Published : 18 Dec 2014 12:14 PM
Last Updated : 18 Dec 2014 12:14 PM

நரமாமிசப் பட்சிணிகள் - கவிக்கோ அப்துல் ரகுமான்

மாணாக்கர் ° என்ற பெயரில்

வெறிபிடித்து அலைபவர்களே!

நீங்கள் மாண்பை

ஆக்குபவர்கள் அல்லர்

அழிப்பவர்கள்

*

மாணாக்கர்களையே

படுகொலைசெய்த

மாணாக்கர்களே! நீங்கள்

மதம் படித்தவர்கள் அல்லர்

மதம் பிடித்தவர்கள்

*

துப்பாக்கி ரவைகள்தாம்

உங்கள் வேத வார்த்தைகளோ?

ரத்தம்தான் உங்கள்

புண்ணிய தீர்த்தமோ?

*

பிள்ளைகளைக் கொன்றவர்களே!

வருவதற்கு முன்

மனசாட்சியை

ஈவு இரக்கத்தைக்

கொன்றுவிட்டு வந்தீர்களோ?

*

வாழ்க்கையைக்

கற்க வந்தவர்களுக்கு

மரணத்தைக் கற்றுக்கொடுத்தவர்களே!

*

நீங்கள் கொன்றது

பிள்ளைகளை அல்ல

அவர்களைப் பெற்றவர்களின்

கனவுகளை



கெட்டுப்போன மாணாக்கர்களே

காலம் உங்களுக்குப்

பாடம் கற்பிக்கும்

* தலிபான் என்றால் மாணாக்கர் என்று பொருள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x