Last Updated : 17 Jun, 2016 09:32 AM

 

Published : 17 Jun 2016 09:32 AM
Last Updated : 17 Jun 2016 09:32 AM

அணு ஆயுதப் பரவல் தடைச் சங்கத்தில் சேரும் முன்..

அணு ஆயுத விநியோகஸ்தர்கள் சங்கத்தில் (என்.எஸ்.ஜி.) சேர விருப்பம் தெரிவித்து இந்தியா அளித்துள்ள மனுவைப் பரிசீலிக்க, அந்தச் சங்கத்தின் சிறப்புக் கூட்டம் வியன்னா நகரில் கடந்த வாரம் நடந்தது. முடிவு எதையும் எடுக்காமல் கூட்டம் முடிந்தது. சியோல் நகரில் இம்மாதம் 21-24-ல் நடைபெறும் உச்சி மாநாட்டில் மீண்டும் இக்கோரிக்கையைப் பரிசீலிக்க முடிவெடுக்கப்பட்டது.

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது பொக்ரானில் இந்தியா நடத்திய முதல் அணுகுண்டு வெடிப்பு சோதனையை அடுத்து 1974-ல் என்.எஸ்.ஜி. அமைப்பு தோன்றியது. அப்போது இதற்குப் பெயர் ‘லண்டன் சங்கம்’என்பதுதான். அமெரிக்கா, சோவியத் ஒன்றியம், பிரிட்டன், பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகியவை உறுப்பினர்கள். அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தை (என்.பி.டி.) யாரும் தீவிரமாகக் கடைப்பிடிப்பதில்லை என்று உணர்ந்த லண்டன் சங்கம், அணு ஆயுதம் தொடர்பாக எதையும் ஏற்றுமதி செய்வதற்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் வழிகாட்டு நெறிகளை உருவாக்கியது. (அணு ஆயுதப் பரவல் தடை உடன்பாட்டில் கையெழுத்திடாத பிரான்ஸ், அணுசக்தி உற்பத்தித் தொழில்நுட்பத்தை ஏற்றுமதி செய்துவந்தது. முதலில் பாகிஸ்தானுக்கு அளித்த பிரான்ஸ் பிறகு அதை ரத்து செய்தது.)

ஏழு நாடுகளோடு லண்டன் சங்கமாக உருவான இந்த அமைப்பில், இப்போது 48 நாடுகள் உறுப்பினர்கள். இதை சங்கமாகக் கருதக் கூடாது என்பதால், இதன் உறுப்பு நாடுகளை ‘பங்கேற்கும் நாடுகள்’என்று அழைக்கின்றனர்.

தொடக்க காலத்துக்குப் பிறகு என்.எஸ்.ஜி. உறக்கத்தில் ஆழ்ந்தது. 1977 முதல் 1991 வரை கூடாமலேயே இருந்தது. வளைகுடா நாடுகளுக்கு இடையிலான போருக்குப் பிறகு, இராக்கிடம் அணு ஆயுதம் இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து என்.எஸ்.ஜி. சோம்பல் கலைந்து எழுந்தது. அப்போது 26 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாகப் பெருத்திருந்தது. இராக்கின் திட்டங்களுக்கு உதவிய இரட்டைப் பயன்பாட்டுச் சாதனங்களுக்கும் தொழில்நுட்பங்களுக்கும் கட்டுப்பாடுகளை விதித்தது. (இரட்டைப் பயன்பாடு என்றால், மக்கள் பயன்பாட்டுக்கான மின் ஆற்றலைத் தயாரிப்பதுடன், துணைப் பொருட்களைக் கொண்டு அணு ஆயுதமும் தயாரிப்பது. இரட்டைத் தொழில்நுட்பமும் அதுவே.)

அடுத்ததாக, அணு ஆயுதங்களைத் தயாரிக்காத நாடுகள் அணுஆயுதத் தயாரிப்பு தொழில்நுட்பத்தையும் சாதனங்களையும் தயாரித்துவிட முடியாதபடிக்கு முழு அளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதற்குப் பிறகு, என்.எஸ்.ஜி. தொடர்ந்து கொள்கை வகுப்புக்காகவும் தொழில்நுட்பங்களை ஆய்வு செய்வதற்காகவும் சந்திக்கத் தொடங்கியது. சட்டரீதியாகப் பார்க்கும்போது, அணு ஆயுதப் பெருக்கம் கூடாது என்று கருதுவதில் ஒரே கருத்துள்ள நாடுகளின் அமைப்பாகச் செயல்பட்டது. எந்த முடிவையும் கருத்தொற்றுமை அடிப்படையில் எடுத்தது. அணு ஆயுதத் தயாரிப்புக்கு உதவக்கூடிய எதையும் ஏற்றுமதி செய்யக் கூடாது என்று கட்டுப்பாடுகளை விதித்தது.

இந்தியாவின் நீண்ட பயணம்

இந்தியா என்.எஸ்.ஜி.யில் உறுப்பினராக இல்லாவிட்டாலும் எப்போதுமே அதற்கு அந்நியமாக இருந்ததில்லை. அணு ஆயுதம் பரவ இடம் தரக் கூடாது என்பதில் இந்தியா கடுமையான விரதத்தை அனுசரித்துவந்திருக்கிறது. தெரியாமல்கூட அணு ஆயுதத் தயாரிப்புக்கான பொருட்கள், கருவிகள், தொழில்நுட்பம் ஏற்றுமதியாகிவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறது.

1998-ல் மீண்டும் ஒரு முறை அணுகுண்டு வெடித்து சோதனை நிகழ்த்தி ‘அணு ஆயுத நாடு’என்ற பெயரைப் பெற்ற பிறகு, தன்னுடைய அமைப்புகளையே இறுக்கமாக முடுக்கும் வகையில் புதிய சட்டங்களை இயற்றியதுடன், தொடர்ந்து பத்தாண்டுகளுக்கு அதைத் தீவிரமாக அனுசரித்துவந்தது. என்.எஸ்.ஜி. அமைப்பு கூறும் வழிகாட்டு நெறிகளைத் தானாகவே கடைப்பிடித்தது. 5 ஆண்டுகளுக்கும் மேல் என்.எஸ்.ஜி.யில் உறுப்பினராகச் சேர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவந்துள்ளது. இறுதியாகவே அந்தக் குழுவில் உறுப்பினராகச் சேர விண்ணப்பித்தது.

1998 முதல் இந்தியா, அமெரிக்கா இடையிலான பேச்சு மூன்று கட்டங்களில் நடந்தது. முதல் கட்டத்தில், இந்தியா மீது அமெரிக்காவும் பிற நாடுகளும் விதித்த தடைகளை விலக்கக் கோரி பேச்சு நடந்தது. 2003-ல் இந்த நோக்கத்தில் பெரும்பகுதி நிறைவேறியது. பாதுகாப்பு அடிப்படையிலான புரிந்துணர்வு அடுத்தகட்ட கூட்டுச் செயல்பாட்டுக்கு இட்டுச் சென்றது. பிரதமர் வாஜ்பாய் - அதிபர் ஜார்ஜ் புஷ் ஆட்சிக் காலத்தில் இது சாத்தியமானது.

இது முடிவுற்றதும் பிரதமர் மன்மோகன் சிங் - அதிபர் ஜார்ஜ் புஷ் ஆகியோர் இரு நாடுகளுக்கும் இடையில் மக்கள் பயன்பாட்டுக்கான அணுசக்தித் தயாரிப்பில் ஒத்துழைக்க முடிவெடுத்தனர். இதற்கு அமெரிக்கச் சட்டத்தைத் திருத்துவது அவசியமாயிற்று. அதற்காக என்.எஸ்.ஜி.யின் வழிகாட்டு நெறிகளையும் திருத்த வேண்டியிருந்தது. காரணம், அணு ஆயுதத் தயாரிப்பு நாடு என்ற நிலையில் இருப்பதால், இந்தியாவால் அமெரிக்கா விதிக்கும் முழு அளவிலான பாதுகாப்பு நிபந்தனைகளைப் பின்பற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இந்த மூன்றாவது கட்டத்தைக் கடக்க 3 ஆண்டுகள் ஆயின. 2008-ல் இந்தியாவுக்காகத் தனிச் சலுகையாக ஒரு விதிவிலக்குப் பிரிவு சேர்க்கப்பட்டது. அதனால் மக்கள் பயன்பாட்டுக்கு அணுசக்தியைப் பயன்படுத்துவது தொடர்பான ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டன. அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகளுடன் புதிய அணுமின் ஆலைகளை நிறுவுவதற்கும், யுரேனிய எரிபொருளை வழங்குவதற்கும் நீண்ட கால அடிப்படையில் ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டன.

சுமார் 12 நாடுகளுடன் இந்தியா இத்தகைய ஒப்பந்தங் களைச் செய்துகொண்டிருக்கிறது. அணு ஆயுதங்கள் பரவ இடம் தந்துவிடக் கூடாது என்பதில் இந்தியா காட்டிய அக்கறை யாலும் அதன் சுய கட்டுப்பாட்டாலும்தான் அதற்கு மட்டும் விதிவிலக்கு தரும் பிரிவைச் சேர்க்க முடிந்தது. அரசியல் ரீதியாக அமெரிக்கா எடுத்த அம்முடிவை ரஷ்யா, பிரான்ஸ் இரண்டும் ஆதரித்தன. அதிபர் புஷ்ஷும் அவருடைய அரசின் மூத்த அமைச்சர்களும் என்.எஸ்.ஜி.யின் பல உறுப்பு நாடுகளுக்கும் தொலைபேசியில் பேசி அந்த விதிவிலக்குக்கு ஆதரவு திரட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாயைக்கு முற்றுப்புள்ளி

அணுஆயுதப் பரவல் தடை அமைப்பின் வெளிவட்டாரப் பிரதிநிதி என்றே இந்தியா கருதப்பட்டது. வெளிநாடுகளுக்கு அணு ஆயுதம், ஏவுகணைத் தொழில்நுட்பம் ஆகியவற்றை ஏற்றுமதி செய்யக் கூடிய நாடு என்றும் கருதப்பட்டது. இந்தத் தவறான எண்ணங்களைப் போக்க அணு ஆயுத விநியோக நாடுகள் அமைப்பிலும் (என்.எஸ்.ஜி.) ஏவுகணைத் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு அமைப்பிலும் (எம்.டி.சி.ஆர்.) சேரத் தயார் என்று இந்தியா அறிவித்தது. அத்துடன் ரசாயன, உயிரி ஆயுதங்களின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தும் ஆஸ்திரேலிய அமைப்பிலும் இரட்டைத் தொழில்நுட்பம், இரட்டைப் பயன்பாட்டுப் பொருட்கள் ஏற்றுமதியைத் தடை செய்யும் வாசிநார் ஏற்பாட்டிலும்கூட கையெழுத்திடத் தயார் என்று அறிவித்தது.

இந்தியாவின் முடிவை அமெரிக்கா ஆதரித்தது. என்.எஸ்.ஜி.யின் வழிகாட்டு நெறிகளைத் தானாகவே கடைப்பிடிக்கும் இந்தியா, முறைப்படி அக்குழுவில் சேர்க்கப்பட்டால் சட்டபூர்வமான கட்டளைக்கிணங்க அதைச் செயல்படுத்த வேண்டிய நாடாகும்.

இந்தியா போன்ற நாடுகளின் விண்ணப்பங்களைப் பரிசீலிக்க என்.எஸ்.ஜி. சில அடிப்படை இலக்கணங்களை வைத்திருக்கிறது. என்.எஸ்.ஜி.யின் கட்டுப்பாட்டில் உள்ள பட்டியலில் இருக்கும் பொருட்களைத் தேவைப்படும் நேரத்தில் அளிக்கும் ஆற்றல் இருக்க வேண்டும். என்.எஸ்.ஜி.யின் வழிகாட்டு நெறிகளின்படி செயல்பட வேண்டும். சட்டப்படியான ஏற்றுமதி கட்டுப்பாட்டு அமைப்பு இருக்க வேண்டும். அணு ஆயுதங்களைப் பரவவிடாமல் தடுக்கும் சர்வதேச முயற்சிகளுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும். அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்த நாடாக இருக்க வேண்டும். முதல் நான்கு நிபந்தனைகளை இந்தியா நன்றாகவே பூர்த்திசெய்கிறது. இந்த நிபந்தனைகள் யாவும் சட்டபூர்வமாகக் கட்டாயமானவை அல்ல; ஆனால் பரிசீலிக்கப்பட வேண்டிய அவசியமுள்ளவை.

நாடுகளின் விளையாட்டு

இந்தியாவுக்குச் சிறப்பு விதிவிலக்கு தருவது என்ற என்.எஸ்.ஜி. முடிவு சீனத்துக்கு உவப்பானது அல்ல. அப்படித் தருவது அணு ஆயுதப் பரவல் முயற்சியையே பலவீனமாக்கிவிடும் என்று கருதும் அயர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியாவுடன் இணைந்து செயல்பட சீனா முடிவுசெய்தது. இந்தியாவைப் போலவே தனக்கும் விதிவிலக்கு தேவை என்று பாகிஸ்தான் மனுச் செய்திருக்கிறது. எனவே, அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்துவிடக் கூடாது என்று சீனா பதிலளித்துள்ளது. சீனத்தின் உண்மையான நோக்கம் இக்குழுவில் இந்தியா சேருவதை எப்படியாவது தாமதப்படுத்த வேண்டும் என்பதே.

என்.எஸ்.ஜி.யில் சீனா சேர்ந்தது 2004-ல். அப்போது பாகிஸ்தானில் சஸ்மா-1 (325 மெ.வா.) சஸ்மா-2 (340 மெ.வா) என்ற இரு அணு உலைகளை அமைத்துக் கொடுத்தது. சஸ்மா-1 செயல்படத் தொடங்கியிருந்தது. 2011-ல் சஸ்மா-2 இயக்கி வைக்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு மேலும் 2 அணு உலைகளைக் கட்டித்தர இருப்பதாகவும் சீனா அறிவித்தது. இந்தியாவைப் போல பாகிஸ்தான் சுயகட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பதில்லை என்பதால், அதற்கு விலக்கு தர முடியாது என்று பிற நாடுகள் கூறின. “நான் ஏற்கெனவே 2004-ல் வாக்கு கொடுத்துவிட்டேன்” என்று வாதிட்டது சீனா. சஸ்மா-3 சஸ்மா-4 ஆகியவற்றுக்கான ஒப்பந்தம் 2009-ல் செய்துகொள்ளப்பட்டது. 2013-ல் சஸ்மா-5 தொடர்பாக அறிவிப்பு வெளியானது. என்.எஸ்.ஜி.யின் இதர உறுப்பினர்களின் ஒத்துழைப்பை பாகிஸ்தான் கோராது. ஆனால், என்.எஸ்.ஜி.யில் இந்தியாவை அல்ல, பாகிஸ்தானையே உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ள சீனா விரும்பும்.

இரட்டைப் பாதை ராஜதந்திர முயற்சி

வியன்னாவில் இந்த விஷயத்தில் முடிவு கிட்டாது என்பதைத் தெரிந்துகொண்டதால், அடுத்து நடைபெறவுள்ள சியோல் மாநாட்டில் இதை எழுப்ப இந்தியா தீவிரமாக உள்ளது. என்.எஸ்.ஜி.யில் இந்தியா சேருவது குறித்து கவலை எழுப்பிய அயர்லாந்து, சுவிட்சர்லாந்து, மெக்ஸிகோ ஆகியவற்றுடன் இந்தியா பேசி அவற்றின் அச்சத்தைப் போக்கிவிட்டது. தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரியா, துருக்கி ஆகியவற்றுடனும் பேசி இந்தியா நம்பிக்கை ஊட்ட வேண்டும். அடுத்ததாக சீனா மீது இந்தியா கவனம் செலுத்த வேண்டும். என்.எஸ்.ஜி.யில் சேர பாகிஸ்தான் ஆர்வமாக இல்லை. ராணுவ, சிவிலியன் பயன்பாட்டுக்கான அணுத் திட்டங்களை அது இன்னமும் பிரிக்கவே இல்லை. மக்கள் பயன்பாட்டுக்கான அணுசக்தித் திட்டங்கள் குறித்து சர்வதேச அணுவிசை முகமையிடம் அது இன்னமும் பேச்சையே தொடங்கவில்லை. ‘பாகிஸ்தானும் என்.எஸ்.ஜி.யில் சேருவதில் எங்களுக்கு ஆட்சேபம் இல்லை’என்று இந்தியா கூறினால் தீர்வு ஏற்படலாம் என்ற ஒரு கருத்து உலவுகிறது.

ஏவுகணைத் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு அமைப்பில் சேர இந்தியா இம்மாதம் விண்ணப்பித்திருக்கிறது. வட கொரியாவுடன் இணைந்து ஏவுகணைத் திட்டங்களில் பங்கேற்பதால் சீனத்தின் அனுமதி கோரும் கடிதம் 2004 முதலே பரிசீலனையில் இருக்கிறது. இந்திய முயற்சிகளை சீனா கவனிக்காமல் இருக்காது.

பெரிய நாடுகள் பரஸ்பரம் உதவி கேட்டுக்கொள்வதில்லை. அதே சமயம், எதிராளியை மீண்டு வரமுடியாத மூலைக்கும் தள்ளிவிடுவது இல்லை. மற்றவர்களின் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போட்டுத் தங்களுடைய நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்கின்றன. ஆசியாவின் இந்த நூற்றாண்டில், தான் மட்டும் ஆதிக்கம் செலுத்த முடியாது என்பதை சீனா உணர்ந்திருக்கிறது. ஆட்ட அரங்கம் தயாராகிவிட்டது. திறமையுள்ளவர்கள், அடுத்தவர் நலனில் அக்கறையுள்ள உணர்வாளர்கள் இணைந்து ஆக்கபூர்வமான பலன்களுக்காக உழைக்க வேண்டும்.

(ஆயுதக் குறைப்பு, அணு ஆயுதப் பரவல் தடை ஆகியவற்றுக்கு பிரதமரின் தனித் தூதராக 2014 மே வரையில் பொறுப்பு வகித்தவர் ராகேஷ் சூட். டெல்லியில் அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையின் உறுப்பினராக இருக்கிறார்.)

சுருக்கமாகத் தமிழில்: சாரி,

© ‘தி இந்து’ ஆங்கிலம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x