Published : 28 Jan 2015 02:41 PM
Last Updated : 28 Jan 2015 02:41 PM

வீடியோ பகிர்வு: நொறுங்கிய அவள் இதயம் இதமானது எப்படி?

மிடில் கிளாஸ் வாழ்க்கையில் அடிக்கடி எழுப்பப்படும் கேள்விகள் இவை....

நம் ஊர் குடும்பங்களில் டைனிங் டேபிள் கலாச்சாரம் முடிவுக்கே வந்துவிட்டதா?

இப்போதெல்லாம் யாரும் சேர்ந்தே சாப்பிடுவதில்லையா?

அப்படிச் சேர்ந்து சாப்பிட்டாலும் ஒருவரையொருவர் ஈகோ மோதலில் இடித்துக்கொள்ளாமல் ஜாலியாக சாப்பிடுகிறார்களா?

அப்படியே ஜாலியாக சாப்பிட்டாலும், அதில் பெரியவர்களும் மனங்கோணாமல் இணைந்துகொள்வார்களா?

உண்மையில் எல்லாமும் சாத்தியம்தான்.

தலைமுறைகளைக் கடந்த புரிதல் சாத்தியமானால்... சாத்தியமாகும் பட்சத்தில் அதில் நகைச்சுவையும் கொப்பளிக்கும்; இன்ஸ்டண்ட் தத்துவங்களும் எகிறி குதிக்கும்!

ங்கே காதல் முறிவால் இதயம் நொறுங்கிய ஓர் இளம்பெண் சாப்பிடாமல் உட்கார்ந்துகொண்டிருக்கிறார்.

அப்பா, அம்மாவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அந்தப் பெண்ணின் தாத்தாவோ தன் பேத்தியின் நிலையை சூசகமாகப் புரிந்துகொண்டு கிண்டலடிக்கிறார். இது சந்தோஷமான விஷயம் என்கிறார்.

"உன் அப்பாவும், சித்தப்பாவும் இளம் பிராயத்தினராக இருந்தபோது எத்தனை பெண்களால் நிராகரிக்கப்பட்டார்கள்; அதனால் எவ்வளவு மனம் உடைந்திருக்கிறார்கள் என்று தெரியுமா?" என்கிறார்.

அப்போது குறுக்கிட்ட பாட்டி, தாத்தாவின் இளமை வாழ்க்கையில் நடந்த காதல் முறிவைப் பற்றிக் கூறி அவளைத் தேற்றுகிறார்.

அதைக் கேட்டு நெகிழ்ந்த தாத்தா, பிறகு மிகவும் அழகான ஓர் உண்மையைத் தனது பேத்திக்குச் சொல்கிறார்.

" 'இதயம் நொறுங்கவில்லை' என்றால், அது இளமைப் பருவமே இல்லை... மேலும் இதயம் நொறுங்கப்போய்த்தான் என் வாழ்க்கையில் எனக்கு மனைவியாக இவள் வந்து சேர்ந்தாள்... இதோ அந்த வழியாக ஒரு பேத்தியாக நீயும்."

எவ்வாறு தன் மனைவி தன்னுடைய வாழ்க்கைக்குள் வந்து, உடைந்துகிடந்த தன் இதயத்தை ஒன்றாக்கினார் என்று கூறும் தாத்தா, "யாரோ ஒருவர் உன் வாழ்க்கைக்குள் நுழைந்து, உன் இதயத்தை நொறுக்கினால்தானே... அதை மீட்டெடுத்து வாழ்வை அழகாக்க மற்றொருவர் வர முடியும்?" என்கிறார் இதமாக.

அப்புறமென்ன இளம்பெண்ணின் இறுக்கம் கலைந்து இன்முகச் சிரிப்பு பூவாக மலர்கிறது.

மொட்டு மலர்ந்த அழகைக் காண, டிஸ்னி சேனலின் இந்த வீடியோவைப் பாருங்கள்...