Published : 24 Jul 2016 12:26 PM
Last Updated : 24 Jul 2016 12:26 PM

மனோஜ் குமார் 10

பழம்பெரும் இந்தி நடிகரும் இயக்குநருமான மனோஜ் குமார் (Manoj Kumar) பிறந்தநாள் இன்று (ஜூலை 24). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் (1937) பிறந்தவர். இயற்பெயர் ஹரிகிஷண் கிரி கோஸ்வாமி. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது அங்கிருந்து தப்பி வந்த இவரது குடும்பம், டெல்லியில் குடியேறியது.

* பள்ளிப்படிப்பை முடித்து, டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சிறு வயது முதலே சினிமா ஆர்வம் கொண்டிருந்தார். வி.சாந்தாராம், ராஜ்கபூர், ராஜ் கோஸ்லா ஆகியோர் இவரது ஆதர்ச ஹீரோக்கள்.

* ‘ஷப்னம்’ படத்தில் தனது அபிமான நடிகர் அசோக்குமாரின் கதாபாத்திரப் பெயரான ‘மனோஜ் குமார்’ என்பதை தன் திரைப்படப் பெயராக சூட்டிக் கொண்டார். ‘ஃபேஷன்’ என்ற திரைப்படம் மூலம் 1957-ல் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.

* இது வெற்றிப்படம் இல்லை என்றாலும், இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. ‘காஞ்ச் கீ குடியா’, ‘பியா மிலன் கி ஆஸ்’, மற்றும் ‘ரேஷ்மி ரூமல்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

* 1962-ல் வெளியான ‘ஹரியாலி அவுர் ராஸ்தா’, இவரது முதலாவது ஹிட் படம். 1964-ல் வந்த ‘வோ கோன் தீ’ திரைப்படம் இவருக்கு இந்தி திரையுலகில் மிகப் பெரிய இடத்தைப் பெற்றுத் தந்தது. தொடர்ந்து ‘ஹிமாலய் கீ கோத் மே’, ‘கும்நாம்’, ‘யாத்கார்’, ‘தோ பதன்’, ‘நீல் கமல்’, ‘ஷோர்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்தார்.

* முதன்முதலாக பகத்சிங் வாழ்க்கையை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப்பட்ட ‘ஷஹீத்’ திரைப்படம், ‘தேசபக்தி ஹீரோ’ என்ற இமேஜை கொடுத்தது. இப்படத்துக்காக இவருக்கு வழங்கப்பட்ட தேசிய விருது பரிசுத் தொகை முழுவதையும் பகத்சிங் குடும்பத்துக்கு நன்கொடையாக கொடுத்ததாக பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

* தொடர்ந்து ‘பூரப் அவுர் பஸ்சிம்’, ‘க்ராந்தி’ உள்ளிட்ட பல தேசபக்திப் படங்கள் வெற்றிப் படைப்புகளாக இவரை புகழ்பெறவைத்தன. இதனால் ‘பாரத்குமார்’ என்று நேசத்துடன் அழைக்கப்பட்டார்.

* 1965 இந்தியா - பாகிஸ்தான் போரை அடுத்து, பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி இவரிடம் ‘ஜெய் ஜவான் ஜெய் கிசான்’ என்ற கோஷத்தின் அடிப்படையில் ஒரு திரைப்படம் தயாரிக்கச் சொன்னார். அதன்படி இவரது இயக்கத்தில் தயாரானதுதான் ‘உபகார்’ வெற்றிப்படம். அதில் இயக்குநராக அறிமுகமானார்.

* பத்மஸ்ரீ, வாழ்நாள் சாதனைக்கான பால்கே ரத்னா விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர். ‘பேஇமான்’ திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார். ‘ரோட்டி கபடா அவுர் மக்கான்’ திரைப்படம், சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. ஃபிலிம்பேர் விருதுகளை பலமுறை பெற்றுள்ளார்.

* இந்திய சினிமா வளர்ச்சியில் இவரது பங்களிப்பைப் போற்றும் வகையில் கடந்த மே மாதம் இவருக்கு ‘தாதா சாஹேப் பால்கே’ விருது வழங்கப்பட்டது. 58 ஆண்டுகளுக்கு மேலாக பாலிவுட் சினிமாவுக்கு மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கிய மனோஜ் குமார் இன்று 79-வது வயதை நிறைவு செய்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x