தில் வெளியே ஓட முயல்வார்கள். அதனால் நெரிசல் ஏற்படும். தள்ளுமுள்ளு ஏற்படும் அல்லவா? அதுபோலவே 20 செயற்கைக்கோள்களையும் ஒரே சமயத்தில் விண்வெளியில் உந்தித் தள்ளினால், அவை ஒன்றுடன் ஒன்று மோதி சுக்குநூறாகி விடலாம். எனவே, ஒவ்வொரு செயற்கைக்கோளையும் வெவ்வேறு ஒப்புதிசை வேகத்திலும் (relative velocity) வெவ்வேறு திசையிலும் ஏவ வேண்டும். இது சொல்வதற்கு எளிது. ஆனால், இது பெரும் தொழில்நுட்ப சவால்.

சர்க்கஸ் வித்தை

சைக்கிளில் இரண்டு பக்கமும் கட்டிய பானைகளில் ஒன்று விழுந்துவிட்டால் பாலன்ஸ் தவறும் அல்லவா? அதுபோலவே, 20 செயற்கைக்கோள்களை ஒன்றாகப் பொட்டலம் செய்து அனுப்பியதும், அதிலிருந்து ஒன்றிரண்டு செயற்கைக்கோள்கள் வெளியேறினால் ராக்கெட்டின் ஈர்ப்பு மையம் (center of gravity) மாறும். சைக்கிள் மாதிரி ராக்கெட்டும் நிலைகுலையும். அதுபோல செயற்கைக்கோள்களை வெளியே தள்ளும்போது, அவை ஒன்றுடன் ஒன்று விண்வெளியில் மோதிவிடக் கூடாது. எனவே, அவற்றைப் பல திசைகளின் கோணங்களில் பல்வேறு திசைகளில் உந்துதல் கொடுத்து வெளியேற்ற வேண்டும். கண நேரமும் பிசகாமல் துல்லியமாக அனைத்துச் செயல்களும் ஒரு சர்க்கஸ் வித்தைபோல நடைபெற வேண்டும்.

ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்த 17-வது நிமிடத்தில் சுமார் 515 கி.மீ. உயரத்தில் முதலில் ‘கார்டோசாட்’ விண்ணில் உந்தப்படும். அடுத்து, ‘சத்யபாமாசாட்’ சுமார் முப்பது நொடிகள் இடைவெளி விட்டு ஏவப்படும். இவ்வாறு வரிசையாக எல்லா விண்கலங்களும் விண்ணில் செலுத்தப்பட்டு, அமெரிக்காவின் ‘பன்னிரண்டாவது டோவ்’ விண்கலம் கடைசியாக விண்ணில் உந்தப்படும். இவை அத்தனையும் மூன்று நிமிடக் கால அவகாசத்துக்குள் நடந்து முடிய வேண்டும். ராக்கெட் இந்தக் காலகட்டத்தில் வெறும் நான்கு கி.மீ. தூரம் மட்டுமே மேலே சென்றிருக்கும். இந்த இடைவெளியில் செயல்பட அசாத்திய துல்லியம் தேவை.

‘ஒயிட் போர்டு’ துணிச்சல்

இன்னொரு துணிச்சலையும் இஸ்ரோ செய்துபார்க்கப் போகிறது. பல செயற்கைக்கோள்கள் பொதுவாக ஒரே உயரத்தில் விண்ணில் ஏவப்படுகின்றன. இந்த முறையும் எல்லா செயற்கைக்கோள்களும் சுமார் 520 கி.மீ. உயரத்தில் செலுத்தப்படும். ஒருவேளை.. ஒரு செயற்கைக்கோளை 200 கி.மீ. உயரத்திலும் வேறொன்றை 400 கி.மீ. உயரத்திலும் மூன்றாவதை 600 கி.மீ. உயரத்திலும் செலுத்த வேண்டும் என்றால் என்ன செய்வது? இதற்கும் தயாராகிவருகிறது இஸ்ரோ. இதுவரை ‘பாயின்ட் டு பாயின்ட்’ பஸ் மாதிரி ராக்கெட் செயல்படுகிறது. அதை ஒயிட் போர்டு பஸ் மாதிரி நிறுத்தி நிறுத்தி இயக்கப்போகிறார்கள். பலதரப்பட்ட உயரங்களில் வேறுவேறு செயற்கைக்கோள்களைச் செலுத்த வேண்டும் என்றால், ராக்கெட்டின் இன்ஜினை நிறுத்தி நிறுத்தி திரும்ப ஸ்டார்ட் செய்ய வேண்டும். இது துணிச்சலான ஒரு தொழில்நுட்ப சவால். மறுபடியும் ஸ்டார்ட் செய்யும்போது, ராக்கெட்டின் இன்ஜின் நொடியில் ஆயிரம் பகுதி அளவுக்குக்கூடத் தாமதிக்காமல் தவறாமல் ஸ்டார்ட் ஆக வேண்டும். 2015 டிசம்பர் 16-ல் சிங்கப்பூரின் ஆறு செயற்கைக் கோள்களை விண்வெளியில் ஏவும்போது இன்ஜினை நிறுத்தி, நான்கு நிமிடம் கழித்து மறுபடி இயக்கி ஏற்கெனவே இந்தியா பரிசோதித்துள்ளது. அதன் வெற்றியால் உற்சாகம் அடைந்துதான், இந்த முறை இரண்டு முறை இன்ஜினை நிறுத்தி மறுபடி இயக்க இஸ்ரோ துணிந்துள்ளது.

தோல்வி காணாத பிஎஸ்எல்வி

இந்தியாவின் பிஎஸ்எல்வி ராக்கெட் தொடர்ந்து 35 முறை தோல்வியே இல்லாமல் வேலை செய்துள்ளது. 1,000 அல்லது 1,500 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை 1,200 கி.மீ. உயரத்துக்கு ஏவ பிஎஸ்எல்வி ராக்கெட்டால் முடியும். மேலும், இது விலை மலிவானது.

இந்தியா 1999-ல் கொரியா மற்றும் ஜெர்மனியின் செயற்கைக்கோள்களை ஏவி இத்துறையில் தனது வணிகத்தைத் தொடங்கியது. இதுவரை அந்நிய நாடுகளின் 57 செயற்கைக்கோள்களை நாம் ஏவியுள்ளோம். இந்திய ராக்கெட்டை அமெரிக்க நிறுவனங்கள் பயன்படுத்தக் கூடாது என, அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனங்கள் நிர்ப்பந்திக்கின்றன. இந்தியாவின் ராக்கெட் விலை மலிவாக இருப்பதால், இந்த ராக்கெட்டில் கூகுள் நிறுவனத்தின் செயற்கைக்கோள் உட்பட 13 அமெரிக்கச் செயற்கைக்கோள்கள் செலுத்தப் படுகின்றன. நேற்றைய வெற்றி இந்தியாவுக்கு உண்மையில் பல வெற்றிகளைக் கொடுத்திருக்கிறது!

- த.வி.வெங்கடேஸ்வரன், அறிவியல் எழுத்தாளர், மத்திய அரசின் விக்யான் பிரச்சார் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி.

தொடர்புக்கு: tvv123@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x