Last Updated : 23 May, 2016 03:21 PM

 

Published : 23 May 2016 03:21 PM
Last Updated : 23 May 2016 03:21 PM

ரஃப் நோட்டு - 3 : நல்ல அரசியல்!

மடிப்பாக்கம் நகராட்சிப் பள்ளியில் ஓட்டுப் போட்டுவிட்டு வந்தேன். ஆள்காட்டி விரலில் வைக்கப்பட்ட மை உலர்ந்திருந்தது. ஆனால், என் பால்ய நாட்களின் அரசியல் நினைவுகள் உலராமல் இருந்தன.

இன்று ‘சொன்னதை செய்வோம்… செய்ததை சொல்வோம்’ என்று ஒரு கரகர குரல்.

‘சொன்னதை செய்வோம்… சொல்லாததையும் செய்வோம்’ என்று ஒரு பெண்மணியின் குரல்.

இந்தக் குரல்களைப் பின்தொடரும் நிழலில் நின்று திரும்பிப் பார்க்கிறேன்.

நினைவுகளின் டார்ட்டாய்ஸ் சுருள் சுழல ஆரம்பிக்கிறது.

எனக்கு அப்போது 13 வயதிருக்கும். ஏழாவதோ, எட்டாவதோ படித்துக்கொண்டிருந்தேன். தஞ்சை ஜில்லாவில் முடிகொண்டான் என்கிற பெருகிராமம். இன்றைய வைஃபை சூழ் வையகம் போல் அந்த நாட்கள் இல்லை. ஆனால் குளங்களும், ஆறுகளும், வாய்க்கால்களும் தண்ணீர் நிரம்பித் தளும்பின. மனிதர்களிடம் சிநேக உணர்வு அதிகமிருந்தது. சகமனிதனுக்காகப் பரிந்து பேசினார்கள். ‘தான் உண்டு, தன் செல் உண்டு, அதை நோண்டு’ என்று மனிதர்கள் இல்லை. எல்லா மனிதர்களின் கண்களிலும் கருணை வழிந்தன. உண்மைக்கு அருகிலாவது இருக்க வேண்டும் என்கிற பெருவிருப்பத்துடன் மனிதர்கள் இருந்தார்கள்.

எங்கள் ஊரில் இருந்து 5 கிலோ மீட்டரில் இருந்த மணவாளம்பேட்டை லட்சுமி டாக்கீஸுக்கு, அப்பா சைக்கிளில் அழைத்துச் செல்வார். டபுள்ஸ். டைனமோ லைட் உள்ள சைக்கிள். இப்பவும் ‘ணிங்… ணிங்’ என்ற அந்த சைக்கிள் பெல் ஓசை கேட்கிறது.

‘பாபு’ திரைப்படம் பார்த்த அன்றிரவே நான் சிவாஜி ரசிகனாகியிருந்தேன். ‘இதோ எந்தன் தெய்வம் முன்னாலே’ என்கிற பாடல் வரிகளை என் உதடுகள் ஓயாமல் தந்தி அடித்துக் கொண்டிருந்தன.

காமராஜரின் மீது கொண்ட பிரியத்தால் என் ஆசை நாயகன் சிவாஜிகணேசன் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். சிவாஜி ரசிகனும் அதைத்தானே பின்பற்ற வேண்டும்? அப்புறமென்ன- என் 13-வது வயதில் நான் சிவாஜிகணேசனின் தோளில் நின்று காமராஜரையும், காங்கிரஸையும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன்.

எந்த வருஷம் என்று எனக்கு சரியாக ஞாபகமில்லை. அப்போது நடந்த தேர்தலின்போது எங்களூர் விழா கோலம் கொண்டது. சுவர்களில் வேட்பாளர்களின் பெயர்கள் மினுமினுத்தன. தெரு முழுக்க தோரணங்கள் அசைந்தன. எங்கள் நன்னிலம் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக ராசாங்கமும், திமுக சார்பில் தம்பி ஏ தேவேந்திரனும் போட்டியிட்டனர்.

கால்சட்டை அணிந்தபடி கையில் தட்டிகளை ஏந்திக்கொண்டு ‘போடுங்கம்மா ஓட்டு காளை சின்னத்தைப் பார்த்து…’ என்று சிறுவர்கள் நாங்கள் தெருத் தெருவாக ஓட்டுக் கேட்டுப் போனோம்.

இப்படியாக எங்கள் தேர்தல் பிரச்சாரம் நடந்துகொண்டிருந்த நாளில்…. திருவாரூரில் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக காமராஜர் எங்கள் ஊர் வழியாக செல்லப் போகிறார். அப்போது நம்ம ஊரிலும் சில நிமிடங்கள் நின்று செல்வார் என்று பெரியவர்கள் பேசிக்கொண்டார்கள்.

என் மனசு குதியாட்டம் போட ஆரம்பித்துவிட்டது. என் ஆசை நாயகன் சிவாஜிக்குப் பிடித்த தலைவனை இன்று நாம் பார்க்கப் போகிறோம் என்கிற நினைப்பே சந்தோஷம் தூவியது.

அந்த பாமரத் தலைவனைப் பற்றி அப்பாவும், ராமசாமி மாமாவும், அனந்தையாவும் சொல்லியிருந்தவை எல்லாம் என் மனசின் உச்சியில் அவரை உட்கார வைத்திருந்தன. அவை அத்தனையும் நிஜம்.

சாயங்காலம் 5 மணியிருக்கும். அந்தத் தலைவர் வந்தார். முழங்கையையும், முழங்காலையும் முந்தும் கதர் சட்டை. பெரிய்ய்ய்ய கைகள். ஆனால், சுத்தமானவை!

பத்து நிமிஷம்தான் பேசினார் காமராஜர். மக்களின் காதில் பூ சுற்றாத பேச்சு. அவரது உண்மை ஜனங்களுக்கு பிடித்தது. எனக்கு அவரை ரொம்ப ரொம்ப பிடித்தது. என் வாழ்வில் அவருக்கு ஓட்டுப் போடும் சந்தர்ப்பம் வாய்க்காமல் போனது வருத்தத்துக்குரியது. எனக்கு ஓட்டுப் போடும் வயது வந்தபோது அவர் உயிரோடு இல்லை.

ஆனால், நானறிந்த ஒரு சம்பவம் மட்டும் நினைக்கும்போதெல்லாம் என் நெஞ்சை கலங்க வைக்கிறது.

1975, அக்டோபர் 2-ம் நாள் (காந்தி பிறந்த நாள்) சென்னை தியாகராய நகர், திருமலைப்பிள்ளை சாலையில் இருந்த - ஒரு வாடகை வீட்டில் காமராஜர் காலமான அந்த நொடியில்… அவரது தலைமாட்டில் வெறும் 54 ரூபாய்தான் இருந்தது. அதைத் தவிர வேறு கையிருப்பு கிடையாது என்று முன்னாள் அமைச்சர் கா.ராசாராம் வெளியுலகுக்கு சொன்னது இப்போதும் மனசில் அலையடித்துக்கொண்டே இருக்கிறது.

இன்றைய செய்தி நாளைய வரலாறு என்பார்கள், இது நேற்றைய உண்மையின் சரித்திரம். சரித்திர உண்மை!

தமிழகத்தில் காமராஜருக்குப் பின்னால் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு பல நல்லவர்களை காங்கிரஸில் இருந்து சொல்லிக்கொள்ளாமல் ஓட வைத்தது. அப்படி திரும்பிப் பார்க்காமல் ஓடி வந்தவர்களில் நானும் ஒருவன்.

நதிக்கரையில் பிறந்தது நாகரிகம் என்கிறார்கள். இன்று அரசியல் சாக்கடைகள் கலந்து நாறுகிறது நம் நாகரிகம்.

பயம் பயமறிய ஆவல்

எல்லா அரசியல் கட்சிகளுக்கும் பொதுவான ஒரு குணம் அமைந்துவிட்டன. அவை அனைத்துமே மக்கள் மத்தியில் பயத்தை உருவாக்கி வைத்திருக்கின்றன. அவர்களை விமர்சிக்க பயம். ஏன் என்று கேள்வி கேட்க பயம். கணக்கு கேட்க பயம். மீறியும் கேட்டால்… அடியாட்களால் உங்கள் வீட்டு கதவு தட்டப்படலாம். எங்கிருந்தோ வந்து கல் விழுந்து உங்கள் ஜன்னல் கண்ணாடி சில்லு சில்லாகலாம். நீங்கள் கூலிப்படையால் துரத்தப்படலாம். ‘தூக்குடா அவனை…’ என்கிற முரட்டுக் குரல் உங்கள் நிழலையும் பின் தொடரலாம்.

மக்களின் இந்த பயம்தான் இன்றைய அரசியல் கட்சிகளின் முதல் முதலீடு.

அமைதி,சமாதானம், நல்வழி, உண்மை, நேர்மை… இவற்றை விரும்புபவர்கள் இன்றைக்கும் நாட்டில் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்களை நமக்கு அடையாளம் தெரிவதில்லை.

அவர்களில் ஒருவர் கூட அரசியிலில் தனது மூக்கைக்கூட நுழைப்பதில்லை.

ஏன்…?

நல்லவர்களை அப்புறப்படுத்திவிட்டது இன்றைய அரசியல். அதனால் மிச்சமிருக்கிற நல்லவர்களும் தங்களிடமிருந்து அரசியலை அப்புறப்படுத்திவிட்டனர்.

ஜன கண மன!

முந்தைய அத்தியாயம்:>ரஃப் நோட்டு - 2 : நம்பர்களே நண்பர்கள்!

தொடர்புக்கு baskaran.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x