Last Updated : 03 Oct, 2016 09:22 AM

 

Published : 03 Oct 2016 09:22 AM
Last Updated : 03 Oct 2016 09:22 AM

அறிவோம் நம் மொழியை: ஒருமை, பன்மை மயக்கம்

பேசும் மொழிக்கும் எழுதும் மொழிக்கும் உள்ள ஒரு முக்கியமான வித்தியாசம், பேசும்போது குரலின் தொனி பொருளை விளக்கப் பயன்படும்.

எனவே, பேச்சு மொழியில் சொற்கள் குறையலாம், இடம் மாறலாம். குரலின் ஏற்ற இறக்கங்களும் அழுத்தமும் எல்லாவற்றையும் சரிக்கட்டிவிடும். “உடம்பு எப்படி இருக்கு” என்னும் கேள்வி அச்சில் ஒன்றாகவும் பேச்சில் வெவ்வேறு விதங்களிலும் வடிவம் எடுக்கக்கூடியது என்பது நம் அனைவருக்கும் தெரியும். குரல் தரும் வாய்ப்பு எழுத்துக்கு இல்லை. எனவே, எழுதும்போது பல விஷயங்களைத் தெளிவுபடுத்த வேண்டும்.

எழுவாயை அமைக்கும் விதத்தால் ஏற்படக்கூடிய குழப்பங்களைச் சென்ற இரண்டு வாரங்களில் பார்த்தோம். இதே வாக்கியங்கள் குரல் வடிவில் வரும்போது குரலின் ஏற்ற இறக்கங்களும் அழுத்தங்களும் குழப்பத்தைத் தீர்த்துவிடும். ‘அழுக்காக இருக்கும் மாணிக்கத்தின் கடை’ என்னும் வாக்கியத்தை எழுதினால் அழுக்காக இருப்பது மாணிக்கமா, கடையா என்னும் குழப்பம் வரலாம். சொல்லும்போது குரலின் அழுத்தங்களின் மூலம் குழப்பமில்லாமல் சொல்லிவிடலாம். எழுதும்போதுதான் சிக்கல். எனவே, எழுதும்போது கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதேபோன்ற குழப்பம் ஒருமை, பன்மை விஷயத்திலும் ஏற்படும். ‘சண்முகமும் மைக்கேலும் பாடினார்கள்’, ‘கிளை ஆடியது’, ‘மரங்கள் முறிந்தன’ என்னும் வாக்கியங்களில் ஒருமை பன்மை குழப்பம் இருக்காது. ‘மரத்தில் இலைகள் குறைவாக இருந்தன’ என்னும் வாக்கியத்தில் சிலருக்குக் குழப்பம் ஏற்படுகிறது. மரம், இலைகள் என இரண்டு பெயர்ச் சொற்கள் ஒருமையிலும் பன்மையிலும் இருப்பதால் வரும் குழப்பம் இது. எது எழுவாய் என்று பாருங்கள். குறைவு என்பது இலைகள் என்னும் பன்மைச் சொல்லுக்கான விவரணை. எனவே, இலைகள் எழுவாய். இலைகள் பன்மை என்பதால் பன்மைக்கான சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.

‘ஆடுகள் மரத்துக்குக் கீழே இருக்கும் கல்லை மிதித்துச் சென்றது’ என்னும் வாக்கியத்தில் பிழை உள்ளது. ஆடுகள்தான் இங்கே எழுவாய். ஆடுகள் பன்மை. எனவே, சென்றன என்பதே சரி. ‘மரத்துக்குக் கீழே இருக்கும் கல்லை ஆடுகள் மிதித்துச் சென்றது’ என்று எழுதினால் இந்தப் பிழை சட்டென்று கவனத்துக்கு வந்துவிடும். எழுவாயையும் அதன் வினையையும் கூடியவரை அருகருகே வைப்பதால் பல குழப்பங்கள் தவிர்க்கப்படும்.

‘பாடத்திட்டம் நான்கு பாடங்களாகக் குறைக்கப்பட்டன’ என்று ஒரு வாக்கியத்தைப் படிக்க நேர்ந்தது. இங்கே பாடத்திட்டம்தான் எழுவாய். அது ஒருமை. எனவே குறைக்கப்பட்டது என ஒருமையைப் பயன்படுத்துவதே சரி.

‘பாடத்திட்டத்தில் நான்கு பாடங்கள்’ என்று எழுதினால் ‘குறைக்கப்பட்டன’ எனப் பன்மையைப் பயன்படுத்தலாம். ஏனென்றால் இங்கே எழுவாய் மாறிவிடுகிறது.

வினைச்சொல்லில் ஒருமையை அல்லது பன்மையைப் பயன்படுத்துவது எழுவாயைப் பொறுத்தது. எழுவாய் எது என்பதை அடையாளம் கண்டுகொண்டால் இந்தக் குழப்பம் வரவே வராது.

(மேலும் அறிவோம்)

- அரவிந்தன்,

தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x