Published : 06 Mar 2016 10:08 AM
Last Updated : 06 Mar 2016 10:08 AM

அன்னைத் தமிழுக்கு ஹார்வர்டில் ஓர் இருக்கை! - ரூ.40 கோடி திரட்டும் முயற்சியில் ஒரு தமிழ் அர்ப்பணம்!

உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கிறது 350 ஆண்டுகள் பழமையான ஹார்வர்டு பல்கலைக்கழகம். அதில் 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ்மொழிக்கு இருக்கை அமையவிருக்கும் செய்தி, தமிழர்களை நெஞ்சம் நிமிர்த்த வைத்திருக்கிறது. தமிழர்க்கு இது எத்தனை பெருமை வாய்ந்தது என்பதையும் இதனால் உலக அரங்கில் தமிழுக்குக் கிடைக்கப்போகும் அங்கீகாரம் எப்படிப்பட்டது என்பதையும் எடுத்துக்கூறும் ‘ஹார்வர்டு தமிழ் இருக்கை கீதம்’, சென்னையில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.

ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமைய, ரூ.40 கோடி திரட்டும் முயற்சியில் தங்கள் பங்களிப்பைச் செலுத்த பெருமையுடன் முன்வரும்படி ‘தமிழால் இணைந்திருக்கும்’ அனைவரையும் அழைக்கிறது ‘தி இந்து’ தமிழ் நாளிதழ்.

தமிழுக்கு ஏன் இருக்கை?

தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழே அரசு மொழியாகக் கோலோச்சுகிறது. உலகம் முழுவதும் பரவியும் புலம்பெயர்ந்தும் வாழும் 8 கோடிக்கும் அதிகமான தமிழர்களின் தாய்மொழியாகவும், 2,500 ஆண்டுகள் தொன்மையான இலக்கிய வளமும் கொண்டு விளங்குகிறது தமிழ். இப்படிப்பட்ட தமிழ்மொழிக்கு “ஹார்வர்டில் தமிழ் இருக்கையை அமைத்தால் தமிழுக்குக் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்” என்கிறார் எழுத்தாளர் அப்பாத்துரை முத்துலிங்கம்.

இதுகுறித்து நம்மிடம் அவர் விவரிக்கிறார். “தமிழ் மொழி உலகின் 20 பெரிய மொழிகளுள் அடங்கு கிறது. அண்மையில் செம்மொழியாக வும் இந்திய அரசினால் அறிவிக்கப் பட்டுள்ளது. எனினும், உலக அளவில் தமிழ்மொழிக்கான அங்கீகாரம் போதிய அளவு கிடைக்கவில்லை. பன் னாட்டு ஆய்வாளர்களைக் கவர முடியா மையும், அதனால் உலகத் தரம் வாய்ந்த ஆய்வுகள் போதிய அளவில் தமிழில் மேற்கொள்ளப்படாமையும் இதற்கான காரணங்களில் அடங்கும்.

நமது பண்டைத் தமிழ் இலக்கியங்கள், உலக அங்கீகாரம் பெற்ற பிறமொழி இலக்கியங்களுக்கு நிகராக வெவ்வேறு கோணங்களில் ஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியம். அப்போதுதான் பிற பண்பாட்டினருடன் ஆய்வு முடிவு களைப் நாம் பகிர்ந்துகொள்ள முடியும். இது தமிழின் வளர்ச்சிக்கு முக்கியமானது.

பன்னாட்டு அளவில் முதன்மையான பல்கலைக்கழகங்களில் தமிழைக் கற்க வும், ஆய்வு செய்யவும் வாய்ப்பு ஏற்படும்போது இந்தப் போதாமைகள் சீர்செய்யப்படலாம். இந்த அடிப்படை யில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நிறுவப்படவுள்ள தமிழ் இருக்கையின் முக்கியத்துவத்தைத் தமிழர்களாகிய நாம் புரிந்துகொள்ள முடியும்

தமிழ் இருக்கையை அமைப்பது எப்படி?

உலக மக்களை ஈர்க்கும் வல்லமை கொண்ட தமிழுக்கு ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமைக்க என்ன வழிமுறை உள்ளது என்ற கேள்வி எழலாம். தகுதிமிக்க ஒரு பேராசிரியரைத் தேர்ந்தெடுக்கும் பல்கலைக்கழகம் அவரது தலைமையின் கீழ் தமிழ் இருக் கையை அமைக்கும். தேர்ச்சியும் திறமும் கொண்ட ஆசிரியர்களைப் பணிக்கு அமர்த்தி உலக சமுதாயத்துக்குச் தமிழைக் கற்றுக்கொடுக்கும்.

தமிழையும் அதன் இலக்கிய இலக்கணப் பரப்பையும் உயர் ஆய்வுகளுக்கு உட்படுத்தும். தமிழ் மொழியைப் பேசும் மக்களாகிய தமிழர்களின் கலை, பண்பாடு, வாழ்வியல், வரலாறு, தொல் லியல் ஆகிய தளங்களிலும் ஆய்வுகளை ஊக்கப்படுத்தும். ஆய்வு முடிவுகள் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டு அவை சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப் படும். ‘உலகுக்கே பொதுவான ஒரு தமிழ் இருக்கை’ மூலம்தான் இந்தப் பணிகளை உலகறிச்செய்ய முடியும். அதற்கான ஒன்றாகவே ஹார்வர்டு தமிழ் இருக்கை அமையவிருக்கிறது” என்கிறார் அப்பாத்துரை முத்துலிங்கம்.

முதல் விதை

தமிழ் இருக்கைக்கான முதல் விதை ஓர் இலக்கிய விழாவில் பதியமிடப்பட்டது. அமெரிக்காவின் ஹவாய் தீவில் வசிக்கும் வைதேகி ஹெர்பர்ட் 18 சங்க நூல்களையும் ஆங்கிலத் துக்கு மொழிபெயர்த்தவர். இவரைப் பாராட்ட எடுக்கப்பட்ட விழா வொன்றில் வைதேகியும், அமெரிக்காவில் வசிக்கும் மருத்துவர் விஜய் ஜானகிராமனும் பேசிக்கொண்ட போது ஹார்வர்டில் தமிழ் இருக்கை ஒன்றை அமைக்கும் எண்ணம் உரு வானது.

தொடர் முயற்சியால் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தெற்காசியக் கற்கைகள் (Department of South Asian Studies) துறைத் தலைவரைச் சந்தித்துப் பேசுவதற்கான அழைப்புக் கிடைத்தது. ஜானகிராமனும், அவரது நண்பரான திருஞானசம்பந்தமும் சந்திப்பில் கலந்துகொண்டனர். தொடர் பேச்சு வார்த்தையின் மூலம் தமிழுக்கு ஓர் இருக்கையை நிறுவ ஹார்வர்டு பல்கலைக் கழகம் முன்வந்தது. இந்தச் செய்தியை, ‘தமிழுக்கு ஓர் இருக்கை’ என்ற கட்டுரை மூலம் தன் வாசகர்களுக்கு உடனடியாக எடுத்துச் சென்றது ‘தி இந்து’ நாளிதழ்.

தஞ்சையிலிருந்து…

முன்னாள் மத்திய நிதித்துறை இணைஅமைச்சரும், திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பின ருமான எஸ்.எஸ். பழநிமாணிக்கம், “உலகின் மிகச்சிறந்த ஹார்வர்டு பல் கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கென்று ஓர் இருக்கை அமைவது மிகவும் பெரு மையான விஷயம் மட்டுமல்ல; மிகவும் அவசியமானதும் கூட.

உலகெங்கும் வசிக்கும் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் களிடம் முகநூல், ட்விட்டர், வாட்ஸ்அப் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி நிதி உதவி பெற்றுத் தரவும், எனது பங்காக ஒரு தொகையை வழங்கவும் தயாராக இருக்கிறேன். இதை, ‘தி இந்து’ நாளிதழ் இயக்கமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும்” என்று கேட்டுக் கொண்டவர், “நிதி உதவி அளித்தவர் களின் பெயர் பட்டியலை ‘தி இந்து’ நாளிதழ் உடனுக்குடன் வெளியிட்டு அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எவ்வளவு தேவை?

தமிழுக்கான இந்த இருக்கை, தமிழ் மக்களால் வழங்கப்படவிருக்கும் 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.40 கோடி) நன்கொடை மூலம் அமைக் கப்படவுள்ளது. இந்தத் தொகையில் இருந்து ஜானகிராமனும், திருஞான சம்பந்தமும் தனித்தனியே 500,000 அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர். மீதமுள்ள தொகையை உலகெங்கும் வாழும் தமிழர்களிடம் இருந்தும், நிறுவனங்களிடம் இருந்தும் திரட்ட முயற்சிகள் தற்போது மேற் கொள்ளப்பட்டுள்ளன.

இதற்காக ‘தமிழ் இருக்கை இங்க்’ (Tamil Chair Inc) ஒன்று உருவாக் கப்பட்டுள்ளது. இது லாப நோக்கற்ற நிறுவனம். இந்நிறு வனத்தின் தற்போதைய ஆட்சிக்குழு உறுப்பினர்களாக மருத்துவர் விஜய் ஜானகிராமன், மருத்துவர் சுந்தரேசன் சம்பந்தம், திருமதி வைதேகி ஹெர்பெர்ட், பால் பாண்டியன், எழுத் தாளர் அப்பாதுரை முத்துலிங்கம், முனை வர் சொர்ணம் சங்கர், குமார் குமரப்பன், முனைவர் ஆறுமுகம் முருகன் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

வாரம் ஒருமுறை கலந்துரையாடும் இவர்கள், தமிழ் இருக்கை அமைவதற்கான தொடர்ச்சியான பணிகள், பல்கலை நிர்வாகத்துடனான தொடர்பையும் பேச்சு வார்த்தைகளையும் பேணுதல் ஆகிய பணிகளுடன் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடம் இருந்து நன்கொடை களைப் பெறும் வழிமுறைகள் குறித்து உரையாடுகின்றனர். இந்த நடவடிக்கை களை ஊடகங்கள் வழியே தமிழர்கள் மத்தியில் எடுத்துச்செல்லும் பணியை எழுத்தாளர் அப்பாத்துரை முத்துலிங்கம் செய்து வருகிறார். இவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் பெருமை கொள்கிறது.

நமது பணி என்ன?

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் அரியணையில் அன்னைத் தமிழை அமரவைக்க இயன்ற நன்கொடைகளை அளிக்க, தனி மனிதர்கள், தனியார் நிறுவனங்கள், பிரபலங்கள், கல்லூரிகள் என எவரும் முன்வரலாம்.

தமிழ் இருக்கைக்கென தொடங்கப்பட்டிருக்கும் ஹார்வர்ட் வங்கிக் கணக்கு, கிரவுட் ஃபண்டிங் வங்கிக் கணக்கு ஆகியவற்றில் இண்டர் நெட் வழியாக நேரடியாக நன்கொடை களைச் செலுத்தலாம். காசோலை, ஈ-டிரான்ஸ்ஃபர் ஆகியவற்றின் மூலம் நன்கொடையாகச் செலுத்தப்படும் பணம் ஹார்வர்டு தமிழ் இருக்கைக் கணக்கில் நேரடியாகச் சென்று சேரும்.

யார் எவ்வளவு நிதியளித்தார்கள் என்ற விபரம் தமிழ் இருக்கைக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். யார் எவ்வளவு நிதியளித்தார்கள் என்ற விவரத்தை நன்கொடையாளர்கள் பெட்டிச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கும் தெரிவித்தால் அந்த விவரம் 'தி இந்து' தமிழ் நாளிதழிலும் வெளியிடப்படும்.



ஹார்வர்டு எனும் உலகத்தரம்

ஐக்கிய அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்தில் 1636-ம் ஆண்டு தொடங்கப்பட்ட உலகின் முன்னோடி பல்கலைக்கழகம் ஹார்வர்டு. உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் உலகத்தர வரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்துவருகிறது. இங்கு இல்லாத துறைகளே இல்லை; மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளுக்கு எல்லை என்பதும் இல்லை என்று கூறத்தக்க அளவில், ஆராய்ச்சிகளுக்குக் கிள்ளிக்கொடுக்காமல், மில்லியன்களில் டாலர்களை அள்ளிக்கொடுக்கிறது ஹார்வர்டு.

இங்கே மேற்கொள்ளப்பட்டு நிரூபிக்கப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளை, ஹார்வர்டு பல்கலைக்கழகம் வெளியிடும்போது அவற்றை உலக சமுதாயம் ஒருமனதாக ஏற்றுக்கொள்வது கடந்தகால, நிகழ்கால வரலாறாகும். இப்பல்கலையின் முன்னாள் மாணவர்கள், இங்கே பயிற்றுவித்த ஆசியர்கள் ஆகியோரில் 47 பேர், கடந்த நூறாண்டுகளில் உலகின் உயரிய நோபல் விருதைப் பெற்றிருக்கிறார்கள். ஹார்வர்டின் தனிச்சிறப்பாக அனைவரும் கூறுவது ‘வேற்றுமையில் ஒற்றுமை’. அப்படிப்பட்ட ஹார்வர்டில்தான் தமிழுக்கு முதல்முறையாக இருக்கை அமைய இருக்கிறது.



பிற மொழியினரையும் ஈர்க்கும் வளம்

“ஜொனாதன் ரிப்ளி என்ற அமெரிக்க வெள்ளையர், தனது 19-வது வயதில் ஆங்கில இலக்கியம் பயில ஹார்வர்டில் சேருகிறார். பல்கலைக்கழக நிகழ்வொன்றில் தமிழ்ப் பாடல் (ஆழ்வார் பாசுரம்) ஒன்றைக் கேட்டவர், ‘நான் தமிழ் கற்றே ஆகவேண்டும்’ என்ற முடிவுக்கு வருகிறார். உடனடியாக மதுரைக்கு வந்து நான்கு ஆண்டுகள் தமிழைக் கற்றுத் திரும்பினார்.

தற்போது தமிழை விரும்பிக்கற்க வரும் பன்னாட்டு மாணவர்களுக்கு ஹார்வர்டில் தமிழ்த் தொடக்கக் கல்வியை பயிற்றுவிக்கும் ஆசியராக இவர் பணியாற்றுகிறார். இதே ஹார்வர்டில் 18 மொழிகள் கற்றறிந்த ஒரு மொழியியல் அறிஞர். ‘‘தமிழ் இத்தனை இனிமையான மொழி என எனக்கு முன்பே தெரிந்திருந்தால் அதையே முதல் மொழியாகக் கற்றிருப்பேன்'’ என்கிறார்.



தமிழ் இருக்கை கீதம்

- பழநிபாரதி

தமிழ் இருக்கைக்கான விழிப்புணர்வை உருவாக்க ‘ஹார்வர்டு தமிழ் இருக்கை கீதம்’ ஒன்றை இசையமைத்துத் தரும்படி இசையமைப்பாளர் தாஜ்நூரைக் கேட்டுக்கொண்டது ‘தமிழ் இருக்கை இங்க்’ ஆட்சிக்குழு. அதைப் பெருமையுடன் ஏற்று, எவ்விதக் கட்டணமும் பெற்றுக்கொள்ளாமல் பாரம்பரிய தமிழ் வாத்தியங்களைக் கொண்டு ‘லைவ்’ இசையுடன் மெட்டமைத்திருக்கிறார். தாஜ்நூரைப் போலவே ஊதியம் பெற மறுத்து இந்தப் பாடலுக்கான வரிகளை எழுதியிருக்கிறார் கவிஞர் பழநிபாரதி.

இந்தப் பாடலின் ஒலிப்பதிவையும் ஒலிக்கலவையையும் கட்டணமின்றி செய்துகொடுத்திருக்கிறார் பிரபல சவுண்ட் இன்ஜினீயர் சத்யா. `தி இந்து' தமிழ் நாளிதழின் அழைப்பை ஏற்று, இந்தப் பாடலில் இடம்பெறும் கம்பீரமான ஆண்குரலுக்கு விருப்பமுடன் முன்வந்து ஊதியம் பெறாமல் பாடிக்கொடுத்திருக்கிறார் பிரபலப் பாடகர் சீர்காழி சிவசிதம்பரம்.



நன்கொடைக்கு மரியாதை!

தமிழ் இருக்கை அமைய நன்கொடை அளிப்போருக்கு நேரடியாகப் பாராட்டுச் சான்றிதழை அவர்களது வீட்டு முகவரிக்கே அனுப்பி வைக்கிறது ஹார்வர்டு பல்கலைக் கழக நிர்வாகம். இந்தச் சான்றிதழ்கள் நன்கொடையா ளர்கள் தங்களது வருங்காலத் தலைமுறைகளுக்கு விட்டுச் செல்லும் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்களாகும்.



நன்கொடை செலுத்துவது எப்படி?

நன்கொடைகளை நேரடியாகச் செலுத்த >http://harvardtamilchair.com என்ற இணையதளத்துக்குச் செல்லுங்கள். அவ்வாறு செலுத்திய விவரத்தை harvardtamil@thehindutamil.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள். தமிழால் இணைந்த நாம் தமிழை உலகறியச் செய்யும் ஹார்வர்டு தமிழ் இருக்கைக்குத் தாராளமாக உதவிக்கரம் நீட்டுவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x