Last Updated : 14 Sep, 2014 02:20 PM

 

Published : 14 Sep 2014 02:20 PM
Last Updated : 14 Sep 2014 02:20 PM

நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்!

கம்பார்ட்மென்ட் முழுக்க நிலக்கடலைத் தொலி கிடக்கும். கூடவே, பனங்கிழங்குப் பீலியும் தும்புகளும். இதுவே பண்டிகைகளைப் பொருத்து கரும்புச் சக்கைகள், சம்பா அவல் சிதறல் எனக் கிடக்கலாம். டி.டி.ஆர்., வள்ளென்றுதான் விழுவார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. நாகர்கோவிலிலோ வள்ளியூரிலோ ஏறின அண்ணாச்சி ‘கண்டக்டர் தம்பி... திர்னெலி எப்பொ வரும்’ எனக் கடுப்பைக் கிளப்பியிருப்பார்.

சீட்டு நம்பர், பெர்த் நம்பர் என இரண்டு எண்கள் எல்லா ரயிகளிலும் இருக்கும். இரண்டில் ஏதாவது ஒன்று பொருந்தினால் போதும் என்பது பயணிப்பவர்களின் பொது அபிப்பிராயம். இதுதான் என் பெர்த் என வாதிடும் எவரும் வென்ற தில்லை. ‘‘ரெண்டு நம்பர் போட்டு வெச்சவன்ட போயிக் கேளுலெ... எங்கிட்ட ஏன் எழவு எடுக்க...’’ (நான் சிலமுறை ‘பிரதிவாதி’ சீட்டில் இருக்கும் எண்ணுக்கான பெர்த்தில் போயாவது படுத்துவிடலாமென முயற்சித்தால், அங்கனக்குள்ளயும் ஒரு அண்ணாச்சி சாமி யாடிக்கொண்டிருப்பார்.)

சாப்பாட்டுப் பொட்டலத்தை அவிழ்த்துவிட்டு, அநியாய விலை கொடுத்து வாங்கின அக்குவா பீனாவை ஓப்பன் பண்ணிய அடுத்த நிமிடமே ‘‘தண்ணீ கொஞ்சம் கிடைக்குமா தம்பீ...’’ என சர்வ நிச்சயமாக ஒருவர் கேட்பார். வாங்கி மடக்மடக்கெனக் குடித்துவிட்டு, மிச்ச தண்ணீரில் கை கழுவி, வாயும் கொப்பளித்துவிட்டுக் கடமை உணர்ச்சியோடு காலி பாட்டிலைத் திரும்பத் தருவார். ‘‘எந்த ஊர் தண்ணீடே... எழவு சப்புன்னுல்லா இருக்கு’’ எனும் ஒருவரி விமர்சனம் பதிலீடாகக் கிடைக்கலாம்.

உரத்த நிந்தனை!

‘‘விஎஸ்கே செட்டுல டின்னு வருதுடே. கச்சாத்துல எத்தனன்னு பாத்து எண்ணி எறக்கி வைய்யி. லோடு மேன் நான் இல்லண்ணா டின்னுக்கு ஆறு ரூவா கேப்பான். அவனுக்கு 5 ரூவாய்க்கி மேல சல்லி பைசா கொடுக்காத. கடய எடுத்து வெக்கயில வெங்காய மூடய மறந்து தொலச்சிடாதல. தக்காளி கெடந்து நாறுது. சவம்! மீனாட்சி ஓட்டல்காரன் கேட்டான்னா ரெண்டு, மூணு கொறச்சித் தள்ளிடு... ஏய்... அண்ணாச்சி ஊர்ல இல்லன்னு சாயங்காலமே கடய சாத்திராதீங்கலே... சாவிய பத்திரமா அக்காட்ட கொடுத்து வீட்டுக்குப் போங்க...கம்பெனிக்காரன் எவன் வந்தாலும் அண்ணாச்சி ஊர்ல இல்ல… பெறவு வான்னு சொல்லு...’’ என ஒவ்வொரு பெட்டிக்கும் உச்சஸ்தாயியில் ஏதாவது ஒரு அண்ணாச்சி இருந்த இடத்திலிருந்தபடியே தன் அப்பரஸெண்டுகளிடம் மன்றாடிக்கொண்டிருப்பார். ஆனால், செல்போன் என்பது ஒலிபெருக்கி அல்ல. அதில் மெதுவாகப் பேசினாலே, எதிர்முனைக்குக் கேட்கும் என்பதை ஏன் இதுவரை யாரும் அவருக்குச் சொல்லிக்கொடுக்க முயலவில்லை என்பதுதான் எனக்குப் புரியாத புதிர்.

கழிப்பறைக்கு வெளியே இருந்து திறப்பதற்கான ஒரு கொண்டி தவிர, உள்ளேயிருப்பவர்கள் பூட்டிக்கொள்ள ஒரு கொண்டி இருப்பது முட்டாள்தனமன்றி வேறென்ன?! முன் யோசனை இன்றிக் கதவைத் திறந்துவிட்டால், இடுப்பு வரை ஏற்றிவிட்ட வேட்டியும், தோளில் கோடு போட்ட அன்-டிராயர் சகிதமாக அண்ணாச்சி ‘குத்தவெச்சாசனம்’ செய்துகொண்டிருப்பார். வெளியே வந்ததும் ‘‘கொல்லக்கி இருக்குதவன எட்டிப்பாக்கியே அறிவு இருக்காலே... செத்த மூதி...’’ என்பார்.

ரயில் சிநேகிதர்கள்

லேசாகப் பேச்சுக்கொடுப்பவர்கள் பெருசாக ஆப்படிப்பார்கள். ‘‘தம்பி! எந்த ஊருக்குப் போறீய’’ எனத் துவங்குவார்கள். ‘‘கோயம்புத்தூரா... எம்மவன் வேல்முருகன் அங்கனதான கட வெச்சிருக் கான். நெல்லை ஸ்டோர்ஸுன்னு. தெரியுமா அவன?!’’ஆகச் சிக்கலான கேள்வி. கோவையில் தடுக்கிவிழுந்தால், ஒரு நெல்லை ஸ்டோர்ஸ்தான். எந்த ஏரியாவுல என மையமாகக் கேட்டு வைப்பேன். மேட்டுப்பாளையம் ரோட்டுல எனப் பதில் வரும். மேட்டுப்பாளையம் வரைக்கும் மேட்டுப்பாளையம் ரோடுதான்... எந்த ஏரியான்னு சொல்லுங்க எனச் சொன்னால் ஆச்சு. ‘‘மேட்டுப்பாளையம் ரோடு நெல்லை ஸ்டோருன்னு கேட்டா, தொட்டில்ல கெடக்க புள்ளகூடச் சொல்லுமே... மெயினான எடத்துல இருக்க அவன் கடய தெரியல்லங்க...’’ கோவை வரும்வரை நம்மை எரிச்சலாகவே பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

ஓப்பன் டிக்கெட் வாங்கிக்கொண்டு ரிசர்வில் ஏறிப் படுத்துக்கொள்ளுபவர்கள். டி.டி.ஆரையும், பயணிகளையும் படுத்தும்பாடு சொல்லில் ஒளிரும் சுடர். ஒருமுறை முழங்கை வரைக்குமான தொளதொள சட்டையும், கதர் வேட்டியும் அணிந்த பெரியவர் ஒருவர் ஓப்பன் டிக்கெட்டோடு அப்பர் பெர்த்தில் படுத்துக்கொண்டார். தன்னுடைய ரிசர்வ்டு டிக்கெட்டைக் காட்டி அவரோடு மன்றாடிக்கொண்டிருந்தார் ஒருவர். ‘‘வெள்ளக்காரங்கிட்ட சண்டயப் போட்டு வண்டிய வாங்கி வுட்டவம்ல நாங்கள்லாம்... செம்பகராமம்பிள்ளன்னு ஆராமொழில வந்து கேட்டுப்பாருல... உன்னய மாதி காசு கொடுத்துதாம்ல நானும் ஏறியிருக்கன். இவ்வளவு சீட்டு சும்மா கெடக்குதுல்லா... அங்கன போயி கட்டய சாயில...’’

அப்பர் பெர்த் என்றால் காற்றாடியைப் போட்டதும் சாணி மணம் கமழும். காரணம், வேறொன்றும் இல்லை. தங்களது பாதரட்சைகளின் பாதுகாப்புக் கருதி அவற்றை ஃபேனின் மேல் கச்சிதமாகச் சொருகி வைத்திருப்பார்கள்.

ஆனபோதும்… கோவையிலிருந்து கிளம்பும்போதும் சரி, திருநெல்வேலியிலிருந்து திரும்பும்போதும் சரி ‘‘ஏல, லேய், ஏய் மக்கா, மக்களே, தம்பீ, அண்ணாச்சி’’என ஏதோவொரு பதத்தில் விளித்து... ஏழெட்டுக் கேள்விகளில் நமக்கும் அவருக்குமான பொதுமனிதர் ஒருவரைக் கண்டுபிடித்து,‘‘அவாள் நல்லாருக்காளா... தங்கமான மனியனாச்சே’’என விசாரித்து, ஊர்க் கதை, குடும்பக் கதைகளைக் கேட்டறிந்து...பனங்கிழங்கையோ, முந்திரிக்கொத்தையோ தின்னக் கொடுத்து, ‘‘தாண்டவன்காடு வந்தீங்கன்னா தவசி நாடார் வீடு எதுன்னு கேட்டு வாங்க...தசரா ஜேஜேன்னு இருக்கும்’’ என அழைக்கவும் தவறாமல், இறங்கும்போது தோளைத் தட்டி ‘‘தம்பீ...அப்பா, அம்மாக்கள வயசான காலத்துல வச்சி காப்பாத்துங்கடே... அவாள் மனசு குளிர்ந்தாதான் வாழ்க்கைல முன்னுக்கு வர முடியும்’’எனப் புத்திமதி சொல்லி விடைபெறும் மனிதர்கள் இந்த ரயிலெங்கும் நிறைந்திருக்கிறார்கள். அவர்கள் ஏதோ ஒரு சாயலில், சிறு அசைவில், எச்சில் தெறிக்கச் சிரிக்கும் சிரிப்பில் பெரியப்பாவை, சின்னத் தாத்தாவை, கடையநல்லூர் மாமாவை, அப்பாவை, பெரிய அத்தானை, எட்டாம் வகுப்பெடுத்த பால்துரை சாரை, பருவம் பார்க்கும் ஏசுவடியானை நினைவுபடுத்துபவர்களாக இருந்துவிடுவது என்றும் பிடிபடாத ஆச்சர்யம்.

- செல்வேந்திரன், தொடர்புக்கு: selventhiran.k@thehindu.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x