Last Updated : 23 Aug, 2014 12:00 AM

 

Published : 23 Aug 2014 12:00 AM
Last Updated : 23 Aug 2014 12:00 AM

பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்புத் திட்டங்கள்

சமூகநலத் துறை மூலம் வழங்கப்பட்டு வரும் உதவிகள், நலத்திட்டங்கள் குறித்து பார்த்துவருகிறோம்.

சமூக நலத்துறையின் கீழ் வேறு என்ன திட்டங்கள் உள்ளன?

இலவச நோட்டு வழங்கும் திட்டம் உள்ளது. இத்திட்டத்தின் கீழ், தந்தையை இழந்த மாணவ, மாணவிகளுக்கு 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை இலவசமாக நோட்டுகள் வழங்கப்படுகின்றன. மாவட்ட சமூக நல அலுவலரை அணுகி இந்த உதவியைப் பெறலாம். இதற்கு, குடும்ப ஆண்டு வருமானம் ரூ.24 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும். வருமானச் சான்று, பள்ளி தலைமை ஆசிரியர் அளிக்கும் சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்புத் திட்டம் உள்ளதா?

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் உள்ளது. திட்டம்-1, திட்டம்-2 என இரு வகைகளில் பெண் குழந்தை பெயரில் வைப்புத்தொகை பத்திரம் வழங்கப்படுகிறது. திட்டம்-1ல் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை வழங்கப்படுகிறது. திட்டம்-2ல் இரு பெண் குழந்தைகள் இருந்தால் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் வைப்புத்தொகை பத்திரம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதி, நிபந்தனைகள் என்ன?

ஒரு குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்கக்கூடாது. ஆண் குழந்தையை தத்து எடுத்திருக்கவும் கூடாது. பெற்றோரில் ஒருவர் கருத்தடை செய்திருக்க வேண்டும். திட்டம்-1ல் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமலும், திட்டம்-2ல் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.24 ஆயிரத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

இந்த உதவியைப் பெற யாரை அணுகவேண்டும்?

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலர் அல்லது உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள சமூகநல விரிவாக்க அலுவலரை அணுகலாம். வருமானம், இருப்பிடம், சாதி, பெற்றோரின் வயது ஆகியவற்றுக்கான சான்றுகள், குழந்தைகளின் பிறப்புச் சான்று, கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொண்டதற்கான சான்று, ஆண் வாரிசு இல்லை என்பதற்கான சான்று, குழந்தைகளின் பெயர்களுடன் கூடிய குடும்ப அட்டை நகல், குடும்ப புகைப்படம் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

ஆதரவற்ற குழந்தைகள், பெண்களுக்கு என சேவை இல்லங்கள் உள்ளதா?

விதவைகள், ஆதரவற்ற பெண்கள், அவர்களின் குழந்தைகள் அரசு சேவை இல்லங்களில் சேர்க்கப்படுகின்றனர். இந்த இல்லத்தில் சேர குடும்ப ஆண்டு வருமானம் ரூ.12 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பத்துடன் விண்ணப்பதாரர் வயதுச் சான்று, கணவரை இழந்தோர், ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர் சான்று, வட்டாட்சியர் அளவில் பெறப்பட்ட விண்ணப்பதாரரின் பாதுகாவலர், பெற்றோர் வருமானச் சான்று, மாற்றுத் திறனாளியாக இருந்தால் அதற்கான சான்று, கணவரை இழந்திருந்தால் அதற்கான சான்று ஆகியவற்றை இணைத்து மாவட்ட சமூகநல அலுவலர் அல்லது அரசு சேவை இல்ல கண்காணிப்பாளரை அணுகலாம்.

(மீண்டும் நாளை சந்திப்போம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x