Last Updated : 17 Sep, 2014 09:59 AM

 

Published : 17 Sep 2014 09:59 AM
Last Updated : 17 Sep 2014 09:59 AM

வலைவாசம்: செய்திகளாகிவிட்ட அதிர்ச்சிகள்

தமிழ் சினிமாவைப் பற்றி யார் பேசினாலும் ‘அவள் அப்படித்தான்’ படத்தைப் பற்றிப் பேசிவிடுகிறார்கள். இரண்டே படங்களை எடுத்துவிட்டு, தமிழ் சினிமா சரித்திரத்தில் இவ்வளவு அழுத்தமாகப் பெயரைப் பதித்துக்கொண்ட இயக்குநர் ருத்ரய்யா ஒருவர்தான். 1978-ல் வெளிவந்த படம் இது.

படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போதே கமலும் ரஜினியும் வெற்றியின் ஏணியில் வேகமாக ஏறிக் கொண்டிருந்தார்களாம். ஸ்ரீப்ரியாவும் டாப்தான். ஆனால், இந்தப் படத்துக்கு மூவரும் சம்பளம் வாங்கினார்களா என்று தெரியவில்லை. அதனால், இந்தப் படத்துக்கு கால்ஷீட் என்றெல்லாம் எதுவும் இல்லை. ஓய்வு கிடைக்கும்போது வந்து நடித்துவிட்டுப்போயிருக்கிறார்கள். மூவருக்கும் படத்தின் கதை மீது அவ்வளவு நம்பிக்கை.

ஸ்ரீப்ரியா ஏற்றுக்கொண்ட மஞ்சு என்ற கேரக்டர், அந்தக் காலத்தில் நிச்சயமாக அதிர்ச்சியை உருவாக்கியிருக்கும். இளம் பிராயத்தில் தனது அம்மா இன்னொருவருடன் இருப்பதைப் பார்த்துவிடுகிறாள். அம்மா என்பதன் புனிதத் தன்மை உடைந்து நொறுங்குகிறது. தனது மனைவி அப்படித்தான் என்று அவளது அப்பாவுக்கும் தெரியும். ஆனால், அவரால் ஒன்றும் செய்யமுடிவதில்லை. அம்மாவும் அப்பாவும் வீட்டில் இல்லாத நேரத்தில், அம்மாவின் காதலன் மஞ்சு மீதும் கை வைக்கிறான்.

அதன் பிறகு, கல்லூரிக் காலத்தில் தெய்வீகம், மனப்பூர்வம் என்று பிதற்றியபடியே வளர்ந்த காதலும் தோல்வியடைகிறது. காதலனுக்கு வேறு இடத்தில் பெண் பார்க்கிறார்கள். இப்படியான தொடர்ந்த அடிகள் அவளைப் பந்தாடுகின்றன. அவள் சந்திக்கும் ஒவ்வொரு ஆணுமே காமத்தோடுதான் அவளை அணுகுகிறார்கள். நல்ல படம். மிகச் சிறந்த திரைக்கதை. அட்டகாசமான நடிப்பு.

இத்தகைய கதாபாத்திரங்களைக் கேள்விப்பட்டும், செய்தித்தாள்கள் வழியாக அறிந்தும் இப்போதெல்லாம் சலித்துப்போய்விட்டது. சமீபத்தில் ஒரு செய்தி. இரண்டு குழந்தைகளின் தாய்க்கு வேறொருவருடன் தொடர்பு உண்டாகியிருக்கிறது. இதைத் தெரிந்துகொண்ட கணவன் கண்டிக்கிறான். காதலனிடம் சொல்லி, கணவனின் கதையை முடிக்கச் சொல்கிறாள் அந்தப் பெண். அவன் தனது நண்பர்களோடு சேர்ந்து மினி லாரியை ஏற்றி அவளது கணவனைக் கொன்றுவிட்டான். பிறகு, தனது குழந்தைகளுடன் காதலனோடு தங்கியிருக் கிறாள்.

அங்கு தனது மூத்த மகன் ஏதோ தொந்தரவு செய்திருக்கிறான். அந்தக் குழந்தையையும் காதலன் எட்டி மிதித்திருக்கிறான். சுவரில் மோதிக் குழந்தை இறந்துவிட்டது. அப்படியும்கூட அந்தப் புண்ணியவதி அவனைக் காட்டிக்கொடுக்கவில்லை. மகனைவிடவும் காதலன் அவசியமாகியிருக்கிறான் என்று எடுத்துக்கொள்வதா? இவனை விட்டால் தனக்கு வேறு கதியில்லை என்று கதறியிருப்பாள் என்று புரிந்து கொள்வதா? கணவனைக் கொல்லும்போதும் மகன் சாகும்போதும் அதையெல்லாம் அவளால் ஏற்றுக்கொள்ள முடிகிறது என்றால், அவளது மனநிலை எவ்வளவு சிக்கல்கள் நிறைந்ததாக இருந்திருக்க வேண்டும்? அவிழ்க்கவே முடியாத சிக்கல்கள். புரிந்துகொள்ளவே முடியாத புதிர்கள்.

இப்படி எத்தனையோ செய்திகள் வந்துகொண்டுதானே இருக்கின்றன? மஞ்சுவைவிடவும் சிக்கல்கள் நிறைந்த மனிதர்களை ஏதாவதொரு விதத்தில் எதிர்கொண்ட படியேதான் இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் கேள்விப்படும் இத்தகைய பாத்திரங்கள் நம்மைச் சலிப்படையச் செய்துவிடுகின்றன. இதுதான் நிதர்சனம் என்பதற்கான மனநிலை நமக்கு வந்துவிட்டது. எதுவுமே அதிர்ச்சி தருவதில்லை. 20 வருடங்களுக்கு முன்பாக வன்புணர்ச்சி என்பது அதிர்ச்சி. முகத்தில் ஆசிட் அடிக்கிறார்கள் என்பது அதிர்ச்சி. சொந்த ரத்த உறவுகளையே கொல்கிறார்கள் என்பது அதிர்ச்சி. ஆனால், இன்று இவை அனைத்துமே வெறும் செய்திகள்தான். அதற்கு மேல் அவற்றுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை.

நம் எல்லோரிடமும் ஏதாவதொரு விதத்தில் சிக்கல் இருக்கத்தான் செய்கிறது. தொழில்நுட்பமும் தகவல் தொடர்புச் சாதனங்களும் நம்மை ஒவ்வொரு நாளும் சிக்கலாக்கிக்கொண்டிருக்கின்றன. இதில் கிராமம், நகரம் என்ற எந்த மாறுபாடும் இல்லை. எல்லோருமே ஒரே குட்டையில் ஊறியவர்கள்தான். 80-களில் ஒரு சில மஞ்சுகளைத்தான் பார்த்திருப்பார்கள். இப்போது அப்படியில்லை அல்லவா?

>http://www.nisaptham.com/

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x