Published : 26 Oct 2016 10:42 AM
Last Updated : 26 Oct 2016 10:42 AM

சீஸனில் பாட கிருஷ்ணா... நீ பேகனே பாரோ!- மனம் திறந்த மடல்

அன்புள்ள, டி.எம்.கிருஷ்ணாவுக்கு,

நலம், நலம் அறிய ஆவல்! மற்றவர்களின் சங்கீத நலனில் நீங்கள் அதிக அக்கறை கொண்டிருப் பவர் என்பதால் இந்தக் கடிதம்.

டிசம்பர் மாதம்தான் என்றில்லை. வருடம் முழுவதும் உங்கள் மீது வெளிச்சம் பரவிக்கொண்டிருக்கவேண் டும் என்பது எழுதப்படாத விதியாகிவிட் டது. மாதந்தோறும் நீங்கள் பாடிக் கொண்டிருக்கிறீர்கள். டிசம்பர் விதி விலக்கு. நாளேடுகளிலும், பருவ இதழ்களிலும், வலைதளங்களிலும் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். இசை உலகில் இருந்துகொண்டு இப்படி பரந்துபட்ட தளங்களில் பேசி, எழுதி வருவது நீங்கள் ஒருவர்தான்!

மகசேசே விருது உங்களுக்கு வழங்கப் பட்டதைத் தொடர்ந்து உங்கள் தேடல் இன்னும் அதிகமாகிவிட்டது. இந்த விருது அறிவிக்கப்பட்டதும் உங்களைப் பாராட்டி பூங்கொத்து கொடுத்தவர்களைவிட, உங்களை கடுமையாக விமர்சித்தவர்களே அதிகம். ‘சஞ்சய் சுப்ரமணியன் உட்கார்ந்த நாற்காலியில் உட்காருவதற்குக்கூட தகுதி யற்றவர் நீங்கள்’ என்று எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிட்டது பிதற்றலின் உச்சம்.

இன்னொரு தமாஷ். மகசேசே விருது கமிட்டி தங்களுக்கான சைடேஷனில் குறிப்பிட்ட வாசகங்களுக்காக பாவம், உங்களைப் பந்தாடியவர்கள் ஏராளம். இசை உலகைச் சேர்ந்த பலர் முகநூலில் வறுத்து எடுத்தார்கள். சபா நிர்வாகிகள், சக வித்வான்கள் என பலரும் இந்த ‘மேளா’வில் கலந்துகொண்டார்கள்.

‘‘வேற எத்தனையோ வித்வான்கள் கார்ப்பரேஷன் ஸ்கூலுக்குப் போய் பாட்டு சொல்லிக் கொடுக்கிறாங்க… கீழ்த்தட்டு குடும்பக் குழந்தைகளுக்கு பாட்டு கிளாஸ் எடுக்குறாங்க… இவர் மட்டும் ஏன் இத்தனை கூச்சல் போடுகிறார்?’’ என்று கேட்பவர்களும் உண்டு.

‘Inclusive’ என்ற ஆங்கில வார்த்தை இன்று கலை உலகில் அனைவராலும் உச்சரிக்கப்படுவதற்கு நீங்கள் முக்கிய காரணமாகிவிட்டீர்கள்.

குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்குத்தான் என்றில்லாமல், கர்னாடக இசை உங் கள் மொழியில் ஆர்ட் மியூசிக் - அனைத்துப் பிரிவினராலும் பாடப்படவும், கேட்கப்படவும் வேண்டும் என்பது உங்கள் லட்சியம். குப்பங்களுக்கு கர்னாடக இசை எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பதும், அவர்களது கலை வடிவங்களுக்கு சபாக்கள் கதவு திறக்க வேண்டும் என்பதும் உங்கள் எதிர்பார்ப்பு. அதற்கு நீங்கள் முயற்சியும் செய்து வருகிறீர்கள்.

தலித் கலைஞர் ஒருவருக்கு மியூசிக் அகாடமியின் ‘சங்கீத கலாநிதி’ விருது வழங்கப்பட வேண்டும் என்று நீங்கள் எழுதிய புத்தகம் ஒன்றில் எழுதி கொளுத்திப் போட்டீர்கள்.

அன்று பாடியவர்களும், இன்று பாடுபவர்களும் பிராமணர்கள் மட்டுமே என்று சொல்லிவிட முடியாது என்று வாதிடும் ஒரு சாரார், மற்ற சமூகங்களைச் சேர்ந்த திருவாவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, காருகுறிச்சி அருணாசலம், மதுரை சோமு, சீர்காழி கோவிந்தராஜன் போன்றவர்களை சாட்சிகளாகக் குறிப்பிடும்போது, ‘இசைத் துறையில் முன்னுக்கு வர அவர்கள் எத்தனை போராட வேண்டியிருந்தது தெரியுமா’ என்று எசப் பாட்டுப் பாடினீர்கள்.

சென்னை டிசம்பர் சீஸனில் நாகஸ்வரக் கச்சேரிகளுக்கு எந்த சபாவுமே ஸ்லாட் ஒதுக்குவது இல்லை என்பது உங்களது ஆதங்கம். மங்கல இசையோடு இந்த ராஜ கருவிக்கு மங்களம் பாடிவிடுகிறார்கள் என்பதும் உங்கள் குற்றச்சாட்டு. ஒரு சில சபாக்கள் ஜனவரி மாதத்தில் நாகஸ்வரத்துக்கு தனியாக விழா எடுக்கிறார்கள் என்ற சமாதானத்தை நீங்கள் காதில் வாங்குவதில்லை.

காசு வாங்கிக்கொண்டு வளரும் கலைஞர்களுக்கு சபாக்கள் வாய்ப்பு தருகின்றன என்பதில் ஆரம்பித்து, சபா நடவடிக்கைகள் பலவற்றில் உங்களுக்கு உடன்பாடு இல்லை. கீழ்த்தட்டு மக்களின் கலை வடிவங்களை சபாக்கள் புறக்கணிப்பதால் உங்களுக்கு எரிச்சல். இது விஷயமாக சபாக்களுடன் பேசி வருவதாகக் கூட ஒரு பேட்டியில் குறிப் பிட்டிருந்தீர்கள். ஏதாவது முடிவுக்கு வர முடிந்ததா?

நல்லவேளை, சபாக்களின் மேலா திக்க மனப்பான்மையை எதிர்த்து நீங்கள் வள்ளுவர்கோட்ட வாசலில் ஷாமியானா போட்டு உண்ணாவிரதம் இருக்கவில்லை. உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கவும் இல்லை. பதிலாக, ‘டிசம்பர் சீஸனில் நான் பாட மாட்டேன்’ என்று ஒதுங்கிக்கொண்டு விட்டீர்கள். வரப்போகும் மார்கழியிலும் இதுவே நிலவரம் என்று அறிகிறேன்.

இங்கேதான் உங்கள் அபிமான ரசிகர்களை நீங்கள் ஏமாற்றுவதாக நினைக்க வேண்டியிருக்கிறது. டிசம் பர் சங்கீத சீஸன் என்பது ஒரு திருவிழா மாதிரி. அந்தத் திருவிழாவில் தொலைந்துபோன குழந்தையாக அவர்கள் உங்களைத் தேடிக் கொண் டிருக்கிறார்கள்.

இசை மேடைக்கு வெளியே நீங்கள் வலியுறுத்தி வரும் எண்ண ஓட்டங்களுடன் உடன்பாடு இல்லாத பலரும் உங்கள் இசையில் குற்றம்குறை காண்பதில்லை. கடந்த 28 வருடங்களாக உங்கள் இசையைத் தொடர்ந்து கேட்டு வருபவர்கள், படிப்படியாக உயர்த்தி உங்களை உன்னத ஸ்தானத்தில் உட்கார வைத்திருக்கிறார்கள்.

காலம் காலமாக இருந்து வரும் கச்சேரிகளின் வடிவமைப்பை தலைக் குப்புற மாற்றி, கச்சேரிகள் செய்து வருவதை…. மேடையில் வயலினை அதற்கு உண்டான இடத்தில் இருந்து புலம்பெயரச் செய்து உங்களுக்குப் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டதை…இப்படி எதையும் உங்கள் ரசிகர்கள் பொருட் படுத்தவில்லை. காரணம், உங்கள் இசையின் மீது அவர்களுக்கு இருக்கும் மோகம்தான்!

உங்கள் விசிறிகள் சிலருடன் பேசிக் கொண்டிருந்தேன். நீங்கள் எப் போதோ பாடியதை எல்லாம் இன்றும் நினைவில் வைத்துக் கொண்டாடி னார்கள்.

- பல வருடங்களுக்கு முன் உட்லண்ட்ஸ் ஹோட்டலில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் நீங்கள் பாடிய ஹேமவதி ராகப் பாடலான ‘ காந்திமதிம்…’

- ஒரு டிசம்பர் சீஸனில் நாரத கான சபாவில் ஜெட் வேக ஸ்வரங்களுடன் நீங்கள் பாடிய ‘எப்போ வருவாரோ…’

- மிக சமீபத்தில் மகசேசே விருது வழங்கப்பட்ட மேடையில் உங்கள் மனைவி சங்கீதாவுடன் இணைந்து நடந்துகொண்டே நீங்கள் இசைத்த ‘சீதா கெளரி…’

- இன்னும் சமீபத்தில் கோயம்புத்தூர் சபாவில் நீங்கள் விருத்தமாகப் பாடிய பெருமாள் முருகனின் கவிதை வரிகள்…

- பைரவியில் நீங்கள் பாடி உணர்ச்சி வசப்படும் சியாமா சாஸ்திரியின் ஸ்வர ஜதி…

இப்படி உதாரணங்கள் குவிகின்றன!

அவ்வளவு ஏன்? கடந்த வாரங் களில் ஒருநாள் மைலாப்பூர் ஆர்ட்ஸ் அகாடமிக்காக, சென்னை தட்சிணாமூர்த்தி ஹாலில் பாடினீர்கள். அன்று, கல்யாணி ராகப் பாடலுடன் ஆரம்பித்த கச்சேரியை முடிப்பதற்கு முன்னால், சிற்சபை கருணாகரக் கடவுள் மீது சங்கராபரணம், தன்யாசி, அடாணா உள்ளிட்ட ராகங்களில் ராகமாலிகையாக விருத்தம் பாடினீர்கள். நடுநடுவே உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினீர்கள். முத்தாய்ப்பாக, கரகரப்ரியாவில் விருத்தம் முடித்துவிட்டு, அதே ராகத்தில் அமைந்த தியாகராஜரின் ‘சக்கநி ராஜமார்கமு…’ கீர்த்தனையை பளீர் குரலில் ஆரம்பித்து குழுமி இருந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தீர்கள்.

மார்கழி மகா ரசிகர்கள், மெகா டிசம்பர் சீஸனில் இது மாதிரி சர வெடி கீர்த்தனைகளை உங்களிடம் இருந்து கேட்க வேண்டாமா? சற்றே சிந்தியுங்கள்!

ஆகவே, நண்பரே… டிசம்பரில் பாடுவது இல்லை என்ற சபதத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதே நீங்கள் எடுக்கக் கூடிய சரியான முடிவாக இருக்கும். உங்கள் சித்தாந்தங்களுடனும், விருப்பு வெறுப்புகளுடனும் நீங்கள் டிசம்பரில் பாடுவதை இணைத்து குழப்பிக்கொள்ளத் தேவையில்லை!

- வீயெஸ்வி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x