Published : 28 Oct 2016 10:38 AM
Last Updated : 28 Oct 2016 10:38 AM

ஜோனஸ் சால்க் 10

போலியோவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்த அமெரிக்க ஆராய்ச்சியாளர் ஜோனஸ் எட்வர்ட் சால்க் (Jonas Edward Salk) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 28). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏழ்மையான யூதக் குடும்பத்தில் (1914) பிறந்தவர். தந்தை, ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்தார். தாய் தந்த ஊக்கத்தால், தனது அறிவுக்கூர்மையை சிறுவன் பட்டை தீட்டிக்கொண்டான்.

* பிரபலமான டவுன்சென்ட் ஹாரிஸ் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். பிறகு, நியூயார்க் நகர சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். தாயின் அறிவுறுத்தலால் நியூயார்க் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். படித்துக்கொண்டே பரிசோதனைக்கூட தொழில்நுட்ப பணியாளராகவும் பணியாற்றினார். 1939-ல் மருத்துவப் பட்டம் பெற்றார்.

* மருத்துவ ஆராய்ச்சிகளில் அதிக கவனம் செலுத்தினார். உயிரி வேதியியல், பாக்டீரியாக்கள் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். நியூயார்க் பல்கலை.யில் மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். மவுன்ட் சயானி மருத்துவமனையில் மருத்துவராக 2 ஆண்டுகள் பணியாற்றினார்.

* தொடர்ந்து மருத்துவராகப் பணியாற்றுவதில்லை என்று தீர்மானித்தார். தனிப்பட்ட நோயாளிகளுக்கு உதவுவதைவிட ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் பயன்படும் வகையில், நோய்த்தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளில் தீவிர ஆர்வம் கொண்டிருந்தார்.

* மிச்சிகன் பல்கலைக்கழகப் பொது சுகாதார ஆராய்ச்சி மையத்தில் இன்ஃபுளூயன்சா நோய்க்குத் தடுப்பூசி கண்டறியும் குழுவில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இத்திட்டத்தின் வெற்றிக் குப் பிறகு, பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியின் வைரஸ் ஆராய்ச்சி சோதனைக்கூடத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

* அப்போது, அமெரிக்காவில் போலியோவால் பலர் பாதிக்கப்பட்டதால், தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆய்வில் மும்முரமாக ஈடுபட்டார். பல்வேறு போலியோ வைரஸ்களை அடையாளம் கண்டார். 7 ஆண்டுகள் அயராது பாடுபட்டார். 1955-ல் இவர் கண்டறிந்த தடுப்பு மருந்து நல்ல பலன் தந்தது. உலகம் முழுவதும் புகழ்பெற்றார்.

* லஸ்கர் விருது, 1975-ல் ஜவகர்லால் நேரு விருது, அகாடமி ஆஃப் அச்சீவ்மென்ட்ஸ் கோல்டன் பிளேட் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் குவிந்தன. இவரது தடுப்பு மருந்து வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட நாள், பொது விடுமுறை நாளாகவே கொண்டாடப்பட்டது. உலகின் பல நாடுகளும் இந்த தடுப்பூசியைப் பயன்படுத்தி போலியோ ஒழிப்பு பிரச்சாரங்களை மேற்கொண்டன.

* தன் கண்டுபிடிப்பால் லாபம் சம்பாதிக்க வேண்டும் என இவர் நினைத்ததே இல்லை. ‘போலியோ தடுப்பு மருந்துக்கான காப்புரிமை யாரிடம் உள்ளது?’ என இவரிடம் கேட்கப்பட்டபோது, ‘யாரிடமும் இல்லை, சூரியனுக்கு நீங்கள் காப்புரிமை கோர முடியுமா?’ என்று பதிலளித்தார். உயிரியல் கல்விக்காக கலிபோர்னியாவில் ‘சால்க்’ கல்வி நிறுவனத்தை 1960-ல் தொடங்கினார். இதன் இயக்குநராக 1975 வரை செயல்பட்டார்.

* மற்ற விஞ்ஞானிகளுடன் சேர்ந்து தண்டுவடம் செயலிழப்பு, புற்றுநோய் உள்ளிட்டவை குறித்து ஆராய்ந்தார். எச்ஐவி, எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முனைப்பில் ஈடுபட்டார். தன் ஆராய்ச்சிகள் குறித்து ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார். சான் டியாகோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக நூலகத்தில் இவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

* மருத்துவம் தவிர தத்துவத்திலும் ஆர்வம் கொண்டிருந்தார். ‘உயிரியல் தத்துவத் துறையின் தந்தை’ என்று போற்றப்படுகிறார். மருத்துவ ஆராய்ச்சிகள் மூலம் மனிதகுலத்தின் நலன் காக்க, தன் வாழ்க்கையை அர்ப்பணித்த ஜோனஸ் எட்வர்ட் சால்க் 81-வது வயதில் (1995) மறைந்தார்.

- ராஜலட்சுமி சிவலிங்கம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x