Last Updated : 06 Mar, 2015 10:16 AM

 

Published : 06 Mar 2015 10:16 AM
Last Updated : 06 Mar 2015 10:16 AM

இந்தியர்களின் மனநிலையை பிரதிபலிக்கிறதா முகேஷ் சிங் பேட்டி?

நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகேஷ் சிங்கைப் பேட்டி கண்டு இஸ்ரேலைச் சேர்ந்த லெஸ்லீ உத்வின் எடுத்திருக்கும் ‘இண்டியா’ஸ் டாட்டர்’ (இந்தியாவின் மகள்) ஆவணப்படம் பெரும் அதிர்வுகளை உலகெங்கும் ஏற்படுத்தியிருக்கிறது.

நிர்பயா மீதான பாலியல் வன்முறையை முகேஷ் சிங் நியாயப்படுத்திப் பேசியது மட்டுமல்லாமல், பாலியல் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்வதற்குப் பெண்கள்தான் காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். அந்த ஆவணப் படத்தை இந்தியாவில் ஒளிபரப்புவதற்கு இந்திய அரசு தற்போது தடைவிதித்திருக்கிறது. ஆனாலும், ஞாயிறு அன்று ஒளிபரப்பப்படவிருந்த அந்த ஆவணப்படத்தை புதன் இரவே பிபிசி ஒளிபரப்பியிருக்கிறது.

பெண்கள் குறித்து மிகவும் மோசமாக மதிப்பீடு செய்து குற்றவாளி முகேஷ் சிங் தெரிவித்துள்ள கருத்துகள் ஒட்டுமொத்த இந்தியச் சமூகத்தின் மனநிலையைப் பிரதிபலிப்பதாக சமூக ஆர்வலர்கள்-பெண்ணியவாதிகள் சிலர் கருத்து தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில், இந்த ஆவணப் படத்தை மக்களிடம் பரவலாகக் காட்ட வேண்டும் என்றும், அப்படிக் காட்டக் கூடாது என்றும் இருவேறு கருத்துக்களும் நிலவுகின்றன.

அஜிதா, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்:

இந்தியச் சமூகத்தின் மன நிலையைப் பிரதிபலிப்ப தாகத்தான் முகேஷ் சிங் பேட்டி இருக்கிறது. கிராமப் புற இந்தியாவில் பாலியல் குற்றங்கள் நடக்காது; மேற்கத்திய கலாச்சாரம் புகுந்துள்ள நகர்ப்புறங் களில்தான் நடைபெறும் என்று கூறிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கருத்துக்கும், மரண தண் டனை குற்றவாளி முகேஷ் சிங் கருத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

நீதிமன்றங்கள்கூட நிர்பயா வழக்கு வரும் வரை அப்படியொரு பார்வையைத்தான் கொண்டிருந்தன. பெண்ணின் கடந்த கால ‘ஒழுக்கத்தை’ கணக்கில் எடுத்துக்கொள்வதாகக் கூறிப் பெண்களுக்கு எதிராகப் பல தீர்ப்புகளை வழங்கியிருக்கின்றன. இப்போதுகூட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த வழக்குகளை 60 நாட்களில் முடிக்க நீதித் துறை எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.

ஆகவே, இந்தியச் சமூகத்தின் மனநிலையைப் பிரதிபலிக்கும் முகேஷ் சிங் பேட்டி குறித்த ஆவணப்படம் பரவலாகக் காட்டப் பட வேண்டும். இந்தியாவின் கவுரவம், தேசபக்தி என்றெல்லாம் கூறி இந்த ஆவணப்படத்தைத் தடை செய்யக் கூடாது.

கே. பாலபாரதி, சட்டப்பேரவை உறுப்பினர், மார்க்சிஸ்ட் கட்சி:

குற்றவாளியை சந்தித்துப் பேட்டி எடுத்தவர்களைக் கண்டிக்க வேண்டும். பேட்டி எடுத்ததால்தானே சுதந்திர உணர்வுடன் குற்றவாளியால் பேச முடிகிறது. எல்லாக் குற்றவாளிகளும் தங்களுக்கான நியாயத்தை வைத்திருப்பார்கள்.அதை வெளிப்படுத்த வாய்ப்பளிப்பதன் மூலம் அந்தச் செயலுக்கான ஏற்புத்தன்மை சமூகத்தில் உருவாகும். தன்னிடம் காசு இல்லை என்று ஒருவன் திருடினால் அந்த நியாயத்தை ஏற்றுக்கொள்வீர்களா? குற்றவாளிகளின் வாக்குமூலங்கள் ரகசிய ஆவணமாக இருக்கட்டும். சமுதாயத்துக்கு எது தேவையான கருத்தோ அதை மட்டும் ஊடகங்கள் வெளிப்படுத்தினால் போதும். அந்தப் பெண் சாகும் நிலைக்குத் தள்ளப்பட்டதால் எதுவும் பேச முடியாமல் இறந்துவிட்டார். உயிருடன் இருப்பதால் குற்றவாளிக்குப் பேச வாய்ப்பளிப்பதா? கொடூரமாக நடந்த அந்த வன்முறை சம்பவத்தை நியாயப்படுத்துவதுபோல இருக்கிறது இந்தப் பேட்டி.

இந்த ஆவணப் படத்தைப் பார்ப்பதால் மக்களிடம் நல்ல தாக்கம் ஏற்படும் என்று கூறுவது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. இந்தச் சம்பவம் நடந்தபோதே, சரியான நேரத்தில், மக்கள் கொதித்தெழுந்து பாலியல் வன்முறைக்கு எதிரான சட்டம் நிறைவேற்ற அரசுக்கு நிர்பந்தம் கொடுத்தார்கள். இந்நிலையில், ஒரு பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்தவன், தான் செய்தது சரிதான் என்று கூறுவதை சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படவிருக்கும் நேரத்தில் கேட்பதற்குப் பயங்கரமாக இருக்கிறது.

வானதி சீனிவாசன், மாநில துணைத் தலைவர், பாஜக:

குற்றவாளி கூறியிருக்கும் கருத்து மிகவும் மோசமானது. ஆனால், பாலியல் வன்முறையைத் தடுப்பதற்கும், அது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் எத்தனையோ வழிகள் இருக்கின்றன. ஊடகங்கள் இது போன்ற ஆவணப்படங்களின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டாம். இது ஒரு பிரபலமான வழக்கு என்பதால் ஊடகங்களில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

சிறைக்குள்ளே ஆவணப்படம் எடுக்க மட்டும்தான் அனுமதி வழங்கப்பட்டது. எடுக்கப்பட்ட காட்சிகளை சிறை அதிகாரியிடம் காட்டுவது, அதை வெளியிடுவது, அதற்கான அனுமதி பெறுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் என்று வரும்போது சட்ட விதிமுறைகள் பல மீறப்பட்டுள்ளன. என்னென்ன வகையில் விதிகள் மீறப்பட்டிருக்கின்றன என்று மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் கூறியிருக்கிறார். விதிமீறல்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பேராசிரியர் மணிமேகலை, துறைத் தலைவர், மகளிரியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம்:

குற்றவாளியின் பேச்சு, பெண்களை ஒரு வரையறைக்குள் அடைக்கும் முயற்சி இது. குற்றவாளியின் கருத்து பெரும்பாலான சமூகத்தின் பிரதிபலிப்பாகவே உள்ளது.

ஆணும் பெண்ணும் சமம் என்ற சிந்தனை மாற்றம் ஏற்படுவதே இதற்குத் தீர்வாகும். இதற்கு, குழந்தை வளர்ப்பில் மாற்றங்கள் தேவை. ஆண் பிள்ளைகளை உயர்வாகவும், பெண் பிள்ளைகளைத் தாழ்வாகவும் பெற்றோர்கள் பார்க்கக் கூடாது.

ஒரு பெண்ணுக்கு எப்போதுமே ஆண்தான் அளவுகோலாக இருக்கிறான். ஒரு பெண் தைரியமாக இருந்தால், ஆணைப் போல வளர்க்கப்பட்டிருக்கிறாள் என்று பெருமையாகக் கூறப்படுகிறது. ஆனால், பெண்கள் ஆண்களைப் போன்று செயல்பட்டால் ஆண்கள் தங்கள் உரிமைகள் பறிக்கப்படுவதுபோல பயப்படுகிறார்கள்.

ஆண்கள் இயங்கும் தளங்களைப் பெண்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். அதே போல பெண்கள் இயங்கும் தளங்களை ஆண்களுக்கு அறிமுகப்படுத்துவது அவசியம்.

இதற்கு சமூகம், கல்விமுறை, ஊடகம் என அனைத்துத் தளங்களிலும் முனைப்புடன் செயல்பட வேண்டும். அப்போதுதான் இரண்டு, மூன்று தலைமுறைகள் கழித்தாவது மாற்றங்கள் ஏற்படும்.

நடிகை குஷ்பு, சமூக ஆர்வலர்:

இந்தப் பிரச்சினையைப் பற்றி ஊடகங்கள் அதீதமாகப் பேசிவிட்டன. நிர்பயா போன்று பல வன்முறைகள் தினம்தினம் நடந்துகொண்டிருக்கின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஆனால், நிர்பயா வழக்கை மட்டுமே ஊடகங்கள் பேசிக்கொண்டிருக்கின்றன.

பெண்களுக்கு எதிராக தினமும் நடந்துகொண்டிருக்கும் தாக்குதல்கள்தான் இந்த ஆவணப்படத்தைவிட இப்போது முக்கியமான பிரச்சினை. தற்போது உருவாக்கப்பட்டுள்ள பரபரப்பால் நிறையப் பேர் இந்த ஆவணப்படத்தைப் பார்ப்பார்கள். ஆனால், குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்க வேண்டியதும், மக்கள் மனநிலையில் மாற்றம் ஏற்படுவதும்தான் பரபரப்பை விட முக்கியம்.

- வி. தேவதாசன், தொடர்புக்கு: devadasan.v@thehindutamil.co.in,

-வி. சாரதா, தொடர்புக்கு: saradha.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x