Last Updated : 21 Sep, 2014 12:46 PM

 

Published : 21 Sep 2014 12:46 PM
Last Updated : 21 Sep 2014 12:46 PM

சொல்லத் தோணுது 1

மனமும் புத்தியும் கிழித்த நேர்க்கோட்டில் நின்று எப்போதும் நிஜம் பேசுபவர் எழுத்தாளர், ஒளி ஓவியர், இயக்குநர் தங்கர் பச்சான். இது, முந்திரிக்காட்டு மண்வாசம் அடிக்கும் அவருடைய எழுத்துப் பாசனம்…

இதை எல்லாம் எதுக்கு எழுதணும்? எழுதலேன்னா என்னாகும்? ஏன் எழுதலேன்னு யாராவது கேட்கப் போறாங்களா? இருந்தாலும் எழுதப் போறேன். எழுதி வெளியில தூக்கிப் போட்டாத்தான் நிம்மதியா இருக்க முடியும்னு மனசு சொல்லுது. கண்டும் காணாமப் போவது, நல்லா நின்னு நிதானமாப் பார்ப்பது, பார்க்கவே வேணாம்னு முடிவு செய்து எதைப் பத்தியும் கண்டுக்காமப் போய்ட்டே இருப்பதுன்னு நானும் இருக்கப் பார்க்கிறேன், முடியல. இருக்கிற வேலையைப் பார்க்குறதுக்கே நேரம் பத்தல. திரைப்படக் கல்லூரி கடைசித் தேர்வு எழுதிய சமயம், கடைசி வரியை எழுதி முடிச்சுட்டு, அந்த முருகனையும் குலதெய்வம் பச்சைவாழி அம்மனையும் கும்பிட்ட கும்பிடு எனக்குத்தான் தெரியும்.

‘எப்பா… ஆளை விடுங்கடா சாமி. இனிமே எவனும் என்னைப் படிடா, பரீட்சை எழுதுடானு சொல்ல முடியாதுல்ல. அது போதும்டா. வேலை கிடைக்காட்டாலும் பரவாயில்லை. பச்சத் தண்ணியக் குடிச்சுட்டு வாழ்ந்துடலாம்’னு அன்றைக்கு ஓடி வந்தவன்தான் நான்.

இப்போ வகையா, ’தி இந்து’ தமிழ் நாளிதழ்கிட்டே மாட்டிக்கிட்டேன். தினமும் காலையில எழுந்து மகிழ்ச்சியா செய்தித்தாள் படிச்சதுபோய், இப்போ இந்த பேப்பரைப் பார்த்தாலே பயம் வர்ற மாதிரி ஆசிரியர்க் குழு பண்ணிடுச்சு. ஏற்கெனவே பத்து பனிரண்டு சினிமா கதை, இருபது சிறுகதைகள், அதுபோக இரண்டு நாவல் இவை எல்லாத்தையும் இந்த சின்ன மண்டைக்குள்ளே வெச்சுக்கிட்டு அலைஞ்சுக்கிட்டு இருக்கேன்.

அதை எல்லாம் எப்போ வெளியில கொண்டாந்து போடப் போறோமோனு பெருங்கவலையோடு இருக்கிற நேரத்தில், எந்த வேலை எப்படி கெடந்தாலும் வாரா வாரம் ‘சொல்லத் தோணறதை' எழுதித் தான் ஆகணும். மரத்தில் தொங்குறது, சருகுக்குள்ளேக் கிடக்கிறது, பழுத்து விழுந்து கிடக்கறதுனு முந்திரித் தோப்புல வெயிலு மழைனு பார்க்காம, ஒவ்வொரு முந்திரிக் கொட்டையாக் கொண்டாந்து சேர்க்குறது மாதிரிதான் இந்த எழுதுற வேலையும். பார்த்தது, கேட்டது, அனுபவிச்சதுனு மண்டைக்குள்ளே தூங்கிட்டுக் கிடக்கிறதை எல்லாம் பீராய்ஞ்சி எடுத்துட்டு வந்து எழுதிக் கொடுக்கணும்.

திடீர்னு வந்து அடிச்சுக்கிட்டுப் போற காட்டு வெள்ளம், நல்லது கெட்டது பாத்தா அடிச்சுட்டுப் போவுது? அப்படித்தான் வேண்டியவன், வேண்டாதவன்னு பாக்காம காலம் வாழ்நாளை முடிச்சுடுது.

சொந்த வேலைகளைப் பார்த்தாலும், சொந்தக் குடும்பத்தைப் பார்த்தாலும் மத்தவங்களையும் கொஞ்சம் நெனைச்சுப் பார்க்கணும். அப்படி எல்லாம் நெனச்சுப் பார்த்ததைத்தான் எழுதப் போறேன். யார் மனசாவது வலிக்குமே, யாராவது கோபப்படுவாங்களேனு நினைச்சா உண்மையை பல நேரம் சொல்ல முடியாமலே போயிடும். ஒரு மனுஷனுக்கு நம்மை பிடிக்காமப் போகணும்னா உண்மையை பேசிட்டாப் போதும். உண்மை மாதிரி சுடுறது வேற எதுவுமே இல்லீங்க. பொய்யையும், உங்களுக்குப் பிடிக்கிறதை மட்டும்தான் எழுதணும்னா அதுக்கு நான் தேவையில்லை. நான் எழுதப் போறது என் மனசுல மட்டும் தோணியது இல்லை. எல்லோருக்குமே அடிக்கடி மனசுல வந்துட்டுப் போறதுதான். மனசில் தோணுற நல்ல விஷயத்தை எல்லாம் நமக்குள்ளேயே எழுதி வெச்சுக்க முடியாது. அதை யாரோ ஒருத்தர் எழுதலாம். அதை உங்களோடு பகிர்ந்துக்கலாம். அதைத்தான் நான் செய்யப் போறேன்.

சரி, எழுதிப் பாத்துட வேண்டியது தான்னு ஒப்புக்க ஆரம்பிச்ச ஒடனே, படத்துக்கு என்ன செய்யலாம்ன்னு ஒரு கேள்விய அவுத்து உடறாங்க! சினிமாப் படமுன்னா நானே எழுதி, படம் புடிச்சி இயக்கி தயாரிச்சி டுவேன். ஓவியம் வரையிற அளவுக்கு எனக்கு தேர்ச்சியில்லன்னு சொன்னப்புறம், நீங்க எடுத்தப் படம் இருக்குமே... அதக் குடுங்களேன்னு கேக்கறாங்க.

முப்பது வருஷத்துக்கு முன்னாடியி லிருந்து, கண்ணுல படறத... கைய்யில இருந்த சின்னச் சின்ன தொழில்நுட்பத் திறன்ல வலு இல்லாத கேமராவ வெச்சி யும் கைப்பேசியிலும் எடுத்தப் படங்கள... உக்காந்து தேடிப் பாத்தேன். விவசாயி கண்ணு ரோட்டுல கெடக்கிற சாணி வீணாப் போறத பாக்கப் புடிக்காம காலாலேயே மண்ண சேத்து ஒரு தள்ளுத் தள்ளி, அப்பிடியே ரெண்டு கையாலேயும் உருட்டிட்டு வந்து வீட்டுக் குப்பைக் குழிக்குள்ளப் போட்டு சேத்து வைக்கிற மாதிரிதான் நானும் அந்த நேரத்துக்கு முக்கியமாப் பட்டதெல்லாம் எடுத்துவெச்சி சேத்து வெச்சிருக்கேன்.

ஒவ்வொரு வாரமும் எழுதப்போறத் தலைப்புக்கு ஏத்த படங்கள எடுத்துப் பயன்படுத்திக்கலாம்னு இப்போதைக்கு மனசுக்கு சமாதானம் சொல்லிக்கிட்டேன்.

இன்னும் தோணும்..

எண்ணங்களைத் தெரிவிக்க: thankartamil@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x