Last Updated : 02 Oct, 2015 03:23 PM

 

Published : 02 Oct 2015 03:23 PM
Last Updated : 02 Oct 2015 03:23 PM

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சென்னை பதிப்பகத்தாருக்கு எழுதிய கடிதம்....

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சென்னையைச் சேர்ந்த பதிப்பாளர் ஒருவருக்கு ஆஸ்திரியாவிலிருந்து எழுதியிருந்த கடிதத்தை மேற்கு வங்க அரசு வெளியிட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டுடன் அவருக்கிருந்த தொடர்பை மேற்குவங்க அரசு புலப்படுத்தியுள்ளது.

போஸ் எழுதிய 'தருணர் ஸ்வப்னா' (The Dream of Youth) மற்றும் 'நியூடேனெர் சந்தான்' (Search for the New) ஆகிய இரு நூல்களும் மொழிபெயர்த்து வெளியிட அலயன்ஸ் பதிப்பகத்தைச் சார்ந்த வி.குப்புசாமி அய்யருக்கு சம்மதம் தெரிவித்து டிசம்பர் 27, 1937ல் சுபாஷ் சந்திர போஸ் எழுதிய கடிதம் இது.

இதில் நவம்பர் 8ல் எழுதப்பட்ட குப்புசாமி அய்யரின் கடிதத்திற்கு பதில் எழுதுவதற்கு தாமதமானாதற்காக மன்னிப்புக் கோரலையும் போஸ் குறிப்பிட்டிருந்தார்.

‘The Dream of Youth’ என்ற நூல் 'இளைஞர்களின் கனவு' என்ற தலைப்பிலும்,‘Search for the New’ என்ற நூல் 'புதுவழி' என்ற பெயரிலும் வெளியானது. நேதாஜி எழுதிய கடிதங்களின் தொகுப்பைக் கொண்டதுதான் 'இளைஞர்களின் கனவு'. கல்கத்தாவில் உள்ள சாஹித்ய சமாஜ் என்ற இலக்கிய அமைப்பில் அவர் ஆற்றிய உரைகளை உள்ளடக்கியது 'புதுவழி'.

வங்கமொழியில் நன்கு தேர்ச்சிபெற்ற நாவலாசிரியரும் எழுத்தாளருமான த.நா.குமாரசாமி மற்றும் அவரது சகோதரர் த.நா.சேனாதிபதி ஆகிய இருவரும் இவ்விரண்டு நூல்களையும் சிறப்பாக மொழிபெயர்த்திருந்தனர்.

த.நா.குமாரசாமி ரவீந்திரநாத் தாகூரை விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தில் சந்தித்தார். அவர் வங்கமொழி மட்டுமின்றி பல மொழிகளையும் கற்றவர்.

எனவே தாகூரின் எழுத்துக்களையும் தமிழில் மொழிபெயர்க்கும் பணிக்காக அவரை நேரில் சந்தித்தார்.நேதாஜி 1939ல் சென்னை வந்திருந்தபோது, திருவல்லிக்கேணி பாரதி சாலையில் அமைந்துள்ள, இன்று 'காந்தி பீக்' என வழங்கப்படும் பிரமாண்ட வீட்டில் வைத்து குப்புசாமி அய்யரின் மகன் கே.வி.எஸ்.மணி மொழிபெயர்க்கப்பட்ட நேதாஜியின் நூல்களை அவரிடம் காட்டினார்.

பிரிட்டிஷ் அரசு என் பாட்டனார், நேதாஜியின் எழுத்துக்களை புத்தகங்களாக வெளியிட்டதை எப்படியோ அறிந்துகொண்டது. ஆனால், அவர்கள் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பே இலங்கை, சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு நூல்கள் அனுப்பப்பட்டுவிட்டன. மலேசியாவில் இந்நூல் மறுமுறை பிரசுரம் செய்யப்பட்டது என்கிறார் குப்புசாமி அய்யரின் பேரன் வி.ஸ்ரீனிவாசன்.

சாதாரண உடையில் வந்த பிரிட்டிஷ் அரசின் காவலர்கள் குப்புசாமி அய்யரை அணுகியபோது, புத்தகங்கள் இலேசான தாளில் இருந்ததால் தான் அச்சடித்த புத்தகங்களை அனைத்தையும் அவர் உடனே எரித்துவிட்டார். புத்தகங்கள் எல்லாம் எரிந்ததனால் உண்டான புகைக்கரியின் எச்சங்கள் எங்கள் வீட்டின் சுவர்களின்மீது பல ஆண்டுகள் படிந்திருந்தன. இந்த மொழிபெயர்ப்பு நூல்களே தமிழகத்தில் பெரும்பாலோர் நேதாஜி ஆரம்பித்த இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து போராடுவதற்கு உந்து சக்தியாய் இருந்தன என்கிறார் அலயன்ஸ் பதிப்பகத்தின் ஸ்ரீனிவாசன்.

தமிழில்: பால்நிலவன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x