Published : 27 May 2015 06:27 PM
Last Updated : 27 May 2015 06:27 PM

யுடியூப் பகிர்வு: ஓர் இளம்பெண்ணும் மூன்று குரங்குகளும்!

காந்தியடிகள் சொன்ன மூன்று குரங்கு பொம்மைகளின் கதை பெரும்பாலானோருக்குத் தெரியும்."தீயனவற்றைப் பார்க்காதே, கேட்காதே, பேசாதே!" என்பதுதான் அது. ஆனால் இந்தக் குறும்படத்தின் கதை யாருக்காவது தெரியுமா?

இளம்பெண் ஒருவர் அலுவலகம் செல்ல, பேருந்துக்காகக் காத்து நிற்கிறார். நீண்ட நேரமாக அதே இடத்தில் நிற்கும் அவரிடம் ஓர் ஆண், விரும்பத்தகாத முறையில் நடந்துகொள்கிறான். சில நிமிடங்களில் அங்கிருந்து சென்றவனைப் பார்த்து எதுவும் செய்ய முடியாமல் கலங்கி நிற்கிறார் அந்தப் பெண். அருகில் இருந்த சாமியார் ஒருவர், அவரைச் சமாதானப்படுத்தி, மூன்று குரங்கு பொம்மைகள் உள்ள மரச்சட்டத்தைக் கையில் கொடுத்துக் காதிலும் ஏதோ ரகசியம் சொல்கிறார்.

அதன் பின்னர், தவறான நோக்கத்துடன் தன்னை நெருங்கும் ஆண்களை அந்தப் பெண் எவ்வாறு தன் குரங்கு பொம்மைகளைக் கொண்டு எதிர்கொள்கிறாள் என்பதுதான் மீதிக்கதை. குறும்படத்தின் முடிவு நிச்சயம் நீங்கள் எதிர்பார்க்காத விதத்தில்தான் இருக்கும்.

எந்தவித உரையாடல்களும் இல்லாமலே ஒரு விஷயத்தைத் தெளிவாகக் காட்சிப்படுத்திப் புரியவைக்க முடியும் என்பதற்கு இக்குறும்படம் சிறந்த எடுத்துக்காட்டு.

பொது இடங்களில் பெண்களின் மீது நடத்தப்படும் வன்முறையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் முழுவதுமே நகைச்சுவை இழையோடி இருக்கிறது. படத்தின் நாயகிக்கு உதவும் சாமியாரைப் புகைபிடித்தவாறு காண்பிக்கும் காட்சியே அதற்கு சிறந்த சான்று. அப்பெண்ணிடம் வாலாட்டும் இளைஞர்களுக்கு என்னவாகிறது என்பதை மறைமுகமான "குறியீடு"களுடன் காண்பித்தது அருமை.

”சவிதா சினி ஆர்ட்ஸ்” என்னும் படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் எடுக்கப்பட்டிருக்கும் இப்படம், டெக் மகேந்திரா குறும்படப் போட்டியின் சிறந்த குறும்படம் உள்ளிட்ட விருதுகளை வென்றிருக்கிறது.

தனியாய் இருக்கும் பெண்களிடம் எல்லை மீற நினைக்கும் ஆண்களுக்கு இக்குறும்படம் ஒரு சாட்டையடிப் பதிவு.