Last Updated : 25 Feb, 2016 08:52 AM

 

Published : 25 Feb 2016 08:52 AM
Last Updated : 25 Feb 2016 08:52 AM

அண்டவெளியில் பூமிக்கோர் அண்ணன்

பூமியைப் போன்ற கிரகங்களைக் கண்டுபிடிக்கும் முயற்சி தொடர்ந்துகொண்டே இருக்கும்

மிகப்பெரிய டெலஸ்கோப்பே ஒரு செயற்கைக்கோளாக மாற்றப்பட்டு வானில் மிக உயரத்தில் பறந்து கொண்டி ருக்கிறது. அதுதான் கெப்ளர் விண்ணோக்கி செயற்கைக்கோள். வானில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான நட்சத்திரங்களை ஆராய்ந்து இரண்டு ஆயிரத்துக்கும் அதிகமான கிரகங்களை அது கண்டுபிடித்துள்ளது. ஆனால் அவற்றில் நான்கு மட்டுமே சம்பந்தப்பட்ட நட்சத்திரத்திலிருந்து உகந்த தொலைவில் உள்ளன. இந்த நான்கில் எதுவுமே பூமியின் அளவில் இல்லை. மூன்று கிரகங்கள் பூமியை விட சற்று பெரியவை. நான்காவது கிரகம் பூமியை விட மிகவும் பெரியது. இவற்றில் ஒரு கிரகத்தைச் சில நிபுணர்கள் ‘பூமியின் அண்ணன்’ என்று வர்ணிக்கின்றனர். ஆனாலும் இந்த கிரகத்துக்குப் பூமிக்கு உரிய ‘லட்சணங்கள்’ எதுவும் இல்லை.

இல்லை ஆனால் இருக்கலாம்

வேறுவிதமாகச் சொல்வதானால் இதுவரை பூமி மாதிரியான கிரகம் ஒன்றுகூடக் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும், இதனால் மனம் தளர வேண்டிய அவசியம் இல்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அண்டவெளியில் பூமியைப்போன்ற கிரகம் உள்ளதா என்று நாம் கடந்த சில ஆண்டுகளாகத்தான் தீவிரமாகத் தேடி வருகிறோம். பறக்கும் டெலஸ்கோப்பான கெப்ளர், அண்டவெளியின் குறிப்பிட்ட சிறு பகுதியில் மட்டும்தான் தேடி வருகிறது. ஆகவே, இதுவரை நடந்துள்ள தேடலை வைத்து பூமி மாதிரியான கிரகம் அண்டவெளியில் வேறு எங்கும் இல்லை என்ற முடிவுக்கு நாம் வந்து விட முடியாது என்று விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.

வானில் உள்ள நட்சத்திரங்களை மொத்தம் 88 ராசிகளாகப் பிரித்துள்ளனர். கெப்ளர் டெலஸ்கோப் அவற்றில் மூன்று ராசிகளில் மட்டும்தான் கிரகங்களைத் தேடி வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

கெப்ளரின் சொத்து

கெப்ளரின் தேட்டம் பற்றிய புள்ளி விவரங்களைக் கூறுவதானால் 2016 பிப்ரவரி முதல் வார நிலவரப்படி 2,056 கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை வெவ்வேறு நட்சத்திரங்களைச் சுற்றி வருபவை. இவை தவிர, சுமார் 4,700 உத்தேசமான கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அனேகமாக கிரகங்களாக இருக்கலாம் என்ற கருத்தில் ‘உத்தேச’ கிரகங்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. கெப்ளர் அனுப்பிய தகவல்களை ஆராயும் விஞ்ஞானிகள் இந்த உத்தேச கிரகங்கள் பற்றிய விவரங்களை நுணுக்கமாக ஆராய்ந்துவருகின்றனர்.

கெப்ளர் செயற்கைக்கோள் எவ்விதம் கிரகங்களைக் கண்டுபிடித்துவருகிறது என்பதை முந்தைய கட்டுரைகளில் கவனித்தோம். கெப்ளர் தனது ஆராய்ச்சிகளின்போது நிறைய தகவல்களைச் சேகரித்தது. குறிப்பிட்ட கிரகம் அது சுற்றி வருகின்ற நட்சத்திரத்திலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது, அந்த கிரகத்தின் சுற்றுப்பாதை, அந்த நட்சத்திரத்தை ஒரு தடவை சுற்றி முடிக்க எவ்வளவு நாட்கள் ஆகின்றன, கிரகத்தின் நிறை, அதன் குறுக்களவு, அதன் அடர்த்தி, நட்சத்திரத்தின் நிறை, அந்த நட்சத்திரத்தின் வெளிப்புற வெப்பம் இப்படியாக பல தகவல்களைச் சேகரித்து வந்துள்ளது.

ஆகவே கெப்ளர் செயற்கைக்கோளின் ஆயுட்காலமே முடிந்தாலும் அது சேகரித்து அனுப்பியுள்ள தகவல்களை நிபுணர்கள் பகுத்தாராயும்போது பல புதிய கண்டுபிடிப்புகள் வெளியாகலாம்.

இங்கு ஒன்றைக் குறிப்பிட வேண்டும். அண்டவெளியில் எங்கோ இருக்கின்ற நட்சத்திரங்களுக்குக் கிரகங்கள் உள்ளனவா என்று தேடும் பணியை கெப்ளர் தான் முதன் முதலில் ஆரம்பித்து வைத்ததாகக் கூற முடியாது. 25 ஆண்டுகளுக்கு முன்பே இது தொடங்கிவிட்டது. தரையில் அமைந்த டெலஸ்கோப்புகள்தான் இதைத் தொடங்கி வைத்தன. 1995-ல் முதலாவது கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது. அது வியாழன் அளவுக்குப் பெரியது.

பின்னர் 2006-ல் ஐரோப்பிய விண்வெளி அமைப்பு ‘காரோட்’ எனும் செயற்கைக்கோளைச் செலுத்தியது. அது சில ஆண்டுக்காலம் செயல்பட்டு 32 கிரகங்களைக் கண்டுபிடித்தது. இவற்றில் எதுவும் பூமி மாதிரியானது அல்ல. எல்லாமே வியாழனை விடப் பெரியவை.

மறைக்கும் தந்திரம்

இதற்கிடையே பூமியிலிருந்தே டெலஸ்கோப்புகள் மூலம் கிரகங்களைக் கண்டுபிடிப்பதில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் இத்தனை காலமாக இருந்து வந்துள்ள பெரிய பிரச்சினை நட்சத்திரத்தின் பிரகாசம். ஒரு மேஜையில் பிரகாசமான பெட்ரோமாக்ஸ் விளக்கு வைக்கப்பட்டுள்ளது. அதன் அருகே யாராவது நின்றால் அந்த விளக்கின் பிரகாசம் காரணமாக அவரது முகம் தெளிவாகத் தெரியாது அல்லவா? நாம் ஒரு கையால் பெட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்தை மறைத்துக் கொண்டு பார்த்தால் அருகே நிற்பவரின் முகம் தெளிவாகத் தெரியும்.

அதுபோலத்தான், நட்சத்திரத்தை மறைத்து அருகே இருக்கின்ற கிரகம் மட்டும் தெரிகின்ற வகையிலான உத்தி இப்போது கையாளப்படுகிறது. தென் அமெரிக்காவில் சிலி நாட்டில் உள்ள ஜெமினி சவுத் டெலஸ்கோப்பில் இவ்வித ஏற்பாடு பின்பற்றப்படுகிறது. ஆனாலும் இப்போதைக்கு இது வியாழன் போன்ற பெரிய கிரகங்களைக் கண்டுபிடிப்பதற்கு மட்டுமே பயன்படுவதாக உள்ளது. பூமி மாதிரி சிறிய கிரகங்களையும் இவ்வித முறையில் கண்டுபிடிப்பதற்கான வழிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

காரோட் செயற்கைக்கோளின் பணி ஏற்கெனவே முடிந்து விட்டது. கெப்ளரின் பணியும் விரைவில் முடிந்து விடும் என்ற நிலைதான். அதனால், அண்டவெளியில் உள்ள கிரகங்களை, குறிப்பாக பூமி மாதிரி கிரகங்களைக் கண்டுபிடிக்கும் முயற்சி நின்று போய் விடும் என்று நினைக்கக்கூடாது.

அதிகரிக்கும் செயற்கைக் கோள்கள்

கெப்ளர் குறிப்பாக, மங்கலான, அத்துடன் மிகத் தொலைவில் உள்ள நட்சத்திரங்களை ஆராய்ந்து வந்துள்ளது. அடுத்ததாக ‘டெஸ்’ எனப்படும் ஒரு பறக்கும் டெலஸ்கோப் 2017-ல் உயரே செலுத்தப்பட இருக்கிறது. இது ஒப்பீட்டளவில் பக்கத்தில் உள்ள, அத்துடன் பிரகாசமான நட்சத்திரங்களை ஆராய்ந்து அவற்றைச் சுற்றும் கிரகங்களைத் தேடும். வானில் குறிப்பிட்ட சிறிய பகுதியைத் தான் கெப்ளர் ஆராய்ந்தது. ‘டெஸ்’ டெலஸ்கோப் வானம் முழுவதையும் ஆராய்வதாக இருக்கும். அது முதல் இரண்டு ஆண்டுகளில் ஆயிரம் கிரகங்களைக் கண்டுபிடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தவிர, ‘எக்சோபிளானட்சாட்’ என்னும் ஒரு செயற்கைக்கோளும் செலுத்தப்பட இருக்கிறது. இந்த செயற்கைக்கோள் உயரே சென்றதும் அதிலிருந்து பல நுண் செயற்கைக்கோள்கள் வெளிப்படும். இவை ஒவ்வொன்றும் தனித்தனியே சென்று நமது சூரியனைப் போன்ற நட்சத்திரங்களை ஆராயும்.

செவ்வாய் பயணம்

ஐரோப்பிய விண்வெளி அமைப்பு 30 மீட்டர் குறுக்களவுள்ள பிரதிபலிப்புக் கண்ணாடியுடன் கூடிய டெலஸ்கோப்பைத் தயாரித்துள்ளது. தென் அமெரிக்காவில் அடகாமா பாலைவனத்தில் அதை நிறுவ இருக்கிறது. 20 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கக்கூடிய பூமி மாதிரி கிரகங்களையும் இதன் மூலம் கண்டுபிடித்துவிடலாம். இது 2020-ம் ஆண்டுவாக்கில் செயல்படத் தொடங்கும். இவ்விதமாக பூமி மாதிரிக் கிரகங்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நீடிக்கும்.

எதிர்காலத்தில் பூமி மாதிரி ஒரு கிரகம் கண்டுபிடிக்கப் படுவதாக வைத்துக்கொள்வோம். நம்மால் ஒரு விண்கலம் மூலம் அந்த கிரகத்துக்குச் சென்று பார்க்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. இப்போது நம்மிடம் உள்ள தொழில்நுட்பத்தை வைத்துச் சொல்வதானால் அதற்கு வாய்ப்பு இல்லை. சொல்லப் போனால் நமது பக்கத்து வீடு என்று சொல்லத்தக்க செவ்வாய் கிரகத்துக்குப் போய்விட்டு வருவதற்கே இன்னும் பல பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.

விஞ்ஞானிகள் எப்போதும் இது சாத்தியமே இல்லை என்று எதையுமே ஒதுக்கித் தள்ளுவதில்லை. பல ஆண்டுக்காலம் பிடிக்கக்கூடிய நீண்ட அண்டவெளிப் பயணம் செய்வதில் உள்ள பிரச்சினைகள் பற்றி ஏற்கெனவே ஆய்வுகள் நடந்து வருகின்றன.

- என். ராமதுரை, மூத்த எழுத்தாளர்,

தொடர்புக்கு: nramadurai@gmail.com

வியாழன்தோறும் தொடர்வோம்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x