Last Updated : 28 Dec, 2016 10:33 AM

 

Published : 28 Dec 2016 10:33 AM
Last Updated : 28 Dec 2016 10:33 AM

அறிவோம் நம் மொழியை | நேரடிப் பொருளை நாடலாமா?

மொழிபெயர்ப்பின்போது ஒரு மொழியின் நுட்பங்கள், அதன் வீச்சு, போதாமைகள் ஆகியவை நன்கு உணரப்படுகின்றன. காரணம், ஒவ்வொரு மொழியும் ஒவ்வொரு உலகம். வெவ்வேறு பண்பாட்டு, வரலாற்றுப் பின்புலங்களைக் கொண்டவை. ஒரு மொழியில் எழுதப்படுபவற்றைப் புரிந்துகொள்வது ஒப்பீட்டளவில் எளிது. பொருளும் உட்பொருளும் தொனியும் மாறாமல் இன்னொரு மொழிக்குக் கொண்டுசெல்வது சவாலானது.

எனவே, மொழிபெயர்க்கும்போது சிக்கனம் குறித்த சிக்கல் வரத்தான்செய்யும். இந்த இடத்தில் சுருக்கத்துக்கும் சிக்கனத்துக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை நாம் உணர வேண்டும். மூலத்தில் இருப்பதைச் சுருக்கமாகச் சொல்வது சிக்கனம் ஆகிவிடாது. மூலத்தில் இருப்பவற்றை ஒன்று விடாமல் தமிழில் தர வேண்டும். பொருளோ தொனியோ மாறாமல் தர வேண்டும். அதைச் சிக்கனமான மொழியில் தர வேண்டும்.

ஒரு பண்பாட்டுப் பின்புலத்தில் பிறந்த மொழியின் தொடர்கள், வாக்கிய அமைப்புகள் இன்னொரு மொழிக்கு அந்நியமாக இருக்கும் என்பதால், பல இடங்களில் நேரடியாக மொழிபெயர்த்துவிட முடியாது. தொடர்கள், வாக்கியங்களின் நேரடிப் பொருளை அல்லாமல் அவை உணர்த்தும் உட்பொருளைக் கொண்டுவர வேண்டும். இந்தச் சவாலின் முக்கியமான சில சிக்கல்களை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

எளிய உதாரணத்திலிருந்து தொடங்கலாம். In other words என்று ஒரு தொடரை ஆங்கிலத்தில் அடிக்கடி பயன்படுத்துவார்கள். ஒரு செய்தியை விரிவாகச் சொன்ன பிறகு அதைச் சுருக்கியோ, மேலும் தெளிவுபடுத்தியோ சொல்ல வேண்டியிருக்கலாம். சிக்கலானவற்றைக் கையாளும்போது இதற்கான தேவை உருவாகலாம். அப்போது In other words என்ற தொடரைப் பயன்படுத்துவார்கள். “வேறு வார்த்தைகளில் சொல்வதானால்” என்று இதைச் சிலர் மொழிபெயர்க்கிறார்கள்.

பொதுவாகவே, இதுபோன்ற தொடர்களை மொழிபெயர்க்கும்போது அவை என்ன சொல்கின்றன என்பதை அல்ல; என்ன சொல்லவருகின்றன என்பதை எழுத வேண்டும். அவ்வகையில் இந்தத் தொடரை 'அதாவது' என்னும் ஒற்றைச் சொல்லின் மூலம் உணர்த்திவிடலாம். In other words என்று வரும் இடங்களில் 'அதாவது'என்று போட்டுப் படித்துப்பாருங்கள். இது சொல்லவரும் பொருள் கச்சிதமாக வந்திருப்பதை உணரலாம். More often than not என்றொரு தொடர். இதைக் கேட்டதும், 'இல்லை என்பதைக் காட்டிலும்…' என்றெல்லாம் தலையைச் சுற்றி மூக்கைத் தொட வேண்டாம். அகராதியில் தெளிவாக Usually (வழக்கமாக) என்று பொருள் தரப்பட்டிருக்கிறது.

வழக்கத்துக்கு மாறாகத் தெரியும் எந்தத் தொடரையும் சட்டென்று அதன் நேர்ப்பொருளில் புரிந்துகொள்ள முயலவோ அதனடிப்படையில் மொழிபெயர்க்கவோ கூடாது. இந்த எச்சரிக்கை உணர்வு இருந்தால் அபத்தமான மொழிபெயர்ப்புகளைத் தவிர்த்துவிடலாம். உதாரணமாக, 'தலையைச் சுற்றி மூக்கைத் தொடுதல்'என்னும் தொடரை எடுத்துக்கொள்வோம். இதன் ஒவ்வொரு சொல்லையும் அதன் நேரடிப் பொருளில் மொழிபெயர்த்தால் என்ன நேரும் என்று யோசித்துப்பாருங்கள்

(மேலும் அறிவோம்)

- அரவிந்தன் | தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x