Last Updated : 12 May, 2017 08:54 AM

 

Published : 12 May 2017 08:54 AM
Last Updated : 12 May 2017 08:54 AM

இம்மானுவேல் மெக்ரோன்: தாராளர்களின் புதிய முகம்!

மெக்ரோனின் வெற்றிகளும், தோல்விகளும் பிரெஞ்சு தாராளவாதிகளின் மொத்தத் தலைமுறையையும் நிர்ணயம் செய்யும்

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இரண்டாம் கட்டத்தில் இம்மானுவேல் மெக்ரோனின் வெற்றி கிட்டத்தட்ட பட்டாபிஷேகக் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியிருப்பது உத்வேகம் தரும் விஷயம். ஆம், அவர் 60% வாக்குகள் பெற்றிருக்கிறார். அதேசமயம், பிரான்ஸின் சமீபத்திய வரலாற்றில் இல்லாத அளவுக்குக் குறைந்த வாக்கு சதவீதமும், செல்லாத வாக்குகளும் பதிவான தேர்தலில்தான் அவர் வென்றிருக்கிறார். மெக்ரோனுக்கு வாக்களித்தவர்களும் கூட, தீவிர வலதுசாரி வேட்பாளரான மரீன் லெ பென் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதற்காகவே அவருக்கு வாக்களித்திருக்கிறார்கள்.

மிக முக்கியமாக, வழக்கத்துக்கு மாறான இந்தத் தேர்தல் இரண்டு முக்கிய விளைவுகளைக் கொண்டிருந்ததாக விமர்சகர்கள் சொல்கிறார்கள். முதலாவதாக, மெக்ரோனின் கருத்துகள் ஒருபோதும் ஆழமாக விவாதிக்கப்பட்டதில்லை. இரண்டாவதாக, புதிய அதிபருக்கென்று தனிப்பட்ட வாக்காளர்கள் இல்லை. மாறாக, அவரது ஆதரவாளர்கள் பொருத்தமில்லாத குழுக்களும் தனிநபர்களும் இணைந்த அசெளகரியமான ஒரு கூட்டணி என்றே பலரும் கருதுகிறார்கள். அவர்களுக்கென்று ஒரு பொதுக் கருத்து இல்லை. அவர்கள் நிச்சயம் ஒருவருக்கொருவர் ஒத்துப்போகக்கூடியவர்களும் அல்ல. வரும் ஜூனில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும்போது அவர்கள் கலைந்துவிடுவார்கள். மெக்ரோனே அறிவித்துக்கொண்ட அவரது இயக்கம் வீழ்ந்துவிடும். நாடாளுமன்றத்தில் அவருக்குப் பெரும்பான்மை இடங்கள் கிடைக்காமல் போகவே வாய்ப்பிருக்கிறது என்றும் பேசுகிறார்கள்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் அத்தனையும் உண்மையா? உண்மை நிலவரம் சொல்வது வேறு. முதலாவதாக, மெக்ரோன் இந்தத் தேர்தலில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்றிருக்கிறார். கருத்துக் கணிப்புகளில் எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகமான வாக்குகளையே பெற்றிருக்கிறார். இதுபோன்ற சூழலில், அவர் 60%-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றால்தான் முறையான வெற்றியாக இருக்கும் என்று விமர்சகர்கள் கருதினார்கள். அதைவிட அதிகமான வாக்குகளையே எளிதாகப் பெற்றுவிட்டார். மேலும், வயது, பாலினம், சமூக - தொழில்சார் வகை என்று பலதரப்பட்ட வாக்காளர்களின் ஆதரவை மெக்ரோன் பெற்றிருக்கிறார், தொழில்துறை தொழிலாளர்கள் தவிர!

சுருக்கமாகச் சொன்னால், மெக்ரோனின் அரசியல் வியூகம் கைகொடுத்திருக்கிறது. ஸ்திரத்தன்மை, ஐரோப்பிய ஆதரவுநிலை, தொழில்நுட்ப அடிப்படையிலான அரசு நிர்வாகம் போன்ற வாக்குறுதிகள் மூலம் பெருமளவிலான வாக்காளர்களை ஈர்த்திருக்கிறார். ஃப்ராங்கோய்ஸ் ஹொல்லாந்தேயின் ஆட்சியின் தோல்விகளைத் தொடர்ந்து மத்திய இடதுசாரி அரசியல் என்பது ஆபத்தானது எனும் கருத்து பிரெஞ்சு மக்களிடம் ஏற்பட்டிருக்கும் நிலையில் அவர்களின் ஆதரவை மெக்ரோன் பெற்றிருக்கிறார்.

இத்தனைக்குப் பிறகும், அவரது வெற்றி ஏதோ தற்செயலானது என்று சொல்வது நியாயமற்றது. குறுகிய கால இடைவெளியில் ஐரோப்பாவின் மிக சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றுக்கு அவர் அதிபராகவே ஆகிவிட்டார். நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் 100-க்கும் அதிகமான இடங்களை வெல்லக்கூடிய அளவுக்கு ஒரு அரசியல் இயக்கத்தையும் அவர் உருவாக்கியிருக்கிறார் என்றும் சொல்லலாம். அவரது அரசியலை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அவரது வெற்றியைச் சந்தேகிக்க முடியாது.

அவரது தேர்தல் பிரச்சாரக் குழுவிடம் அரசியல் அனுபவமில்லை என்பது உண்மை. பெரும்பாலானோர் 40 வயதுக்கு உட்பட்டவர்கள். ஆனால், அதை வைத்து அவர்களிடம் கருத்துகள் இல்லை என்றும் ஒருமித்த பார்வை இல்லாதவர்கள் என்றும் சொல்லிவிட முடியாது. உண்மையில், மெக்ரோனின் வெற்றி பிரெஞ்சு அரசியலில் ஆழமான மாற்றங்களை ஏற்படுத்தும் அளவுக்குக் காத்திரமானது.

பிரெஞ்சு தாராளவாதம்

பல ஆண்டுகளுக்கு முன்னர், சமகால பிரெஞ்சு அரசியல் கலாச்சாரத்தில் பிரெஞ்சு தாராளவாதம் மிக முக்கியமான அம்சம் என்று வாதிட்டிருக்கிறேன். 2007-ல் நிகோலஸ் சர்கோஸி, 2012-ல் ஹொல்லாந்தே ஆகியோர் அதிபர் தேர்தல்களில் பெற்ற வெற்றிகள் பிரெஞ்சு தாராளவாதப் பாரம்பரியத்தின் குறிப்பிட்ட சில அம்சங்களை உணர்த்துவதாகக் குறிப்பிட்டிருக்கிறேன். தொடர்ந்து, மக்கள் தாராளவாதத்தைப் பின்பற்றுவார்கள் என்றும் பேசிவந்தேன். அந்தச் சமயத்தில் ஒருதலைப்பட்சமான கருத்தாக அது பார்க்கப்பட்டது. இன்றைக்கு அப்படி அல்ல.

பிரெஞ்சு தாராளவாதப் பாரம்பரியம் குறித்து பிரான்ஸ் வரலாற்றாசிரியர்கள் சொல்வதற்கு நிறைய இருந்தது. பெஞ்சமின் கான்ஸ்டன்ட், அலெக்ஸிஸ் டி டாக்யுவில்லெ, ரேமண்ட் ஆரோன், வலேரி கிஸ்கார்டு டி’ஈஸ்டாய்ங் போன்ற சிறந்த அரசியல் தலைவர்கள், அறிவுஜீவிகள் அடங்கிய பாரம்பரியம் அது. அதேசமயம், தாராளவாதம் 19-ம் நூற்றாண்டு முதல் ஐரோப்பாவின் பிற பகுதிகளில் வெற்றிகரமாக இருந்ததைப் போல் பிரான்ஸில் இருந்ததில்லை என்றும் அவர்கள் ஒப்புக்கொண்டனர். முன்பெல்லாம் பிரான்ஸில் தாராளவாதக் கட்சி என்று ஒன்று இருந்ததில்லை. தங்களைத் தாராளர்கள் என்று வெளிப்படையாகக் கூறிக்கொண்ட பிரெஞ்சுத் தலைவர்களும் மிகச் சிலரே.

ஆனால், 1970-களிலிருந்து இது மாறிவருகிறது. கடந்த 40 ஆண்டுகளில் பிரான்ஸ் மக்களில் பலர் பிரெஞ்சு பாணி தாராளவாதத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். தேசத்தின் சீர்திருத்தம், பிரெஞ்சு அல்லாத வெளி-கருத்தாக்கங்களைப் பெரிய அளவில் ஏற்றுக்கொள்வது, பிரெஞ்சு சமூகத்தின் பன்முகத்தன்மையை அங்கீகரிப்பது, சந்தை அடிப்படையிலான பொருளாதாரச் சீர்திருத்தம் ஆகியவற்றை வலியுறுத்தும் தாராளவாதம் அது. இந்தத் தாராளவாதக் கருத்தாக்கங்களின் சில அம்சங்களை சர்கோஸியும் ஹொல்லாந்தேயும் எடுத்துக்கொண்டார்கள். மெக்ரோனிடமோ இந்தக் கருத்தாக்கங்கள் அனைத்தும் இருக்கின்றன.

தகர்ந்த கணிப்பு

1977-ல் பிறந்தவரான மெக்ரோனை, சமகால பிரெஞ்சு தாராளவாதத்தின் நேர்த்தியான வடிவம் என்று சொல்லலாம். அவரது ஆதரவாளர்களும் அப்படித்தான்: இளைஞர்கள், நடுத்தர வயதினர், பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்டவர்கள், நகர்ப்புறவாசிகள், ஐரோப்பியர்கள். அவரது வாக்காளர்கள் சந்தர்ப்பக் கூட்டணியினர் என்று கருதுபவர்கள், 1990-களில் இருந்ததைவிட சக்திவாய்ந்த, தாராளவாத வாக்காளர்கள் பிரான்ஸில் உருவாகியிருப்பதைக் கவனிக்கத் தவறுபவர்கள் என்றே சொல்ல வேண்டும்.லெ பென்னின் ஆதரவாளர்கள் போலல்லாது, மெக்ரோனின் ஆதரவாளர்கள் உலக விஷயங்கள் குறித்து அக்கறை செலுத்துபவர்கள். பிரான்ஸுக்கு வெளியே நடக்கும் விஷயங்களை ஆர்வத்துடன் கவனித்துவருபவர்கள்.

சவால்கள் இல்லாமல் இல்லை. 19-ம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் பிரெஞ்சு தாராளர்கள் பெரும்பாலும் உயர்குடியினர். பொதுமக்கள் குறித்து எப்போதும் அவர்களுக்குப் பலத்த சந்தேகம் இருந்தது. 1830-களில் நிகழ்ந்த பிரெஞ்சுப் புரட்சியால் ஏற்பட்ட பயத்தின் காரணமாகவோ, அல்லது 1950-களின் கம்யூனிஸ அரசியலின் மீதான அச்சத்தின் காரணமாகவோ, நிர்வாக, பொருளாதாரச் சீர்திருத்தத்தில் தங்கள் லட்சியத் திட்டங்களை நிறைவுசெய்வதற்குப் பதிலாக, பழமைவாதிகளுடன் அவர்கள் சமரசம் செய்துகொண்டார்கள்.

இதே நிலை மெக்ரோனுக்கும் நேரலாம். தீவிர வலதுசாரிகளின் தொடர்ந்த அச்சுறுத்தல்கள் வரலாம், இடதுசாரி சமூக இயக்கங்களிடமிருந்து அவரது பொருளாதாரத் திட்டங்களுக்கு எதிர்ப்புகள் வரலாம். இவற்றின் காரணமாக, சிறந்த அறிவு, அற்புதமான கருத்தாக்கங்கள், ஆனால் கும்பல்களிடம் அச்சம் கொண்ட முந்தைய தாராளவாதத் தலைவர்களின் கதியே இவருக்கும் ஏற்படலாம். அல்லது அந்தப் போக்கையே மாற்றியமைத்து, பிரான்ஸின் ஒபாமாவாக அவர் ஆகலாம். எப்படிப் பார்த்தாலும் அவரது தோல்விகளும், வெற்றிகளும் பிரெஞ்சு தாராளவாதிகளின் மொத்தத் தலைமுறையையும் நிர்ணயம் செய்யும் என்பது மட்டும் நிச்சயம்.

- எமிலி சபால், ‘எ டிவைடட் ரிபப்ளிக்: நேஷன், ஸ்டேட் அண்ட் சிட்டிசன்ஷிப் இன் காண்டெம்பரரி பிரான்ஸ்’ எனும் நூலின் ஆசிரியர்.

‘தி இந்து’ (ஆங்கிலம்) தமிழில்: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x