Last Updated : 31 Aug, 2016 09:41 AM

 

Published : 31 Aug 2016 09:41 AM
Last Updated : 31 Aug 2016 09:41 AM

சுட்டது நெட்டளவு: நீங்கள் உயிரைக் கொடுப்பீர்களா?

ஒரு குடும்பத் தலைவர் இறந்துவிட்டார். அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை. அவரது மனைவி, 9 வயது மகன், பெற்றோர் அனைவரும் உடல் அருகே அமர்ந்து அழுதுகொண்டிருந்தனர். அந்தக் குடும்பத்துக்கே குருஜியாக விளங்குபவர் அப்போது அங்கு வந்தார். அவரைக் கண்டதும் அவர்கள் மேலும் பெரிதாக அழ ஆரம்பித்தனர்.

இறந்தவரின் மனைவி, ‘‘குருஜி.! இவ்வளவு இளம் வயதில் என்னையும் என் மகனையும் நிர்க்கதியாக விட்டுவிட்டுப் போய்விட்டாரே! நான் என்ன செய்வேன்.. அவர் உயிருடன் வருவார் என்றால் அதற்காக நான் எதுவும் செய்வேன்’’ என்றார்.

குருஜி அவர்கள் அனைவருக்கும் ஆறுதல் சொல்லி சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் அவர்கள் அழுகையை நிறுத்தவில்லை.

கடைசியில் குருஜி, ‘‘ஒரு கோப்பை தண்ணீர் கொண்டு வாருங்கள்’’ என்றார்.

தண்ணீர் வந்தது. குடும்பத் தலைவரின் உடல் அருகே கோப்பையை வைத்து, தானும் அருகே அமர்ந்தார். பிறகு சொன்னார்.. ‘‘இறந்தவர் உயிருடன் திரும்பி வரவேண்டும் என நினைப்பவர், இந்தத் தண்ணீரை அருந்தலாம். இறந்தவர் திரும்பி வருவார். ஆனால், அதற்கு பதில் நீரை அருந்தியவர் மரணம் அடைவார்’’ என்றார்.

குடும்பத்தினர் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனரே தவிர, யாரும் அந்தத் தண்ணீரைக் குடிக்க முன்வரவில்லை.

இறந்தவரின் தந்தையிடம் குருஜி கேட்டார், ‘‘ஐயா! நீங்கள் உங்கள் மகனுக்காக உங்கள் உயிரைத் தர மாட்டீர்களா?’’

தந்தை சொன்னார், ‘‘நான் இறந்துவிட்டால் என் மனைவிக்கு யார் ஆதரவு?அவளுக்காக நான் வாழ வேண்டுமே.’’

அடுத்து தாயைக் கேட்க, அவர் சொன்னார், ‘‘அடுத்த மாதம் என் மகளுக்குப் பேறுகாலம். நான் இறந்துவிட்டால் அவளுக்கு யார் உதவுவது?’’

மனைவி சொன்னாள், ‘‘நான் இறந்தால் என் பையன் ஆதரவின்றிப் போய்விடுவானே.’’

கடைசியாக, குருஜி பையனைப் பார்த்துக்கேட்டார், ‘‘குழந்தாய்! உன் தந்தைக்காக நீ உயிர் விடுவாயா?’’

அவனது தாய் உடனே அவனை இழுத்து அணைத்துக்கொண்டு சொன்னாள், ‘‘குருஜி! உங்களுக்கு என்ன ஆயிற்று? அவன் ஒரு குழந்தை. இனிமேல்தான் அவன் வாழ்க்கையே இருக்கிறது. அவனிடம் இப்படி கேட்கலாமா?’’

குருஜி சொன்னார், ‘‘உங்கள் அனைவருக்கும் இதுபோல ஏதாவது கடமை, பொறுப்பு இருக்கிறது என்கிறீர்கள். இதுபோல வேறு எந்த வேலையும் இவருக்கு இல்லை. அதனால்தான், அவரை கடவுள் எடுத்துக்கொண்டார். இனி, இறுதி யாத்திரைக்கான ஏற்பாடுகளை கவனியுங்கள்’’ என்று கூறிச் சென்றுவிட்டார்.

உயிர் இருக்கும் வரையே அன்பு, பாசம் எல்லாம். பிறகு மிஞ்சுவது மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகள் மட்டுமே. எனவே, வாழும் வரை புன்னகைக்கும் முகத் தோடு மகிழ்ச்சியாய் வாழ முயற்சிப்போம்!



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x