Published : 24 Mar 2017 12:17 PM
Last Updated : 24 Mar 2017 12:17 PM

நெட்டிசன் நோட்ஸ்: அசோகமித்திரன்- தன்னிகரற்ற கதைசொல்லி!

பிரபல தமிழ் எழுத்தாளர் அசோகமித்திரன் உடல்நலக் குறைவால் சென்னையில் வியாழன் அன்று காலமானார். அவருக்கு இலக்கியவாதிகளும், நெட்டிசன்களும் செலுத்திய அஞ்சலியின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Heman Vaigundhan

மற்றுமொரு குரு விண்ணில் நட்சத்திரமானார்.

Indumathi

எழுத்தில் மட்டுமல்ல. மனிதனாகவும் உயர்ந்தவர். அவர் அதிர்ந்து பேசி நான் கேட்டதில்லை. கோபப்பட்டு பார்த்ததில்லை. ஆர்ப்பாட்டமற்ற வலிமையான சிறுகதைகள். அவரே அவருடைய கதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்.

அந்த அற்புதமான மனிதர் இறந்து விட்டதாக யார் சொன்னது. என்றும் வாழ்வார் எழுத்துக்களில்.

மாலன் நாராயணன்

அகங்காரம் இல்லாமல் எளிதாகப் பழகும் இயல்பு அவருடையது. அப்போதே அவர் பெரிய எழுத்தாளர். அன்றே தமிழ் மொழிக்கு அப்பால் அறியப்பட்ட மிகச் சிலத் தமிழ் எழுத்தாளர்களில் அவரும் ஒருவர், அயோவா பல்கலைக்கழக நிகழ்வுக்கு அழைக்கப்பட்டவர். கெடுநாளை சட்டவிதி போல் மதிக்கும் எழுத்தாளர். போனில் சொன்னால் போதும். என்னிக்கு வேணும் என்பதுதான் அவரது பதில் கேள்வியாக இருக்கும்.

அவரது எழுத்தைப் பற்றி எதுவுமே சொல்லலையே? எழுத்தில் அவர் புலிக் கலைஞன்.

பூ.கொ. சரவணன்

அசோகமித்திரன் மறைந்துவிட்டார் என்று செய்தி. அவர் வாசித்த செகந்திராபாத்தில், பதினெட்டாவது அட்சக்கோடு நிகழ்ந்த மண்ணில் நிற்கிறேன். தண்ணீர், தண்ணீர் கதையின் மூலம்தான் அவருடன் அறிமுகம். அப்புறம் அவரை வாசித்துக்கொண்டே

இருக்கிறேன். அவரால்தான் எழுத்தில் இருக்கும் எளிமை, மெல்லிய அங்கதம், வாழ்க்கையின் வீழ்ச்சியை, அதன் முரண்களை பதிவது எல்லாம் நெருக்கமானது.

Pattukkottai Prabakar Pkp

எளிமையாகவும் வலிமையாகவும் நுணுக்கமாகவும் ரசனையாகவும் எழுதியவர். மிக வித்தியாசமாக ஒரு கதையில் அந்தக் கதையின் கதாபாத்திரங்கள் உயிர் பெற்று வந்து தங்களைப் படைத்த எழுத்தாளனைக் கேள்வி கேட்பதை மறக்கவே முடியாது.

Palani Bharathi

ஆழ்ந்த நிசப்தத்தில்

தன் மெய்யெழுத்தை

மிதக்கவிட்டுப் போயிருக்கிறார்

அசோகமித்திரன்...

Magudeswaran Govindarajan

புனைவெழுத்தின் 'புலிக்கலைஞன்' அசோகமித்திரனார் மறைவுக்கு அஞ்சலி.

கரிகாலன்

பூஞ்சையான உடல் தோற்றமுடைய அசோகமித்திரன் மறைந்தார் எனக் கேள்விப்பட்டபோது சிறுவயது முதற்கொண்டு படித்த அவரது படைப்புகள் நினைவில் சிறிய அலைபோல கரைதொட்டுச் சென்றது. மிகுந்த மௌனத்தைக்கொண்டிருந்தவை அவரது எழுத்துகள். அதே அளவு எள்ளலையும் நகையுணர்வையும் தன்னகத்தே கொண்டிருந்தருந்தன. மார்கழி வாசலில் வரையப்படுகிற கோலம்போல பிசிறில்லாமல் நிறைந்தவை அவரது புனைவுகள். போதனைகள், புலம்பல்கள், தீர்வுகளென விரிந்து ஞாபகப்பரப்பிலிருந்து எளிதில் உதிராத அழகியலை உடையவை அவர்தம் படைப்புகள்.

தமிழ் எழுதி ஓய்ந்துபோன அந்த செகந்திராபாத் தியாகராஜனுக்கு எனது அன்பும் வணக்கமும்.

Thiruppur Krishnan

ஆன்மிக நாட்டமுள்ளவர். மதங்கடந்த ஆன்மிகக் கோட்பாட்டில் நம்பிக்கை உள்ளவர். ஆனால் அதுபோன்ற விஷயங்களைப் பிரகடனப்படுத்திக் கொண்டவர் அல்ல.

பகட்டில்லாத எழுத்து அவருடையது. உலகத்தர எழுத்து. ஆழ்ந்த தத்துவப் பார்வையோடு கூடிய எழுத்து. ஞானபீடம் தன்னை கெளரவித்துக் கொள்ளத் தவறிவிட்டது. அறவே தற்பெருமை இல்லாமல் இயல்பாக வாழ்ந்த அவரின் பண்பு நலன் இன்றைய எழுத்துலகச் சூழலில் நினைக்க நினைக்க வியப்பேற்படுத்துகிறது, அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்.

Mugil Siva

எளிமையான சொல்லாடல்தான் அவரது அசுர பலம். கதைகள் வாசிக்க ஆசை. யாரிடமிருந்து தொடங்குவது என்று என்னிடம் எவர் கேட்டாலும் 'அசோகமித்திரன்' என்றே பதில் சொல்வேன். 'என் எழுத்தில் நான் கதாநாயகனாக இருந்தது கிடையாது' என்று அசோகமித்திரன் சொல்லியிருக்கிறார். ஆம், அவர் நிச்சயம் கதாநாயகன் அல்ல. கதை சொல்லலில் தன்னிகரற்ற நாயகன்! #அஞ்சலி

Shan Karuppusamy

இலக்கியக் கூட்டங்களில் நான் வேளச்சேரியில் குடியிருக்கிறேன் என்று யாரிடமாவது சொன்னால் உடனே அசோக மித்திரன் அங்கேதான் இருக்கிறார் என்று உரையாடல் திரும்பிவிடும். அருகிலேயே இருந்தவரை ஒருமுறையாவது சந்தித்து உரையாடியிருக்கலாம் என்ற குற்ற உணர்வுடன் அவரை வழியனுப்ப வேண்டியவனாகிறேன்.

Hosimin Filmdirector

உங்கள் படைப்புகளின் மெய்யெழுத்துகளிலும், உயிரெழுத்துகளிலும் மெய்யும், உயிரும் என்றும் வாழும் அசோகமித்ரன் ஐயா.

Shankar Rajarathnam

சிலரே தம் எழுத்தை படிப்பவர்களின் குணத்தை, வாழ்க்கை பற்றிய அவரது பார்வையையே பாதிக்கும் அளவுக்கு எழுதக் கூடிய பேரெழுத்தாற்றல் கொண்டவர்கள்...! 'தண்ணீர்' என்ற கதையிலும், இன்னும் பல கதைகள் மூலமும், என் போன்ற பலரின் குணத்தை இன்ஃப்ளூயன்ஸ் செய்து மேன்மையுறச் செய்த, ஆதர்ச எழுத்தாளர் அசோகமித்ரன் மறைந்தாராம். என் மனம் மிகவும் கலங்கியிருக்கிறது.

ஜெயமோகன்

நவீனத்தமிழின் மேதைகளில் ஒருவர் இன்று மறைந்தார். அஞ்சலி என்பதற்கு அப்பால் சொல் ஒன்றுமில்லை.

Thirumeni Saravanan

அசோகமித்ரன் எழுதிய பதினெட்டாவது அட்சக்கோடு படியுங்கள். இந்தியாவுடன் இணைய மறுத்த நிஜாம் சமஸ்தானம், அதனை பணியவைக்க இந்தியா நடத்திய படையெடுப்பு, இந்த வரலாற்று நிஜங்களுடன்அந்தக் காலத்தில் விதைநெல்லாய் பரவிய அக்ரஹாரக் கிரிக்கெட்டையும் அதில் பங்கேற்கத் தவிக்கும் விடலை வீரரையும் தெரிந்து கொள்ளலாம்.

உணர்வுபூர்வமான ஒரு வரலாற்று பயணம் அது.

Arun Bharathi

அசோகமித்ரன் என்னும் ஆணிவேர் தமிழ் நிலத்தில் தன் வேர்களை இறுகப் பதித்துச் சென்றிருக்கிறது.

Muruganantham Ramasamy

கரைந்த நிழல்களை வரைந்த கரம் மறைந்தது.. என் இலக்கிய பேராசானுக்கு அஞ்சலி.. #அசோகமித்ரன்.

Director Raju murugan

எதிர்பார்ப்புகள் எல்லாவற்றையும் கடந்த வாழ்வின் பெரும் தரிசனம் அவரது எழுத்துகள். அடைபட்ட கதவிடுக்கில் அலைந்து கொண்டேயிருக்கும் ஒளியாக நமது அந்தரங்கத்துக்குள் ஊடுருவிக்கொண்டே இருக்கும் ஒற்றன் அவர். அறம், அநீதி, அன்பு, வெறுமை பற்றியும் மனித மனதின் தீரவே தீராத விசித்திரங்கள் பற்றியும் உரையாடிக்கொண்டே இருக்கும் அவரது கதை மாந்தர்களுக்கு சாவே இல்லை.

'மானசரோவரில்' வரும் அந்த புகையிலைச் சித்தரைப் போல அசோகமித்ரன் நம்மைப் பின்தொடர்ந்து கொண்டேயிருக்கிறார் . அவரது எழுத்து காலங்களை கரைத்து நுரைக்கும் மகாநதியாய் ஓடிக்கொண்டேயிருக்கிறது. நதியில் மரணம் ஓர் இலையைப் போல விழுகிறது... நீர்வட்டம் போல் புன்னகைக்கிறார் அசோகமித்ரன் சார்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x