Last Updated : 11 Dec, 2014 10:07 AM

 

Published : 11 Dec 2014 10:07 AM
Last Updated : 11 Dec 2014 10:07 AM

இன்னொரு இந்தியா 4- பஸ்தர் பழங்குடிகளும் வாழ்க்கை முறையும்

கிழக்குத் தொடர்ச்சி மலையில் ஊற்றெடுக்கும் இந்திராவதி ஆற்றை பஸ்தரின் உயிர்நாடி என்று சொல்வார்கள். காளஹந்தியில் பிறந்து, கோதாவரியில் கலக்கும் நதி இந்திராவதி. பஸ்தர் காடு முழுவதும் விரவி அதன் உயிரோட்டத்துக்குக் குருதியாக இருப்பதோடு, பஸ்தரைத் தாண்டியும் தண்டகாரண்யம் காடு முழுவதும் அவளும் ஒரு காவல் தேவதையாக இருக்கிறாள் என்பது நம்பிக்கை.

இப்படி அங்குள்ள ஒவ்வொரு மலைக்கும் நதிக்கும் மரத்துக்கும் பின்னணியில் ஏராளமான நம்பிக்கைகள் உண்டு. இந்த நம்பிக்கைகளும் இயற்கையோடு இங்குள்ள மக்கள் கொண்டிருக்கும் பிணைப்பும்தான், மாநில எல்லைகளையெல்லாம் தாண்டி தண்டகாரண்ய காட்டில் வாழும் மக்களைப் பிணைத்திருக்கும் வலுவான சங்கிலி.

போற்றத் தக்க நாகரிகம்

பஸ்தர்வாசிகளில், நான்கில் மூன்று பங்கு பழங் குடியினர். வெளியிலிருந்து பார்ப்பவர்கள் இவர்களைப் பொதுவாக, கோண்டுகள் என்று அழைத்தாலும், இந்தப் பழங்குடிகளில் ஏராளமான இனங்கள் உண்டு. அவரவருக்கென்று தனித்தனி உணவு, உடை, மொழி, வாழ்க்கை முறை, வழிபாட்டுக் கலாச்சாரங்கள் உண்டு.

மானுடவியலாளர்கள், ‘போற்றிப் பாதுகாக்க வேண்டிய ஓர் அற்புதமான பகுதி பஸ்தர்’ என்று கொண்டாடும் வளம் இவர்களுடையது. பஸ்தர் பழங்குடியினரில், முக்கியமான இனங்களாக, 7 இனங்களைக் குறிப்பிடலாம். 1. கோண்டுகள், 2. முரியாக்கள், 3. ஹல்பாக்கள், 4. அபுஜ்மரியாக்கள், 5. தண்டமிமரியாக்கள், 6. பத்ராக்கள், 7. துர்வாக்கள்.

ஆண் கொடுக்க வேண்டிய வரதட்சிணை

இந்தியப் பழங்குடியினங்களில் பிரபலமான ஓர் இனத்தவரான கோண்டுகள் பஸ்தரில் கணிசமாக வாழ்கின்றனர். கொஞ்சம் முன்னகர்ந்த இனமான கோண்டுகள் காட்டில் பொருட்கள் சேகரித்தல், மீன்பிடி, வேட்டை ஆகியவற்றைத் தாண்டி பாரம்பரிய விவசாயத்திலும் ஈடுபடுபவர்கள். கோண்டுகளிடம் குறிப்பிட வேண்டிய முக்கியமான இரு சம்பிரதாயங்கள்: கோதுல் முறையும் பரிச முறையும்.

கோதுல் முறை என்பது வயது வந்த ஆண்கள்/ பெண்கள் முழுச் சுதந்திரத்துடன் தம்மை ஒத்த வயதுடைய ஆண்கள்/ பெண்களுடன் ஒரு குடிசையில் வசிக்கலாம். வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான அவர்களுடைய சமூகக் கல்வியை - வாழ்க்கைப்பாடு, இசை, நடனம், கதை சொல்லுதல் உள்ளிட்டவற்றை - அங்குதான் கற்பார்கள். இந்தக் காலகட்டத்துக்குப் பின் அவர்கள் திருமணம் செய்துகொள்ள விரும்பினால், திருமணம் செய்துகொள்ளலாம். பெரியவர்கள் இதில் தலையிட முடியாது. பரிச முறை என்பது, திருமணத்தின்போது பெண்ணின் தந்தைக்கு மணமகன்தான் ‘வரதட்சிணைப் பணம்’கொடுக்க வேண்டும். பெண்களுக்கு கோண்டுகள் கொடுக்கும் முக்கியத்துவம் இது.

முரியாக்கள் கொஞ்சம் சமவெளியில் வாழ்பவர்கள். கோண்டுகளுடன் நிறைய ஒப்பிடத் தக்க இயல்புகளைக் கொண்டவர்கள். மூலிகைகள் சேகரத்தில் ஆழ்ந்த அறிவு கொண்டவர்கள். இவர்கள் தயாரிக்கும் மஹுவா மது போதையைத் தாண்டி மருந்தாகவும் பயன்படுத்தப் படுவது.

விதவர் விதவை மறுமணம்

ஹல்பாக்கள் கொஞ்சம் முன்னேறியவர்கள். சொந்தமாக நிலம் வைத்துக்கொள்ளும் பழக்கத்தைப் பின்னாளில் ஏற்படுத்திக்கொண்டவர்கள்; கோதுல் முறை இங்கும் உண்டென்றாலும், ரத்த சொந்தங்களில் மணம் முடிப்பதற்கே முன்னுரிமை கொடுப்பவர்கள் இவர்கள். பெண்களுக்கு இவர்கள் சமூகத்தில் முக்கிய இடம் உண்டென்றாலும், ஏனைய இனங்களைப் போல விவாகரத்து உரிமை கிடையாது. ஹல்பாக்களில், ஒரு விதவர் மறுமணம் செய்துகொள்ள நினைத்தால், விதவையை மட்டுமே மணம் செய்துகொள்ள முடியும்.

நிலத்தை உழுதால் பாவம்

அபுஜ்மரியாக்கள் காட்டின் அடர்ந்த பகுதியில் மட்டுமே வசிப்பவர்கள். ஏனைய சமூகத்தினரிடமிருந்து ஒதுங்கிக்கொண்டு வாழ்பவர்கள் இவர்கள். தமக்கென நிலம் வைத்துக்கொள்ளக் கூடாது என நினைப்பவர்கள் இவர்கள். நிலத்தை உழுவது பூமித் தாய்க்கு வலியைத் தரும் என்பதால், உழுவதைத் தவிர்ப்பவர்கள். ஒருமுறை சாகுபடிசெய்தால், அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுவார்கள். குறைந்தது மூன்றாண்டுகள் ஆகும், அந்த இடத்துக்குத் திரும்ப வர. இதனாலேயே, இடம்பெயர்ந்துகொண்டே இருப்பார்கள். தாமே தயாரிக்கும் மதுவை அருந்தும் பழக்கம் கொண்ட இவர்களில் மது அருந்துதல் ஆண் - பெண் இருபாலருக்கும் பொது.

அபுஜ்மரியாக்களைப் போன்ற இயல்புகளைக் கொண்டவர்கள் தண்டமிமரியாக்கள். எனினும், தங்களை தனிமைப்படுத்திக்கொள்பவர்கள். நடனம் ஆடும்போது, காட்டெருது கொம்புகளைச் சூடிக்கொண்டு இவர்கள் ஆடுவதால், தண்டமிமரியாக்கள் என்று பெயர் பெற்றனர்.

சேர்ந்து வாழத் திருமணம் அவசியமில்லை

பத்ராக்கள் காட்டில் பொருட்கள் சேகரிப்பதையே பிரதானமாகக் கொண்டவர்கள். இவர்களும் தனியே நிலம் வைத்துக்கொள்ளக் கூடாது என்று நினைப்பவர்கள். ஆகையால், சுழற்சி முறையில் விவசாயம் மேற்கொண்டு, நாடோடிகள்போல நகர்ந்துகொண்டே செல்பவர்கள். பத்ரா இனத்தில் பெண்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தான் திருமணம் செய்துகொள்ளும் ஆணை அவரே தேர்ந்தெடுப்பார். திருமணம் செய்துகொள்ளாமலும் அவர் ஓர் ஆணுடன் சேர்ந்து வாழலாம்.

துர்வாக்கள் விவசாயம், வேட்டை, கைவினையில் தேர்ந்தவர்கள். வழிபாடுகளில் பலியிடுதலுக்கு முக்கிய இடம் கொடுப்பவர்கள். கொஞ்சம் தீவிர இனப்பற்றாளர்கள். பண்டிகைகளின்போது மஹுவா மது அருந்துதலைக் கட்டாயமாக வைத்திருக்கும் துர்வாக்களின் இயல்பு, ஆண் - பெண், சிறியவர் - பெரியவர் வேறுபாடின்றி அருந்துவது.

பஸ்தர் பழங்குடிகளிடம் குறிப்பிட வேண்டிய முக்கியமான ஒரு பொது இயல்பு: தங்கள் தேவைக்கு மீறி எதையும் சேகரிப்பதைப் பெரும் பாவமாகக் கருதுபவர்கள் அவர்கள்!

(தொடரும்...)

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x