Published : 28 Jun 2016 04:58 PM
Last Updated : 28 Jun 2016 04:58 PM

யூடியூப் பகிர்வு: கயிற்றுப் பால நடை நாகரிகம்!

மகாராஷ்டிர கிராமமொன்றின் மக்கள் ஒற்றைக் கயிற்றால் ஆன பாலத்தை போக்குவரத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

மேற்கு மகாராஷ்டிரத்தின் ஒரு மூலையில் இருக்கிறது பெண்டாஸ் கிராமம். இங்கு வசிக்கும் மக்கள், பக்கத்து கிராமத்துக்குச் சென்றால் மட்டுமே அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும். ஆனால், அங்கே செல்ல அவர்களுக்கு எளிய வழி உல்ஹாஸ் நதியைக் கடந்து செல்வதுதான். ஆனால் அவர்கள் எப்படிக் கடக்கிறார்கள் தெரியுமா? எந்த விதப் பாதுகாப்பும் பிடிமானமும் இல்லாத கயிற்றின் மூலம்.

மருத்துவமனை, சந்தை, பள்ளி, கல்லூரி, ரயில்நிலையம் உள்ளிட்ட அனைத்துக்குமே பக்கத்து கிராமத்துக்குத்தான் செல்ல வேண்டும். அங்கு செல்ல 30 நிமிடங்கள் நடக்க வேண்டும் அல்லது உல்ஹாஸ் நதியைக் கடக்க வேண்டும்.

அதனால் குறைந்த தூரத்தில் அடிப்படை வசதிகளைப் பெறும் நோக்கில் சுமார் 30 வருடங்களுக்கு முன்னால் இந்த கயிற்றுப் பாலத்தை உருவாக்கி இருக்கின்றனர். கான்க்ரீட் பாலம் வேண்டும் என்ற அவர்களின் வேண்டுகோள் இன்னும் நிறைவேற்றப்படாமலேயே இருக்கிறது.

இன்றும் சுமார் 100 பேர் இந்த கயிற்றுப் பாலத்தை தினமும் பயன்படுத்தி வருகின்றனர். எந்த விதப் பாதுகாப்போ, பிடிமானமோ, வலைகளோ இல்லாமல் அந்தரத்தில் தொங்குகிறது அந்த கயிற்றுப்பாலம். மழைக்காலத்தில் இந்தப் பயணம் இன்னும் மோசமாகி விடுகிறது.

கான்க்ரீட் பாலம் வேண்டும் என்று 13 வருடங்களாக கோரிக்கை விடுத்தபடியே இருக்கின்றனர் பெண்டாஸ் கிராமத்தினர். உள்ளூர் அரசியல்வாதிகள் 2017-ல் பாலம் கட்டி முடிக்கப்படும் என்று வாக்களித்திருக்கின்றனர். அதுவரை அவர்களின் நிலை எப்படி இருக்குப் போகிறதோ?

காணொளியைக் காண