Published : 11 Dec 2015 09:44 AM
Last Updated : 11 Dec 2015 09:44 AM

அபாய சங்கு ஒலித்த அதிசய கல்மண்டப தொழில்நுட்பம்!

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு

*

வடக்கே ஓய்ந்த மழை தெற்கே வெளுத்துவிட்டு சென்றிருக்கிறது. தாமிரபரணி நதி கரைபுரண்டு ஓடுகிறது. ஆனால், அது எங்கும் கரை உடைக்கவில்லை. உயிர் குடிக்கவில்லை. வீடுகளை மூழ்கடிக்கவில்லை. இத்தனைக் கும் சென்னையில் பொங்கிய அடை யாற்றை விடவும் பல மடங்கு பெரியது தாமிரபரணி. ஓடும் தண்ணீரின் அளவும் மிக அதிகம். கடந்த 92-ம் ஆண்டு கடைசி யாக தாமிரபரணியில் வெள்ளம் வந்த போதுகூட, இன்றைய சென்னை அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஏன்?

ஊரை அழித்த தாமிரபரணி!

காரணம் மிக எளிமையானது. தாமிர பரணி நதிக் கரை மக்களின் வெள்ள நீர் மேலாண்மை பாரம்பரியம் மிக்கது. இன்றளவும் அவர்கள் ஆற்றை சிறப்பாக மேலாண்மை செய்கிறார்கள். தாமிரபரணி ஆற்றில் 18-ம் நூற்றாண்டில் பலமுறை வெள்ளம் வந்து ஊர்களை அழித்திருக் கிறது. 1810, 1827, 1869, 1874, 1877, 1895 ஆகிய ஆண்டுகளில் தாமிரபரணியில் பொங்கிய வெள்ளம் ஆழ்வார் திருநகரி, வைகுண்டம், கொங்கராயன்குறிச்சி ஆகிய ஊர்களை அழித்தது. வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. ஏராளமான மக்கள் உயிரிழந்தனர்.

பாடம் படித்த மக்கள்!

ஆனால், தாமிரபரணி நதிக்கரை மக்கள் அந்த வெள்ளத்தில் இருந்து பாடம் கற்றுக்கொண்டார்கள். நதிக்கரை எங்கும் வெள்ள நீர் வடிகால்களைக் கட்டினார்கள். கால்வாய்களை வெட்டினார்கள். மழைக் காலங்களில் ஆற்றின் வேகத்தை கட்டுப் படுத்தினார்கள். அதேபோல் குடியிருப்பு களும் ஆற்றின் இயல்புக்கு ஏற்ப அமைக் கப்பட்டன. சிந்துப்பூந்துறை, வண்ணார் பேட்டை, ஸ்ரீவைகுண்டம், கொங்கராயன் குறிச்சி, ஆழ்வார் திருநகரி, அம்பாச முத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன் மகாதேவி உட்பட ஏராளமான ஊர்கள் ஆற்றை ஒட்டியே இருக்கின்றன. சிந்துப் பூந்துறையில் ஆற்றில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தள்ளியே வீடுகளை அமைப்பது கட்டாயமாக்கப்பட்டது. அப்படி அமைக் கப்பட்ட வீடுகளும் சுமார் 10 படிகளுடன் உயரமாக அமைக்கப்பட்டன. ஆழ்வார் திருநகரி குடியிருப்புகளின் புழக்கடையே தாமிரபரணி ஆறுதான். வீடுகளின் முன்வாசல் வழியாக புழக்கடை பின்னால் ஓடும் ஆற்றைப் பார்க்க முடியும். வீடுகள் மட்டுமின்றி கோயில்களும் மடங்களும் அப்படியே கட்டப்பட்டுள்ளன. அந்த மக்கள் காலை எழுந்தது முதல் உறங்கப்போகும் வரை ஏதோ ஒரு வகையில் ஆற்றுடன் தொடர்பில் இருக்கிறார்கள். 18-ம் நூற்றாண்டுக்குப் பின்பு வெள்ளக் காலங்களில் புழக்கடையில் இருந்து மொண்டு எடுக்கும் அளவுக்குத் தண்ணீர் ஓடியிருக்கிறதே தவிர, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது இல்லை.

அபாய சங்கு ஊதிய கல்மண்டபம்!

சென்னையில் செயற்கைக்கோள்கள் விடுத்த வானிலை எச்சரிக்கையை அலட்சியம் செய்துவிட்டு இன்று நடுத் தெருவில் நிர்கதியாக நிற்கிறோம். ஆனால், தாமிரபரணியில் நமது முன்னோர் கள் அந்தக் காலத்திலேயே வெள்ள அபாயங்களை அறிவியல்பூர்வமாக அறிந்துக்கொண்டார்கள். ஆழ்வார் திருநகரி தாமிரபரணி ஆற்றின் நடுவே கல் மண்டபம் ஒன்று இருக்கிறது. அதனை சங்கு மண்டபம் என்று அழைக்கிறார்கள். மூன்று பக்கம் திறந்தவெளியுடன் பின் பக்கம் மட்டும் கல்சுவரால் அடைக்கப்பட்ட மண்டபம் அது. பின்பக்க கல் சுவரின் வெளிப்புற உச்சியில் சங்குபோன்ற அமைப்பு உள்ளது. ஆற்றில் வெள்ளம் வரும்போது அந்த மண்டபத்துக்குள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நீர் மட்டம் உயர்ந்தால், வெள்ளத்தின் இரைச்சலால் காற்று உந்தப்பட்டு அந்த சங்கு மிக சத்த மாக ஊதப்படும். இதன் மூலம் மக்கள் வெள்ள அபாயத்தை உணர்ந்து பாதுகாப் பாக இடம் பெயர்ந்தார்கள். கடந்த ஒரு நூற்றாண்டாக அந்த அளவுக்கு ஆற்றில் வெள்ளம் வராததால் இப்போது அந்த மண்டபத்தின் தொழில்நுட்ப கட்டமைப்பு எந்த நிலையில் இருக்கிறது என்று தெரியவில்லை. சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்து தொன்மையான அந்த மண்டபத்தைப் பாதுகாக்க வேண்டும்.

தாமிரபரணியில் ஆக்கிரமிப்புகள் இல்லையா என்று கேட்கலாம். ஆக்கிர மிக்கப்பட்டிருப்பது உண்மைதான். அவற்றை நியாயப்படுத்தவில்லை. ஆனாலும், அவை எல்லாம் தற்காலிக ஆக்கிரமிப்புகளே. செங்கல் சூளை வைத் தார்கள்; விவசாயம் செய்தார்கள். ஆற்றின் சங்கிலித் தொடர் ஏரிகள் ஆகாயத் தாமரை களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அடையாற்றைப் போல, கூவத்தைப் போல, சென்னையின் ஏரி களைப் போல தாமிரபரணியை யாரும் கூறு போட்டு விற்கவில்லை. அதன் ஏரிகளில் பட்டா போட்டு குடியிருப்புகளையும் பெரும் நிறுவனங்களையும் கட்டவில்லை. நகரங்களை நிர்மாணிக்கவில்லை. தாமிர பரணியில் வெள்ளம் வந்தால் தற்காலிக ஆக்கிரமிப்புகளை எல்லாம் ஆறே அழித்துவிடும். இதனால், மக்களுக்கு பெரியதாக பாதிப்புகள் எதுவும் இல்லை.

அடையாற்றை மீட்கலாம்!

அடையாற்றை இப்போது கூட அழகாக மீட்கலாம். அதனை சென்னையின் தாமிரபரணி ஆக்கலாம். அதற்கு Lands at - 1 செயற்கைக்கோள் உதவியோடு அடை யாற்றை பல் ஒளிக்கற்றைசார் தொலை வுணர்வுப் படங்கள் (Multi Spectral or Multi band remote sensing pictures) மூலம் அடையாளம் காண வேண்டும். இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் ஏற்கெனவே தமிழகத்தில் வைகை, காவிரி ஆறுகள் மற்றும் வடக்கே பிரம்மபுத்திரா பாய்ந்த பழைய இடங்கள் அடையாளம் காணப் பட்டுள்ளன. இதன் மூலம் ஆறு முற்றிலு மாக மண்ணுக்குள்ளேயே புதைந்திருந் தாலும்கூட எளிதாக அடையாளம் காண முடியும். எனவே, இந்தத் தொழில்நுட்பத் தின் அடிப்படையில் அடையாற்றின் உண்மையான பகுதிகளை அளவீடு செய்ய வேண்டும். பின்பு மொத்த ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும். ஆற்றின் நிலத்தை மீட்பதற்காக தனியாக ஆற்று நிலம் மீட்பு சட்டம் இயற்றப்பட வேண்டும். ஆற்றின் இரு கரைகளிலும் குறைந்தது 50 கிணறுகள் தோண்டப்பட வேண்டும். இவை கோடை காலத்தில் மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்திசெய்யும். மழைக் காலங்களில் வெள்ள நீர் போக்கியாக ஆற்றின் நீர் இந்தக் கிணறுகளில் விடப்படும். இதன் மூலம் சுற்றுவட்டாரங்களில் நிலத்தடி நீர் மட்டமும் உயரும். ஆற்றின் ஓரம் குடியிருப்பு அமைந்த பகுதிகளில் மட்டும் (சைதாப்பேட்டை போன்ற இடங்கள்) தடுப்புச் சுவர் எழுப்ப வேண்டும். மற்ற பகுதிகளில் எழுப்பினால் நிலத்தின் தண்ணீர் ஆற்றுக்குள் செல்வது தடுக்கப்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். ஆற்றின் முக்கிய இடங்களில் வெள்ள நீர் வடிகால்கள், கதவணைகள் அமைக்கப்பட வேண்டும். இப்படி திட்டங்கள் ஏராளாமாக இருக்கின்றன. அரசு அழைத்தால் ஓடோடி வந்து நிற்க நிபுணர்கள் காத்திருக்கிறார்கள். அதற்கு அரசு மனம் வைக்க வேண்டும். இப்படி எல்லாம் செய்தால் அடையாற்றை மீட்பதுடன் சென்னை நகரையும் வெள்ளத்தில் இருந்து காக்கலாம்!

(நீர் அடிக்கும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x