Published : 31 Oct 2014 02:31 PM
Last Updated : 31 Oct 2014 02:31 PM

சர்தார் வல்லபாய் படேல் 10

இந்தியாவின் ‘இரும்பு மனிதர்’ என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…

• குஜராத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். சிறுவனாக இருந்தபோது உடம்பில் கட்டி வந்தது. நாட்டு வைத்தியரிடம் அழைத்துப் போனார்கள். இரும்புக் கம்பியை சூடாக்கி, கட்டியை உடைக்க முற்பட்ட வைத்தியர், சிறுவனின் பிஞ்சு முகத்தைப் பார்த்து தயங்கினார். ‘ஐயா! சீக்கிரம் வையுங்கள். சூடு ஆறிவிடப்போகிறது’ என்றதாம் அந்த இரும்புக் குழந்தை.

• படிப்பில் கெட்டிக்காரர். சட்டக் கல்வி முடித்து வழக்கறிஞர் ஆனார். நல்ல வருமானம் வந்ததால், முதலில் தன் அண்ணனை லண்டன் அனுப்பி சட்ட மேற்படிப்பு படிக்க வைத்தார். அவர் திரும்பியதும் தானும் லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார்.

• அகமதாபாத்தில் வக்கீல் தொழில் நடத்தியபோது உள்ளூர் மக்களின் பிரச்சினைகளுக்கு உதவி, பிரபலமானார். 1917-ம் ஆண்டு மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்றார். சுதேசி இயக்கம் உச்சத்தில் இருந்தபோது காந்திஜியின் உரையைக் கேட்டவர், வக்கீல் தொழிலை உதறி சுதேசி இயக்கத்தில் இணைந்தார்.

• குஜராத்தில் கேடா என்ற இடத்தில் பயங்கர பஞ்சம். ஆங்கிலேய அரசிடம் வரி விலக்கு கேட்டு விவசாயிகள் போரா டினர். அரசு பணியாததால் காந்தி, படேல் தலைமையில் வரிகொடாமைப் போராட்டம் வெடித்தது. அரசு பணிந்தது. வரி ரத்தானது. படேலின் முதல் வெற்றி இது!

• பார்டோலி என்ற இடத்தில் விவசாயிகள் நலன் காக்க நடைபெற்ற மற்றொரு சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் படேலுக்கு வெற்றி கிடைத்தது. அப்போதிருந்து மக்களால் ‘சர்தார்’ என்று அன்போடு அழைக்கப்பட்டார். அதன் பிறகு போராட்டங்களும் சிறைவாசமும் அவருக்கு வாடிக்கையாகிப் போனது.

• வட்டமேஜை மாநாட்டு தோல்விக்குப் பிறகு காந்தி, படேல் கைது செய்யப்பட்டனர். எரவாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டபோது இருவருக்கும் நெருக்கம் வளர்ந்தது.

• சுதந்திரப் போராட்டத்தின் சிப்பாய் என்று அழைக்கப்பட்டார். இந்திய விவசாயிகளின் ஆன்மாவாக கருதப்பட்டார். நவீன இந்தியாவை உருவாக்கியவர்களில் முக்கியமானவர். சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் பணியாற்றினார்.

• நாடு முழுவதும் ஆங்காங்கே துண்டு துண்டாக மன்னராட்சி நடந்துகொண்டிருந்த 565 ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்ததுதான் உள்துறை அமைச்சராக அவர் ஆற்றிய முதல் பணி. வி.பி.மேனனுடன் இணைந்து அகண்ட பாரதத்தை அமைத்தார்.

• அகண்ட பாரதம் அவ்வளவு எளிதாக அமையவில்லை. அந்த இலக்குக்காக சகல வழிகளையும் பின்பற்றினார். சர்ச்சைகள், எதிர்ப்புகள் எழுந்தாலும் இரும்பு மனிதராக நின்று சமாளித்தார்.

• 75-ம் வயதில் இறந்தார். 1991-ல் படேலுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x