Last Updated : 08 Jun, 2017 09:27 AM

 

Published : 08 Jun 2017 09:27 AM
Last Updated : 08 Jun 2017 09:27 AM

அழகுபெறும் அமீன்பூர் ஏரி

இந்தியாவின் முதலாவது பாரம்பரிய பல்லுயிரி அமைவிடம்

தெலங்கானா தலைநகரம் ஹைதரா பாதில் உள்ள அமீன்பூர் ஏரி, ‘இந்தியாவின் முதல் பாரம்பரிய பல்லுயிரி அமைவிடம்’ என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஹைதராபாத் நகரின் மேற்கில் தொன்றுதொட்டே காணப்படும் அற்புதமான பாறை அமைப்புகளுக்கிடையில், நவீனக் குடியிருப்புகள் கட்டப்பட்ட சூழலில், தொழிற்சாலைகளாலும் கிராமத்தாலும் சூழப்பட்ட இடத்தில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பரந்து விரிந்த ஏரி காணப்படுகிறது.

கோல்கொண்டாவை கி.பி. 1550 முதல் 1580 வரையில் ஆண்ட இப்ராஹிம் குதுப் ஷா காலத்திலேயே அமீன்பூர் ஏரி உருவாகிவிட்டது. மிகப் பெரிய தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சத்தான் இந்த ஏரி வெட்டப்பட்டது. இந்த ஏரி இப்போது இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. பெத்த அமீன்பூர், சின்ன செருவு என்று அவை அழைக்கப்படுகின்றன.

பெத்த அமீன்பூர் ஏரி, சின்ன செருவைவிட சற்றே உயரமான இடத்தில் இருக்கிறது. இப்ராஹிம் குதுப் ஷா காலத்தில் இந்த ஏரியின் மொத்தப் பரப்பளவு 300 ஏக்கருக்கும் மேல். இப்போது வெறும் 93 ஏக்கர்களாகச் சுருங்கிவிட்டது. வரம்பற்ற ஆக்கிரமிப்புதான் இதற்குக் காரணம்.

உயிர் வளம்

இந்த ஏரி இப்போது மீனளம், பறவைகளின் நடமாட்டம் போன்றவற்றால் உயிர்ப்புடன் இருக்கிறது. பட்டைத்தலை வாத்துகள், நீர்க்காகங்கள், திகிரிப் புள்கள், சாம்பல் நாரைகள் ஏராளமாகக் காணப்படுகின்றன. கண்டங்கண்டை நீர்க்கோலி என்ற பெயருள்ள ஆசிய தண்ணீர் பாம்புகள் (நஞ்சற்றவை) இந்த ஏரியின் மீன்களைக் கவ்வித் தின்கின்றன. எருதுகள் ஏரியின் ஆழப்பகுதிக்குச் சென்று அமிழ்ந்து மகிழ்கின்றன. ஏரிக் கரையோரத்தில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லைத் தாளடித்து நெல் மணிகளைப் பிரிக்கின்றனர். அமீன்பூர் ஏரியில் காணப்படும் ஏராளமான, விதவிதமான பறவைகளால்தான் பலருடைய கவனம் ஏரி மீது திரும்பியிருக்கிறது. பறவைகளைப் பார்த்துக் களிப்பவர்களும் புகைப்படக்காரர்களும் படையெடுக்கின்றனர். நாரைகள், நீர்க்காகங்கள், கூழைக் கடாக்கள் ஏரியில் உள்ள மீன்களைக் கொத்தித் தின்னும் அழகைப் பார்த்துப் பரவசப்படுகின்றனர். மீனைக் கவ்விக்கொண்டுவரும் பாம்பிடமிருந்து லாவகமாக அதைப் பறித்துக் கொண்டு பறக்கும் பறவையின் அழகால் உற்சாகமடைகின்றனர்.

ஆண்டுதோறும் இந்தப் பகுதியில் நடைபெறும் படகுப் போட்டிகளைக் காண வரும் ரசிகர்கள் அப்படியே பறவை களையும் பார்ப்பதை முதல் கடமையாகக் கொள்கின்றனர். 2015-ல் 171 பறவை இனங்கள் வந்தன. 2016-ல் இந்த எண்ணிக்கை 186 ஆக உயர்ந்தது. இந்த ஏரிக்கு, ‘முதல் பாரம்பரிய பல்லுயிரி அமைவிடம்’ என்ற பட்டம் வழங்கப்பட்டிருப்பதால் ஏரியைச் சுற்றியுள்ள ஆலைகள் தங்களுடைய வளாகத்துக்குள் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டிருக்கிறது. ஏரிக் கரையில் ஏராளமான ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு தண்ணீர் எடுத்து லாரிகள் மூலம் கொண்டுபோய் விற்கப்பட்டுவந்தது. அதுவும் இப்போது தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. ஏரியின் நீள, அகலத்தைக் காட்டும் அடையாளச் சின்னங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இனி யாரும் இதில் நுழைந்து ஆக்கிரமிக்க முடியாது. இந்த ஏரிக்கு பட்டைத் தலை வாத்தும் கூழைக்கடாவும் முதல் முறையாக வந்ததை பறவை ஆர்வலர்கள் மகிழ்ச்சியோடு சுட்டிக்காட்டுகின்றனர்.

பின்பற்றப்படும் கட்டுப்பாடுகள்

பிழைப்புக்காக ஏரியை நம்பியிருக்கும் மீனவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். “மீன்பாடு அதிகரித்துவருகிறது. முன்பெல்லாம் கோடை வந்தால் ஏரி வறண்டுவிடும். இப்போது ஏரியில் ஓரளவுக்கு நீர் பரவி நிற்கிறது” என்கிறார் அமீன்பூர் கிராம மீனவர் வெங்கடேஷ். இரண்டாண்டுகளுக்கு முன்னால் ஏரியில் மீன் பிடிக்கும்போது போட்டிக்கு வரும் பறவைகளை விரட்ட முரசு கொட்டுவார்கள், பட்டாசுகளை வெடிப்பார்கள். இந்த ஆண்டு மீனவர்களுக்கு நிறைய மீன் கிடைப்பதால் பறவைகளும் உண்ண அனுமதிக்கின்றனர். மீன் பிடிக்க வலை விரித்தால் பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் ஷீட்டுகள், தெர்மகோல் துண்டுகள், ரப்பர் டயர் துணுக்குகள்தான் வலையில் சிக்கும். இப்போது அவை இல்லை என்கிறார் வெங்கடேஷ். அதேசமயம், மீன் பிடிக்க வாகனத்தில் ஏரிக்கரை வரை முன்னர் அனுமதித்தனர், இப்போது தொலைவிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டு நடந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர் என்றார்.

©தி இந்து ஆங்கிலம்

சுருக்கமாகத் தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x