Published : 31 Jan 2015 10:29 AM
Last Updated : 31 Jan 2015 10:29 AM

ஜெயகாந்தனோடு பல்லாண்டு 17: கொஞ்சம் இரு. எழுத வேண்டும்!

ஜெயகாந்தன் இல்லாவிட்டால் நான் சினிமா உலகத்தைச் சிறிதும் எட்டிப் பார்த்திருக்க மாட்டேன். கொஞ்சம் பின் நகர்ந்து, அவர் ‘உன்னைப் போல் ஒருவன்’ சினிமா எடுத்த காலத்துக்கு வருவோம்.

அது எங்ஙனம் நிகழ்ந்தது என்பதைப் பற்றி ஜெயகாந்தன் அப்போதே சுடச் சுட, படப்பிடிப்பு நடக்க நடக்க எழுதியிருக்கிறார். திருப்பத்தூரில் இருந்த எங்கள் மேல், அவர் சினிமா எடுக்கத் தொடங்கிவிட்டார் என்று தெரிந்ததுமே ஒரு சிறு மாயை கவிந்தது.

‘ஜெயகாந்தன் பெரிய ஆளாகிவிட்டார்! இனி முன்பைப் போல் அவரிடம் நாம் பழக முடியுமோ’ என்கிற ஐயத்தை உண்டாக்கிய அற்ப மாயை அது! வெகு விரைவில் அந்த மாயை அறுந்து விழுந்தது.

நாங்கள் எல்லாம், ‘உன்னைப் போல் ஒருவன்’ ஷூட்டிங் பார்ப்பதற்குச் சென்னை சென்றோம்.

என்னைப் பொறுத்தவரை, நான் ஒரு சினிமா ஸ்டுடியோவுக்குள் பிரவேசித்ததும், ஒரு படப்பிடிப்பைப் பார்த்ததும் அதுதான் முதல் தடவை!

கட்டிடம் கட்டுகிற வேலை சம்பந்த மான சில காட்சிகள் படமாக்கப்பட்டன. கட்டிடம் கட்டுவதற்கான செங்கற்களை எங்கள் ஊர் பக்கமெல்லாம் குவியலாகத் தான் கொட்டி வைத்திருப்பார்கள். இங்கே, சீராகச் செவ்வக வடிவில் ஆள் உயரத்துக்கு அடுக்கி வைக்கிறார்கள் என்பதை அப்போதுதான் தெரிந்து கொண்டேன்.

கிளி ஜோசியக்காரன் ஒருவன் மதிய உணவுக்கான ஓய்வு வேளையில், சித்தாள் பெண்களுக்கு ஜோசியம் சொல்லும் காட்சியும், விடுகதை போடும் காட்சியும் படமாக்கப்பட்டன. பெட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் ஒருவன் இரவு நேரத்தில் ஐஸ்கிரீம் விற்பதும் படமாக்கப்பட்டது. ஐஸ்கிரீமை சென்னையில் இரவு நேரங்களில் கூட விற்கிறார்கள் என்பதை நான் அப்போதுதான் அறிந்தேன்.

நண்பர் தேவபாரதி ஒரு காட்சியில் சுக்குக் காபி விற்பவராக வருவார். ஜெயகாந்தன் ஹால்ஸ் ரோட்டில் இருக்கும்போதுதான் தேவபாரதியை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

பிற்காலத்தில், ஜெயகாந்தனின் நட வடிக்கைகளில் பெரும்பங்குகொண்டு, அவர் பல பணிகளை ஆற்றுவதற்கு உறு துணையாக இருந்தவர் இவர். நாங் களெல்லாம் எப்போதாவது வந்து போகிற வர்களாகவே இருந்தோம். சென்னை வாசியான தேவபாரதி சதா நேர மும் ஜெயகாந்தனின் சபையில் சங்கமிப்பவராக இருந்தார். சிறந்த எழுத்தாளருமான இவர், ஜெயகாந்த னைப் பற்றி ஒரு தொடரை எழுது வாரேயானால், மாறுபட்ட பல புதிய வர்ணங்களில் ஜெயகாந்தனை வரைந்து காட்ட வல்லவர்!

அவர் இல்லாதபோது, ஜெயகாந்தன் அவரைப் பற்றி எங்களுக்குச் சொன்னார்:

‘‘நான் சந்தித்த மனிதர்களில் மிகவும் வெளிப்படையான மனிதர் தேவபாரதி!’’

படக் கம்பெனிக்கு ஜெயகாந்தன், ‘ஆசிய ஜோதி’ ஃபிலிம்ஸ் என்கிற அழகிய பெயரை வைத்திருந்தார். 1964 மே மாதத்தில் ஜவஹர்லால் நேரு மறைந்த பிறகு, அவர் மீது இருந்த நேசம் ஜெயகாந்தனுக்குப் பெரிதாக பூக்க ஆரம்பித்துவிட்டது.

மவுண்ட் ரோடிலிருந்து எல்டாம்ஸ் சாலைக்குள் நுழைந்து, பாதிக்கும் மேலே வந்தால் இடப்புறம் ஒரு தெரு திரும்பும். அதில் இன்னொரு முறை திரும்பினால், ‘தனக்கோட்டி அம்மன்’ கோயில் தெரு வரும். அந்தத் தெரு வில் ஒரு வீட்டின் மொட்டை மாடி யில் போடப்பட்ட ஒரு பெரிய கீற்றுக் கொட்டகைதான் ‘ஆசிய ஜோதி’ ஃபிலிம்ஸின் அலுவலகம். அங்கே, ஒரே ஒரு சத்யஜித்ரேயின் படம் தொங்கிக் கொண்டிருக்கும். பத்திரிகைகள் சில ஜெயகாந்தனைப் பேட்டி கண்டு, அந்த எளிய சினிமா தயாரிப்புக் கம்பெனியின் அலுவலக அழகையும் அப்போதே எழுதியிருக்கின்றன.

அந்த அலுவலகம், மற்றொரு பேறும் பெற்றதாகும். ‘விழுதுகள்’ குறுநாவலை ஜெயகாந்தன் அந்த அலுவலகத்தில் இரவு நேரத்தில் அமர்ந்துதான் எழுதினார். சரியாகச் சொன்னால் அவர் சொல்லச் சொல்ல நான் எழுதினேன்.

‘விழுதுகள்’ பெரும் பாராட்டுகளைப் பெற்ற குறுநாவல். தமிழ் இலக்கிய உலகில் உதித்த எல்லா சாமியார்களை விடவும், இதில் வரும் ஓங்கூர் சாமியார் வித்தியாசமானவர். அபூர்வமான எழுத்தாளராகிய நண்பர் ஜெயமோகன், இன்றளவும் அந்தச் சிறிய குறுநாவலில் அடிக்கடி தோய்கிறார் என்று நண்பரும், எழுத் தாளரும், திரைப்பட இயக்குநருமான சுகா குறிப்பிட்டிருக்கிறார். ‘இலக்கிய முன்னோடி கள்’ என்னும் தனது தொடர் நூல் வரிசையில், ஜெயகாந்தனைப் பற்றி எழுதுகிற ஜெயமோகன், ‘விழுதுகள்’ குறு நாவலை வெகுவாக சிலாகித்துள்ளார்!

ஜெயகாந்தன் படைப்பு களுள் தனித்ததோர் சிறப்பு கொண்ட அந்த ‘விழுதுகள்’ குறுநாவலை, ஊரெல்லாம் துஞ்சி, உலகெல்லாம் துயின்று, நீரெல்லாம் இருண்ட ஒரு நீளிரவில், அவர் சொல்லச் சொல்ல நான் எழுதியது எனது பாக்கியம் என்று நினைக்கிறேன்.

எழுதுவதைச் சிறிது இடையில் நிறுத்தி, எங்களுடன் இருந்த வேலூரைச் சேர்ந்த நீலவன் என்கிற நண்பரை மவுண்ட் ரோடு வரை அனுப்பி, ஒரு பிளாஸ்கில் டீ வாங்கி வரச் சொன்னோம். டீ வந்து சேரும் வரை, எழுதுவதை நிறுத்திவிட்டு ஜெயகாந்தன் என்னிடம் பல விஷயங்கள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார்.

ஓங்கூர் சாமியாரைப் பற்றி சொல்வதற்கு எப்போதும் அவரிடம் புதுப் புது விஷயங்கள் இருந்தன. அவருக்கு அவர் மீது ஓர் ஆழ்ந்த நேசம் இருந்தது. பல்லாண்டுகளுக்குப் பின்னாலும் அது வாடாமல் வதங்காமல் அப்படியே இருந்தது.

எப்போதாவது, கார் ஓட்டிக் கொண் டிருக்கும்போது, ‘‘ஸ்டியரிங்குக்கு மேலே வீங்கி விகசிக்கும், வேதப் புகை நடுவே வீற்றிருக்கும் ஓங்கூர் சாமியின் திருஉருவம் தெரி கிறது…’’ என்று பாட ஆரம்பித்து விடுவார்.

பின்னாளில் ஒருமுறை நாங்கள் மல்லியம் கிராமத்துக்குச் சென்றபோது, அங்கே மல்லியம் ராஜகோபாலின் பூஜை அறையில் இருந்த ஓங்கூர் சாமியாரின் பெரிய அளவிலான ஒரு படத்தைப் பார்த்தோம்.

ஆறடி உயரம் இருந்தார். என் கண்ணுக்கு அவர் வயதானவராகத் தெரியவில்லை. வாலிப முறுக்குடன் இருக்கும் சந்நியாசி போல் இருந்தார். மல்லியம் ராஜகோபால், நடிகர் எஸ்.வி.சுப்பையா போன்றவர்கள் ஓங்கூர் சாமியாரை சந்திக்கும்போது, ‘‘எங்கப்பா… மெட்ராஸ்காரர் வரலையா?’’ என்று ஜெயகாந்தனைப் பற்றி கேட்பாராம்.

டீ வந்ததும் குடித்துவிட்டு, ஜெயகாந்தன் தொடர்ந்து ‘விழுதுகள்’ கதையைச் சொல்லத் தொடங்கினார்.

ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு ஜெயகாந்தன் தன் கையால் பேனா பிடித்துத் தானே எழுதுகிற பழக்கத்தை பெரும்பாலும் கைவிட்டுவிட்டார். சில முறை ஒருநாள் பயணமாக நான் சென்னை வந்து ஊர் திரும்ப முனைந்தால் ‘‘கொஞ்சம் இரு. எழுத வேண்டும்…’’ என்று சொல்லி நான்கைந்து நாட்களுக்கு என்னை நிறுத்தி வைத்துவிடுவார்.

- வாழ்வோம்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள:

pisakuppusamy1943@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x