Published : 07 Aug 2016 10:47 AM
Last Updated : 07 Aug 2016 10:47 AM

இரு சகாப்தங்கள்

ஒரு விதத்தில் ‘தி இந்து’வின் வரலாறானது இந்திய இதழியல் வரலாற்றின் முக்கியமான ஓர் அத்தியாயம். இந்தியாவின் தென் முனையிலிருந்து நாட்டின் மதிப்புக்குரிய ஒரு பத்திரிகையாக ‘தி இந்து’ ஆங்கில நாளிதழை வளர்த்தெடுத்ததில் பலரின் பங்களிப்பும் உண்டு. மிக முக்கியமான இருவர், கஸ்தூரி ரங்க ஐயங்கார் (1859 – 1923), கஸ்தூரி சீனிவாசன் (1887 – 1959). ‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் முதல் நூற்றாண்டில் இவர்கள் கோலோச்சிய காலம் உலக வரலாறும் இந்திய வரலாறும் உச்சக் கொந்தளிப்பில் இருந்த காலகட்டம். உலகப் போர்கள், இந்திய சுதந்திரப் போராட்டம், காந்திய சகாப்தம் என்று ‘தி இந்து’ அந்நாட்களில் கடந்துவந்த பாதை ஆங்கிலத்தில் பதிவானது என்றாலும், அடிப்படையில் அது ஒரு தமிழ்ப் பார்வை என்பது இங்கு குறிப்பிட வேண்டியதாகும். ‘தி இந்து’ தமிழ் வாசகர்களும் இதழியல் மாணவர்களும் அறிந்துகொள்ளும் வகையில் ‘கஸ்தூரி ரங்கன் - கஸ்தூரி சீனிவாசன் யுக’த்தின் சுருக்கமான வரலாற்றை இங்கே தருகிறோம்.

‘தி இந்து’ பிறந்த கதை

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ‘மெட்றாஸ்’ உயர் நீதிமன்ற நீதிபதியாக ஐரோப்பியர்கள், குறிப்பாக ஆங்கிலேயர்கள் மட்டுமே அமர முடியும் என்ற நிலை. இந்தியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளில் ஒன்றான இதற்கு எதிராகப் போராடும் சூழலும் உருவானது. சட்ட அறிவு, நேர்மை, மதிநுட்பத்தோடு திகழ்ந்த டி.முத்துசாமி ஐயர் நீதிபதியாக நியமிக்கப்பட வேண்டும் என்ற குரல் எழுந்தபோது, ஐரோப்பியர்கள் அதை எதிர்த்து எழுதினர். இந்தியர்களின் உணர்வு உள்நாட்டிலும் இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளிலும் போய்ச் சேர வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த தேசப் பற்றுமிக்க திருவல்லிக்கேணி இளைஞர்கள் 6 பேரால் 20.09.1878-ல் வாரப் பத்திரிகையாகத் தொடங்கப்பட்டதே ‘தி இந்து’. தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஜி.சுப்பிரமணிய ஐயர் என்ற பள்ளிக்கூட ஆசிரியர் அதன் ஆசிரியர். பச்சையப்பன் கல்லூரி ஆசிரியர் எம்.வீரராகவா சாரியார், சட்டக் கல்லூரி மாணவர்கள் டி.டி. ரங்காசாரி, பி.வி.ரங்காசாரி, டி.கேசவ ராவ் பந்துலு, என்.சுப்பா ராவ் பந்துலு ஆகியோர் ஆசிரியர் குழுவினர். ஒரு ரூபாய் 12 அணா கடன் வாங்கி, ஸ்ரீநிதி அச்சகத்தில் 80 பிரதிகள் அச்சிட்டு, வாராந்தரியாக முதல் விற்பனையைத் தொடங்கினர். ஒரு பிரதியின் விலை 4 அணா. பிறகு, அதுவே 1883-ல் வாரத்தில் மூன்று முறை பிரசுரம் ஆக வளர்ந்தது. 1889-ல் மாலைப் பத்திரிகையானது. 1940-ல் காலை தினசரி ஆனது. விஜயநகர மகாராஜா பசுபதி ஆனந்த கஜபதி ராஜு அந்நாட்களில் ‘தி இந்து’ வெளிவர நிறைய உதவினார். அவருடைய மறைவுக்குப் பிறகு பத்திரிகை தள்ளாடிய சூழலில்தான், இந்தப் பத்திரிகைக்கு சட்ட ஆலோசகராக 1905 முதல் 1915 வரையில் உதவிவந்த வழக்கறிஞர் கஸ்தூரி ரங்க ஐயங்கார், பத்திரிகையை அதன் கட்டிடத்துடன் சேர்த்து வாங்கித் தன் பொறுப்பில் ஏற்று நடத்தினார். பிறகே, அது பிரமிக்கத்தக்க வகையில் வளர்ச்சியடைந்தது.

கஸ்தூரி ரங்கனின் இளமைக் காலம்

கும்பகோணம் அருகேயுள்ள இன்னாம்பூர் கிராமத்தைச் சேர்ந்த சேஷ ஐயங்காருக்கு மூன்றாவது மகனாக 15.12.1859-ல் பிறந்தார் கஸ்தூரி ரங்கன். சேஷ ஐயங்கார் குடும்பத்தினர் விஜயநகர சாம்ராஜ்யத்திலும் தஞ்சை மராட்டிய அரசிலும் அதிகாரிகளாகப் பணியாற்றியவர்கள். இன்னாம்பூரிலும் கபிஸ்தலத்திலும் பின்னர் கும்பகோணத்திலும் படித்தார் கஸ்தூரி ரங்கன். இடையிலேயே திருமணம் ஆனது. மனைவி கனகம்மாள். 1879-ல் சென்னை மாநிலக் கல்லூரியில் கஸ்தூரி ரங்கன் பட்டம் பெற்றார். 1881-ல் சார்பதிவாளர் பணியில் சேர்ந்தார். பிறகு, சட்டக் கல்லூரியில் சேர்ந்தவர் 1884-ல் சட்டக் கல்வி முடித்தார். இதே ஆண்டில் தொடங்கப்பட்டது சென்னை மகாஜன சபை. அதை நிறுவியவர்களில் கஸ்தூரி ரங்கனும் ஒருவர்.

கோவையில் ஒரு காலம்

வழக்கறிஞரானதும் கோவையை நோக்கி நகர்ந்தார் கஸ்தூரி ரங்கன். அங்கு கெளரவ மாஜிஸ்திரேட்டாகவும், சிறையைப் பார்வையிடும் சிறப்புப் பார்வையாளராகவும் ஆட்சியரால் நியமிக்கப்பட்டார். கோவை ஜில்லா போர்டிலும் உறுப்பினரானார். ‘கோவை மாணவர் இலக்கியச் சங்கம்’, ‘கோயம்புத்தூர் காஸ்மோ பாலிடன் கிளப்’, ‘கோயம்புத்தூர் பார் அசோசியேஷன்’ ஆகியவையெல்லாம் கஸ்தூரி ரங்கன் முன்முயற்சியில் தொடங்கப்பட்டவை. 1894-ல் மீண்டும் மதறாஸ் திரும்பி மயிலாப்பூரில் குடியேறினார்.

கஸ்தூரி ரங்கன் ஏன் ‘தி இந்து’வை வாங்கினார்?

அந்நாளில் ‘தி இந்து’வின் ஆசிரியராக இருந்த ஜி.சுப்பிரமணிய ஐயர் 1902-ல் ஓய்வுபெற்றார். பிறகு ‘சுதேசமித்திரன்’ ஆசிரியரானார். அவரைப் பின்பற்றி வீரராகவ ஐயங்காரும் விலகி ‘ஹிந்து நேசன்’ நாளிதழின் ஆசிரியரானார். இடைப்பட்ட காலத்திலேயே ஏனைய நான்கு பேரும் பத்திரிகையின் பொறுப்புகளிலிருந்து விலகிவிட்டனர். இந்தச் சூழலில், 1903-ல் நடைபெற்ற ‘தி இந்து’வின் வெள்ளி விழா, மிகுந்த நெருக்கடிகளுக்கு இடையில் கொண்டாடப்பட்டது. ஆங்கில அரசும் ஐரோப்பிய நிறுவனங்களும், இந்தியர்கள் நடத்தும் ஆங்கிலப் பத்திரிகை என்பதாலேயே விளம்பரம் தராமல் புறக்கணித்தன. சமூகத்தில் ‘தி இந்து’வுக்கெனத் தனி மதிப்பு இருந்தாலும், நிர்வாகச் செலவுக்குக்கூடப் பணம் போதவில்லை. பத்திரிகையின் கட்டிடம், அச்சு இயந்திரங்கள், பத்திரிகையின் நன்மதிப்பு உள்ளிட்ட சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.1,30,000 என்றும், அது அடைக்க வேண்டிய கடன் ரூ.1,00,000 என்றும் மதிப்பிடப்பட்டது. அதைப் பொது நிறுவனமாக மாற்றும் முயற்சிக்குப் போதிய ஆதரவு கிட்டவில்லை. கஸ்தூரி ரங்கன் பத்திரிகையின் சட்ட ஆலோசகராக மட்டுமல்லாமல், அதில் கட்டுரைகளை எழுதிவருபவராகவும் இருந்தார். ‘தி இந்து’ தொடர்ந்து வெளிவர வேண்டியதன் அவசியத்தை உணர்ந்திருந்தவர் அதன் கட்டிடம், அச்சகம் உட்பட அனைத்தையும் விலைக்கு வாங்கி 1.4.1905-ல் நாளிதழின் உரிமையாளர், ஆசிரியரானார்!

அதிரடி மாற்றங்களும் பத்திரிகையின் ஏற்றங்களும்

பத்திரிகை கைக்கு வந்த நேரம் அடுத்தடுத்த சோதனைகள் கஸ்தூரி ரங்கனுக்குக் காத்திருந்தன. அவர் இணை ஆசிரியர் பொறுப்பில் அமர்த்திய சி.கருணாகர மேனன் அடுத்த ஒரு மாதத்தில் பதவி விலகினார்; ‘தி இந்தியன் பேட்ரியாட்’ ஆங்கில நாளிதழைப் போட்டிக்குத் தொடங்கினார். அடுத்த மூன்று மாதங்களில் அதுவரை மேலாளராக இருந்து நிர்வாகப் பொறுப்புகளைக் கையாண்ட வீரராகவாசாரி உடல் நலமின்மையால் பணி ஓய்வுபெற்றார். அடுத்தடுத்து, ஆசிரிய இலாகா சுமைகளும் நிர்வாகச் சுமைகளும் கஸ்தூரி ரங்கன் தோளில் ஏறின. எனினும் மனிதர் சளைக்கவில்லை. தஞ்சாவூரில் வழக்கறிஞராகப் பணியாற்றிய நெருங்கிய உறவினர் ஏ.ரங்கசாமி ஐயங்காரை வரவழைத்து, உதவி ஆசிரியராகவும் மேலாளராகவும் அமர்த்திக்கொண்டார் கஸ்தூரி ரங்கன். ‘ராய்ட்டர்ஸ்' செய்தி நிறுவனத்தின் முழுச் சேவைக்குப் பணம் செலுத்தினார். நாட்டின் முக்கிய நகரங்களில் செய்தியாளர்களை நியமித்தார். அரசியல் தொண்டர்களும் தேச ஆர்வலர்களும் தந்தி மூலம் செய்திகளை அனுப்பலாம் என்று அறிவித்தார். மக்கள் தங்களுடைய மனக் குமுறலை வெளிக்கொட்ட தனிக் கடிதப் பகுதியைத் தொடங்கி அதைச் சுவைபடத் தொகுத்தார். ‘காலண்டர்’, ‘ஷிப்பிங்’, ‘வெதர்’ என்ற தலைப்பில் வெளியான புதிய பகுதிகள் நாள்-திதி-நட்சத்திரம் பற்றியும், சென்னைத் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நின்ற கப்பல்கள் - இனி வரப்போகும் கப்பல்கள் பற்றியும், வானிலை நிலவரத்தையும் வாசகர்களுக்குக் கூறின. ஒரு புதிய தரப்பு வாசகர்களை இவை உள்ளே கொண்டுவந்தன. அயல்நாட்டுப் பத்திரிகைகளில் வெளியான நல்ல கட்டுரைகளும் கலை, இலக்கியப் பகுதிகளும் எடுத்தாளப்பட்டன. பங்குச் சந்தை செய்திகளையும் தொடர்ந்து வெளியிட்டார். உள்நாட்டுப் பிரச்சினைகள் குறித்து தலையங்கங்களை எழுதினார். செலவுகளைக் கண்காணித்துக் குறைத்தார். வெகு விரைவிலேயே பத்திரிகை நஷ்டத்திலிருந்து மீண்டதோடு மட்டுமல்லாமல் நாளுக்கு நாள் மேலே ஏறியது.

கலகக்காரக் கூட்டம்

கஸ்தூரி ரங்கன் காலத்தில் ஆங்கிலேயர் ‘தி இந்து’வுக்கு வைத்த பட்டப்பெயர் ‘கலகக்காரக் கூட்டம்’. ஆரம்ப நாட்களிலிருந்தே தேசிய இயக்கங்களில் பெரிய அளவில் பங்கெடுத்துக்கொண்டது ‘தி இந்து’. 1885 டிசம்பரில் பம்பாயில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸின் முதல் மாநாட்டுக்கு மதறாஸிலிருந்து சென்ற குழுவுக்குத் தலைமை வகித்தவர் ‘தி இந்து’வின் அந்நாள் ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய ஐயர். வங்கப் பிரிவினைக்கு எதிரான தேசியப் போராட்டங்கள், வ.உ.சிதம்பரம் பிள்ளையின் சுதேசிக் கப்பல் நிறுவனத்துக்கான ஆதரவு இயக்கம், தூத்துக்குடி ‘கோரல் மில்’ ஜவுளி ஆலைத் தொழிலாளர்கள் போராட்டம் இப்படிப் பல விஷயங்களில் தேசியவாதிகளுக்கு ஆத்ம நண்பனாகத் துணை நின்றது இந்து. ஆங்கிலேயர்களின் தவறான முடிவுகளையும் அடக்குமுறைகளையும் கடுமையாக எதிர்த்து எழுதியது. கஸ்தூரி ரங்கன் பால கங்காதர திலகரின் ஆதரவாளராக இருந்ததால், தலையங்கத்தில் அவருடைய நிலைப்பாடு தீர்க்கமாக எதிரொலித்தது. பிரிட்டிஷ் அரசு ‘சுதேச மித்திரன்’, ‘இந்தியா’ இரு பத்திரிகைகளின் ஆசிரியர்கள் ஜி.சுப்பிரமணிய ஐயர், மாண்டயம் சீனிவாசன் இருவரையும் கைதுசெய்தபோது, கஸ்தூரி ரங்கன் தலையங்கங்களில் அரசைக் கடுமையாகச் சாடினார். இதற்காக அவர் கைதுசெய்யப்படலாம் என்ற பேச்சு அடிபட ஆரம்பித்தபோது பலரும் அவரை எச்சரித்தார்கள். “உயிரே போகும் என்றாலும் நான் முன்வைத்த காலைப் பின்வைக்கப்போவதில்லை” என்று சொல்லிவிட்டார் கஸ்தூரி ரங்கன். சுயராஜ்யத்துக்கான வலுவான குரலாகத் தன் பத்திரிகையை மாற்றினார். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் மெத்தனம், அலட்சியம், ஊழல்களைத் தோலுரித்தார். ஒருபுறம் ஆங்கிலேயர்களுக்கு இது கடும் எரிச்சலை ஏற்படுத்தினாலும் மறுபுறம் ஆங்கிலேய சமூகத்திடம் அவர்கள் தரப்பு தவறுகளையும் உணர்த்துவதாக இருந்தது ‘தி இந்து’வின் செயல்பாடு!

மக்களுக்கான பத்திரிகையின் கடமை என்ன?

ஆங்கிலேயர்களுக்கு எதிரான போர் முழக்கமாகச் செயல்பட்டாலும் ‘தி இந்து’ அரசாங்கத்தை விமர்சிப்பதில் சார்புத் தன்மையற்றதாக நேர்மையாகச் செயல்பட்டது. ஒருபுறம் சட்டம் - ஒழுங்கைச் சீர்திருத்தியதற்காகவும் சட்டப்படியான ஆட்சி நடப்பதற்காகவுமான மதிப்பை ஆங்கிலேயர்களுக்கு ‘தி இந்து’ அளித்தது. எப்போதெல்லாம் சட்டம் ஒழுங்காகச் செயல்படுகிறதோ, அப்போதெல்லாம் அதற்கான மரியாதையை அளித்தது. மறுபுறம், பிரிட்டிஷாரிடம் இந்தியர்களின் சுயராஜ்ய கோரிக்கையின் நியாயத்தை அது தொடர்ந்து வலியுறுத்தியது. நாடு காலனியாக சுரண்டப்படுவதை எதிர்த்தது. பிரிட்டிஷ் மக்களுக்கு இருக்கும் சுதந்திரமும் உரிமைகளும் இந்தியர்களுக்கும் வேண்டும் என்றது. இதற்காக தனி நபர் சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம் போன்றவற்றை ஆதரித்தது. நாட்டின் விடுதலைக்குப் பிறகு, நாட்டை ஆளும் தகுதி இந்தியர்களுக்கு முழுமையாக ஏற்பட வேண்டும் என்று கஸ்தூரி ரங்கன் நினைத்ததால், அதற்கான முன் தயாரிப்பில் இந்தியர்கள் ஈடுபட வேண்டியதன் அவசியத்தையும் அவர் தொடர்ந்து எழுதிவந்தார். பத்திரிகைப் பணிக்குச் சமமாக தேச விடுதலைப் பணியிலும் ஈடுபாடு காட்டினார். காங்கிரஸின் அல்லது காங்கிரஸ் தலைவர்களின் எல்லாச் செயல்பாடுகளையும் கண்மூடித்தனமாக ஆதரித்தவர் அல்ல அவர்; ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வைத்தார். அதேசமயம், யாரைக் கடுமையாக விமர்சிப்பாரோ அவரிடம் தனிப்பட்ட முறையில் நல்ல நண்பராகவும் பழகிவந்தார். கஸ்தூரி ரங்கனின் இந்த இயல்பு இந்தியப் பத்திரிகை உலகில் தனித்துவம் மிக்க ஒரு தேசிய நாளிதழாக ‘தி இந்து’வை வளர்த்தெடுத்தது. அதன் நடுநிலைமையாலேயே அது மக்களின் பத்திரிகை என்று பெயர் பெற்றது!

அர்பத்நாட் வங்கி வீழ்ச்சியும் இந்தியன் வங்கியின் பிறப்பும்

தீபாவளிப் பண்டிகைக்கு (1906 அக்டோபர்) சில நாட்களுக்கு முன்னதாக ‘அர்பத்நாட் அண்ட் கோ’ என்ற ஆங்கிலேய தனியார் வங்கி நிறுவனம் திவாலானது. அதில் பணம் போட்டிருந்த ஆயிரக்கணக்கான தென்னிந்தியக் குடும்பங்கள் பேரதிர்ச்சி அடைந்தன. அப்பாவிகளான மக்கள் போட்டிருந்த டெபாசிட்டுகளை அந்த நிர்வாகம் வேண்டும் என்றே கையாடல் செய்துவிட்டு, வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக நாடகமாடியது. இதை ஆதாரங்களுடன் தொடர் கட்டுரைகள் எழுதி அம்பலப்படுத்தினார் கஸ்தூரி ரங்கன். இதன் விளைவாக சர் ஜார்ஜ் அர்பத்நாட்டுக்கு 18 மாதங்கள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அந்தக் காலத்தில் ‘தி இந்து’ வெளிக்கொணர்ந்த முக்கியமான முறைகேடுகளில் ஒன்று இது. கஸ்தூரி ரங்கன் இதோடு தனது வேலை முடிந்தது என்று நினைக்கவில்லை. ‘இந்தியர்கள் உழைத்து ஈட்டிய பணத்தை ஏன் ஆங்கிலேயர் வங்கிகளில் போட்டு ஏமாற வேண்டும், நம் மக்களே ஒரு வங்கியை நடத்தினால் என்ன?’ என்ற எண்ணத்தை விதைத்தார். ‘இந்தியன் வங்கி’ பிறக்க வழிவகை செய்தார். தலா ரூ.100 முகமதிப்புள்ள 20,000 பங்குகள் மூலம் ரூ.20 லட்சம் திரட்ட முடிவெடுக்கப்பட்டது. 1907 மார்ச் 5-ல் இந்தியன் வங்கி பதிவுசெய்யப்பட்டது. சுதேசி இயக்கத்தில் வ.உ.சிதம்பரம் பிள்ளை இந்தியக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியதற்கு முன்னோடி இந்தியன் வங்கி என்பது குறிப்பிடத்தக்கது.

விடைபெற்றார் கஸ்தூரி ரங்கன்

இடைவிடாத பத்திரிகைப் பணி, தேச விடுதலைப் போராட்டப் பணி, பல்வேறு சமூகப் பணி என ஓடிக்கொண்டிருந்த கஸ்தூரி ரங்கன் நோயில் விழுந்தார். கிட்டத்தட்ட ஓராண்டு காலம் படுக்கையில் கிடந்தார். அப்படியும் அவருடைய நண்பர்கள் தொடர்ந்து அவரை வீட்டிலேயே சந்தித்து சமூக, அரசியல், இலக்கிய, கலைப் பணிகள் தொடர்பாக ஆலோசனை பெற்றுச் சென்றனர். அன்றாடம் செய்தித்தாள் படித்து, ஆசிரியர் குழாமுக்கு வழிகாட்டுக் குறிப்புகளை வீட்டிலிருந்தே எழுதி அனுப்பினார். 1923 டிசம்பர் 12-ல் காலை 5.45 மணிக்கு குடும்பத்தவருடன் பேசிக்கொண்டிருந்தபோதே அவர் உயிர் பிரிந்தது. இந்தியப் பத்திரிகையுலகம் ஒரு ஆலோசகரை, தலைசிறந்த முன்னோடியை இழந்தது, இந்திய விடுதலை இயக்கம் ஒரு செயல்வீரரை இழந்தது, இந்து பத்திரிகை நல்ல நிர்வாகியை, தந்தையை இழந்தது!

தந்தைக்கேற்ற மகன்

கஸ்தூரி ரங்க ஐயங்காரின் மூத்த மகனாக 7.8.1887-ல் பிறந்தார் கஸ்தூரி சீனிவாசன். 7 வயது வரையில் கோவையில் வாசம். சீனிவாசனுக்கு இரண்டு அக்காக்கள், ஒரு தங்கை, ஒரு தம்பி. சென்னைக்கு வந்ததும் மயிலாப்பூரில் குடியேறினர். திருவல்லிக்கேணி இந்து உயர் நிலைப் பள்ளியில் படித்தார். அப்போது அந்தப் பள்ளிக்கூடத்தின் முதல்வராக இருந்தவர் ‘ரைட் ஆனரபிள்’ சீனிவாச சாஸ்திரி. மாநிலக் கல்லூரியில் 1903-ல் சேர்ந்தார். கிரிக்கெட், ஹாக்கி, கால்பந்து மூன்றிலும் ஈடுபாடுகொண்டவர் சீனிவாசன். 1908-ல் சீனிவாசன் பி.ஏ. பட்டம் பெற்றார். இடையிலேயே திருமணம் நடைபெற்றது. மனைவி கோமளம்மாள் கஸ்தூரி ரங்கன் ‘தி இந்து’வை வாங்கி நடத்த ஆரம்பித்த காலகட்டத்தில்தான் சீனிவாசன் கல்லூரிப் படிப்பை முடித்தார். தன்னுடன் இணைந்து பணியாற்ற சரியான ஆட்களைத் தேடிக்கொண்டிருந்த கஸ்தூரி ரங்கன், மகனையும் இணைத்துக்கொண்டார். இன்றைய ‘தி இந்து’ ஆகிவந்த வரலாற்றில் கஸ்தூரி ரங்கனோடு ஒரு வகையில் தோளோடு தோள் நின்ற ஆளுமை கஸ்தூரி சீனிவாசன்!

எதிலும் முன்னிலையில் இரு!

ஒரு நிர்வாகியாக ‘தி இந்து’ சர்வதேச அளவில் போட்டியிடும், முன்னணியில் இருக்கும் பத்திரிகையாக எப்போதும் இருக்க வேண்டும் என்று நினைத்தவர் சீனிவாசன். 1921-ல் ரோட்டரி புதிய அச்சு இயந்திரத்தை சீனிவாசன் நிறுவினார். ஒரு மணி நேரத்துக்கு 30,000 பிரதிகளை அச்சடிக்கும் இயந்திரம் இது. கையால் அச்சு கோப்பதற்குப் பதிலாக ‘மானோ’, ‘லைனோ’என்ற இயந்திரங்களால் கோக்கும் முறை வந்தபோது, அதில் வரிவரியாக அச்சுகோக்கும் ‘லைனோ’ இயந்திரங்களைப் புதிதாக வாங்கிப் பயன்படுத்தினார். முதன்முதலில் டெலிபிரின்டர்களைப் பயன்படுத்திய தென்னிந்தியப் பத்திரிகை ‘தி இந்து’. வைர விழாவுக்கு முன்னதாக இன்றைய அண்ணா சாலையில் பத்திரிகைக்கு மிகவும் விசாலமான இடத்தை வாங்கினார். ‘கஸ்தூரி பில்டிங்ஸ்’ கட்டப்பட்டது. புதிய கட்டிடத்தில் ‘டியூப்ளே யூனி டியூபுலர் ரோட்டரி’ இயந்திரம் நிறுவப்பட்டது. மணிக்கு 16 பக்கங்கள் கொண்ட ஒரு பத்திரிகையை 60,000 பிரதிகள் அச்சிட்டுத் தரவல்ல இயந்திரம் இது. அமெரிக்காவுக்கு வெளியே ‘ஆர்.ஓ.பி.’ கலர் அச்சு இயந்திரம் வைத்திருந்த ஒரே நிறுவனம் அன்றைக்கு ‘தி இந்து’ மட்டுமே. படங்கள் வண்ணத்திலும் செய்தி கருப்பு மையிலும் ஒரே பக்கத்தில் அச்சிட முடிவதே ஆர்.ஓ.பி. கலர் பிரின்டிங்கின் சிறப்பம்சம். இரண்டாம் உலகப் போரின்போது போர்க்களச் செய்திகளை ஆசிரியர் குழுவினர் வானொலியில் கேட்பதைக் கட்டாயமாக்கிய சீனிவாசன், இதற்காக அலுவலக மாடியில் சக்தி வாய்ந்த ரிசீவரை நிறுவினார். சிறப்பு ஸ்டெனோகிராபர்களை நியமித்து, இரவு பகலாக செய்திகளைக் கேட்டு எழுதித் தர ஏற்பாடு செய்தார். உலகப் போர்ச் செய்திகளைத் தருவதில் ஏனைய பத்திரிகைகளிடமிருந்து முந்தி நின்றது ‘தி இந்து’. இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்து, ஜப்பானியர்கள் சரண் அடைந்த செய்தியை முதல் நாளே வெளியிட்ட ஒரே இந்தியப் பத்திரிகை ‘தி இந்து’தான். அன்றைய தினம் சீனிவாசன் மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றிருந்தார். ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆசிரியர் சர் பிரான்சிஸ் லோவைச் சந்தித்தபோது, சீனிவாசன் தன் வசமிருந்த ‘தி இந்து’ பிரதியை அவரிடம் கொடுத்துச் சொன்னார், “நீங்கள் எந்தச் செய்தியைத் தவறவிட்டிருக்கிறீர்கள் என்று பாருங்கள்!”

உலகப் போர் தந்த பயிற்சி

சீனிவாசன் ‘தி இந்து’வில் முதலில் நிர்வாகப் பணியில்தான் பயிற்சி பெற்றார். 1914-ல் முதல் உலகப் போர் தொடங்கியபோது, இந்தியப் பத்திரிகைகளும் நெருப்புப் பாதையை எதிர்கொண்டன. அச்சுக் காகிதம், அச்சிடும் மை உள்ளிட்ட பொருட்களின் தட்டுப்பாடு, விலை உயர்வு, பத்திரிகைத் தணிக்கை, ஆங்கிலேய அதிகாரிகள்

‘தி இந்து’வுக்குக் கொடுத்த குடைச்சல்கள் என்று பல சவால்களை எதிர்கொண்டது பத்திரிகை. இதனிடையே பத்திரிகையில் துணை ஆசிரியர், மேலாளர் என்ற இரு பதவிகளை வகித்த ஏ.ரங்கசாமி விலகினார். ‘சுதேசமித்திரன்’ஆசிரியராக அவர் பொறுப்பேற்றார். இப்படியான சூழலிலும், போர்க் காலச் செய்திகளைத் திரட்டித் தருவதில் ஏனைய பத்திரிகைகள் மத்தியில் தனித்து நின்றது ‘தி இந்து’. போர்க் களத்தில் என்னென்ன நடக்கும், மக்களுடைய வாழ்க்கை எப்படியெல்லாம் பாதிக்கப்படும், தளவாடங்கள் எப்படிக் கொண்டுசெல்லப்படும், நாடுகளின் எல்லைகள் எப்படி ஊடுருவப்படும், ஆயுதங்கள் எப்படிப் பிரயோகிக்கப்படும் என்றெல்லாம் விரிவாக எழுதியது. பசி, பட்டினியாலும் ஆயுதங்களின் அழிவுத் தாக்குதல்களாலும் மக்கள் மடிவதை நேரடியாக வாசகர்கள் பார்வைக்குக் கொண்டுவந்தது. இத்தகைய சூழலில்தான், போரின் இறுதிக் கட்டத்தில் பிரிட்டிஷ் அரசு, 1918-ல் இந்தியாவிலிருந்து ஐந்து பத்திரிகை ஆசிரியர்களைப் போர்க்களத்துக்கு அழைத்துச் சென்றது. அவர்களில் கஸ்தூரி ரங்கனும் ஒருவர். போர் நிலவரத்தைக் காண்பதைவிட, பிரிட்டனில் இருப்பவர்களிடம், இந்தியாவில் நிர்வாகத்தின் மோசமான நிலை குறித்தும் இந்தியர்களுடைய எதிர்பார்ப்பு குறித்தும் நேரில் தெரிவிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அவர் புறப்பட்ட காலகட்டம், பத்திரிகையின் நிர்வாகப் பொறுப்பு, ஆசிரியர் பொறுப்பு இரண்டும் 31 வயது சீனிவாசனின் தோள்களில் ஏற்றப்பட்டது. இது ஒரு பத்திரிகையின் முழு இயக்கத்தையும் எப்படிக் கையாள்வது என்ற பயிற்சியை சீனிவாசனுக்கு வழங்கியது. அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒத்துழையாமை இயக்கத்தையும் சட்ட மறுப்பு இயக்கத்தையும் முன்னெடுத்தார் காந்தி. நாடு முழுக்க ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டனர். 1922 மார்ச்சில் காந்தி கைதுசெய்யப்பட்டார். ஒத்துழையாமை இயக்கத்தின் செயல்பாட்டை ஆராய காங்கிரஸ் ஒரு குழுவை நியமித்தது. கிட்டத்தட்ட ஓராண்டு அதற்காகப் பயணம் மேற்கொண்ட குழு உறுப்பினரான கஸ்தூரி ரங்கன், அலைச்சல் காரணமாக நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழ்ந்தார். 1923 டிசம்பர் 12 அன்று அவர் மறைந்தபோது, பத்திரிகையின் பொறுப்புகள் முழுவதுமாக சீனிவாசன் வசம் வந்தன.

ஒரு பத்திரிகை ஆசிரியராக நிர்வாகி சீனிவாசன் செய்ததென்ன?

வெவ்வேறு காலகட்டங்களில் இடைக்கால ஆசிரியராக பலமாதங்கள் பணியாற்றியிருக்கிறார் சீனிவாசன். பல தருணங்களில் ஆசிரியர் பொறுப்பில் இருந்தவர்களோடு அவரும் சேர்ந்து ஆசிரியர் இலாகாவுக்குப் பங்களித்தும் இருக்கிறார். அவர் ஆசிரியராக இருந்த காலகட்டங்களில் தினமும் ஆசிரியர் குழாம் கூட்டம் நடத்துவதை ஒரு வழக்கமாக வைத்திருந்தார். பத்திரிகைகளில் இடம்பெற வேண்டிய தலையங்கங்கள், கட்டுரைகள் குறித்து விவாதம் நடக்கும். அனைவரும் தாராளமாகக் கருத்து கூற சீனிவாசன் அனுமதிப்பார். மற்றவர்களுடைய கருத்துகளுக்கும் விமர்சனங்களுக்கும் மதிப்பளிப்பார். பத்திரிகை ஒரு கூட்டுமுயற்சி என்பது அவர் நம்பிக்கை!

தமிழகத்திலிருந்து ஒரு சர்வதேசக் குரல்

ஒரு பத்திரிகையின் நிர்வாகி, உரிமையாளர் என்பதைத் தாண்டி ஒட்டுமொத்த பத்திரிகையுலகுக்கும் சேர்த்து சிந்திப்பவராக இருந்தார் சீனிவாசன். முக்கியமாக அக்காலகட்டத்தில் இந்தியப் பத்திரிகைகளின் உரிமைக் குரலாக அவர் ஒலித்துவந்தார். ‘அனைத்திந்திய செய்திப் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் மாநாடு’ என்ற தேசிய அமைப்பின் தலைவராகச் செயல்பட்டார். பிரிட்டிஷ் பத்திரிகைகளுக்கு இணையாக இந்தியப் பத்திரிகைகள் மதிக்கப்படவும் தணிக்கையிலிருந்து தப்பவும் குரல் கொடுத்தார். ‘ராய்ட்டர்ஸ்’ செய்தி நிறுவனத்துடன் பேசி ‘அசோசியேடட் பிரஸ் ஆஃப் இந்தியா’ என்ற அவர்களுடைய சார்பு நிறுவனத்தை இந்தியாவின் ‘பிரஸ்ட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா’ (பி.டி.ஐ.) செய்தி நிறுவனத்துக்கு மாற்றச் செய்தார்; ‘பிடிஐ’ மற்றும் ‘ராய்ட்டர்ஸ்’ நிறுவனம் இணைந்து செய்திகளை அளிக்க ஏற்பாடுகளைச் செய்தார். பத்திரிகையாளர்கள் நலனையும் பத்திரிகையின் வளர்ச்சியையும் இரு கண்களாகக் கருதியவர் சீனிவாசன். ஊழியர்கள் தன்னை எப்போது வேண்டுமானாலும் சந்தித்து கோரிக்கைகளை முன்வைக்கலாம் என்ற அளவுக்கு நட்புடன் பழகியவர் அவர். ‘தி இந்து’ ஊழியர்களின் நலனுக்காக இரண்டாவது உலகப் போரின்போது அலுவலக வளாகத்திலேயே நியாய விலைக் கடையைத் திறந்தார். கேன்டீன் வசதியை ஏற்படுத்தினார். மற்றவர்களுக்கு முன்னுதாரணராக தானே நடந்து கொண்டார்!

மியூஸிக் அகாடமி முதல் சத்தியமூர்த்தி பவன் வரை

கர்னாடக இசையில் நல்ல பயிற்சியும் தேர்ந்த ரசனையும் உள்ள சீனிவாசன் தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரர் ஏ.ரங்கசாமி உதவியுடன் சென்னை மியூஸிக் அகாதெமியை உருவாக்கினார். கச்சேரிகளுடன் கர்னாடக இசை சம்பந்தமான ஆய்வுக்கும் அங்கே இடம் கிடைத்தது. நாடகப் புரவலராகவும் இருந்தார். அவருடைய ஆரம்பக் காலக் கனவு ஒரு மருத்துவராக ஏழை எளிய மக்களுக்குச் சேவையாற்றுவது. காலச் சூழலால் அது கைகூடவில்லை. எனினும், தன் நோக்கம் ஏதேனும் ஒரு வகையில் ஈடேற வேண்டும் என்ற நோக்கில் 1958-ல் சென்னையில் அவர் முன்னின்று உருவாக்கிய அமைப்பு வி.ஹெச்.எஸ். என்று அழைக்கப்படும் தன்னார்வ மருத்துவத் தொண்டு நிறுவனம். ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு இன்றைக்கும் உதவிவரும் மருத்துவமனை இது. ஒய்எம்சிஏ, ஒய்எம்ஐஏ, கிரசென்ட் சொசைட்டி, ஒடுக்கப்பட்ட சமூகங்களின் குழந்தைகள் நலச் சங்கம் ஆகியவற்றின் வளர்ச்சியும் நிர்வாகத்திலும் அவர் அக்கறை காட்டினார். தேச விடுதலைக்காகப் பாடுபட்ட காங்கிரஸ் இயக்கத்தோடும் காந்தி, நேரு போன்ற மாபெரும் ஆளுமைகளுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தார் சீனிவாசன். தேனாம்பேட்டையிலுள்ள இடத்தையும் ஜிபி சாலையில் சத்தியமூர்த்தி பவன் அமைந்திருக்கும் இடத்தையும் காங்கிரஸ் கட்சி வாங்க முன்னின்றவர் அவர். இன்னும் எவ்வளவோ சமூக அமைப்புகளின் வளர்ச்சியில் தோளோடு தோள் நின்றவர்!

போட்டியாளர்களுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே!

1940-ல் ஜார்ஜ் டவுனில் இருந்த ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை அலுவலகம் தீ விபத்துக்குள்ளானது. இதை அறிந்த உடனேயே தனது அலுவலக மேலாளரை அனுப்பினார் சீனிவாசன். நிலைமை சீரடையும் வரை ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையை தங்களுடைய அச்சகத்தில் அச்சடித்துக்கொள்ளுமாறு கூறினார். அப்படியே அச்சானது. அதேபோல 1943 அக்டோபர் 11-ல் வடகிழக்குப் பருவக்காற்றால் சென்னை மாநகரில் கன மழை பெய்து பெருவெள்ளம் ஏற்பட்டபோது, நகரில் மின்சாரம் தடைப்பட்டது. ‘தி இந்து’ அலுவலகத்தில் மின்சாரம் இருந்தது. உடனே பிற பத்திரிகை அலுவலகங்களைத் தொடர்புகொண்டு தம்முடைய அச்சகத்தில் பத்திரிகைகளை அச்சடித்துக்கொள்ளுமாறு அழைத்தார் சீனிவாசன். அவரைப் பொறுத்த அளவில் போட்டியாளர்கள் ஒரு வகையில் சகாக்கள்; அவர்கள் ஒருபோதும் எதிரிகள் இல்லை!

சுடர் விடும் ஒளி

1959 ஜூன் 22-ம் தேதி தன்னுடைய 72-வது வயதில் இயற்கை எய்தினார் சீனிவாசன். குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், பிரதமர் நேரு உள்ளிட்ட தலைவர்களும் பிரமுகர்களும் அவருடைய மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர். முன்னதாக அவருடைய அரும்பணிகளைப் பாராட்டி 1956-ல் அவருக்கு ‘பத்மபூஷண்’ விருதை இந்திய அரசு வழங்கியது. காலத்தைத் தாண்டி கஸ்தூரி ரங்கன், சீனிவாசன் இருவரின் தொலைநோக்குப் பார்வையும் பணிகளும் அடுத்தடுத்த தலைமுறையினருக்கு வழிகாட்டுகின்றன!

தொகுப்பு: வ.ரங்காசாரி

“பத்திரிகை வேலைகளைப் பற்றி அதிகம் வருத்திக்கொள்ளாதே. தேவைப்படும்போது நம்முடைய உறவினர்கள், நண்பர்களிடம் ஆலோசனை கேட்டுக்கொள்; அவற்றில் நேர் வழியிலானதும், நேர்மையானதுமான முடிவையே தேர்ந்தெடு; உனக்கு ஒரு தீங்கும் வராது!”

- மகன் கஸ்தூரி சீனிவாசனுக்கு எழுதிய கடிதத்தில் கஸ்தூரி ரங்கன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x