Published : 25 Apr 2015 08:22 AM
Last Updated : 25 Apr 2015 08:22 AM

மார்க்கோனி 10

வானொலியின் தந்தை எனப் போற்றப்படுபவரும் இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்றவருமான குக்லியெல்மோ மார்க்கோனி (Guglielmo Marconi) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 25). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l இத்தாலியின் பொலொனா நகரில் (1874) பிறந்தவர். தந்தை அந்நாட்டின் பெரும் புள்ளி என்பதால், இளமை யிலேயே வசதியான வாழ்க்கை வாழ்ந்தார். வீட்டுக்கே வந்து ஆசிரியர்கள் கற்பித்தனர். வீட்டு நூலகத்தில் இருந்த அறிவியல் நூல்களைப் படித்தார்.

l இயற்பியலில், குறிப்பாக மின்சாரவியலில் அவருக்கு ஆர்வம் பிறந்தது. வீட்டில் சிறிய அளவிலான ஆய்வுகளை மேற்கொண்டார். கம்பி இல்லாமல் ஒலி அலைகளை அனுப்புவது பற்றி ஹென்றிச் ஹெர்ட்ஸ் என்ற விஞ்ஞானியின் ஆராய்ச்சிகள் பற்றிய புத்தகம் இவரைக் கவர்ந்தது. தொடர்ந்து அதுகுறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

l கம்பியில்லாத் தந்தி முறையை உருவாக்கும் முனைப்பில் இறங்கினார். ஒரே ஆண்டில் மின்காந்த அலைகள் மூலமாக சிக்னல்களை அனுப்பிக் காட்டினார். 1895-ல் திசை திரும்பும் மின்கம்பம் (Directional Antenna) என்ற கருவி மூலம் ஒன்றரை கி.மீ. தூரத்துக்கு செய்தியை அனுப்பினார்.

l இத்தாலியில் இவரது கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் கிடைக்காததால், இங்கிலாந்து சென்றார். அங்கு 6 கி.மீ. தொலைவு வரை செய்தியை அனுப்பக்கூடிய டிரான்ஸ்மிட்டரை உருவாக்கினார். தொடர்ந்து பல ஆய்வுகளை மேற்கொண்டார். 1897-ல் இங்கிலாந்தில் மார்க்கோனி நிறுவனம் தொடங்கப்பட்டது. 1899-ல் ஆங்கிலக் கால்வாயைத் தாண்டி, இங்கிலாந்துக்கும் பிரான்ஸுக்கும் எல்லா கால நிலையிலும் இயங்கும் கம்பியில்லாத் தொடர்பை 200 மைல் சுற்றளவுக்கு உண்டாக்கினார். இதன் பிறகு இத்தாலி அரசு இவரது ஆராய்ச்சிகளுக்கு பல உதவிகளை வழங்கியது. செனட்டராக நியமிக்கப்பட்டார்.

l ஸ்டீசர் என்ற இடத்தில் வானொலி நிலையத்தை உருவாக்கினார். இங்கிலாந்து மற்றும் இத்தாலி கடற்படைகள், வர்த்தகக் கப்பல்கள் இவரது கம்பியில்லா தகவல் தொடர்புக் கருவிகளை அதிகம் பயன்படுத்தின. 1901-ல் 2100 கி.மீ. தொலைவுக்கு செய்தியை அனுப்பினார். இதன்மூலம் உலகப்புகழ் பெற்றார்.

l மேலும் பல ஆய்வுகளை மேற்கொண்ட இவர், தொடர் அலைகள் உற்பத்தி செய்யும் கருவியையும் கண்டறிந்தார். இதன்மூலம் பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலும் செய்தி அனுப்பமுடியும் என்பதை நிரூபித்தார்.

l கார்ல் ஃபெர்டினான்ட் பிரவுன் என்ற ஜெர்மானியருடன் இணைந்து மார்க்கோனிக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு 1909-ல் வழங்கப்பட்டது.

l 1912-ல் நிகழ்ந்த ஒரு விபத்தில் மார்க்கோனி வலது கண்ணை இழந்தார். ஆனாலும் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டார். 1920-ல் இங்கிலாந்து வானொலி நிலையம் செயல்படத் தொடங்கியது. இத்தாலி அரசு இவருக்கு கவுரவம் மிக்க பதவிகளை வழங்கிச் சிறப்பித்தது. ‘மார்க்விஸ்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.

l இத்தாலி, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இவருக்குப் பல்வேறு விருதுகள், பட்டங்களை வழங்கின. பல பல்கலைக்கழகங்களில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

l இன்றளவும் மக்களுக்கு மிக நெருங்கிய பொழுதுபோக்கு சாதனமாக விளங்கிவரும் வானொலியை உலகுக்கு வழங்கிய மார்க்கோனி 63 வயதில் (1937) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x