Last Updated : 30 Aug, 2016 04:21 PM

 

Published : 30 Aug 2016 04:21 PM
Last Updated : 30 Aug 2016 04:21 PM

யூடியூப் பகிர்வு: இந்தியாவும் பாலினப் பாகுபாடும்!

இந்திய சமூகத்தில் பெண்களுக்கான நிலை இன்னமும் கேள்விக்குரியதாகவே இருக்கிறது. புனிதமான இடங்களாகக் கருதப்படும் கோவில்கள், மசூதிகள் மற்றும் சில கிறிஸ்தவ ஆலயங்களில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

மும்பையின் புகழ்பெற்ற ஹாஜி அலி தர்காக்களில் ஒன்று ஹாஜி அலி தர்கா. அங்கு பெண்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. போராட்டங்கள் மற்றும் மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகே பெண்களுக்காக உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.

நம்பிக்கையாளர்களைப் பொருத்தவரை மசூதிகளில், ஆண் துறவிகளின் கல்லறைக்கு அருகில் ஒரு பெண் சென்றால் அது கொடூரமான பாவச்செயல் என்று இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளதாகக் கருதுகின்றனர்.

புனித வழிபாட்டுத்தலங்களில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது இந்தியாவில் வழக்கமான நிகழ்வாக நடைபெறுகிறது. கேரளத்தில் சபரிமலை கோவில், அஸ்ஸாமில் சங்கரதேவ ஆலயம் மற்றும் ராஜஸ்தானில் சில கோவில்களில் பெண்கள் ஒதுக்கப்படுகிறார்கள். பெண்களின் மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் தீட்டே அதற்குக் காரணம் என்கிறார்கள் நம்பிக்கையாளர்கள்.

இதுதான் இந்தியாவின் சிறப்புத்தன்மையா?

இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுக்கவும் பாலினப்பாகுபாடுகள் காலங்காலமாகத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. க்ரீஸ் நாட்டில் ஏத்தோஸ் மலை 1000 ஆண்டுகள் பழமையானது. ஆனால் சம்பிரதாயங்களில் ஊறிப்போன கிறிஸ்தவர்களின், துறவிகளுக்கான சடங்குகளால் அங்கு பெண்கள் நுழைய அனுமதியில்லை.

ஜப்பானில் ஷிண்டோ இனத்தவரின் புனித யாத்திரை மையமான ஒமைன் மலை பெண்களுக்கு எப்போதும் மூடியே இருக்கிறது. சவுதி அரேபியாவில் பெண்கள் எல்லாவிதமான கட்டுப்பாடுகளையும் சந்திக்கின்றனர். ஸ்டார்பக்ஸ் கடைகளில் நுழையக்கூட பெண்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் கென்யாவில் இருக்கும் குறிப்பிட்ட கிராமத்தில் ஆண்கள் நுழைய அனுமதி கிடையாது. ஐநா பட்டியலிட்டுள்ள பாலினப் பாகுப்பாட்டு குறியீட்டெண்ணில், இந்தியா 130-வது இடத்தைப் பிடித்துள்ளது. சவுதி அரேபியா, நேபாளம், வங்கதேசத்துக்குப் பின்னால் இருக்கிறது இந்தியா என்கின்றன சில முக்கியப் புள்ளிவிவரங்கள்.

தமிழில்: க.சே. ரமணி பிரபா தேவி

காணொலியைக் காண