Published : 27 Nov 2014 10:46 AM
Last Updated : 27 Nov 2014 10:46 AM

ஹரிவன்ஸ் ராய் ஸ்ரீவாத்சவ் பச்சன் 10

புகழ்பெற்ற இந்தி கவிஞரான ஹரிவன்ஸ் ராய் ஸ்ரீவாத்சவ் பச்சன் பிறந்த நாள் இன்று நவம்பர் (27). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…

 இந்தி கவிஞரான இவர், அலகாபாத் அருகே ராணிகஞ்ச் என்ற ஊரில் பிறந்தவர். வீட்டில் குழந்தை எனப் பொருள்படும் வகை யில் பச்சன் என்று அழைக் கப்பட்டார். பின்னாளில் அந்தப் பெயரே நிலைத்துவிட்டது. நகராட்சிப் பள்ளியில் படித் தார்.

 பிறகு அலகாபாத் பல்கலைக் கழகத்திலும் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்திலும் பயின்று முதுகலைப்பட்டம் பெற்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். அந்த சமயத்தில்தான் தன் பெயருக்குப் பின்னால் வாத்சவ் என்பதற்கு பதில் பச்சன் என்று சேர்த்துக் கொண்டார்.

 காவியங்களும், கவிதைகளும், கட்டுரைகளும், சுயசரிதையும், விமர்சன கட்டுரைகளும் எழுதியுள்ள இவர் ‘சாயாவாத்’கவிஞர் என்று குறிப்பிடப்பட்டார். இவரது எழுத்துகள் ஜனரஞ்சகமானவை, இலக்கிய அறிவு ஜீவிகள் மட்டுமே படித்துப் புரிந்துகொள்வது போல் இல்லாமல் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையானவையாகவும், உயிர்ப்புடனும் இருந்தன.

 அனுபவங்கள் இவருக்கு ஊக்க சக்தியை அளித்தன, அனுபவங்களையே காவிய வடிவில் வெளிப்படுத்தி புகழ்பெற்றவர், இவரது எழுத்துகள் மதுக்கடைகளை சுற்றியே இருந்தன என்றாலும், மதுசாலா என்ற தொகுப்பை எழுதி முடித்த காலம்வரை இவர் மதுவைத் தீண்டியதே இல்லை.

 இவரது முதல் காவியத் தொகுப்பு ‘மதுசாலா’ 1935ல் வெளிவந்தது. இதைத் தொடர்ந்து, ‘மதுபாலா’, மதுகலஷ்’ என்று தொடர்ந்து கவிதைத் தொகுப்புகள் வெளிவந்தன. இவற்றின் நேர்மை, சுய உணர்தல், சுய வெளிப்பாட்டின் காரணமாக இந்தி இலக்கிய உலகம் இவரை உற்சாகமாக இருகரம் நீட்டி வரவேற்றது.

 பல திரைப்படப் பாடல்களையும் எழுதியுள்ளார். இந்தி மொழியில் கவி சம்மேளனங்களின் பாரம்பர்யத்தை வலுப்படுத்தினார். அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொள்ளச் செய்ததில் இவரது பங்களிப்பு மகத்தானது.

 ஷேக்ஸ்பியரின் மெக்பத் மற்றும் ஒத்தெல்லோ நாடகங்கள் உள்ளிட்ட புகழ்பெற்ற படைப்புகளையும் பகவத் கீதையையும் இந்தியில் மொழிபெயர்த்துள்ளார்.

 1966ல் ராஜ்யசபா உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சாகித்திய அகாடமி விருது, பத்மபூஷன், சரஸ்வதி சம்மான், சோவியத்லாண்ட் நேரு விருது மற்றும் தாமரை விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.

 இவரது கவிதைகளில் புகழ்பெற்ற ‘அக்னிபாத்’ கவிதை தலைப்பிலேயே 1991ல் திரைப்படம் வெளிவந்தது. இவரது மகன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்து புகழ் பெற்றார்.

 மனித வாழ்வின் துன்பங்கள், அவர்கள் படும்பாடு ஆகிய வற்றை எளிமையான முறையில் தனது படைப்புகளில் வெளிப்படுத்திய ஹரிவன்ஸ் ராய் பச்சன் 95-ஆம் வயதில் காலமானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x