Published : 12 Feb 2014 12:00 AM
Last Updated : 12 Feb 2014 12:00 AM

இந்திய தலிபான்கள்

தர்மேந்திரா, நிதி. இந்த இருவருடைய சிதைந்த உடல்களையும் ஊர்வலமாக எடுத்துச்செல்கிறது ஒரு கும்பல். “காதலிப்பவர்களுக்கு நேரும் கதி இதுதான்” என்று கோஷமிடுகிறது அந்தக் கும்பல். அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க முனையும் காவல் துறைக்கு ஊர் மக்களிடமிருந்து எந்த ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை. காப் பஞ்சாயத்துகளின் வானளாவிய அதிகாரம் அவர்களைப் பாதுகாக்கிறது.

காதலித்தால் இதுதான் கதி

தர்மேந்திராவுக்கு 22 வயது. நிதிக்கு 20. பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போதிருந்தே காதலித்துக் கொண்டிருந்த இருவரும், எதிர்ப்புக்குப் பயந்து வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். நிதியை அழைத்த அவரது அம்மா, இரு குடும்பங்களும் அவர்களை ஏற்றுக்கொண்டதாகச் சொல்லவும் மீண்டும் வீடு திரும்புகிறார்கள். திரும்பிய சில மணி நேரங்களிலேயே தந்தையாலும் உறவினர்களாலும் எரித்துக் கொல்லப் படுகிறார் நிதி. பிறகு, அவர்கள் தர்மேந்திராவை வெட்டிக் கொல்கிறார்கள். கொல்லப்பட்டவர்களின் சடலங்களோடு ஊர்வலமாகச் சென்று, “காதலில் விழுபவர்களின் கதி இதுதான்” என்று எச்சரிக்கை விடுக்கிறார்கள். நிதியின் பெற்றோரை எதிர்த்துக் காவல் துறையில் புகார் கொடுக்க தர்மேந்திராவின் பெற்றோர் மறுத்துவிட்டார்கள். “அவர்கள் இடத்தில் நாங்கள் இருந்தாலும் இதைத்தான் செய்திருப்போம்” என்கிறார்கள் அவர்கள். கடந்த செப்டம்பர் மாதம் ஹரியாணா மாநிலத்தில் கர்னாவதி கிராமத்தில் நடந்த உண்மைச் சம்பவம் இது.

ஆண்களால் ஆனவை

‘ஒரே கோத்திரத்தில் பிறந்தவர்கள் காதலில் விழுந்தால், அந்த விதிமீறலுக்குத் தண்டனை மரணம்’ என்பதில் ஜாத் சமுதாயத்தினர் உறுதியாக இருக்கிறார்கள். மரணத்தைத் தண்டனையாக விதிப்பது காப் பஞ்சாயத்துகள் எனப்படும் அதிகாரபூர்வமற்ற அமைப்புகள். ‘மரண தண்டனையை' நிறைவேற்றுபவர்கள் கைதுசெய்யப்பட்டால் அவர்களது விடுதலைக்காகவும் காப் பஞ்சாயத்துகள் போராடுகின்றன. நிதியின் தந்தை கைதுசெய்யப்பட்டபோது, அதை சாதிக்கும் பஞ்சாயத்துக்கும் இழைக்கப்பட்ட அவமானமாக அறிவித்தது கர்னாவதி கிராமத்தின் காப் பஞ்சாயத்து. பெண்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு, அவர்கள் செல்பேசி பயன்படுத்தக் கட்டுப்பாடு என்று பல கட்டுப்பாடுகளை விதிக்கும் காப் பஞ்சாயத்துகள் முழுக்க முழுக்க ஆண்களால் ஆனவை. கடந்த மாதம், மேற்கு வங்கத்தில் ஒரு பழங்குடிப் பெண், வேற்று சாதி ஆணுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் குற்றம்சாட்டி, அவருக்குக் கூட்டுப் பாலியல் வல்லுறவைத் தண்டனையாக விதித்ததும் காப் பஞ்சாயத்துதான்.

காப் பஞ்சாயத்துகளின் வரலாறு

வட மாநிலங்கள் பலவற்றில் காப் பஞ்சாயத்துகள் செயல்பட்டுவந்தாலும், உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியாணாவின் காப் பஞ்சாயத்துகள் ஒரே கோத்திரத் திருமணங்களின் மீது எடுக்கும் நடவடிக்கைகள் காரணமாகப் பிரபலமானவை. உச்ச நீதிமன்றத்தால் சட்ட விரோதமானவை என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் காப் பஞ்சாயத்துகள் செலுத்தும் அதிகாரத்தின் எல்லைகள் விரிவடைந்துகொண்டேதான் இருக்கின்றன.

சர்வ வல்லமை பொருந்திய காப் பஞ்சாயத்துகளின் பின்னணி என்ன? பரவலாக, சுதந்திரத்துக்கு முன் அதிகாரத்துடன் இருந்த பஞ்சாயத்துகள்தான் இப்போதும் சட்டரீதியான அதிகாரமற்ற, சாதிய அதிகாரத்தின் அடிப்படையில் மட்டும் இயங்கும் காப் பஞ்சாயத்துகளாக உருவாகியிருக்கின்றன. நம்மூர் கட்டப்பஞ்சாயத்தின் இன்னொரு வடிவமாக இவற்றைக் கொள்ளலாம்.

ஹூடா, கேஜ்ரிவால், ஜிண்டால்

காப் பஞ்சாயத்துகளின் கட்டற்ற அதிகாரத்துக்கு ஆதாரமாக இருப்பது என்ன? இதற்கு காப் பஞ்சாயத்து கள் ஆதிக்கம் செலுத்தும் ஹரியாணாவின் முதல்வர் பூபிந்திர சிங் ஹூடா சொல்லும் பதில் தெளிவு தரும். “காப் பஞ்சாயத்துகள் என்பவை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்போல, அவை நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதி” என்றிருக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் சமீபத்தில் காப் பஞ்சாயத்துகள் இந்தியக் கலாச்சாரத்தைச் சேர்ந்தவை அல்ல என்றும், அவை பிற்போக்கு மனப்பான்மை கொண்ட குழுக்கள் என்றும் குற்றம்சாட்டியதற்குத்தான் அதே காங்கிரஸைச் சேர்ந்த ஹூடா இப்படிப் பதிலளித்திருந்தார். வாக்கு வங்கி அரசியலில், பெரும்பான்மைச் சமூகமான ஜாத்துகளின் ஆதரவோடு தொடர்ந்து ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டிருக்கும் ஹூடாவிடம் இருந்து வேறு என்ன பதிலை எதிர்பார்க்க முடியும்?

ஹூடா மட்டுமல்ல, ஹரியாணாவைச் சேர்ந்த இளம் நாடாளுமன்ற உறுப்பினரும், வெளிநாட்டில் படித்தவருமான நவீன் ஜிண்டாலும்கூட ஒரு முறை காப் பஞ்சாயத்துகளை ஆதரிப்பதாக அறிவித்தார். காப் பஞ்சாயத்துகளின் அரசியல் செல்வாக்கு அத்தகையது. ஜிண்டாலின் கருத்துக்கும் காங்கிரஸுக்கும் சம்பந்தமில்லை என்று காங்கிரஸ் தலைமை சொன்னாலும், காப் பஞ்சாயத்துகளுக்கு எதிரான, தீர்க்கமான நடவடிக்கையை அரசு எடுத்ததாகத் தெரியவில்லை.

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், “காப் பஞ்சாயத்துகளுக்குத் தடை விதிப்பது தேவையற்றது” என்று சொல்லியிருக்கிறார். “பெண்களைக் கடுமையாக நடத்தினாலும் காப் பஞ்சாயத்துகளுக்குக் கலாச்சாரத் தேவை இருக்கிறது” என்கிறார் அவர். காப் பஞ்சாயத்துகள் தடை செய்யப்பட வேண்டும் என்று தொடர்ந்து பெண்கள் அமைப்புகள் கோரிவரும் சூழலில், கேஜ்ரிவால் இப்படிச் சொல்லியிருப்பது வாக்குவங்கி அரசியலின் வலிமைக்கு ஓர் உதாரணம். ஹூடாவும் கேஜ்ரிவாலும் ஜிண்டாலும் ஹரியாணாவைச் சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் கவனத்தைக் கோருகிறது. காப் பஞ்சாயத்துகளுக்கான அவர்களது ஆதரவு, வாக்குவங்கி அரசியல் என்பதைத் தாண்டி, அவை முன்னிறுத்தும் கலாச்சாரங்கள்மீது அவர்களுக்குள்ள இயல்பான பிணைப்பிலிருந்து அவர்களால் வெளியேற முடியவில்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டியது. எப்படியிருந்தாலும் எப்படிப்பட்ட அரசியல் கட்சிக்கும் பெண்களின் நலன் என்பது மற்ற எந்தச் செயல்திட்டத்தையும்விடவும் முக்கியத்துவம் குறைந்ததாகவே இருக்கிறது.

தந்தைமயமாதல்

பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான திட்டங்களை வகுப்பதற்கும், பெண்களின் பிரச்சினை களுக்கு அடிப்படைக் காரணிகளில் ஒன்றான தந்தைமய மாதலை எதிர்கொள்வதற்குமான போராட்டத்தில் கிட்டத் தட்ட எல்லா அரசியல் கட்சிகளும் முதல் தீர்வையே தேர்ந்தெடுக்கின்றன. அது முழுமையான தீர்வு இல்லை எனும்போதும்கூட, பல சமயங்களில் அது பெண்களின் வெளியைக் குறுக்கும் ஒரு தீர்வாக இருக்கும்போதும்கூட அரசியல் கட்சிகளுக்கு அது இலகுவான தீர்வாக இருக்கிறது. தமிழகத்திலும் இதே நிலைதான்.

தமிழகத்தில் நடைபெறும் கௌரவக் கொலைகளையும், காதலில், தனிமனித உறவுகளில் அரசியல் தலையீடு உருவாக்கக்கூடிய பாதிப்புகளையும் சமகாலத்தில் புறந்தள்ளிவிட முடியாது. திவ்யா - இளவரசன் காதலில் அரசியல் தலையீடு ஏற்படுத்திய முடிவு ஒரு பேரவலம். ஆனாலும், சாதிமறுப்புத் திருமணம் செய்துகொள்பவர்கள் அவர்களது குடும்பங்களால் துரத்தப்படுவதும், நீதிமன்றங்களுக்கும் காவல்நிலையங்களுக்கும் அவர்கள் அலைய வேண்டியிருப்பதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது; அவர்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் உறுதிப்படுத்தப்பட்டிருந்தாலும்கூட யதார்த்தம் இதுதான்.

அழிவின் எழுச்சி

முற்போக்குச் சிந்தனைகள் வளர்ச்சி பெற்றிருக்கும் தமிழகத்தின் சூழலுக்குச் சற்றும் பொருத்தமில்லாதது, இன்று தமிழகம் சந்தித்துவரும் சாதி அரசியலின் எழுச்சி. இந்த எழுச்சியின் விளைவாக இன்று பெரும் போராட்டத்துக்குப் பிறகு, தங்களுக்கான வெளியைச் சிறிதளவாவது அடைந்திருக்கும் ஒடுக்கப்பட்டவர்களும் பெண்களும் அதை இழந்துவிடும் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கிறார்கள். தாக்குதலை ஒரு பெண் எதிர்கொள்ளும்போது, அதற்கு அவளையே பொறுப்பாக்குகிறது பிற்போக்கு அரசியல். ஒடுக்கப்பட்ட சமூகத்து ஆணின் நவீன உடைகளிலும் குளிர்க்கண்ணாடிகளிலும் குறை காண்கிறது சாதி அரசியல். பெண்களை மீண்டும் வீட்டுக்குள் முடக்கும், ஒடுக்கப்பட்ட சமூகத்தின் ஆண்களை மீண்டும் அடிமைகளாக்கும் எண்ணம் மட்டுமே இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பின்னணியில் செயல்படுகிறது.

வட மாநிலங்களின் காப் பஞ்சாயத்துகளானாலும், தமிழகத்தில் திவ்யாக்களின் வெளியையும் இளவரசன் களின் விடுதலையையும் குறுக்கிக்கொண்டிருக்கும் சாதி அரசியலானாலும் அவற்றை எதிர்த்து இந்தியாவை 21-ம் நூற்றாண்டின் பாதையில் உண்மையிலேயே செலுத்தத் தேவை, அரசியல் உறுதி மிக்க தலைமை. ஆனால், அது வாய்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் தூரத்தில்கூடத் தென்படவில்லை.

கவிதா முரளிதரன், தொடர்புக்கு: kavitha.m@kslmedia.in​

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x